Home இலங்கை புலிகள் அமைப்பில் இருந்ததால் எம்மை குருக்கள் கொலை வழக்கில் இராணுவத்தினர் சிக்க வைத்தனர்….

புலிகள் அமைப்பில் இருந்ததால் எம்மை குருக்கள் கொலை வழக்கில் இராணுவத்தினர் சிக்க வைத்தனர்….

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்ததால் எம்மை இராணுவத்தினர் குருக்கள் கொலை வழக்கில் சிக்க வைத்துள்ளார்கள் என குருக்கள் கொலை வழக்கில் குற்றவாளிகளாக மன்றினால் காணப்பட்ட இருவரும் மன்றில் தெரிவித்தனர்.
சங்கானை பகுதியில் இந்து மத குரு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தது நகைகளை கொள்ளையடித்தமை தொடர்பிலான வழக்கின் தீர்ப்பு நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.மேல்.நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனால் வழங்கப்பட்டது.
நீதிபதி தனது தீர்ப்பின் போது ,
சம்பவம். 

கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் திகதி இரவு 8 மணிக்கும் 8.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், சங்கானை முருக மூர்த்தி ஆலயத்திற்கு அருகில் உள்ள குருக்கள் வீட்டுக்குள் அத்துமீறி உள்நுழைந்த துப்பாக்கிதாரிகள் துப்பாகியால் சுட்டு குருக்களை படுகொலை செய்ததுடன் , அவரது இரு மகன்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கடுங்காயம் ஏற்படுத்தி , வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

சத்தம் போடாதே ! என மிரட்டினார்கள். 
அப்பாவை சுட்டார்கள்.

இந்த வழக்கின் முக்கிய சாட்சியமான கண்கண்ட சாட்சியான  உயிரிழந்த குருக்களின் மகனானும் , துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தவருமான முதலாம் சாட்சியம் , சாட்சியம் அளிக்கையில் ,
சம்பவ தினத்தன்று , வெளியில் இருந்து நான் வீட்டுக்கு செல்லும் போது வீட்டுக்கு அருகில் நின்ற 2ஆம் மற்றும் 3ஆம் எதிரிகள் என்னை வழிமறித்து சத்தம் போட வேண்டாம் என மிரட்டினார்கள். நான் அதையும் மீறி சத்தம் எழுப்பிய போது , எனது சத்தத்தை கேட்டு ஓடி வந்த அப்பா மீது மூன்றாம் எதிரி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார்.
துப்பாக்கி பிரயோகத்தால் அப்பா மீது துப்பாக்கி சன்னங்கள் பட்டு அவர் கீழே விழுத்த போது நான் அவரை தூக்க முற்பட்ட போது என் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். அதனால் எனக்கு காயம் ஏற்பட்டு நான் அங்கிருந்து ஓடினேன்.
அண்ணாவையும் சுட்டார்கள். 
இந்த சத்தம் கேட்டு அண்ணா ஓடி வந்த போது அண்ணா மீதும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அவற்றை நான் மறைந்திருந்து பார்த்தேன்.
சுட்டவர்களை அடையாளம் கண்டேன். 
பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த எமது மோடார் சைக்கிளை எடுத்துக்கொண்டு போகும் போது தமது முகத்தில் கட்டி இருந்த கறுத்த துணியை கழட்டி வீசினார்கள். அதன் போது நான் அவர்கள் முகத்தை நன்றாக அடையாளம் கண்டு கொண்டேன்.
மூன்றாம் எதிரி தான் அப்பா மீதும் என் மீதும் அண்ணா மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார். தப்பி செல்லும் போது மூன்றாம் எதிரி மோட்டார் சைக்கிளில் பின் புறமாக திரும்பி உட்கார்ந்து துப்பாக்கியை நீட்டிக்கொண்டே சென்றார். என மன்றில் சாட்சியம் அளித்திருந்தார்.
