Home இலங்கை கஜேந்திரகுமாரின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயற்சி:-

கஜேந்திரகுமாரின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயற்சி:-

by admin

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பக்க அமர்வொன்றில் இலங்கை கடற்படை அதிகாரிகளின் குற்றச்சாட்டை மறுதலித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் கொடுக்கப்பட்ட விளக்கத்தைத் திரிவுபடுத்தி செய்திகளை வெளியிட்டு சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று (31.03.2018) நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பக்க அமர்வொன்றில் சிறுவர் போராளிகள் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை தொடர்பில் – புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் அமைப்பு விமர்சித்திருப்பது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

“இம்முறை ஜெனீவா கூட்டத் தொடரில் நானும் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கலந்துகொண்டிருந்தோம். ஜெனீவாவில் 47 நாடுகள் பங்குபற்றும் பிரதான நிகழ்வுகளுக்கு அப்பால் பக்க அமர்வுகளும் நடைபெறும். அவ்வாறான ஒரு நிகழ்வில் நாம் பங்குபற்றியிருந்தபொழுது இலங்கை கடற்படையின் ஓய்வுபெற்ற ஒரு அதிகாரியும் அவரது பரிவாரங்களும் அங்கு வந்திருந்தார்கள். அவர்கள் யுத்தத்தில் விடுதலைப்புலிகள் சிறுவர்களை ஈடுபடுத்தியிருந்ததாகவும் நீங்கள் அக் காலப்பகுதியில் எங்கு சென்றிருந்தீர்கள் என குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக கஜேந்திரகுமார் நிலமையைத் தெளிவுபடுத்தியிருந்தார்.

சமாதானகாலப்பகுதியில் சிறுவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருப்பது பற்றிக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பில் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தலமையிலான குழுவுடன் சர்வதேச சமூகத்தினர் பேசிய பொழுது 16 வயதுக்குக் குறைந்தவர்களை தாங்கள் யுத்தத்தில் ஈடுபடுத்துவதில்லை என்றும் பல்வேறு பட்ட குடும்ப சூழல் காரணமாகவும் யுத்த்தில் அவர்களுடைய பெற்றோர், சகோதரர்கள் இறந்திருக்கிறார்கள், இடப்பெயர்வுகள் உள்ளிட்ட காரணங்களினாலும் அரசாங்கத்தினால் பாதிக்கப்படுகின்றவர்கள் போராட்டத்தில் இணைகின்றபொழுது அவர்களை யுத்தத்தில் ஈடுபடுத்தாமல் அவர்களை இனங்கண்டு கல்வி மற்றும் தொழிற்பயிற்சி கொடுத்து சமூகத்துடன் இணைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவேண்டும் அதற்கு உதவுமாறு அரசியல்துறைப் பொறுப்பாளர் சர்வதேச சமூகத்திடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

அதற்கான பொறுப்பு வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்த மனித உரிமைகள் செயலகத்தின் தலைவராக சிறிலங்கா அரசின் ஆழ ஊடுருவும் அணியினால் கொல்லப்பட்ட எவ்.எக்ஸ். கருகாரட்ணம் அடிகளார் இருந்ததுடன் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயா அவர்களும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மறைந்த அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நேரு ஆகியோர் உள்ளடங்கலாக பலர் அந்த அமைப்பில் இருந்தனர்.

இந்தச் சிறுவர்கள் விவகாரம் அந்த அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததோடு அதற்கான நிதி வேண்டும் என சர்வதேச சமூகத்திடம் கோரப்பட்டிருந்தது. அப்போது றேறி மொங்கோறின் என்ற ஐ.நா அதிகாரி அதற்குப் பெறுப்பான பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தார். குறித்த அமைப்பிற்கு நிதி வழங்கலை இலங்கை அரசாங்கம் மறுப்பதாக பின்னர் புலிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஏனெனில் வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தை விடுதலைப்புலிகள் காலப்போக்கில் தனிநாட்டு அங்கீகாரத்துக்கான மனித உரிமைகள் ஆணைக்குழுவாகப் பாவிக்கக் கூடும் என இலங்கை அரசாங்கம் அஞ்சுவதாகக் குறிப்பிடப்பட்டது.

