இலங்கை பிரதான செய்திகள்

கடுமையான நிபந்தனைகளுடன் இலங்கைக்கு அமெரிக்கா நிதி :

கடுமையான நிபந்தனைகளுடன் அமெரிக்கா இலங்கைக்கு நிதி வழங்குகின்றது. அமெரிக்கா காங்கிரசினால் அங்கீகாரமளிக்கப்பட்டு அமெரிக்க ஜனாதிபதி கையொப்பமிட்டு இலங்கையின் ஜனநாயக திட்டங்களிற்காக அமெரிக்கா வழங்கியுள்ள 35 மில்லியன் டொலர்கள் குறித்த சட்டமூலத்துக்கே இவ்வாறு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நிதியானது காணாமல்போனோர் குறித்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளிற்காக பயன்படுத்தப்படவுள்ளது.

இந்த நிதியை பெறுவதற்காக இலங்கை , மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்கேற்ப நம்பகதன்மை மிக்க பொறிமுறையை ஏற்படுத்துவதற்கு இணங்கியுள்ளமை குறித்தும் அதனை உறுதிசெய்தும் அமெரிக்க இராஜாங்க அமைச்சர் நிதி ஒதுக்கீட்டு குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் எனவும் காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளது.

மேலும் இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கும் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கும் இலங்கை இணங்கியுள்ளமை குறித்தும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் உறுதிசெய்யவேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை குறிப்பிட்ட நிதியை பெறுவதற்காக காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தை அமைக்கவேண்டும் எனவும் இறுதி யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்தவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுவதுடன் படையினரின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும் எனவும் காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளது.

இலங்கைப் படையினருக்கு என 500,000 டொலர்களையே ஒதுக்கீடு செய்துள்ள அமெரிக்கா அதனை மனிதாபிமான மற்றும் இயற்கை அனர்த்தங்களை கையாள்வதற்கான பயிற்சிகளிற்கும் கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகளிற்குமே பயன்படுத்தவேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளது

பாலியல் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த அமைதிப்படையினருக்கு எதிராக இலங்கை அரசாங்கம் வலுவான நடவடிக்கையை எடுத்தால் மாத்திரமே அமைதிப்படை நடவடிக்கைகளிற்காக இலங்கைக்கு நிதி வழங்கவேண்டும் எனவும் அமெரிக்க காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.