பொலிசாருக்கு அறிவித்தோம்.
வீட்டில் இருந்தவர்கள் சாட்சியம் அளிக்கும் போது , வீட்டுக்கு வெளியில் சத்தம் கேட்டு ஓடி வந்த போது அப்பா மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. அண்ணா மீது துளசி மாடத்திற்கு அருகில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. நாங்கள் வீட்டுக்குள் ஓடி சென்று அறைக்குள் புகுந்து கதவை சாத்திகொண்டோம். அப்போது கதவை உடைக்க முயற்சித்தார்கள். நாங்கள் உள்ளே இருந்து தொலைபேசி ஊடாக மானிப்பாய் பொலிசாருக்கு அறிவித்தோம்.
பிறகு அவர்கள் வீட்டில் இருந்து செல்லும் போது நான் யன்னல் வழியாக பார்த்தேன். மூன்றாம் எதிரி துப்பாக்கியுடன் மோட்டர் சைக்கிளின் பின் புறமாக திரும்பி உட்கார்ந்து சென்றதை கண்டேன். என சாட்சியம் அளித்தார்.
இராணுவ கோப்பிரலும் மற்றையவர்களும் நண்பர்கள். 
வழக்கின் மற்றுமொரு முக்கிய சாட்சியமான அளவெட்டி மினி இராணுவ முகாமில் கடமையில் இருந்த இராணுவ சிப்பாய். அவர் தனது சாட்சியத்தில் , 1ஆம் மற்றும் 2ஆம் எதிரிகள் சம்பவ தினத்தன்று தமது முகாமுக்கு முன்பாக மாலை 6 மணியளவில் நின்று மூன்றாம் எதிரியான இராணுவ கோப்பிரல் உடன் உரையாடியதை கண்டதாகவும் , பின்னர் அருகில் இருந்த தேநீர் கடைக்குள் மூவரும் சென்றனர். பின்னர் திரும்பி மூவரும் வந்ததை அவதானித்தேன் என சாட்சியம் அளித்தார்.
அத்துடன் இரவு 7 மணி 7.15 மணியளவில் மூன்றாம் எதிரியான இராணுவ கோப்பிரல் தனது துப்பாக்கியுடன் முகாமின் பின் பக்கமாக வேலி ஊடாக சென்றார் எனவும் , அவர் தன்னை விட அதிகாரம் கூடியவர் என்பதனால் தான் அவரை பின் தொடரவில்லை எனவும் சாட்சியம் அளித்தார்.
அவ்வாறு வேலி ஊடாக சென்றவர் மீண்டும் 8.45 மணியளவில் ஒருவித பதட்டத்துடன் வந்தார். அவர் தனக்கு களைப்பாக உள்ளது தான் ஓய்வெடுக்க போகிறேன் என சொல்லி முகாமுக்குள் சென்று விட்டார்.
மேயர் துப்பாக்கிகளை பரிசோதித்தார்.
அவர் அவ்வாறு கூறி சென்ற சில நிமிடங்களில் சுன்னாகம் இராணுவ முகாமில் இருந்து மேயர் ராமநாயக்க எமது முகாமுக்கு வந்து துப்பாக்கி சூடு நடைபெற்று உள்ளது. அது தொடர்பில் விசாரிக்க வேண்டும் என கூறி எமது முகாமில் உள்ள இராணுவத்தினரின் துப்பாக்கிகளை பரிசோதித்தார்.
கோப்பிரலை கைது செய்தார்.  
அதன் போது மூன்றாம் எதிரியின் துப்பாக்கியில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட மனம் வந்தது. அதனை அடுத்து அவருக்கு கொடுக்கப்பட்ட துப்பாக்கி சன்னங்கள் மற்றும் கூடுகள் (மகசீன்) என்பவற்றை சோதனை செய்த போது 4 துப்பாக்கி சன்னங்கள் குறைவாக காணப்பட்டது. அதனை அடுத்து அவரை மேயர் அழைத்து சென்றார். என சாட்சியம் அளித்தார்.
