இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைதான பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனைக் கைதிகளாக கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர்.
இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு கடந்த 2014-ம் ஆண்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், 20 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணைப்படி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி கடந்த 2015-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நளினியின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டதனைத் தொடர்ந்து தமிழக அரசு தன்னை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி நளினி மேல்முறையீடு செய்தார்.
இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் முன்கூட்டியே நளினியை விடுதலை செய்யும்படி உத்தரவிட முடியாது எனக் கூறி நளினி தொடர்ந்த மேல்முறையிட்டு மனுவை நிராகரித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், உயர்நீதிமன்றம் இதில் தலையிட முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது
Add Comment