Home இலங்கை கூட்டமைப்பு கூட்டாகத் தீர்மானங்களை எடுப்பது அரிது…

கூட்டமைப்பு கூட்டாகத் தீர்மானங்களை எடுப்பது அரிது…

by admin

வாரத்துக்கொரு கேள்வி 11.04.2018
இவ்வாரம் புதுவருட வாரமாகையால் மூன்று கேள்விகளுக்குப் பதில் இறுத்துள்ளேன். அவையும் அவற்றிற்கான பதில்களும் பின்வருமாறு –
1. எம் மக்களுக்குச் சொல்லும் புது வருடத்திற்கான உங்கள் செய்தி என்ன?

பதில்: எல்லோரும் இவ்வருடம் இன்பமுடனும் வளமுடனும் வாழ வேண்டும் என்று இறைவனை யாசிக்கின்றேன். எமது மக்களின் உரிமை மற்றும் நீதிக்கான போராட்டம் இந்த வருடம் வெற்றிபெறவேண்டும் என்றும் இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

2)அரசியல் ரீதியாக இந்த வருடம் உங்களுக்கு முக்கியமான ஒரு வருடம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உங்களை எதிர் வரும் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கு முன்வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்: தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது எதற்காக யாரால் உருவாக்கப்பட்டது என்பது உங்கள் எல்லோருக்குந் தெரிந்த விடயம். அதன் ஆரம்ப காலத்தில் அதனை உருவாக்கப் பாடுபட்டவர்களுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. வடகிழக்குக் தாயகம், இறைமை, சுயநிர்ணயம் என்ற தமிழ்த்தேசியத்தின் அடிப்படைக் கூறுகளை ஐந்து கட்சிகளின் கூட்டிணைவாக முன்வைத்து உருவாக்கப்பட்டதே அக்கட்சியாகும். அந்தக் கொள்கைகளுக்காகவே கடந்த மாகாணசபைத் தேர்தலில் மக்களிடம் நாம் வாக்குக் கேட்டோம். மக்களும் எமக்கு அமோக வெற்றியை பெற்றுத்தந்து என்னையும் முதலமைச்சராக்கினர். அதே கொள்கையுடைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று இருக்கின்றதா? இன்று அதில் எத்தனை ஸ்தாபக கட்சிகள் உள்ளன? அப்படி ஒரு அமைப்பே இல்லாதவிடத்து எங்கிருந்து எனக்கு அழைப்பு வரும்?

3) எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் உங்களை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த விருப்பம் இல்லாதது பற்றி திரு.சுமந்திரன் அவர்கள் கூறியுள்ளார்கள். அது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: என்மேல் இருக்கும் உருக்கத்தினால், பாசத்தினால், பரிவினால் என்னைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற மனோ நிலையில் என் மாணவர் காரணங்களை அடுக்கியுள்ளார். அதன் முழுத்தாற்பரியத்தையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். 2013ம் ஆண்டு தேர்தலில் நிற்க முடியாது என்று நான் தொடர்ந்து கூறிய போது என்னை சமாதானப்படுத்தி தேர்தலில் நிற்க வைப்பதற்காகப் பல மாற்று யோசனைகள் முன் வைக்கப்பட்டன. இரண்டு வருடங்களுக்கு மட்டும் நில்லுங்கள் பிறகு இன்னொருவர் ஏற்றுக் கொள்வார் என்று சிலர் கூறினார்கள். ஒரு நண்பர் ‘உனக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் நாங்கள் தான் இருக்கின்றோமே’ என்று கூறிவிட்டு தேர்தல் முடிந்ததும் வெளிநாடு சென்று விட்டார். இவ்வாறான கூற்றுக்களை சட்டத்தில் Trader’s Puff  என்று அழைப்பார்கள். வியாபாரத்திற்கான பசப்பு வார்த்தைகள் போன்றவை அவை. ‘குடிகாரன் பேச்சு விடிந்தால்ப் போச்சு’ என்பது போல் காரியம் முடிந்ததும் அக் கூற்றுக்களுக்கு மதிப்பில்லை. தேர்தல் முடிந்த போது அதுவும் 133000க்கு மேலான மக்கள் வாக்குகள் கிடைத்த பின்னர் எவருமே அதுபற்றிப் பேசவில்லை. முடுக்கி விட்ட இயந்திரப் பொம்மைகள் முடுக்கியவர் முன்மொழிவுகளுக்கு ஏற்ப வடமாகாண சபையில் கூத்தாட்டத்தில் ஈடுபட்ட போது இவ்விடயம் முதன் முதலில் பேசப்பட்டது. ஆனால் அப்பொழுதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் மத்தியில் குடிகொண்டிருந்த சர்வாதிகாரப் போக்கு வெளி வந்திருந்தது. கூட்டமைப்பு கூட்டாகத் தீர்மானங்களை எடுத்ததைக் காண்பது அரிதாக இருந்தது.

நான் இதுவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கவோ சிதைக்கவோ நடவடிக்கைகள் எடுக்கவில்லை. அதன் தலைமைத்துவத்தின் பிழையான நடவடிக்கைகளைச் சுட்டிக் காட்டவே நடவடிக்கைகள் எடுத்து வந்துள்ளேன்.

அரசியலுக்கு வருவேன் என்று நான் நினைத்திருக்கவில்லை. ஆனால் இறை செயலால் நான் அரசியலுக்குள் வந்துவிட்டேன். வந்த பின் எனது மக்களின் பேராதரவும் அன்பும் என்னை நெகிழ வைத்துவிட்டன. இதுவரை என்னால் முடிந்தளவுக்கு செய்யக்கூடியவற்றை செய்துள்ளேன். பல விடயங்களை செய்யமுடியாமல் அதிகார வரையறை, ஆட்சி அமைப்பு முட்டுக்கட்டைகள், குழிபறிப்புக்கள் என்று பல தடைகளை எதிர்கொண்டுள்ளேன். அதிகாரம் ஓச்சும் கட்சிக்குள்ளேயே இருந்து கொண்டு சிலர் பல விடயங்களை நாம் செய்ய விடவில்லை. ஏன்! அடுத்த ஆறு மாதங்களினுள் எமது மக்களிடையே மனமாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கலாமா? முடியாது. பழைய பாணியில் எமக்கு மீண்டும் கடுமையான எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்படுவன. அடுத்து உள்ள10ராட்சி சபைகளிலும் இந்தவாறான நடவடிக்கைகளை எதிர் பார்க்கலாம். இது எங்கள் சுபாவம் போல்த் தெரிகின்றது.

எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை, படுகொலைகளை, போர்க்குற்றங்களை எல்லாம் யாருக்கோ உதவி செய்யும் நோக்கில் எம்மவர் சிலர் மறைக்க முற்படுவதுபோல் என்னால் மறைக்க முடியாதிருக்கின்றது. உண்மையை உலகம் உணர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. அவற்றை வெளிக்கொண்டு வருவதற்கு என்னால் இயலுமானளவு செயற்பட்டிருக்கின்றேன். ஏகோபித்த வடமாகாணசபை இனப்படுகொலைத் தீர்மானம் இதற்கொரு உதாரணம். எமது மக்களுக்கான குரலாக நீதிவேண்டி பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக தொடர்ந்து குரல் கொடுத்துவருவதுடன் முடிந்தளவு அவர்களின் காயங்களை ஆற்றுப்படுத்துவதற்கான முயற்சிகளைப் பல தடைகளுக்கு மத்தியில் எடுத்து வருகிறேன். உதாரணமாக, எமக்கான உதவிகளை சிங்கள ஆட்சியாளர்கள் செய்துதர முன்வராமையால் எம் புலம்பெயர் சொந்தங்களிடம் எமக்கான உதவிகளைப் பெற்று போரினால் நலிவுற்றிருக்கும் எம்மக்களின் துயர்களை துடைக்க முதலமைச்சர் நிதியம் ஒன்றுக்கான ஒப்புதலைத் தரும்படி 4 வருடங்களாக வேண்டி நிற்கிறோம். மாகாண சபையின் ஆயுட்காலமும் முடிவுக்கு வருகிறது. ஆனால் இன்று வரை அதற்கான ஒப்புதல் அளிக்கப்படவில்லை. பாராளுமன்றத்தில் செயற்படும் எமது எந்த தமிழ்த் தலைவராவது இதனை வலியுறுத்தி இருக்கின்றார்களா? போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றுங் கிடைக்காது போனாலும் பரவாயில்லை தனியொருவனுக்குப் பெயர் வந்து விடக்கூடாது என்ற மனோபாவத்தின் வெளிப்பாட்டை நான் அவதானிக்கின்றேன்.

இணைந்த வடக்கு – கிழக்கில் சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வு என்ற எமது தீர்வுக் கோரிக்கையை இல்லாமல் செய்து தமிழ் தேசிய கோட்பாட்டைச் சிதைக்குந் திட்டமிட்ட நடவடிக்கைகளை எதிர்க்கும் நிலைக்கு நான் கடந்த 4 வருடங்களில் தள்ளப்பட்டிருந்தேன். இவ்வாறான சிதைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக என்னால் முடிந்தளவுக்குச் செயற்பட்டு ‘இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமை’ என்ற அரசியல் கருத்து வினைப்பாட்டை சர்வதேச சமூகம், இலங்கை மத்திய அரசு மற்றும் எமது மக்கள் மத்தியில் மீள நிலைநிறுத்தியுள்ளேன். எவர் முதலமைச்சர் பதவிக்கு வந்தாலும் இவற்றைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அவர்கள் சுயநலமொன்றே குறிக்கோளாக வைத்திருப்பின் எமது போராட்டம் பிசு பிசுத்துப் போய்விடும். ஆலைகளுக்கும் சாலைகளுக்கும் ஆசைப்பட்டு அடிப்படை உரிமைகளைத் தவறவிட்டு விடுவோம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இதுவே எனது பிரார்த்தனை. எமது மக்களுக்கு நாம் செய்யவேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. தற்போது பொருளாதார ரீதியாகப் பல செயற்திட்டங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளேன். நான் அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பெருவாரியான மக்கள் விரும்புவதை நான் அறிவேன். நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களிடம் இருந்து இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. எனது பயணம் தொடரவேண்டும் என்பது அவன் சித்தமும் மக்கள் விருப்பமும் போலும். இந்தப் பின்னணியில் நான் என்ன செய்ய? மக்கள் கருத்தும் மகேஸ்வரனின் கருத்துக்களுமே முக்கியம். கட்சிகளின் அனுமதி பெறாத கரவான கருத்துக்களைக் கொண்டோரின் கருத்துக்களைக் கேட்டுக் கலவரம் கொள்ளத் தேவையில்லை?
ஜீ.ஜீ பொன்னம்பலம் அவர்கள் இரத்தினபுரி கிரிமினல் வழக்கொன்றில் ஆஜராகி குற்றம் சாட்டப்பட்டவரை அவர் விடுவித்துக் கொடுத்தார். உடனே விடுதலையான அந்த நபர் ஜீ.ஜீயிடம் சென்று ‘சேர்’! இனி எந்த வழக்கு வந்தாலும் உங்களிடமே நான் அதைக் கொண்டு வருவேன்’ என்று மகிழ்ச்சியாகக் கூறினார். ஜீ.ஜீக்கு இது பிடிக்கவில்லை. ‘என்ன சொன்னாய் நீ? எனக்கு நீ வழக்கு கொண்டு வருவாயோ? எடே! வழக்குகள் என்னைத் தேடி வருமடா! தேடி வரும்’ என்றார். ஆகவே பதவிகள் வருவதாக இருந்தால் அவை தேடி வருவன.

உள்ள10ராட்சியில் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு என்னையே காரணம் காட்டுகின்றார்கள். சிலர் தம்மைத் தாமே கண்ணாடியில் பார்த்துக் காரணங்களைக் கண்டு பிடிக்காமல் என்னை வைகின்றார்கள். ஆகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியிடம் இருந்து எனக்கு அழைப்பு வரக் கூடிய சாத்தியம் இல்லை. எனவே மக்கள் நன்மை கருதி கொள்கை ரீதியாக எம்முடன் உடன்படும் வேறு ஒரு கட்சிக்கூடாகத் தேர்தலில் நிற்கலாம். ஆனால் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையிலும் மூலோபாய ரீதியாகவும் நடைமுறை அடிப்படையிலும் அவ்வாறு நிற்பதால் பல பிரச்சினைகள் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. புதிய கட்சி ஒன்றை தொடங்குமாறு பலரும் ஆலோசனை வழங்கி வருகின்றார்கள். கொள்கை ரீதியாக உடன்படும் அனைவருடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம் என்கின்றார்கள். அதற்குரிய காலம் கனிந்து விட்டதோ நான் அறியேன்.

எமது அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான பயணப்பாதையைத் தனிநபர்கள் தீர்மானிக்காமல் அறிவு ஜீவிகளின் பங்களிப்புடன் ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட அரசியல் செயற்பாட்டை இதுவரை காலமும் முன்னெடுத்திருப்போமானால் எம்மிடையே பிளவுகள் ஏற்பட்டிருந்திருக்காது, தெற்கில் எவர் வரப்போகின்றார் என்ன நடக்கபோகின்றது என்ற மனக்கிலேசங்களுக்கு உள்ளாக வேண்டியிருந்திருக்காது. நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் இனமாக இருக்கவேண்டி வந்திருக்காது. எமது பிரதேசங்கள் தொடர்ந்தும் திட்டமிட்ட குடியேற்றங்களால் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்காது. திட்டங்களுக்கு ஏற்ப நிறுவனமயப்படுத்தப்பட்ட மற்றும் ஒழுக்கம் சார்ந்த ஒரு அரசியலை மேற்கொண்டு எமது அபிலாஷைகளை வென்றெடுக்க சிவில் சமூகத்தினர், ஊடகவியலாளர்கள், சமூகவியலாளர்கள், புத்திஜீவிகள், மகளிர், இளைஞர் யுவதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More