கோப்பிரல் பொலிசாரிடம் ஒப்படைப்பு.
அது தொடர்பில் இராணுவ மேயர் ராமநாயக்க சாட்சியம் அளிக்கையில் , தான் மூன்றாம் எதிரியான இராணுவ கோப்பிரலை கைது செய்து சுன்னாகம் இராணுவ முகாமுக்கு அழைத்து சென்று விசாரணை செய்த பின்னர் , அவரையும் அவரது துப்பாக்கி மற்றும் துப்பாக்கி சன்னங்கள் என்பவற்றை மானிப்பாய் பொலிசாரிடம் ஒப்படைத்தேன் என சாட்சியம் அளித்தார்.
முதலாம் , இரண்டாம் எதிரிகள் கைது. 
நகைகள் மீட்பு. 
மானிப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி சாட்சியம் அளிக்கையில் , இராணுவ மேயரால் ஒப்படைக்கப்பட்ட இராணுவ கோப்பிரலிடம் விசாரணைகளை முன்னெடுத்ததன் பிரகாரம் , 2ஆம் எதிரியின் வீட்டு சாமி அறையில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என சந்தேகப்பட்ட நகைகளை மீட்டேன். அத்துடன் அவரது மனைவியின் தாயாரிடம் இருந்து சில நகைகளை மீட்டேன். அதேவேளை முதலாம் எதிரியிடம் இருந்தும் குருக்களுடையது என சந்தேகப்பட்ட உருத்திராட்ச கொட்டை உள்ளிட்ட சில நகைகளை மீட்டேன். என சாட்சியம் அளித்திருந்தார்.
நகைகளை சாட்சியங்கள் அடையாளம் காட்டின. 
பொலிஸ் பொறுப்பதிகாரியால் மீட்கப்பட்டதாக மன்றில் ஒப்படைக்கப்பட்ட நகைகளை சாட்சியங்கள் தங்களுடையது எனவும் அப்பாவினுடையது எனவும் அடையாளம் காட்டி இருந்தனர்.
மேயருக்கு பாராட்டு. 
 இந்த வழக்கில் எதிரிகளை கைது செய்வதற்கு காரணமாக இருந்த இராணுவ மேயர் ராமநாயக்கவை மன்று பாராட்டுகின்றது. சம்பவம் நடைபெற்று ஓரிரு மணித்தியாலங்களுக்குள் துப்பாக்கி சூடு நடத்தியவரை அடையாளம் கண்டு கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்தமைக்கு.
அதேவேளை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட மூன்றாம் எதிரியை விசாரணைக்கு உட்படுத்தி மற்றைய இரண்டு எதிரிகளையும் விரைவாக கைது செய்ததுடன் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்ட மானிப்பாய் பொலிசாரையும் மன்று பாராட்டுகிறது.
கோப்பிரலின் துப்பாக்கியாலே சுடப்பட்டது. 
சம்பவ இடத்தில் இருந்து தடயவியல் பொலிசாரால் மீட்கப்பட்ட துப்பாக்கி சன்னத்தின் வெற்றுக்கோது , இராசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டது. அதனை பரிசோத்தித்த இரசாயனபகுப்பாய்வு திணைக்கள அதிகாரி மன்றில் சாட்சியம் அளிக்கையில் மூன்றாம் எதிரியின் துப்பாக்கியில் இருந்தே இந்த சன்னம் வெளியேறியுள்ளது என சாட்சியம் அளித்தார்.
தடய பொருட்கள் மீட்பு.  
