Home இலங்கை “எம்மை அல்லது எமது பிரதிநிதியை ஐ.நா.சமாதானத்தைக் கட்டியெழுப்பும் சபையின் ஒரு அங்கத்தவர் ஆக்குங்கள்”…

“எம்மை அல்லது எமது பிரதிநிதியை ஐ.நா.சமாதானத்தைக் கட்டியெழுப்பும் சபையின் ஒரு அங்கத்தவர் ஆக்குங்கள்”…

by admin

அம்மாச்சி பாரம்பரிய உணவகம்
திறப்பு விழா
அம்மாச்சி பாரம்பரிய உணவகம் – கீரிமலை
01.04.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 04.45 மணியளவில்
முதலமைச்சர் உரை

இன்றைய நிகழ்வின் தலைவர் அவர்களே, இந்த நிகழ்வை சிறப்பிப்பதற்காக வருகை தந்திருக்கும் இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவகத்தின் (ONUR) தவிசாளரும் ஆகிய கௌரவ சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார் அவர்களே, வடமாகாண ஆளுநர் கௌரவ றெஜினோல்ட் கூரே அவர்களே, மற்றும் கௌரவ விருந்தினர்களே, சிறப்பு விருந்தினர்களே, அமைச்சின் செயலாளர்களே, உயர் அதிகாரிகளே,சகோதர சகோதரிகளே!

இன்றைய தினம் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட பாரம்பரிய உள்ளுர் உணவு விற்பனை நிலையமான அம்மாச்சி நிலையத்தை கீரிமலை நகுலேஸ்வர ஆலய சுற்றாடலில் திறந்து வைக்கப்படுகின்ற இந்த நல்ல நிகழ்வில் உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.

எமது முன்னைநாள் விவசாய அமைச்சரும் தேசிய பசுமை இயக்கத்தின் ஸ்தாபகருமான கௌரவ பொ.ஐங்கரநேசன் அவர்களின் சிந்தனையில் உதயமான பாரம்பரிய உள்ளுர் உணவு விற்பனை நிலையம் அம்மாச்சி உணவகம் எனும் பெயருடன் முதன்முதலாக வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டது.இந்த நிலையம் உள்ளுர் உணவு விற்பனையை மேம்படுத்துவதுடன் பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட குடும்பங்களின் வாழ்வாதார நிலையை மேம்படச் செய்வதற்கான ஒரு திட்டமாகவே அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டம் மிகச் சிறப்பாக செயற்படுவதுடன் அம்மாச்சி உணவகம் எனும் பெயர் வடமாகாணத்தில் மட்டுமல்லாது இலங்கையிலுள்ள அனைத்துப் பிரதேசங்களிலும்சிறப்பாக முன்மொழியப்படுகின்றமை வடமாகாண சபைக்கும் அதன் வாழ்வாதார முன்னெடுப்புகளுக்கும் கிடைக்கப்பெற்ற ஒரு அங்கீகாரமாகும். கடந்த வருட மத்திய அரசின் நிதிஒதுக்கீட்டின் போதும் அம்மாச்சி உணவக அபிவிருத்திக்காக ரூபா 20 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டிருந்தமை இச் சந்தர்ப்பத்தில் நினைவுகூரற்பாலது.

கௌரவ சந்திரிக்கா அம்மையாரின் நேரடி வழிகாட்டலில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 7மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிலையம் சற்றுக்கூடுதலானரூபா 7,217,942.86 மொத்த செலவில் அமைக்கப்பட்டு இன்று இந்த ஆலய சூழலில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தினூடாக உடலுக்கு தீங்கு விளைவிக்காத பாரம்பரிய உள்ளூர் உணவுகள் விற்பனை செய்யப்படுவதுடன் இங்கு வாழும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதாரமேம்பாட்டுமுயற்சியாகவும் இதனை நாம் காண்கின்றோம்.

இயற்கையை நேசிப்பவர்களுக்கும் இயற்கையுடன் ஒட்டிவாழ விரும்புபவர்களுக்கும் எமது கலாசாரத்தையும் கலாசார உணவுப்பழக்க வழக்கங்களைப் பின்பற்ற விரும்புபவர்களுக்கும்இந்த நிலையம் ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் ஐயம் இல்லை. நாம் எமது பாரம்பரியங்களை மறந்து வெளிநாட்டு மோகத்திலும் மேலை நாட்டு உணவுப் பழக்கவழக்கங்களிலும் நாட்டம் கொண்டதன் காரணமாக சிறு வயதிலேயே பல தொற்றா நோய்த்தாக்கங்களுக்கு உள்ளாக்கப்பட்டு பல சிரமங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம் என்பதைநன்கு அறிவோம். அளவுக்கதிகமான கொழுப்புகள், எண்ணெய் வகைப் பாவனைகள், கூடுதலான இனிப்புப் பாவனைகள், நிறமூட்டிகள்,உணவுப் பதார்த்தத்தை அழகுபடுத்துவதற்காக சேர்க்கப்படுகின்ற நூற்றுக்கணக்கான இரசாயனப் பதார்த்தங்கள் அனைத்தும் எமது உடலில் புகுந்து கொண்டு புதிய புதிய நோய்த் தாக்கங்களை விசேடமாக தொற்றா நோய்த் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. விளைவு ஆசியாக்கண்டத்திலுள்ள அனைத்து மக்களின் மரபணுக்களிலும் நோய்த்தாக்கத்திற்கான உயிரணுக்கள் உட்புகுந்துகொண்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. அனைத்து மக்களையும் இந் நோய்த் தாக்கங்கள் விரட்டியடித்துக் கொண்டிருக்கும் நிலையில் வெள்ளை அரிசி, வெள்ளைச் சீனி, கோதுமை மாவு ஆகியவற்றை தவிர்த்து தவிட்டு அரிசிமா பிட்டு, குரக்கன் பிட்டு,பனங்காய்ப் பலகாரம்,குரக்கன் ரொட்டி, இட்லி, தோசை, அரிசி மா இடியப்பம் போன்ற பல்வேறுபட்ட உணவுப் பதார்த்தங்களை மக்கள் இப்போது தேடத் தொடங்கியுள்ளார்கள்.மேலும் இலைக்கஞ்சி,உடன் தயாரிக்கப்பட்ட பழரசங்கள்,மரக்கறிக்கூழ் ஆகியவற்றையும் உண்ணுவதற்கு இப்போது மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டு விடயங்கள் எனது நினைவுக்கு வருகின்றன. சந்திரிக்கா அம்மையார் முதலில் ஜனாதிபதியாக பதவி பெற்ற போது இரசாயனமற்ற உரத்தில் தயாரிக்கப்பட்ட மரக்கறிகளை மலையகத்தில் இருந்து வருவித்து கொழும்பு விற்பனை நிலையங்களில் கூடிய விலைக்கு விற்கத் தான் நடவடிக்கைகள் எடுத்து வருவதாக என்னிடம் கூறினார். அது நடைபெற்றதோ இல்லையோ இரசாயனக் கலவையற்ற உரத்தில் மரக்கறிகள், பழங்கள் ஆகியவை வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் எமக்குள் கருத்து வேற்றுமை இருக்க முடியாது. இரசாயனக் கலவையற்ற உரத்தில், கிருமி நாசினிகள் பயன்படுத்தாமல் மரக்கறி வகைகளை வீட்டுத் தோட்டங்களில் வளர்த்து வர எமது விவசாய அமைச்சு ஊக்கப்படுத்தி வருகின்றது.

அடுத்த நிகழ்வு காலஞ்சென்ற முன்னைய பிரதமர் w.தகநாயக பற்றியது. ஸ்ராவஸ்தி எனும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவகத்திற்கு மதிய உணவுக்கு வரும் போது அவர் ஒரு சிறிய கைப் பையையும் கொண்டு வருவாராம். வெள்ளைச் சோறு அவர் உணவுத் தட்டில் பரிமாறப்பட்டதும் அவர் தன் பையில் இருந்து ஒரு தூளை எடுத்து சோற்றின் மீது தூவுவாராம். நண்பர்கள் கேட்ட போது ‘நீங்கள் சத்தில்லாத உணவைச் சாப்பிடுகின்றீர்கள். நான் சத்துச் சேர்த்து சாப்பிடுகின்றேன்.’ என்று கூறி தவிட்டுத் தூளை எடுத்துக் காட்டுவாராம். சத்தற்ற உணவுகளை சத்தாக்கிய அவரின் முறை என்னை ஈர்த்ததால் இன்றும் அந் நிகழ்வு பற்றிய கதை நினைவில் நிற்கின்றது.

எமது மக்களின் உணவுத் தேவைகள் சிறப்பாகவும், குறைந்த செலவிலும் பூர்த்தி அடைவதற்கு அம்மாச்சி உணவகங்கள் முன்வந்திருப்பது பாராட்டிற்குரியது. மனிதன் இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த போது அவனது வாழ்க்கை முறைமை மிகச் சிறப்பாக காணப்பட்டது. ஆனால் இயற்கையை மறந்து அதனை அழித்து வாழ எப்போது மனித இனம் முற்பட்டதோ அப்போதே இயற்கையும் மனித இனத்தை அழிக்கின்ற செயற்பாட்டில் இறங்கிவிட்டது என்றே கூற வேண்டும். ஏனெனில் எமது அசமந்தப் போக்கால் மனிதாபிமானமற்ற செயல்களால் இன்று மழை வீழ்ச்சி வெகுவாகக் குறைந்துவிட்டது. நிலத்தடி நீர், இரசாயனக் கலவைகளின் அளவுக்கு மீறிய பாவனைகளால் நஞ்சாக மாற்றப்பட்டுவிட்டது. இவை அனைத்தும் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும்.எமது வாழ்க்கையானது ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டது. இயற்கையும் சூழலும் மாசடைவதைத் தடுப்பது எமது யாவரினதும் கடமையாகும்.

கடல்வளம் கூட மாசுபடுத்தப்பட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சட்டத்திற்கு புறம்பான விதத்தில் இராணுவ உதவியுடன் மீன்பிடித்தலானது வேற்று மாகாணங்களில் இருந்து வந்தவர்களினால் முல்லைத்தீவு கடற்கரையில் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வெடி மருந்துகள் பாவித்து மீன் பிடிப்பதெல்லாம் அவற்றின் உடலில் நச்சுத் தன்மையை ஏற்றி விடுகின்றன என்பதை எம் மக்கள் உணர்வாரில்லை. இந்த நிலையில் மக்கள் தொடர்ந்தும் தாக்குப் பிடிப்பது என்பது இயலாத காரியம்.

இன்று 1லீற்றர் குடிநீரின் விலைரூ 70ஃஸ்ரீஆகக் காணப்படுகின்றது. 1 லீற்றர் பாலின் விலையும் அந்த அளவே. எனவே 1 லீற்றர் நீரைப் பருகுவதற்கு பதிலாக 1 லீற்றர் பாலைப் பருகிவிடலாமா என எண்ணத் தோன்றும். ஆனால் குடிநீர்ப்பாவனை தவிர்க்க முடியாதது. சுத்தமான நீர் நிலைகள் அருகி வருவதால் நீரின் விலை ஏறிக் கொண்டு வருகின்றது. இந்த நிலையில் நிலத்தடி நீர் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளில் நாம் கடுமையாக உழைக்க வேண்டும். ஓணூர் (ONUR)  அலுவலகம் பாவிப்பாளர்கள் கிணற்று நீரைத்தமது வீட்டிலேயே சுத்திகரித்துப் பாவிக்கும் விதமாக வீட்டுநீர் சுத்திகரிப்புக் கருவிகளை அறிமுகப்படுத்த வேண்டும். சில பாதிக்கப்பட்ட இடங்களில் இனாமாகக் கையளிப்பதையும் கருத்துக்கெடுக்க வேண்டும். கிராமத்துக்கொரு சுத்திகரிப்பு நிலையம் கூட உருவாக்கப்படலாம்.

இந்த அம்மாச்சி உணவகத்தை உருவாக்குவதற்கு உதவிய தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தவிசாளருமாகிய முன்னாள் ஜனாதிபதி கௌரவ சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களிடம் மேலும் ஒரு விண்ணப்பத்தை மேற்கொள்ளலாம் எனக் கருதுகின்றேன்.

எமது மக்கள் புதன்கிழமை தோறும் எம்மை வந்து கண்டு தமது குறைகளைக் கூறி வருகின்றார்கள். வீடு வேண்டும், மலசல கூடம் வேண்டும், கிணறு வேண்டும், வைத்திய செலவு வேண்டும், குழந்தைகளுக்கு சைக்கிள்கள் வேண்டும் என்றெல்லாம் தமது தேவைகளை எம்முன் வைக்கின்றார்கள். இவை சம்பந்தமாக வடமாகாணசபை தன்னாலான முயற்சிகளை மேற்கொள்ளுகின்ற போதும் சபைக்கான நிதி மூலங்கள் மிக மிக குறைவாகவே கிடைக்கப் பெறுகின்றன.எனவே தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்ற தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தவிசாளர் என்ற வகையில் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகார உச்சவரம்புகளைப் பயன்படுத்தி இம் மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவிபுரிய ஏற்ற முயற்சிகளைதாங்கள் முன்வந்து எம்மூடு நல்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சமாதானத்தைக் கட்டி எழுப்பும் சபை நிகழ்ச்சிகளில் உங்கள் ஓணூர் (ONUR) அலுவலகம் ஒரு அலகாகும். அந்த சபையில் எமது வடமாகாண சபையின் பிரதிநிதி ஒருவரை அங்கத்தவர் ஆக்க நீங்கள் நடவடிக்கை எடுக்கலாம். இதை நாங்கள் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக வலியுறுத்தி வருகின்றோம். எமக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகளை நாமே அடையாளங் காணாமல் மற்றவர்களை அடையாளப்படுத்தச் சொல்வது முறையாகாது. ஆகவே எம்மை அல்லது எமது பிரதிநிதியை ஐ.நா.சமாதானத்தைக் கட்டியெழுப்பும் சபையின் ஒரு அங்கத்தவர் ஆக்குங்கள் என்று வினையமாக வேண்டி இன்றைய இந்த நிகழ்வில் கலந்து கொண்டமைக்கு எனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்து நிறைவு செய்கின்றேன்.
நன்றி
வணக்கம்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More