இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

இடைக்கால நிர்வாக சபைக்கு முஸ்லிம் ஒருவரை புலிகள் நியமித்ததனை தீட்சித் எதிர்த்தார்..

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அறியப்படாத பக்கங்கள்…

மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும், உலகத்தமிழர் பேரவையின் ஸ்தாபரும், ஈழத்தமிழர் விடயத்தில்; நீண்ட அனுபம் கொண்டவரும், தமிழர் தேசிய முன்னணியின் தலைவரும் எழுத்தாளருமான பழ.நெடுமாறனுடன் இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு, சமகால அரசியல் நிலைமைகள், ராஜீவ் காந்தி மரணத்தின் பின்னணி, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்கு என்ன நடந்தது? உள்ளிட்ட பல விடயங்கள் குறித்த அவருடைய அலுலகத்தில் நடைபெற்ற பிரத்தியேக சந்திப்பின்போது கலந்துரையாட முடிந்தது. இதன்போது அவர் விளக்கமளித்து முன்வைத்த கருத்துக்கள் வருமாறு,   

அமிர்தலிங்கத்தை சந்த்திருந்த நான்

1977ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் அமிர்தலிங்கம் முதற்தடவையாக எதிர்க்கட்சித்தலைவராகியிருந்தார். அதன் பின்னர் அவர் சென்னைக்கு வருகை தந்தார். தமிழகத்தின் முதலமைச்சர் உட்பட அனைத்து கட்சித்தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அச்சமயத்தில் நான் காங்கிரஸ் கட்சியின் தமிழகத்திற்கான பொதுச்செயலாளராக பதவி வகித்துக்கொண்டிருந்தேன். அச்சமயத்தில் நானும் அவரை சந்தித்தேன்.

அந்தசமயத்தில் ஏனைய தலைவர்களுடனான சந்திப்பினைப் போன்றே தமிழர்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் அமிர்தலிங்கம் எடுத்துக் கூறினார். அதன்போது நான், உங்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் நான் புரிந்து கொள்கின்றேன். நாங்களும் நீங்களும் ஒரே இனம் என்பதால் உங்களை ஆதரிப்பதற்கு கடமைப்பட்டிருக்கின்றோம். நீங்கள் கோரிக்கை விடுக்காவிட்டாலும் நாம் ஆதரிப்போம். இருப்பினும் தமிழகத்தின் கவனத்திற்கு இப்பிரச்சினையை எடுத்துக்காட்டுவதை விடவும் டெல்லிக்குச் சென்று இப்பிரச்சனையை வெளிப்படுத்த வேண்டும். டெல்லிக்கு தான் அதிகாரம் உள்ளது என்று கோரினேன்.

இந்திராவை சந்தித்த அமிர்தலிங்கம்

அச்சமயத்தில் டெல்லியில் தனக்கு யாரையும் தெரியாது என்று அமிர்தலிங்கம் கூறினார். நான் உங்களை அழைத்துச் செல்கின்றேன் எனக் கோரியபோது அதற்கு தான் தயாராகவுள்ளதாக அமிர்தலிங்கம் குறிப்பிட்டார். அக்காலத்தில் மொரஜ் தேசாய் பிரதமாராக இருந்தார். இந்திராகாந்தி பாராளுமன்ற உறுப்பினராக கூட இருக்கவில்லை. இருப்பினும் அவரை சந்திப்பதற்கு முதலில் ஏற்பாடானது. அமிர்தலிங்கம், திருமதி.அமிர்தலிங்கம், ஜெனார்த்தனன் ஆகிய மூவரையும் அங்கு அழைத்துச் சென்றிருந்தேன். இந்திராகாந்தியின் இல்லத்தில் சுமார் 45நிமிடங்கள் அந்தச் சந்திப்பு நீடிதத்தது. தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எடுத்துரைத்த அமிர்தலிங்கம் இறுதியாக இந்திராகாந்தி தமிழர்களுக்கு ஆதரவளிக்குமாறு கோரினார்.

அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த இந்திராகாந்தி அம்மையார், “முதலில் உங்களின் பிரச்சினையை சர்வதேசமயப்படுத்துங்கள். அதன் பின்னர் நாங்கள் தலையீடு செய்கின்றோம்” என்று கூறினார். அச்சமயத்தில் அதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று அமர்தலிங்கம் கோட்டபோது, அமிர்தலிங்கத்திற்கு எந்தெந்த நாடுகளுக்குச் செல்லவேண்டும். யரையெல்லாம் சந்திக்க வேண்டும். எந்த ஊடகங்களுக்கு செவ்விகள் அளிக்க வேண்டும் உள்ளிட்ட அனைத்து திட்ட முன்மொழிவுகளையும் இந்திராகாந்தி வழங்கினார். அதனை அமிர்தலிங்கமும் குறிப்பெடுத்துக்கொண்டார்.

இந்திராகாந்தியின் அதீத அக்கறை

அதன் பின்னர் என்னை அழைத்து இந்திய தேசிய காங்கிரஸின் பொதுச்செயலாளராக இருந்த அப்துல் ரஹமான் அந்துலேயிடம் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தினை ஏற்பாடு செய்து அதில் அமிர்தலிங்கத்தினை உரையாற்ற வைக்குமாறும் கூறினார். அதன் பிரகாரம் அன்று மாலையே அந்த கூட்டம் நடைபெற்றது. அமிர்தலிங்கமும் உரையாற்றினார்.  அந்த உரைநிறைவடைந்ததும் அப்போது எதிர்க்கட்சித்தலைவராக இருந்த வை.பி.சவான், இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சென்ற நீங்கள் இலங்கையில் தனிநாடு கேட்பது எப்படி நியாயமாகும் என கேள்வி எழுப்பினார். இதன்போது பலரும் அதிர்ச்சியாக இருந்தபோது அமிர்தலிங்கம் ஈழத்தமிர்கள் அந்த நாட்டின் பூர்வீக மக்கள் என்பதையும் இந்திய தமிழர்களின் நிலைமைகளையும் குறிப்பிட்டு விளக்கமளித்தார்.

கூட்டம் நிறைவடைந்த பின்னர் அமிர்தலிங்கம் உள்ளிட்டோரை அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் நான் இந்திராகாந்தியை சந்திப்பதற்கு சென்றிருந்தேன். அதன்போது அனைத்துகட்சித்தலைவர்கள் கூட்டத்தில் நடைபெற்ற விடயத்தினை அவரிடத்தில் விளக்கி விட்டு எதிர்க்கட்சித்தலைவர் வை.பி.சவான் எழுப்பிய வினாவைக் கூறியதோடு அயல்நாட்டுப் பிரச்சினையை புரிந்துகௌ;ள முடியாத ஒருவரை எப்படி வெளிவிவகார அமைச்சராக எப்படி நியமித்திருந்தீர்களே என்று கேட்டபோது, தனது இருக்கையிருந்து எழுந்த இந்திராகாந்தி “கைதட்டிவிட்டு சிலசமயங்களில் இப்படி நிகழ்கின்றது” என்று பதிலளித்து விட்டு சென்றிருந்தார்.

பதவிக்கு வந்த இந்திரா புரிந்திருந்த யாதர்த்தம்

அதன்பின்னர் 1980ஆம் ஆண்டு அவர் பிரதமராக பதவிஏற்றார். 1983இல் இலங்கையில் ஜுலைக் கலவரம் நிகழ்கின்றது. மூவாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார். இதனையடுத்து இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15இல் செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி உரையாற்றி அவர், இலங்கையில் இனப்படுகொலை நடக்கின்றது. அயல்நடான இந்தியா இதனை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்காது” என்று பகிரங்கமாகவே எச்சரிக்கை விடுத்தார். மறுதினமே கலவரம் நின்றது. அச்சமயத்தில் வெளிவிவகார அமைச்சர் நரசிம்மராவை இலங்கைக்கு அனுப்பி ஜே.ஆரை நேரடியாக எச்சரிக்குமாறும் பணித்தார். இரண்டு கப்பல்களை கொழும்புக்கு அனுப்பி அங்குள்ள தமிழர்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைக்குமாறு கூறினார்.

