இலங்கை பிரதான செய்திகள்

70 வயதில் விக்கி தமிழ்த் தேசியம் பேசுகிறார் – கைலாகு தராத முன்னணி – TNAயில் ஒட்டுக் குழு இல்லையா?

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

யாழ்.மாநகர சபையில் ஈ.பி.டி.பி. யின் முதலாவது பிரேரணை ஊழலை விசாரணை செய் என்பதே ..

தமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை பௌத்த சிங்கள கலாசாரத்திற்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு 70 வயதில் வந்து தமிழ் தேசியம் கதைக்கின்றார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் என  ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த  யாழ்.மாநகர சபை உறுப்பினர் எம். ரெமிடியஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
மாநகர சபை முதல்வர் கடந்த காலத்தில் மாநகர சபையில் நடைபெற்ற ஊழல் குற்ற சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஆனால் முதலமைச்சரால் மாநகர சபை ஊழல் தொடர்பில் மூன்று விசாரணை கமிசன் நியமிக்கப்பட்டும் எந்தவொரு குற்றசாட்டையும்   கண்டுபிடிக்க முடியவில்லை. மாநகர சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நாம் எமது கடந்த கால தவறுகள் களவுகளை மறைக்க ஆதரவு வழங்கவில்லை.
மாகாண சபையில் ஊழல் இடம்பெற்றது என நான்கு அமைச்சர்கள் விலக்கப்பட்ட நிலையில் என்ன நடந்தது? அப்படி இருக்கையில் எதற்காக இப்போது மீண்டும் விசாரணை தேவை என முதலமைச்சர் கூறுகின்றார்.  இது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு.
விசாரணை கமிசன் அமைக்கும் போது தமது விசுவாசிகளை தான் நியமிப்பார்கள் அதே போலவே முன்னாள் நீதியமைச்சர் தனக்கு கீழ் இருந்த ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமித்தார். ஆனாலும் மாநகர சபை தொடர்பில் எந்த குற்றமும் கண்டு பிடிக்கப்படவில்லலை
யாழ்.கஸ்தூரியார் வீதியில் அமைக்கபட்ட கடைத்தொகுதியில் ஊழல் என யாழ்.மேல்  நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அது தள்ளுபடியானது. மாநகர சபையில் ஈ.பி.டி.பி ஊழல் செய்யவே இல்லை. என இருக்கும் போது தேவையற்று அது தொடர்பில் மீண்டும் மீண்டும் பேச படுகின்றது. வயது போனால் சிலருக்கு இவ்வாறன நிலைமைகள் ஏற்படுவது வழமையானதே.
வடமாகாண சபையில்  ஊழல் நடைபெற்றது என நிரூபிக்கப்பட்டால் தனக்கு கீழ் உள்ள அமைச்சர்கள் விலகப்படும் போது தானும் ராஜினாமா செய்ய வேண்டும் அதுவே அரசியல் நாகரிகம்.
இந்தியவில் புகையிரத விபத்து ஏற்பட்ட உடன் ரயில்வே அமைச்சர் இராஜினாமா செய்தார். அது தான் அரசியல் நாகரிகம், அந்த நாகரிகம் கூட தெரியாதவரே முதலமைச்சர்.
அனல் மின் நிலையம் அமைக்கும் நிறுவனம் வழங்கிய நிதியை தனது செல்லப்பிள்ளையான ஐங்கரநேசனுக்கு கொடுத்தார்.அதேபோன்று  கிணறு திருத்த காசு கொடுப்பது என்றா அவரின் பெயருக்கு காசோலை கொடுக்க வேண்டும் ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை.
இன்றைக்கு தமிழ் தேசியம் கதைக்கும் முதலமைச்சர் தான் நீதிபதியாக இருந்த கால பகுதியில்  பயங்கரவாத தடைச்சட்ட வழக்குக்கு ஒத்தி வைத்த சிறைச்சாலை இல்லை என தமிழர்களை சிறையில் அடைந்தவர். எத்தனையோ சிங்கள நீதிபதிகள் கூட ஒத்திவைத்த சிறைத்தண்டனை வழங்கிய போது கூட.
யாழ்,மாநகர சபையில் எமது முதல் பிரேரணை யாழ்.மாநகர சபையில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதாக தான் இருக்கும்.
அந்த விசாரணைக்கு முன்னாள்  முதல்வர் யோகேஸ்வரி பற்குனராஜா தடையாக இருப்பார் என கருதினால் , விசாரணை முடிவடையும் வரை அவர் மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி இருப்பார். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். என மேலும் தெரிவித்தார்.
