இலங்கை

“கோத்தாபய ராஜபக்ஷவின் படையினரே என் சகோதரரை கடத்தினர்”…

“2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் 17 ஆம்திகதி இலங்கை கடற்படையின் அதிகாரி சம்பத் முனசிங்கவினால் எனது சகோதரர் கடத்தப்பட்டார்” என கடத்தப்பட்டவரின் சகோதரியான ஜயனி தியாகராஜா என்ற பெண் ஜெனிவா மனித உரிமை பேரவையில் தெரிவித்துள்ளார். குறிப்பாக முன்னாள் பாதுகாப்பு செயலளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கீழ் பணியாற்றிய ஒரு குழுவே கப்பம் பெறும் நோக்கில் எனது சகோதரர் உள்ளிட்ட 11 பேரை கடத்தியதாக தெரிவித்தார்.

அங்கு கருத்துரைத்த அவர் “இலங்கை விவகாரத்தில் சர்வதேச நியாயாதிக்கத்தை வலியுறுத்தியுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைனின் அறிக்கையை வரவேற்கின்றோம். எனது சகோதரரை மீட்பதற்காக அனைத்து விதமான இராஜதந்திர பொறிமுறைகளையும் எனது குடும்பம் பயன்படுத்தியது. ஆனால் இராணுவ ரீதியான சித்திரவதைகளையே எதிர்கொண்டோம். எங்களது தனிப்பட்ட நிதி நிலைமை காரணமாக சகோதரரை மீட்பதற்காக 10 லட்சம் ரூபாய் கப்பம் கொடுத்தோம். ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. துப்பாக்கிமுனையில் பணத்தை பெற்றுக்கொண்டு எனது தாயை தள்ளிவிட்டு சென்றனர்.

2012 ஆம் ஆண்டு விசேட குற்றவிசாரணை அதிகாரி நிஷாந்த டி சில்வாவும் அவரது குழுவும் எனது வீட்டுக்கு வந்து எனது சகோதரன் காணாமல் போகவில்லை என்றும் அவர் கடத்தப்பட்டார் என்றும் தெரிவித்தனர். அத்துடன் முன்னாள் பாதுகாப்பு செயலளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கீழ் பணியாற்றிய வசந்த கருணாகொட, சம்பந் முனசிங்க, ஹெட்டிராய்ச்சி, தசநாயக்க இளங்கோ உள்ளிட்டவர்கள் எனது சகோதரர் உள்ளிட்ட 11 பேரை கடத்தியதாக குறிப்பிட்டனர். கப்பம் பெறுவதற்காகவே இவ்வாறு செய்ததாகவும் கூறினர்.

இவ்வாறு கடத்தப்பட்ட 11 பேரும் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு பொலித்தீன் பைகளில் பொதி செய்யப்பட்டு மகாவலி ஆற்றில் வீசப்பட்டதாக நீதிமன்றத்தில் சந்தேக நபர் ஒருவர் தெரிவித்தார். அண்மையில் நான்கு சந்தேகநபர்களும் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். கடந்த பத்து வருடங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமது பிரஜைகளையே இவ்வாறு சித்திரவதை செய்து கொன்றுள்ளனர். இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகித்து எமது அன்புக்குரியவர்கள் மீள்வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இந்த பேரவையின் தலைவரிடம் கோருகின்றோம் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers