இலங்கை கட்டுரைகள்

என்ன செய்யப் போகின்றார்கள்? பி.மாணிக்கவாசகம்…

ஐநா மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது அமர்வு இலங்கையைப் பொறுத்தமட்டில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை, சம்பந்தப்பட்ட பல தரப்பினரும் தீர்மானிக்க வேண்டிய கட்டாய நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள், போர்க்காலச் செயற்பாடுகள் – போர்க்குற்றம் சார்ந்த சம்பவங்கள் பற்றிய பொறுப்பு கூறும் கடப்பாட்டில் இலங்கை அரசாங்கம் காட்டியுள்ள முன்னேற்றம் என்பவற்றை மதிப்பீடு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த அமர்வில் இலங்கை விவகாரம் உள்ளடக்கப்பட்டிருந்ததன் நோக்கமும் அதுவே. பொறுப்பு கூறுவதில் இலங்கையின் நிலைமைகள் குறித்து தீர்மானம் எடுப்பதல்ல.

இந்த நிலையில் நடந்து முடிந்த ஐநூ மனித உரிமைப் பேரவையின் அமர்வு குறித்து பல விமர்சனங்களும் பல்வேறு பார்வைகளும் வெளிப்பட்டிருக்கின்றன.

பொறுப்பு கூறும் வி;டயத்தில் அரசாங்கத்தின் மந்த கதியான போக்கு குறித்து மிகுந்த ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் வெளிப்படுத்தியிருக்கின்றார். அந்த அதிருப்தியானது இலங்கையின் எதிர்காலத்திற்கு விடுக்கப்பட்டிருக்கின்ற மோசமான எச்சரிக்கைக்கான சமிக்ஞை.

அது மட்டுமல்லாமல் உறுதி மொhழிகளை வழங்குவதில் மாத்திரம் அரசு ஆர்வமாக இருக்கின்றது. அவற்றை நிறைவேற்றுவதில் அக்கறை செலுத்தவில்லை என்பதை உறுப்பு நாடுகளின் கவனத்திற்கு மிபவும் அழுத்தமாகக் கொண்டு வந்துள்ள மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை, இலங்கை தொடர்பில் மாற்று வழிகளை எடுப்பது பற்றி அவைகள் சிந்திக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது. அத்துடன் இந்த அமர்வு முன்னெப்போதும் இல்லாத அளவில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தனது கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றது என்பது பொதுவான பார்வை.

இலங்கை தொடர்பில் மாற்று வழிகள் குறித்து சிந்திக்க வேண்டும். குறிப்பாக சர்வதேச நீதிமன்ற விசாரணை குறித்து ஆராய வேண்டும் என்று உறுப்பு நாடுகளை மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தூண்டியிருப்பது முக்கியமான முன்னேற்றகரமான நடவடிக்கை என மற்றுமொரு அரசியல் ரீதியான விமர்சனப் பார்வை சுட்டிக்காட்டியிருக்கின்றது.

நிலைமாறுகால நீதிக்கான செயற்பாடுகளில் ஆக்கபூர்வமாக ஒன்றுமே நடக்கவில்லை என்று வெறுப்படைந்துள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர் தரப்புக்கு இந்த அமர்வு ஒரு மன ஆறுதலைத் தந்துள்ளது. ஐநாவும் சர்வதேசமும் தங்களைக் கைவிடவில்லை. தங்கள் பக்கமே நிற்கின்றன என்ற உணர்வை தமிழர் தரப்புக்கு ஏற்படுத்தியுள்ளது என்றும் அந்தப் பார்வை கூறுகின்றது.

நல்லாட்சி அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற சர்வதேசத்தின் நிலைப்பாட்டை ஐநா மனித உரிமைகள் பேரவை ஒட்டுமொத்தமாக வெளிப்படுத்தியிருக்கின்ற அதேவேளை. ஐநா மனித உரிமைப் பேரவையையும் சர்வதேசத்தையும் போக்கு காட்டி, தொடர்ந்து ஏமாற்றிச் செல்ல முடியாது. அதற்கு இடமில்லை என்ற எச்சரிக்கையும் இந்த அமர்வில் வெளிப்பட்டிருக்கின்றது.

மறுபக்கத்தில், எதிர்பாராத விதமாக, உள்ளுராட்சித் தேர்தலில், சிங்கள பௌத்த தீவிரவாத சிந்தனைப் போக்கில் சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்று அரசியல் ரீதியாக எழுச்சி பெற்றுள்ள மகிந்த ராஜபக்ச அணியினர், அதிகாரத்திற்கு வர நேர்ந்தாலும், யுத்தத்தை வெற்றிகொண்ட மனப்போக்கில் மேற்கத்தைய நாடுகளின் எதிர்பார்ப்புக்கு மாறாகச் செயற்பட முடியாது என்று எச்சரித்திருக்கின்றது என்றும் அந்த விமர்சனப் பார்வை சுட்டிக்காட்டியிருக்கின்றது.

எச்சரிக்கையும் மறுதலிப்பும்

ஐநா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30ஃ1 மற்றும் 30ஃ4 ஆகிய இரண்டு தீர்மானங்களுக்கும் அனுசரணை வழங்கி உறுதியளித்த விடயங்களை அடுத்த வருடத்துக்குள் நிறைவேற்றாவிட்டால், அனைத்துலக நிபுணர்கள் பங்கேற்கின்ற சர்வதேச விசாரணை ஒன்றுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்ற எச்சரிக்கையை மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை வெளிப்படையாகவே நல்லாட்சி அரசாங்கத்தை எச்சரித்திருக்கின்றது.

ஆனால், நல்லாட்சி அரசாங்கத்தை வீழ்த்திவிட்டு, அதிகாரத்தைக் கைப்பற்றி, ஐநா மற்றும் சர்வதேசத்திற்கு உடன்பாடற்ற வகையில் செயற்பட முற்பட்டால், போர்க்குற்ற விசாரணைகளுக்கு உள்ளாக நேரிடும் என்று மகிந்த ராஜபக்சஅணியினருக்கு மறைமுகமாக அந்த அறிக்கை எச்சரித்திருக்கின்றது.

அரசாங்கமும்சரி, மகிந்த அணியினரும்சரி, இந்த எச்சரிக்கைகளை சாதாரணமானதாகக் கருதிவிட முடியாது. அவைகள் புறந்தள்ளிவிடப்பட முடியாதவை. ஏனெனில் அந்த அளவுக்கு அரசாங்கத்தின் மந்த கதியிலான போக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையாளரையும், ஐநா மற்றும் சர்வதேசத்தையும் அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கின்றது.

மனித உரிமைகள் ஆணையாளரின் கடும் சொற்பிரயோகத்துடன் கூடிய கடுந் தொனியிலான அறிக்கையும், பொறுப்பு கூறும் விடயங்களை காலக்கெடுவுடன் கூடிய ஒரு நிகழ்ச்சி நிரலை அரசு வெளியிட வேண்டும் என்ற மனித உரிமைப் பேரவை உறுப்பு நாடுகளின் கோரிக்கையும் இந்த அதிருப்தியின் வெளிப்பாடாகவே அமைந்திருக்கின்றன.

மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை கடுமையாக இருந்த போதிலும், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான அரச தரப்பு தூதுக்குழுவினர் வெளியிட்டுள்ள பதிலும், அவர்களின் அறிக்கையும் பொறுப்பு கூறலுக்கான கடப்பாட்டின் தீவிரத் தன்மையை உணர்ந்து கொண்டதாக அமையவில்லை.

ஐநா மற்றும் சர்வதேச நிலைப்பாடுகளை ஏற்று, அவற்றுக்கு ஏற்ப நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய இணக்கப்பாட்டை அரச தரப்பு பதிலுரைகளில் காண முடியவில்லை. மாறாக அரசாங்கத்தின் நிலைப்பாடு சரியானது என்பதை வலியுறுத்துவதுடன், அதனை வலுவாக நிலைநிறுத்தும் வகையிலேயே அவைகள் அமைந்திருக்கின்றன.

குறிப்பாக சர்வதேச விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. உள்ளுர் விசாரணைகளே முன்னெடுக்கப்படும். சர்வதேச விசாரணைகளும், அல்லது கலப்பு விசாரணைக்கான சர்வதேச நிபுணர்களின் பங்களிப்பும் இலங்கையின் அரசியலமைப்புக்கு மாறானவை. அத்தகைய உட்படுத்தலை அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்க மாட்டாது என்பதையும் அரச தரப்பினர் மனித உரிமைப் பேரவையிடம் எடுத்துரைத்திருக்கின்றனர்.

பேரவையின் இரண்டு பிரேரணைகளையும் ஏற்று, அவற்றை நிறைவேற்றுவதாக பேரவை அமர்வுகளில் உறுதியளித்துவிட்டு, நாட்டுக்குத் திரும்பிய பின்னர், அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்று, கருத்துக்களைத் தெரிவித்து வந்த அரசாங்கம், நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்கு, உள்நாட்டு நீதித்துறைக் கட்டமைப்புச் செயற்பாடுகளே போதுமானவை. சர்வதேச பங்களிப்பு அவசியமற்றது. அவ்வாறு அவற்றை உள்வாங்குவதற்கு அரசியலமைப்பு இடம்கொடுக்கமாட்டாது என காரணம் கூறி ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை மறுதலித்துள்ளது.

இந்த மறுதலிப்பு அரசாங்கத்தினால், முதற் தடவையாக பேரவை அமர்வில் – சர்வதேசஅரங்கில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இது பொறுப்பு கூறுகின்ற தனது கடப்பாட்டை அரசாங்கம் தட்டிக்கழிப்பதற்காக மேற்கொண்டுள்ள பகிரங்கமான நடவடிக்கை என்று ஒரு விமர்சனப் பார்வை சுட்டிக்காட்டியிருக்கின்றது.

தட்டிக்கழிக்கும் செயற்பாடு

ஐநா மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் ஆரம்பமாகிய சந்தர்ப்பத்திலேயே கண்டியில் முஸ்லிம்கள் மீது மத ரீதியான தாக்குதல்கள் மோசமான வன்முறைகளாக இடம்பெற்றிருந்தன. சிறுபான்மை மதத்தினர் மீதான தாக்குதல்கள் பௌத்த சிங்கள தீவிரவாதிகளினால் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ள போதிலும், கண்டிச் சம்பவமே உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அரசாங்கத்திற்குப் பெரும் தலையிடியையும் அரசியல் ரீதியான மோசமான பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

முஸ்லிம்கள் மீதான கண்டித் தாக்குதல்கள் ஜெனிவாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பிரதிபலித்திருந்தன. இந்த நிலைமையை சமாளிப்பதற்காகவே மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவை அரசாங்கம் ஜெனிவாவுக்கு அனுப்பி வைத்திருந்தது. ஆனால் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து, அங்கு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக அவர் மேற்கொண்ட சந்திப்புக்களும் முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. அதேபோன்று அங்கு எதிரொலித்த கண்டனக் குரல்களையும் அவரால் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது.

மனித உரிமை நிலைமைகள் நாட்டில் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது ஐநாவினதும், சர்வதேசத்தினதும் தொடர்ச்சியான வலியுறுத்தலாகும். இந்த வலியுத்தல்களை உதாசீனம் செய்த வகையிலேயே முஸ்;லிம்களுக்கு எதிரான மத ரீதியான வெறுப்பைக் கக்கும் பேச்சுக்களும், அவர்கள் மீதான மோசமான தாக்குதல்களும் இடம்பெற்று வந்திருக்கின்றன.; இலங்கை தொடர்பான நிலைமைகளை விளக்குவதற்கான மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட மனித உரிமைப் பேரவையின் அமர்வு காலப் பகுதியிலேயே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றிருந்தன.

இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்தி, நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு அரசாங்கத்தின சட்டம் மற்றும் ஒழுங்குக்குப் பொறுப்பான அதிகார அலகு திண்டாட வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமடைந்திருந்தது. அதன் காரணமாகவே மனித உரிமை நிலைமைகளுக்கு முரணானதாகக் கருதப்படுகின்ற அவசரகால நிலைமையைப் பிரகடனப்படுத்த வேண்டிய அவல நிலை அராங்கத்திற்கு ஏற்பட்டிருந்தது. இதுவும் ஜெனிவாவில் ஓங்கி எதிரொலித்திருந்தது.

இத்தகைய ஒரு பின்புலத்திலேயே மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்குப் பொறுப்பு கூறும் வகையில் ஐநாவினால் பரிந்துரைக்கப்பட்ட வகையில் நிறுவப்பட வேண்டிய நீதியை நிலைநாட்டுவதற்கான பொறிமுறை நாட்டின் அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டது. அது சாத்தியப்படாதது என்று அரச தரப்பினரால் குறிப்பாக அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் ஜெனிவாவில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இது, பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டைத் தட்டிக்கழிப்பதற்காக அரசாங்கம் முன்வைத்துள்ள முக்கியமான காரணமாகவே நோக்கப்படுகின்றது. தகவல் அறியும் உரிமைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமையும், காணாமல் போனோருக்கான அலுவலகம் அமைக்கப்பட்டதும், ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்கப்படுவதற்கு எதிரான ஐநா சமவாய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதுமே, உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூறுவதற்காக அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டிருந்த இரண்டு வருட காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான நடவடிக்கைகளாகும். இதற்காக ஒரு வருட காலம் செலவிடப்பட்டிருக்கின்றது,

நிலைமாறுகால நீதியை நிலைநிறுத்தி பொறுப்பு கூறுவதற்காக இன்னும் எத்தனையோ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். அரசியல் கைதிகளை விடுதலை செய்வதுடன், இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். அதற்கான முயற்சியாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். நிலைமாறு கால நீதியை நிலைநாட்டுவதற்குரிய நீதி வழங்குதல், இழப்பீடு வழங்குதல், மீள் நிகழாமையை உறுதி செய்தல் என்பவற்றுக்கான பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். இவை எல்லாவற்றையும் ஆமை வேகத்தில் செயற்படுகின்ற அரசாங்கத்தினால் அடுத்த ஒரு வருட காலப்பகுதிக்குள் செய்து முடிக்க முடியாது என்றே பலரும் நம்புகிறார்கள். இதனையே மனித உரிமை ஆணையாளரும் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

கோரிக்கையும் தீர்மானங்களும்

மந்த கதியில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற அரசாங்கத்தை பொறுப்பு கூறும் விடயத்தில் வழிக்குக் கொண்டு வருவதற்காக மாற்று வழிகளை, குறிப்பாக சர்வதேச விசாரணை முறையொன்று குறித்து சிந்திக்க வேண்டும். ஆராய வேண்டும் என்று ஐநா மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும், காலக்கெடுவுடன் கூடிய நிகழ்ச்சி நிரலையே அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று உறுப்பு நாடுகள் கோரியிருக்கின்றன.

ஐநாவின் பிரேரணைகளை நிறைவேற்றுவதற்காக அரசுக்கு வழங்கப்பட்டிருந்த இரண்டு வருட கால அவகாசத்தில் ஒரு வருடம் ஓடி மறைந்துவிட்டது. இன்னும் ஒரு வருட காலமே எஞ்சியிருக்கின்றது. இந்தக் காலப்பகுதிக்குள் தனது உறுதிமொழிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாய நிலை. ஆனால், அந்த கட்டாய பொறுப்பை அரசாங்கம் உரிய முறையில் நிறைவேற்றுமா என்ற கேள்வியை எழுப்பி, அதனை நிறைவேற்ற முடியுமா என்ற சந்தேகத்தை மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றார்.