சம்பவ இடத்திற்கு அருகில் இருந்து ஆண்கள் பயன்படுத்தும் துவிச்சக்கர வண்டி ஒன்று மீட்கப்பட்டது. அது எதிரிகள் வந்த துவிச்சக்கர வண்டியாக இருக்கலாம். அவர்கள் தப்பி செல்லும் போது குருக்களின் மோட்டார் சைக்கிளை கொள்ளையடித்து சென்றனர். அந்த மோட்டார் சைக்கிள் பெற்றோல் தீர்ந்த நிலையில் இளவாலை பகுதியில் இருந்து பொலிசாரினால் மீட்கப்பட்டது.
குற்றம் நிரூபணம். 
சந்தர்ப்ப சூழ் நிலை சாட்சியங்கள் மற்றும் கண்கண்ட சாட்சியங்கள் என்பவற்றின் அடிப்படையில் 2ஆம் மற்றும் 3ஆம் எதிரிகள் குற்ற செயலில் நேரடியாக தொடர்பு பட்டு உள்ளார்கள் என்பது நிரூபணம் ஆகுகின்றது.
பன்றியை சுடவே துப்பாக்கி கொடுத்தேன். 
இங்கே முதலாம் எதிரி தொடர்பில் மூன்றாம் எதிரி சாட்சி கூண்டில் ஏறி சாட்சியம் அளிக்கையில் , அன்றைய தினம் எனது பிறந்த நாள். அதனால் முதலாம் எதிரி மாலை 6.30 மணியளவில்  என்னை முகாமில் சந்தித்தார். பின்னர் பன்றி ஒன்றினை சுட வேண்டும். என கூறி முதலாம் இரண்டாம் எதிரிகள் எனது துப்பாக்கியை வாங்கி சென்றனர். நான் அவர்களிடம் துப்பாக்கியை மாத்திரமே கொடுத்து விட்டேன். நான் அவர்கள் கூட செல்லவில்லை.
இரவு 8.30 மணியளவில் துப்பாக்கியை மீண்டும் என்னிடம் கொண்டு வந்து தந்தார்கள். அப்போது தாம் பன்றிக்கு சுட்டதாகவும் , ஆனால் பன்றிக்கு துப்பாக்கி சூடு படவில்லை அதனால் அது தப்பி விட்டது என கூறி துப்பாக்கியை தந்தார்கள் என சாட்சியம் அளித்தார்.
நேரடி தொடர்பு. 
அவரது சாட்சியத்தின் பிரகாரம் முதலாம் மற்றும் இரண்டாம் எதிரிகள் இந்த வழக்கில் நேரடியாக தொடர்பு பட்டு உள்ளார்கள் அத்துடன் துப்பாக்கி கொடுக்கல் வாங்கல் இடம்பெற்று உள்ளது என்பது நிரூபணம் ஆகுகின்றது. பன்றிக்கு சுட தான் துப்பாக்கி கொடுத்தேன். என்பதில் நம்பகத்தன்மை இல்லை.
மூவரும் குற்றவாளிகள். 
ஆகவே மூவரும் பொது எண்ணத்துடன் இக் குற்றத்தை புரிந்துள்ளார்கள். என்பது நிரூபணம் ஆகுகின்றது. எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகள் சாட்சியங்களை குறுக்கு விசாரணைக்கு உட்படுத்திய போதிலும் , முறியடிக்கப்படவில்லை.
ஆகவே எதிரிகள் மீதான குற்ற சாட்டுக்கள் நிரூபணம் ஆனதால் , எதிரிகள் மூவரையும் இந்த மன்று குற்றவாளியாக காண்கிறது. என நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்தார்.
எதிரிகளிடம் மூவரும் மன்றுக்கு ஏதாவது சொல்ல விரும்புகின்றீர்களா ? என வினாவினார்.
புலிகள் அமைப்பில் இருந்ததால் இராணுவத்தினர் வழக்கில் சிக்க வைத்துள்ளார்கள். 