இதனைச் சுட்டிக்காட்டிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால்தான் சிறுவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் அவ்வாறான சிறுவர்களுக்கு கல்வி, மற்றும் தொழிற்பயிற்சி வழங்கி சமூகத்தில் இணைக்க உடன்படாத இலங்கை அரசின் பிரதிநிதிகளான உங்களுக்கு இவ் விடயம் தொடர்பில் கதைப்பதற்கு எந்தவித அருகதையும் இல்லை என்றே அந்த அமர்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டிருந்தார்.

இந்த அவரது நீண்ட விளக்கத்தை முழுவதையும் பிரசுரிக்காமல் துண்டுதுண்டாக வெட்டி தமது குறுகிய அரசில் நோக்கில் பிரசுரித்து மக்கள் மத்தியில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தி கஜேந்திரகுமாரின் நற்பெயரை அழிப்பதற்கான சதி அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இவ் விடயமும் அவ்வாறே மேற்கொள்ளப்பட்டது.

கடந்த மாதம் எமது அலுவலகத்தில் நடைபெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவு நிகழ்வில் நான்
உரையாற்றியபோது,
“சந்திரிக்கா அரசாங்கம் விடுதலைப் புலிகளை சர்வதேச ரீதியில் பயங்கரவாதிகள் எனச் சித்தரித்துக்கொண்டிருந்தது. விடுதலைப் புலிகள் தாங்கள் மக்களுக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றோம் என கூறிக்கொண்டிருந்தார்கள். அரசாங்கம் சொல்லிக்கொண்டிருந்தது விடுதலைப் புலிகள் மக்களுக்காககப் போராடவில்லை என்று”
நான் இப்படியான ஒரு வார்த்தையைப் பாவித்து உரையாற்றிய பொழுது “தமிழ் மக்களுக்காக விடுதலைப் புலிகள் போராடவில்லை” என்று சந்திரிக்கா அரசாங்கம் சர்வதேச ரீதியில் பிரச்சாரம் செய்து போருக்கான ஆதரவைத் திரட்டியபொழுது கொழும்பில் இருந்துகொண்டும் குமார் பொன்னம்பலம் இந்தப் போராட்டத்தை நியாப்படுத்தினார் என்றே உரையைாற்றியிருந்தேன்.

அப்பொழுது குறிப்பிட்ட ஒரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சகோதரரின் இணையத்தளம் அதற்கு எப்படித் தலைப்பிட்டது எனில் “விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்காகப் போராடவில்லை” என்று நான் குறிப்பிட்டதாக தலைப்பிட்டு செய்தியை வெளியிட்டார்கள். ஏனெனில் தேர்தல் காலம் என்பதால் ஒரு குறுகிய அரசியல் இலாபம் அடையலாம் என்பதால் செய்யப்பட்ட பரப்புரை அது.

இவ்வாறான பிரச்சாரங்கள்தான் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரைதொடர்பிலும் பரப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இதனை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்

இன்று இலங்கை அரசாங்கத்துக்கு சிம்ம சொற்பனமாக இருக்கின்ற ஒரு ஒரு தரப்பு என்றால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமயிலான எங்களுடைய அணி மட்டடும்தான். ஏனெனில் இன அழிப்பு விடயத்தில் உறுதியாக இருக்கின்ற ஒரே ஒரு அணி எங்கள் கட்சி மட்டுமே. வேறு ஒரு எந்தக் கட்சியும் அந்த நிலைப்பாட்டில் இல்லை. ஒரு சில சிவில் அமைப்புக்கள் உள்ளன. விக்கினேஸ்வரன் ஐயாயும் அப்படிக் கூறுகின்றார் எனினும் அது கட்சி நிலைப்பாடு அல்ல.
ஆனால் ஒரு கட்சியாக நாங்கள் மட்டுமே அந்த நிலைப்பாட்டைக் கூறிவருகின்றோம். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு இந்த போர்க்குற்ற இன அழிப்பு விவகாரம் கொண்டு செல்லப்படவேண்டும் என்பதையும் ஆணித்தரமாக தனக்கு இருக்கக்கூடிய சட்ட அறிவைப் பயன்படுத்தி, தனக்கு இருக்கக்கூடிய சகலவிதமான அனுபவங்களைப் பயன்படுத்தி ஐ.நா மனிதஉரிமைகள் அவையிலே இந்தத் தடவை மட்டும் அவர் 4 உரைகளை நிகழ்த்தியிருக்கின்றார். சிறுவர்கள் தொடர்பான விடயங்களைப் பற்றிப் புசத்திக்கொண்டிருக்கின்ற சிங்கள பேரினவாத அடிவருடிகளுக்கு அவர் இன அழிப்புத் தொடர்பாக பேசிய விடயங்கள் எதுவும் கண்ணுக்கு எட்டவில்லை.