இந்த சந்தேகம் சாதாரண நிலையில் வெளிப்படுத்தப்பட்டதல்ல. உறுதிமொழிகளை வழங்குவதும், பின்னர் அவற்றைத் தட்டிக்கழிப்பதுமான அரசாங்கங்களின் போக்கை நன்கு உணர்ந்த நிலையிலேயே ஆணையாளர் இதனை வெளிப்படுத்தியிருக்கின்றார். முஸ்லிம்களுக்கு எதிரான கண்டி தாக்குதல் சம்பவங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளதன் மூலம், உரிமை மீறல்களில் நாட்டு நிலைமை எந்த அளவுக்கு மோசமடைந்திருக்கின்றது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றார். ஏற்கனவே இடம்பெற்ற உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூற வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ள அரசாங்கம் சிறுபான்மை மதத்தினரைப் பாதுகாக்கத் தவறியுள்ளதன் மூலம் அந்தப் பொறுப்பில் மேலும் பின்னடைவையே சந்தித்திருக்கின்றது என்பதை இது தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

பொறுப்புக்களைப் புறக்கணித்து தட்டிக்கழிக்கின்ற இலங்கை ஆட்சியாளர்களின் போக்கிற்கு, நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற நிலைமையும் வலு சேர்த்திருக்கின்றது. இதையும் மனித உரிமை ஆணையாளர் உணர்ந்துள்ளார் என்பதை அவரது அறிக்கை தொனி செய்திருக்கின்றது. இருப்பினும் பொறுப்பு கூறும் விடயத்தில் இனிமேலும் அரசாங்கம் மந்த கதியில் செயற்பட்டுக் கொண்டிருக்க முடியாது என்பதை அந்த அறிக்கை தெளிவாகக் குறித்துக் காட்டியிருக்கின்றது.

இந்த நிலையில் அரசாங்கம் அடுத்த கட்டமாக என்ன செய்யப் போகின்றது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

அதேபோன்று பொறுப்பு கூறும் விடயத்தில் காலக்கெடு ஒன்றைக் குறிப்பிட்டு அதற்குள் செயற்பட வேண்டியது பற்றிய அறிவித்தலை அரசு விடுக்க வேண்டும் என்று கோரியுள்ள மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகள் அடுத்ததாக என்ன செய்யப் போகின்றன என்பது தெரியவில்லை. அந்த நாடுகள் நேரடியாக இலங்கைக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கப் போகின்றனவா அல்லது மனித உரிமை ஆணையாளர் கோரியுள்ளவாறு சர்வதேச விசாரணைக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகின்றனவா என்பது தெரியவில்லை. இது குறித்து அந்த நாடுகள் – சர்வதேசம் ஒன்றிணைந்து ஒரு தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும். அது எப்போது நடைபெறும் என்பதை உடனடியாகக் கூற முடியாது.

தமிழர் தரப்பின் நிலைப்பாடு

தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் சர்வதேசம் உற்ற துணையாக இருக்கின்றது. அதற்கான முயற்சிகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டு வருகின்றது என்று பரவலாகப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆயினும் இம்முறை இடம்பெற்ற மனித உரிமைப் பேரையின் அமர்வின் பின்னர், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு வேறு விதமாக இருக்கின்றது.

பொறுப்பு கூறுவதற்கான செயற்பாடுகளை ஒரு காலக்கெடுவுக்குள் முன்னெடுக்காவிட்டால், அல்லது அதில் முன்னேற்றத்தைக் காட்டாவிட்டால், மாற்று நடவடிக்கையாக சாத்வீகப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாறுமன்ற உறுப்பினருமாகிய சுமந்திரன் கூறியுள்ளார்.

இதனிடையே. மனித உரிமைப் பேரவையின் அமர்வைச் சுற்றி பக்க நிகழ்வுகளாக இடம்பெற்ற பல்வேறு சந்திப்புக்கள், அமர்வுகளில் பங்கேற்று பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்காக களத்த்pல் இருந்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ஜெனிவாவுக்குச் சென்றிருந்தார்கள். அவ்வாறு சென்றவர்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பிலான உறவினர்களும், முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவில் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை மீட்பதற்கான மண்மீட்புப் போராட்டத்தில் குதித்துள்ளவர்களின் பிரதிநிதிகளும் முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றார்கள்.