கைலாகு தராத முன்னணிக்கு நாம் எப்படி ஆதரவு கொடுக்க முடியும் ? ரெமிடியஸ் கேள்வி
மாநகர சபை அமர்வுக்கு சென்ற எமக்கு கைலாகு கூட கொடுக்க முடியாத தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு நாம் எவ்வாறு ஆட்சி அமைக்க ஆதரவு வழங்க முடியும் ? அதனால் தான் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வில்லை என  ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த  யாழ்.மாநகர சபை உறுப்பினர் எம். ரெமிடியஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சில உறுப்பினர்களுடன் நான் தனிப்பட்ட முறையில் கூட பேசினேன். அவர்கள் தாம் யாருடனும் கூட்டு சேர மாட்டோம் என கூறினார்கள்.
யாழ்.மாநகர சபை அமர்வுக்கு நாம் அன்றைய தினம் சென்ற போது சக உறுப்பினர்களாக ஏனைய கட்சி உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி கைலாகு கொடுத்து வாழ்த்துக்களை பரிமாறிகொண்டோம்.
ஆனால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மட்டும். எமக்கு கைலாகு தரவில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு நாம் எப்படி ஆதரவு வழங்க முடியும்.
அன்றைய தினம் சில புளுகு பொன்னையாக்கள் , கூட்டமைப்பில் உள்ள பத்து உறுப்பினர்கள் தமக்கு ஆதரவு தர உள்ளதாக கூறி திரிந்தார்கள். அதனை நம்பி நானும் போட்டியிட்டால் சிலவேளைகளில் முதல்வராக தெரிவாகலாம் என நினைத்தே போட்டியிட்டோம்.
இரண்டாம் கட்ட வாக்கெடுப்பின் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் ஆதரவு கேட்டோம். அதற்கு அவர்கள் ஆதரவு தர தயாராக இல்லாததால் நான் போட்டியிட்டு தோல்வி அடைவது நிச்சயம் என தெரிந்ததால் நான் போட்டியில் இருந்து வெளியேறினேன்.
நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு ஆதரவு வழங்கி அவர்களுடன் கூட்டு சேரவில்லை. வெளியில் இருந்து ஆதரவு வழங்குவோம். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்களுக்கு என்ன வாக்குறுதிகளை கொடுத்தோமோ எமது கட்சி கொள்கைகள் என்னவோ அவற்றினை நாம் முன்னெடுத்து செல்வோம். அதற்கு கூட்டமைப்பினர் கட்டாயம் ஆதரவு தந்தே ஆக வேண்டும்  என மேலும் தெரிவித்தார்.
நாங்கள் தமிழ் விரோத குழு என்றால் எங்களுக்கு வாக்களித்தவர்கள் ?
தமிழ் விரோத குழு என எங்களை குற்றம் சாட்டுபவர்கள் எங்களுக்கு வாக்களித்த மக்களை தமிழ் மக்கள் என ஏற்றுகொள்ள மாட்டார்களா என  ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த  யாழ்.மாநகர சபை உறுப்பினர் எம். ரெமிடியஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
ஒட்டுக்குழுக்கு வரைவிலக்கணம் என்ன ? கூட்டமைப்பில் ஒட்டுக்குழு எனப்படுபவர்கள் இல்லையா ?
எவராவது ஈ.பி.டி.பி கொலைகாரர் என முறைப்பாடு செய்தார்களா ? எவையுமே ஆதாரமற்ற குற்றசாட்டுக்கள்.
ஈ.பி.டி.பி. கடத்தினார்கள் என சொல்கின்றவர்களிடம்,  யார் அந்த ஈ பி டி பி ? என கேட்டால் ,  கடத்தும் போது தமிழ் கதைத்தார்கள். என்பார்கள்.  தமிழ் கதைத்தவர்கள் எல்லாம் ஈ.பி.டி.பி யா? யுத்தம் இடம்பெற்ற கால பகுதியில் யாழ் நகர் மத்தியில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் கூட்டமைப்பின் பங்காளி கட்சியின் அலுவலகம் இருந்து. அப்போது அவர்கள் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கி இருக்க மாட்டார்களா ?
தமிழ் விரோத குழு என்றால் எங்களுக்கு வாக்களித்தவர்கள் தமிழர்கள் இல்லையா? தீவக மக்கள் பெரும்பான்மையாக எமக்கே வாக்களித்தனர்.  ஏனைய இடங்களில் எங்களை விட நாலு, ஐந்து ஆசனம் தான் கூட பெற்றுள்ளார்கள். என தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.