அதற்கு முதலாம் எதிரியான  காசிநாதன் முகுந்தன் அல்லது சக்தி என்பவர் எதிரி கூண்டில் நின்று,  நான் இந்த குற்றத்தை செய்யவில்லை. நான் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பின்னர் விலகி இருந்தேன். என்னை 2010ஆம் ஆண்டு சுன்னாகம் இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் கைது செய்திருந்தனர்.
என்னிடம் விடுதலைப்புலிகள் தொடர்பிலும் , அவர்கள் ஆயுதங்கள் எங்கே மறைத்து வைக்கப்பட்டு உள்ளது எனவும் அடித்து துன்புறுத்தி பலவாறாக விசாரணைகளை மேற்கொண்டனர்.
தேர்முட்டிக்குள் புலிகள் இருந்தனரா ?
இராணுவத்தினரின் பிடியில் இருந்த போது ஒரு நாள் சங்கானை முருக மூர்த்தி ஆலய தேர்முட்டிக்குள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் மறைந்து இருப்பதாகவும் , அவர்களுக்கு யார் உணவளிப்பதாகவும் கோரி விசாரணை நடாத்தினார்கள். நான் எதுவும் தெரியாது என பதில் அளித்தேன்.
பின்னர் ஒரு நாள் தேர்முட்டிக்கு அருகில் வென்சாதமும் சம்பலும் பார்சலாக கிடந்தது. அது குருக்கள் வீட்டு சாப்பாடு தானே என என்னிடம் விசாரணை செய்தனர். நான் தெரியாது என கூறினேன்.
பின்னர் நான்கு மாதம் அளவில் என்னை சுன்னாகம் இராணுவ முகாமில் தடுத்து வைத்து விசாரணை செய்த பின்னர் விடுதலை செய்தனர்.
இராணுவமே கைது செய்தது. 
பொலிசாருக்கு எதுவும் தெரியாது. 
பிறகொருநாள் நான் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது  என்னை மீள இராணுவத்தினர் கைது செய்து பவள் கவச வாகனத்தில் ஏற்றி சென்று உடுவில் இராணுவ முகாமில் ஓரிரு நாட்கள் தடுத்து வைத்த பின்னர் என்னை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் சக்தி என பெயர் சூட்டி இராணுவத்தினர் ஒப்படைத்தனர்.
எனக்கு சக்தி என ஒரு பெயரில்லை. எனது பெயர் காசிநாதன் முகுந்தன். என்னை போலீசார் கைது செய்யவில்லை. எனது வீடு எங்கே இருக்கிறது எனக்கு திருமணம் முடிந்தா என்பது முதல் எதுவும்  என்னைப்பற்றிய எந்த தகவலும் பொலிசாருக்கு தெரியாது. இராணுவத்தினர் ஒப்படைக்க என் மீது பொய் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
வேறு வழக்கிலும் சிக்க வைத்தார்கள். 
இதே போன்றே அளவெட்டியில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்றுடன் என்னை தொடர்பு படுத்தி மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அவை தள்ளுபடியாகியுள்ளது.
இந்த வழக்கினை மீள பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டால் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியும். எனக்கும் இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை.
எனக்கு சிங்களம் தெரியாது. 
நானும் மூன்றாம் எதிரியான இராணுவ கோப்பிரலும் நண்பர்கள் என கூறுகின்றார்கள். ஆனால் எனக்கு சிங்களம் தெரியாது. அவருக்கு தமிழ் தெரியாது. அப்படி இருக்கையில் நாங்கள் இருவரும் எவ்வாறு நண்பர்களாக இருக்க முடியும் ?
எனவே இந்த வழக்கு தொடர்பில் மீள் விசாரணை செய்தால் பல உண்மைகள் வெளி வரும் என தெரிவித்தார்.
 
புலிகள் அமைப்பில் இருந்தனான். சரியான வளர்ப்பில் வளர்ந்தவன்.