இந்த பக்க அமர்வுகளில் பல்வேறு விடயங்கள் விவாதிக்கப்பட்டிருந்தன. அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காகவும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை என வாதிடுவதற்காகவும் சென்றிருந்த அரச சார்பு குழுக்களுக்கும், தமிழர் தரப்புக்கும் இடையில் அமர்வொன்றில் காரசாரமான விவாதமும் இடம்பெற்று அந்த அமர்வு இடைநடுவில் நிறுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது பற்றிய தகவல்களும் வெளியாகியிருந்தன.

அதேவேளை. பல்வேறு தலைப்புக்களில் இடம்பெற்ற பக்க நிகழ்வுகளான அமர்வுகளில் ஒன்றாகிய போர்க்குற்றச் செயற்பாடு தொடர்பான அமர்வில் தமிழர் தரப்புப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளாமல் நைஸாக நழுவியிருந்ததாகவும் ஒரு தகவல் உண்டு. போர்க்குற்றம் தொடர்பில் ஜெனிவாவில் கருத்து வெளியிட்டால், நாடு திரும்பியதும் அது தங்களுக்குத் தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கும் என்று அவர்கள் அச்சம் கொண்டிருந்தமையே காரணம் என கூறப்படுகின்றது. இந்தக் கருத்தை சில முக்கியஸ்தர்கள் அங்கு வெளிப்படையாகவே சிலரிடம் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

போர்க்குற்றம் தொடர்பாக உள்நாட்டில் குரல் எழுப்புபவர்கள் அது தொடர்பாக சர்வதேச மட்டத்தில் பேசப்பட வேண்டிய இடத்தில் ஏன் பேசவில்லை? ஏன் அவர்கள் மௌனம் சாதித்தார்கள், அவ்வாறு மௌனம் சாதிப்பதற்காக ஜெனிவாவுக்குச் சென்றிருக்க வேண்டிய அவசியம் இல்லையே என்ற விமர்சனமும் அங்கு எழுந்திருந்ததாகக் கூறப்படுகின்றது.

சில அமர்வுககளில் என்ன நடக்கின்றது என்பது தெரியாமலே சிலர் கலந்து கொண்டதாகவும் ‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற தலைப்பில் இடம்பெற்ற அமர்வில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளச் செய்யப்பட்டிருந்ததாகவும், அவ்வாறு கலந்து கொண்டவர்கள் அந்த அமர்வு குறித்து அறியாமலேயே கலந்து கொண்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தயாரிக்கப்பட்ட ஒரு வெளியீடும் இந்த அமர்வில் கையளிக்கப்பட்டதாகவும், அந்த வெளியீட்டில் ஆட்கள் விடுதலைப்புலிகளினாலேயே காணாமல் ஆக்கப்பட்டதாகவே கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியிருக்கின்றது. ஆயினும் அந்த ஆவணம் குறித்த உண்மையான நிலைப்பாடு என்ன என்பது தெரியவில்லை.

இழுத்தடிப்பு போக்கில் சென்று, பொறுப்பு கூறும் கடப்பாட்டைத் தட்டிக்கழிப்பதற்கான விதத்தில் அரசாங்கம் முற்பட்டுள்ள போதிலும், அதற்கெதிராக உறுதியான எந்தவொரு நிலைப்பாட்டையும் மனித உரிமைப் பேரவையின் அமர்வு வெளிப்படுத்தாத நிலையில் சர்வதேசத்தையும் ஐநாவையும் மலைபோல நம்பிக்கொண்டிருந்த தமிழர் தரப்பு, அடுத்ததாக என்ன செய்யப் போகின்றது என்பது தெரியவில்லை.

என்னசெய்யப் போகின்றார்கள்?

அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்துவிட்டுத் திரும்பியுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுமந்திரன் அடுத்த கட்டமாக அரசாங்கம் பொறுப்பு கூறும் விடயங்களில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால், சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி, அதற்கு உறுதுணையாகச் செயற்பட்டிருந்த போதிலும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் அரசு அக்கறை காட்டவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, அதற்கு எதிராகப் போராட முற்பட்ட அரசியல் சக்திகளையும் பாதிக்கப்பட்டவர்களையும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று கூட்டமைப்பின் தலைமை வலியுறுத்தியிருந்தது. அத்தகைய போராட்டங்கள் அரசாங்கத்தை சங்கடத்துக்கு உள்ளாக்கும் என்றும், அரசுக்கு எதிரான மகிந்த தரப்பினர் மேல் எழுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைந்துவிடும் என்றும் காரணம் கூறப்பட்டிருந்தது.

