இலங்கை பிரதான செய்திகள் புலம்பெயர்ந்தோர்

தமிழ்த் தேசியமும் இலங்கைத் தீவில் இடம்பெறும் தமிழ் இனஅழிப்பும்…

 
நீதிக்கான தேடலும் போருக்குப் பின்னரான  – தேசத்தை மீளக்கட்டியெழுப்பலும்..
 
முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பின் ஒன்பதாவது ஆண்டை நினைவுகூருவதற்கு, உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்கள் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  இத் தருணத்தில், “தமிழ்த் தேசியமும் இலங்கைத் தீவில் இடம்பெறும் தமிழ் இனஅழிப்பும் –  நீதிக்கான தேடலும் போருக்குப் பின்னரான தேசத்தை மீளக்கட்டியெழுப்பலும்” என்னும் கருப்பொருளில் இரண்டாவது சர்வதேச தமிழர் மாநாடு மே 5 – 7ம் திகதிவரை கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் இடம்பெறவுள்ளது. 
 
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழ் இனa அழிப்புக்குப் பின்னர், தமிழர் தாயகத்தில் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பின் அங்கமாக, ஈழத்தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் மீதான சிறீலங்கா இராணுவ ஆக்கிரமிப்பு, திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நோக்குடனான பௌத்த கோவில்களின் உருவாக்கங்கள் தீவிரம் பெற்றுள்ளது.
 
இத்தகைய பின்புலத்தில், தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடரும் இனஅழிப்பை சர்வதேச சமூகத்துக்கு உரத்துச் சொல்லவும், தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதை மீண்டும் நிலைநிறுத்தவும் வேண்டிய கடப்பாடு எழுந்துள்ளது. அதனடிப்படையில், இரண்டாவது சர்வதேச தமிழர் மாநாட்டினை தமிழ் மண்ணுக்காவும் மக்களுக்காகவும் வித்தாகி வீழ்ந்தவர் நினைவோடு, கனடாவில் உள்ள முக்கியமான ஏழு அமைப்புக்கள் ஒன்றிணைந்து  ஒழுங்குசெய்துள்ளன.  
 
இலங்கைத் தீவு உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் அறிவியலாளர்கள் ஊடகவியலாளர்கள் அரசியலாளர்கள் என பலரும் கலந்து கொள்ளும் நிகழ்வாக இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இம்மாநாட்டின் இறுதி நாளின் போது மாநாட்டின் தீர்மானங்களுடன் கனடா நாடாளுமன்றில் நாடாளுமன்ற பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கானஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
 
முதலாவது சர்வதேச தமிழர் மாநாடு 1999ல் கனடாவின் ஓட்டாவா நகரில் நடைபெற்றது. அம்மாநாட்டில் மாமனிதர் குமார் பொன்னம்பலம், மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம், மாமனிதர் ரவிராஜ் மற்றும் மாமனிதர் தராக்கி சிவராம் உட்பட பல ஆளுமைகள் கலந்து சிறப்பித்து தமிழின அழிப்புக்கு நீதி தேடும் பயணத்திற்கு பலம் சேர்த்ததோடு, தமிழர் தேசத்தின் இருப்பையும் எதிர்காலத்தையம் பேணிப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
இந்த மாநாடு தொடர்பான மேலதிக விபரங்களை http://www.tamilconferences.org/ என்னும் இணையத்தளம் ஊடாக அறிந்து கொள்ளலாம்.
 
இந்த மாநாடு தொடர்பான வானொலி மற்றும் தொலைக்காட்சிக்கான அறிவித்தல்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.