அதனை அடுத்து இரண்டாம் எதிரியான பாலசுப்பிரமணியம் சிவரூபன் தெரிவிக்கையில்,
நான் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தனான். அதனால் என்னை திட்டமிட்டு இராணுவத்தினர் இந்த வழக்கில் மாட்டியுள்ளார்கள். எனக்கு குருக்கள் வீட்டில் படுகொலை செய்து கொள்ளையடிக்க வேண்டிய தேவை இல்லை. அப்படியான வளர்ப்பில் வளர்ந்தவன் இல்லை நான் என தெரிவித்தார்.
இருவரும் நண்பர்கள். பன்றி சுட துப்பாக்கி கொடுத்தேன். 
அதனை தொடர்ந்து மூன்றாம் எதிரியான  இராணுவ கோப்பிரல் பேதுரு குணசேன தெரிவிக்கையில் ,
இந்த கொலை சம்பவத்துடன் நான் தொடர்பு படவில்லை. முதலாம் எதிரி எனது நண்பர் அன்றைய தினம் எனது பிறந்தநாள் அதனால் முதலாம் மற்றும் இரண்டாம் எதிரிகள் என்னை முகாமில் வந்த சந்தித்து முகாமுக்கு முன்னால் இருந்த தேநீர் கடையில் தேநீர் அருந்தினோம். அப்போது எனது துப்பாக்கியை தருமாறும் பன்றி ஒன்றினை சுட வேண்டும் என முதலாம் எதிரியான எனது நண்பர் என்னிடம் தமிழில் கேட்டார். அதனை இரண்டாம் எதிரி சிங்களத்தில் மொழி பெயர்த்து எனக்கு கூறினார்.
அவர்கள் இருவரும் எனது நண்பர்கள் என்பதால் நான் அவர்களிடம் எனது துப்பாக்கியை கொடுத்தேன். நான் துப்பாக்கி கொடுத்த குற்றத்தை ஏற்றுக்கொள்கிறேன். பன்றியை சுடுவதற்காகவே கொடுத்தேன். ஆனால் கொலை நடைபெற்ற இடத்திற்கு நான் செல்லவும் இல்லை கொலை செய்வும் இல்லை என தெரிவித்தார்.
 
தண்டனை தீர்ப்பு. 
அதனை அடுத்து யாழ்.மேல் நீதிபதி தண்டனை தீர்ப்பை வழங்கினார். அதில் ,
எதிரிகள் மூவர் மீதும் சுமத்தப்பட்ட ஐந்து குற்றசாட்டுகளும் கண்கண்ட சாட்சியங்கள் , சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சியங்கள் என்பவற்றின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமின்றி வழக்கு தொடுனர் தரப்பால்  நிரூபிக்கப்பட்டு உள்ளது.
எனவே குருக்களை துப்பாகியால் சுட்டு படுகொலை செய்த குற்ற சாட்டுக்காக மூவருக்கும் மரண தண்டனை விதிப்பதுடன் ,
தலா மூவருக்கும்,  வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குற்ற சாட்டுக்கு மூன்று மாத கடூழிய சிறைத்தண்டனையும் , தனியங்கி துப்பாக்கியை பயன்படுத்தி ஆயுத கொள்ளையில் ஈடுபட்ட குற்ற சாட்டுக்கு , ஆயுள் தண்டனையும் , 10 ஆயிரம் ரூபாய் தண்டபணமும் , அதனை கட்டத்தவறின் 06 மாத கால கடூழிய சிறைத்தண்டனையும் , இருவரை துப்பாக்கியால் சுட்டு படுகாயம் ஏற்படுத்திய குற்றசாட்டுக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் , 20 ஆயிரம் ரூபாய் தண்ட பணமும் அதை கட்ட தவறின் 06 மாத கடூழிய சிறை தண்டனையும் , படுகாயமடைந்தவர்களுக்கு நஷ்ட ஈடா 2 இலட்ச ரூபாய் வழங்க வேண்டும். அதனை வழங்க தவறின் 2 வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More