அதனையும் மீறி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும், இராணுவத்தின் பிடியில் உள்ள கேப்பாப்பிலவு காணிகளை விடுவிக்கக் கோரியும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்துவிட்டது. தமது போராட்டத்திற்கு உரிய அரசியல் ஆதரவும், வழிகாட்டுதலும் இல்லாத நிலையில் அவர்கள் கூட்டமைப்பின் மீது அதிருப்தி அடைந்துள்ளார்கள். நடந்து முடிந்த மனித உரிமைப் பேரவை அமர்வும் அவர்களுக்கு ஆறுதல் தருவதாக இல்லை. இதனால் அவர்கள் வெறுப்பின் விளிம்பில் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். அடுத்த கட்டமாக முன்னெடுப்பதற்கு, மாற்றுவழியேதும் இருக்கின்றதா என்பது குறித்து, அவர்கள் சிந்திக்கத் தலைப்பட்டிருக்கின்றார்கள்.

இந்த நிலையில்தான் சாத்வீகப் போராட்டத்த்pல் ஈடுபடுவது குறித்தும் மாற்றுவழியைத் தேடுவது குறித்தும் சுமந்திரன் வெளியிட்டுள்ள தகவல் வெளியாகியிருக்கின்றது. அவர் குறிப்பிட்டுள்ளவாறு அரசாங்கம் முன்னேற்றகரமான நிலையைக் காட்டாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவதற்கான நிர்ப்பந்தம் ஏற்பட்டால், மக்கள் எந்த அளவில் போராட்டத்திற்குத் தயாராக இருப்பார்களா அல்லது அத்தகைய ஒரு போராட்டத்திற்கு ஆதரவளிப்பார்களா என்பதைக் கூற முடியாதுள்ளது.

இந்த நிலையில் நிலைமைகளை சீர்தூக்கிச் சிந்தித்து, பிளவுண்டு கிடக்கும் தமிழர் தரப்பினர் ஒன்றிணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்களை நடத்தி ஆக்கபூர்வமான முடிவெடுத்துச் செயற்படத் தயாராக வேண்டும்.

தமிழ் தரப்பு அரசியல் தலைவர்கள் இதனைச் செய்வார்களா?

Spread the love
 •   
 •   
 •   
 •   
 •  
 •  
 •  
 •  

1 Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

 • 1. “நிலைமைகளை சீர்தூக்கிச் சிந்தித்து,
  2. பிளவுண்டு கிடக்கும் தமிழர் தரப்பினர் ஒன்றிணைந்து,
  3. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்களை நடத்தி,
  4. ஆக்கபூர்வமான முடிவெடுத்துச் செயற்படத் தயாராக வேண்டும்.
  5. தமிழ் தரப்பு அரசியல் தலைவர்கள் இதனைச் செய்வார்களா?”

  சுய நலன்கள் இல்லாமல் தமிழ் தரப்பு அரசியல் தலைவர்கள் எதையும் செய்வதில் பெரிய ஆர்வம் காட்டமாட்டார்கள்.

  உதாரணமாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை அமுல்படுத்தத் தேவைப்படும் கால அட்டவணையை உருவாக்கிக் கொடுக்க அரசாங்கம் மறுக்கின்றது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழ் தலைவர்கள் ஓன்று சேர்ந்து ஒரு அட்டவணையை பரிந்துரைத்து அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கலாம். இதை இவர்கள் செய்யவில்லை. இதைப் போல பல வாய்ப்புகளை இவர்கள் இழந்திருக்கிறார்கள். இவர்களில் பலர் தமிழ் இனத்திற்கு வந்த சாபக்கேடு என்றே கூற வேண்டும்.