இலங்கை பிரதான செய்திகள்

செய்ந்நன்றியையும் மறக்கவில்லை அதற்கான பிரதியுபகாரங்களையும் செய்யவேயில்லை :

தமிழ்மக்கள் தனக்குச்செய்த நன்றியை ஒருபோதும் மறக்கவில்லை என்றும் அதன்காரணமாகவே தமிழர் பிரதேசங்களில் நிகழும் நிகழ்ச்சிகளில் தவறாது கலந்துகொள்வதாகவும் நேற்றையதினம் (19-03-2018) யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தனது உரையின்போது தெரிவித்திருக்கிறார். ஆனால், தமிழ்மக்களின் செய்ந்நன்றியை மறக்கவில்லை என்று சொல்லும் ஜனாதிபதி அவர்கள் அதற்கான பிரதியுபகாரங்களை இதுவரையில் தமிழ்மக்களுக்குச் செய்யவேயில்லை. அவரது வருகை மட்டுமே பிரதியுபகாரங்களாக அமையாது என்பதை அவர் கவனத்திற்கொள்ளவேண்டும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் கருத்துத் தொடர்பாக ஊடகங்களுக்கு பொ.ஐங்கரநேசன் அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியவேண்டியும், அரசியல் கைதிகளின் விடுதலையை அவாவியும், ஏதிலிகளாக அல்லலுற்று அலையும் எம்மக்கள் தம்சொந்த இடங்களில் குடியேறவிரும்பியும், தங்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வைக்கோரியுமே ஒரு மாற்றத்துக்காக மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ்மக்கள் வாக்களித்தார்கள்.
ஆனால், இவற்றுக்கெல்லாம் ஜனாதிபதி இதுவரையில் காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்காமல் தமிழ்மக்களின் மனங்களைப் புண்படுத்தும் பதில்களையே தொடர்ந்தும் வெளிப்படுத்திவருகிறார். காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரங்களைக் கையாள்வதற்கென்று குழுவொன்றை அமைத்துவிட்டதால் அது தொடர்பாகத் தான் இனிமேல் சொல்வதற்கு எதுவும் இல்லை என்றும் யாழ்ப்பாண வருகையின்போது பதிலுரைத்துச் சென்றுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அவரின் வருகையை ஒட்டி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தபோதே அம்மக்களின் உணர்வு நிலையை உதாசீனம் செய்து இவ்வாறு மொழிந்து சென்றிருக்கிறார்.  போர் நடந்த போது அன்றைய அமைச்சரவையில் ஒருவராக இருந்தவரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் வெளிநாடுசென்றிருந்தபோது பதில் பாதுகாப்பு அமைச்சராக இறுதி யுத்தத்தை நடாத்திச்சென்றவரும் என்றவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் பதில்சொல்லவேண்டிய கட்டாய கடப்பாட்டைக் கொண்டவராவார். காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் தங்களது பிள்ளைகள் புகைப்படம் ஒன்றில் ஜனாதிபதி அவர்களின் அருகில் நிற்பதாக அடையாளம்காட்டிய பின்னரும் ஜனாதிபதி அவர்கள் இப்பிரச்சினையைக் குழுவிடம் கையளித்துத் தான்தப்பிக்க முயற்சிப்பதைத் தமிழ்மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சியாளர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலைசெய்த அரசாங்கம் தமிழ் அரசியல்கைதிகளை மட்டும் தொடர்ந்தும் சிறையில் வாட்டிவருகிறது. நல்லாட்சி அரசாங்கத்துக்குத் தமிழ்மக்கள் நம்பி வாக்களித்ததன் பின்னருங்கூட அரசாங்கம் இவர்களின் விடுதலையில் எவ்வித அக்கறையையும் காட்டவில்லை. இவர்களது குடும்பங்கள் அனுபவித்துவரும் துயரங்கள் சொல்லிமாளாதவை. தாயின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வருகைதந்த அரசியல்கைதியான தனது தந்தையுடன் செல்வதற்காகக் காவல்துறையின் வாகனத்தில் பிஞ்சுப் பாலகி ஏறிய காட்சியைப் பார்த்து காவல்துறையினரே கண்ணீர் உதித்திருக்கின்றனர். ஆனால் இதுவரையில் சிறைக்கொட்டடியில் வாடும் அரசியல்கைதிகளின் குடும்பங்கள் அனுபவித்துவரும் இன்னோரன்ன பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி கவனம் கொள்ளாதவராகவே இருந்துவருகிறார்.

ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அவர்கள் வார்த்தைகளால் நன்றிசொல்வதை விடுத்து அந்நன்றியை செயல்களில் காட்டவேண்டும் என்பதே போரால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் எதிர்பார்ப்பு. தவறின் செய்ந்நன்றி கொன்றவராகவே வரலாற்றில் இந்த ஜனாதிபதியும் இடம்பெறுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers