இலங்கை பிரதான செய்திகள்

சுன்னாகம் மற்றும் மருதனார் மடம் உள்ளிட்ட வலிதெற்கின் எல்லையினுள் உள்ள சந்தைகளில் வெளி வியாபாரிகளுக்கு தடை

சுன்னாகம் மற்றும் மருதனார் மடம் உள்ளிட்ட வலிதெற்கின் எல்லையினுள் உள்ள சந்தைகளில் வெளி வியாபாரிகளுக்கு இடம் வழங்குவதனையும் இவ் எல்லையினுள் நடைபாதை வியாபார நடவடிக்கையினையும் தடை செய்யவேண்டும் என்ற தமிழ்த்தேசிய மக்கள் முண்ணனி உறுப்பினர்களினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை நீண்ட வாதபிரதிவாதங்களின் பின்னர் அனைவரின் ஒத்துழைப்புடன் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் முதலாவதமர்வு இன்று (11.04.2018) புதன்கிழமை சுன்னாகம் பிரதேச சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. அதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களால் குறித்த பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்பட்டு சபை உறுப்பினர்கள் அனைவரினதும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது,

குறித்த பிரேரணையின் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

சுன்னாகம் சந்தைப்பகுதியில் நடமாடும் வியாபாரிகளுக்கு இடம் வழங்குவது தொடர்பானது

எமது மக்களின் தற்சார்பு பொருளாதாரத்தின் அங்கமாக வாழைச்செய்கை உள்ளது. அதனடிப்படையில் வாழைப்பொத்தி, இலை, குழை, மடல் என அனைத்தையும் விற்று சந்தைப்படுத்தும் இடத்தினை வேறு ஒரு தேவைக்குப் பயன்படுத்துவது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றில்லை.

கடந்த காலங்களில் இந்தச் சந்தையில் பிரதான ஏற்றுமதிப் பொருளாக வாழைசார் உற்பத்தி இருந்தன. எனினும் சில காரணங்களினால் சந்தைப்படுத்தலுக்குரிய வாய்ப்புக்கள் அற்ற நிலையில் இது பின்தங்கிய நிலையில் காணப்படுகிறது. இதனை ஆரம்பகாலத்தில் காணப்பட்டதை விட மேலும் சிறந்தமுறையில் வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்தி அதன் மூலம் எமது பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்த வேண்டுமே தவிர, இந்த இடத்தினை வேறு தேவைக்குப் பயன்படுத்துவது பொருத்தமானதல்ல. பொலித்தீன் பாவனை நிறுத்தப்பட்டு வருகின்ற ஒரு சூழ்நிலையில் வாழை உற்பத்திப் பொருட்களின் மதிப்பு உயர்வடைந்து வருகின்றது. குறிப்பாக இலை, தடல், மடல் என்பவற்றின் மதிப்பு உயர இருக்கின்றது. இதற்கு தொழில்நுட்ப மதிப்பைக் கொடுத்து உயர்த்த வேண்டுமே தவிர, இதனை இல்லாமல் செய்யும் நிலைக்கு கொண்டு செல்லக்கூடாது.

மேலும் தைப்பொங்கல், சித்திரைப்புத்தாண்டு போன்ற விசேட காலங்களில் சந்தைப்படுத்தி அதிக வருமானத்தினையும் பெறலாம். வாழைப்பழம், இலை, பொத்தி என்பன உடனடியாகவே சந்தைப்படுத்த வேண்டும். இல்லையென்றால் பழுதடைந்து விடும். எனவே இதனால் எமது விவசாயிகளுக்கு நட்டத்தை ஏற்படுத்தும். இதனால் பல்வேறு விளைவுகளும் ஏற்படும்.

மேலும் தற்காலிக நடைபாதை வியாபாரிகளுக்கு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குறித்த இந்த சந்தையினை வழங்குவதற்குரிய நடவடிக்கையினை இந்தப் பிரதேசசபையின் ஊடாக மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகின்றது.

இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் வாழைசார் உற்பத்தியாளர்கள், வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் நிரந்தர வியாபாரிகளுக்கு பெரும் நட்டத்தினையும் ஏற்படுத்தும். அதாவது விசேட தினத்தினை முன்னிட்டு கடன்களைப் பெற்று கொள்வனவு செய்த பொருட்களை சந்தைப்படுத்த முடியாமலும் விசேடமாக வேலைக்கு அமர்த்தியவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் கடனாளியாக மாற்றுவதாகவே அமையும்.  எனவே மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாம் எமது மக்களின் பொருளாதாரத்தினை சீர்குலைக்கும் எந்த நடவடிக்கைக்கும் இடமளிக்க முடியாது.

எனவே பிரதேசசபையின் பிரிவுக்குட்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை பாதிக்கும் இந்த விடயத்தினை தற்காலிகமாக உடன் நிறுத்தப்பட்டு எமது மக்களின் பொருளாதாரம் உறுதிப்படுத்தப்படும் வரை தற்காலிகமாக வேறு வியாபார நடவடிக்கைகளுக்கு அனுமதியை வழங்காது இந்த விடயம் தொடர்பாக இந்த சபையில் வாத பிரதிவாதங்களின் கருத்தின் அடிப்படையில் ஓர் சிறந்த தீர்மானத்தினை மேற்கொண்டு எமது மக்களின் வாழ்வாதாரத்தினை உறுதிப்படுத்துமாறு இந்த சபையிடம் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மனுவினை சபையில் முன்வைக்கின்றோம்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.