நாங்கள் விடுதலைப் புலிகளுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் உயர் கௌரவம் கொடுப்பவர்கள்.
இந்த கஜேந்திரகுமார் தலமையில் நானும் பத்மினி சிதம்பரநாதனும் அன்று கூட்டமைப்புக்குள் இருந்து எதிர்த்திருக்கா விட்டால் சம்பந்தன் தரப்பு அன்றே ஒற்றையாட்சிக்கு இணங்கியிருக்கும்.

அன்று இவர்கள் எங்கிருந்தார்கள். அன்று தாம் புனர்வாழ்வில் இருந்ததாகக் கூறிக்கொள்வார்கள். இன்றுவரை இவை குறித்து இவர்கள் கதைக்கவில்லை. ஆனால் இங்கு வந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பற்றிக் கதைத்தவர்கள் உண்மையில் புனர்வாழ்வில் இருந்தார்களா என்பது பற்றி நாங்கள் ஆராயவேண்டிய தேவை இருக்கின்றது. நாங்கள் முன்னாள் போராளிகள் மீது அதியுயர் மரியாதை வைத்திருப்பவர்கள். அவர்கள் போற்றப்படவேண்டியவர்கள் மரியாதைக்கு உரியவர்கள். ஆனால் இங்கு வந்து அரசியல் செய்பவர்களின் பின்னணிகளை நாங்கள் பார்க்கவேண்டும்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பற்றிக் கதைப்பதற்கு அவர்களுக்கு எந்த அருகதையும் கிடையாது. கஜேந்திரகுமாரும் அவரது தந்தையும் கொழும்பில் சகலவிதமான வசதிவாய்ப்புக்களுடனும் வாழ்ந்தவர்கள். அவர்கள் அவற்றை உதறித்தள்ளிவிட்டு விடுதலைப் புலிகளை நியாயப்படுத்தி குரல்கொடுத்த ஒரு ஒரு தலைவர் குமார் பொன்னம்பலம் மட்டும்தான்.

அக்காலப்பகுதியில் சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜ போன்றோர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தார்கள். எனினும் குமார் பொன்னம்பலம் மட்டுமே பாராளுமன்ற உறுப்பினராக இல்லாதிருந்தபோதும் விடுதலைப் புலிகளை நியாயப்படுத்திவந்தார். சர்வதேச அரங்குவரை சென்று விடுதலைப் புலிகளை நியாயப்படுத்திய ஒரே ஒரு மனிதர் அவர் மட்டும்தான்.

சமாதான காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்துக்கான சூழல் எழுந்தபோது அவர் முன்னிலைப்படுத்தப்படுவார் என்பதனால்தான் அவர் சந்திரிக்கா அரசாங்கத்தினால் படுகொலை செய்யப்பட்டார். அந்தக் குமார் பொன்னம்பலத்துக்கு தேசியத் தலைவர் மாமனிதர் கௌரவம் கொடுத்து கௌரவித்திருக்கிறார். 2002 ஆம் ஆண்டு மாமனிதர் கௌவத்தை வந்து ஏற்றுக்கொள்ளுமாறு தலைவரால் அழைக்கப்பட்டபோது அந்தக் குடும்பம் அங்கு சென்று அதனை ஏற்றுக்கொண்டது. இதனை எல்லோரும் விளங்கிக்கொள்ளவேண்டும்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்தக் கொள்கையை இன்றுவரை உயிரோடு வைத்துக்கொள்கின்ற இந்தப் பயணத்திலே உறுதியாக இருக்கிறார். இவர் கட்சி நலன்சார்ந்து செயற்பட்டிருந்தால் நாங்கள் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியபோது அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் என செயற்பட்டிருக்க முடியும். எங்களைப் போன்றவர்களை இணைக்கவேண்டும். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெருமளவானவர்கள் காங்கிரஸ் என்ற அடையாளத்துக்குள் வருவதற்கு தயக்கம் காட்டுவார்கள் என்பதாலேயே அவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை உருவாக்கினார். எனவே அவருக்கு என்ன அருகதை இருக்கிறது எனக் கேட்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. ” – என்றார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More