இந்திராகாந்தி தமிழீழத்தினை ஆதரித்தார்களா? என்பதை உறுதியாக கூறமுடியாது. ஆனால் அவர் சிங்களவர்கள் ஒருபோதும் இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்கமாட்டார்கள். ஈழத்தமிழர்கள் தான் இந்தியாவுக்கு விசுவாசமாக இருப்பார்கள். அதனால் ஈழத்தமிழர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இந்தியாவுக்கு உள்ளது என்பதில் தெளிவாக இருந்தார்.

இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக இருந்தபோது ஜி.பார்த்தசாரதி வெளிவிவகார துறையின் ஆலோசனைக் குழு தலைமை அதிகாரியாக இருந்தார். ஏறக்குறை அமைச்சரவை அமைச்சருக்கு நிகரான பதவிலும் இந்திராக்காந்திக்கு நெருக்கியமானவராகவும்; இருந்தார். அத்தகைய முக்கியமானவரை இலங்கைக்கு அனுப்பினார். இதன்மூலம் இலங்கை சிறிய நாடாக இருந்தாலும் அங்குள்ள பிரச்சினைக்கு இந்தியா முக்கயத்துவம் அளித்து அதனை தீர்ப்பதில் உறுதியாக இருக்கின்றது என்ற செய்தியை ஜே.ஆருக்கும், முழு உலகத்திற்கும் வெளிப்படுத்தினார்.

ஜே.ஆர் ஏமாற்றுவதை நன்கு அறிந்த இந்திரா

அதனை அண்மித்த காலப்பகுதியில்; அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் ஆகியோர் நினைத்த தருணத்தில் டெல்லிக்கு சென்று அவருடன் பேச்சுக்களை மேற்கொள்ளக்கூடிய நிலைமைகள் ஏற்பட்டு இருந்தன. இந்;திரா காந்திர அம்மையார் தமிழர்களின் பிரச்சினைகளை சரியாக புரிந்துகொண்டிருந்தார். இச்சமயத்தில் தமிழர்கள் பிரச்சினைகள் தீர்வுக்காக பல வட்டமேசைப் பேச்சுக்கள் நடைபெற்றன.  அதன் விளைவாக வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து மாநில அதிகாரத்தனை வழங்குதல், ஆளுரை நியமித்தாலும் அவர் அரச அதிகாரியாக இருப்பார் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கியதாக “அனெக்ஸ்ட் சி” என்ற திட்டம் முன்மெழியப்பட்டது.

அதனை ஜே.ஆர். விரும்பாது விட்டாலும் ஈற்றில் அவர் கையொப்பமிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகின்றார். எனினும் அவர் அதனை நடைமுறைப்படுத்துவதாக இல்லை. தன்னை ஜே.ஆர். ஏமாற்ற முனைகின்றார் என்பதை புரிந்து கொண்ட இந்திராகாந்தி போராட்ட அமைப்புக்களை அழைத்து ஆயுதங்களையும் பயிற்சிகளையும் வழங்கும் முடிவினை எடுத்து அதனை முன்னெடுத்தார்.  இலங்கை அரசாங்கமும் படைகளும் எல்லை கடக்கும் தருணத்தில் மற்றாஸ் பண்டாலியன்ஸ{க்கு புலிகளின் சீருடை அளித்து போராடி தேவையேற்பட்டால் பங்களாதேஷ் போன்று ஈழத்தினை உருவாக்குவது தான் இந்திராகந்தியின் திட்டமாகவிருந்தது.

இவ்வாறான தருணத்தில் இந்தியாவை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றால் வல்லரசுடன் நெருக்கமாகவேண்டும் என்று திட்டமிட்ட ஜே.ஆர் திருகோணமலையில் அமெரிக்க கடற்படைத்தளம் அமைப்பதற்கு இரகசிய பேச்சுக்களை முன்னெடுத்தார். இந்தவிடயம் இந்திராகாந்திக்கு தெரியவரவும் இந்துசமுத்திர பிராந்திய மாநாட்டினை ஏற்பாடு செய்தார். அந்த மாநாட்டில் இந்துசமுத்திர கடலோர நாடுகள் எந்தவொரு வல்லரசுக்கும் கடற்படை, இராணுவ தளம் அமைப்பதற்கு இடமளிக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். இந்திரகாந்திரயின் தொலைநோக்கு இராஜதந்திர நடவடிக்கையால் ஜே.ஆர் கட்டுக்குள்ளானார். அதன்பின்னர் இந்திராகாந்தி அம்மையார் மரணமடைகின்றார்.

ராஜீவ் – ஜே.ஆர். முதல் சந்திப்பு

அதன் பின்னர் ராஜீவ் பிரதமராக பொறுப்பினை ஏற்றுக்கொள்கின்றார். இதனையடுத்து இரண்டாவது சார்க் மாநாடு பெங்களுரில் நடைபெறுகின்றது.  இச்சமயத்தில் ராஜீவைச் சந்தித்த ஜே.ஆர் ஈழத்தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவளித்தீர்கள் என்றால் தமிழகமும் தனிநாடாகிவிடும் என்றும் எச்சரிக்கின்றார். குறித்த மாநாடு நடைபெறும் தருணத்தில் ஜே.ஆரையும் பிரபாகரனையும் சந்திக்க வைப்பதற்கு எம்.ஜி.ஆர். ஊடாக முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும் அதற்கு சில தினங்கள் முன்னதாக வவுனியாவில் 108பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அங்குள்ள சிங்களப்படைகள் வெளியேறாத வரையில் நான் ஜே.ஆரைச் சந்திப்பதற்கு தயாரில்லை என்று கூறி பிரபாகரன் மறுத்துவிட்டார்.

இதன் பின்னர் தமிழகம் சம்பந்தமாக ஜே.ஆர். கூறிய கருத்துகளை மையப்படுத்தி தமிழகத்தில் உரிiமைகளைத் தான் கோருகின்றனர் தனிநாட்டை அல்ல என்று ராஜீவுக்கு தமிழக நிலைமைகளை ஏ.பி.வெங்கடேஸ்வரன் எடுத்துரைத்தபோதும் ரஜீவ் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இலங்கை பிரச்சினை தொடர்பில்; வெளிவிவகார துறையின் ஆலோசனைக்குழு தலைவர் ஜி.பார்த்தசாரதியையும் ராஜீவ் அழைத்து ஆலோசிப்பதை தவிர்த்தார். இவ்வாறு பார்த்தசாரதி வெங்கடேஸ்வரன் போன்றவர்கள் தெரிவித்த கருத்துக்களை ராஜீவ் புரிந்துகொள்ளாததால் அவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமச் செய்தனர்.

பண்டாரியின் வருகையும் ராஜீவின் மன மாற்றமும்

அதனையடுத்து பண்டாரி வெளிவிவகார செயலாளராக பொறுப்பேற்றார். இவர் இலங்கை செல்கின்றார். முதலாவதாக பார்த்தசாரதி போன்றவர்கள் கையாண்ட இலங்கை பரிச்சினையை பண்டாரி போன்ற அதிகாரிகளிடம் ராஜீவ் ஒப்படைத்ததன் மூலம் இலங்கை விவகாரத்தின் முக்கியத்துவத்தினை அவர் குறைத்து விட்டார். பண்டாரி, ஜே.ஆர் சந்திப்புக்கள் நிகழ்கின்றன. அதன் பின்னர் பண்டாரியின் மகளின் திருமண நிகழ்வுக்கு வருகை தந்த ஜே.ஆரின் சகோதரர் 35இலட்சம் பெறுமதியான தங்கநகையை பரிசளிக்கின்றார். இந்த விடயம் அக்காலத்தில் பாராளுமன்றத்திலும் ஊடகத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளால் ரஜீவே இருக்கையை விட்டு எழுந்து வெளியில் செல்லும் அளவிற்க நிலைமைகள் இருந்தன.

உண்மையிலேயே பண்டாரியை ஜே.ஆர் விலைகொடுத்து வாங்கிவிட்டார். இதனால் அதன் பின்னர் நிலைமைகள் மாற ஆரம்பித்தன. இந்த சமயத்தில் அமிர்தலிங்கம் தலைமையில் சிவசிதம்பரம், சம்பந்தன் ஆகியோர் அவரைச் சந்திப்பதற்காக டெல்லி சென்றபோது ராஜீவ் அவர்களை சந்திக்காததுடன் மூன்று நாள் காத்திருப்புக்கு பின்னர் வெளிவிவகார செயலாளரை பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். பண்டாரியைப் பார்த்து விட்டு அதன் பின்னர் என்னை வந்து சந்தித்தனர். அச்சமயத்தில் இறைமையுள்ள ஈழ மக்களின் பிரதிநிதிகளான நீங்கள் அதற்குரிய கமபீரத்துடன் இருக்க வேண்டும். இந்தியாவை நம்பிருக்கின்றோம். இந்தியா தான் எதனையாவது பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து விடக்கூடாது என்பதை நான் அவர்களிடத்தில் கூறியிருந்தேன்.

கார்த்திகேயனின் நேரடி அறிக்கை

அதன்பின்னர் இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்கு ஜே.ஆர் இணக்கம் தெரிவித்;ததன் அடிப்படையில் இந்தியப்படைகள் இலங்கைக்கு அனுப்பப்படுகின்றன. இந்தப் படைகளுக்கும் புலிகளுக்கும் இடையில் முறுகல் நிலைமைகள் ஏற்பட்டதாக தகவல் அறிந்ததும் அமைச்சரவை செயலாளராக இருந்த ரி.என்சேஷன் அந்தவிடயம் சம்பந்தமான உண்மையான நிலைமை அறிவதற்காக ஆர்.கார்த்திகேயனை (பின்னர் ராஜீவ் கொலைவழக்கு விசாரணை சிறப்பு புலனாய்வுக்குழு தலைவராக செயற்பட்டவர்)) விசேட பிரதிநிதியாக இலங்கைக்கு அனுப்பினார். அவர் அங்கு பலரையும் சந்தித்த பின்னர் அறிக்கையை சமர்ப்பித்தார். அதில் “ஜே.ஆரின் சூழ்ச்சிக்குள் நாங்கள் சிக்கிவிட்டோம். புலிகளையும் இராணுவத்தையும் மோதல் இல்லை. ஆனால் அவ்வாறான நிலைமை ஏற்பட வேண்டும் என்பதே ஜே.ஆரின் திட்டம். அதற்குள் சிக்கிவிட்டோம். தவறுகள் இழைக்கப்பட்டு விட்டன என்பது உள்ளட்ட விடயங்கள் குறிப்பிட்டுள்ளார்.

திலீபன் போராட்டத்தை திசை மாற்றிய தீட்சித்

குறித்த காலத்தில் திலீபன் உண்ணாவிரத்தினை ஆரம்பித்தார். இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் இணங்கியவற்றை ஜே.ஆர் நடைமுறைப்படுத்த தவறுகின்றார் என்பதை வலியுத்தியே அதனை ஆரம்பித்தார். அத்தகைய உண்ணாவிரதத்தினை இலங்கைக்கான இந்திய தூதுவராக இருந்த தீட்சித் இந்திய அரசுக்கு எதிரானது என்று சித்தரித்து தகவல் அனுப்புகின்றார். அவ்வாறு இருக்கையில் இந்திய அமைதிப்படையின் தளபதி திபீந்தர் சிங் இடைக்கால நிருவாகசபை அமைப்பது தொடர்பில் விடுதலைப்புலிகளுடன் பேச்சுக்களை நடத்துகின்றார்.

இந்த சமயத்தில் பேச்சுவார்த்தைக்கு பிரபாகரன் வருகை தரும் போது அவரை சுட்டுக்கொல்லுமாறு திபீந்தர் சிங்கிடம் தீட்சித்த பணிப்புரை விடுத்துள்ளார். இந்திய இராணுவத்தளபதியாக தமிழகத்தினைச் சேர்ந்த ஜெனரல் கிருஷ்ணசாமி சுந்தர்ஜி இருக்கின்ற அதேநேரம், திபீந்தர் சிங், அவ்வாறு பேச்சுவார்த்தைக்கு வருகை தருபவரை சுட்டுக்கொல்வது இந்திய இராணுவத்தின் பெயருக்கே இழுக்காகி விடும். அவ்வாறான செயற்பாட்டினை நாம் ஒருபோதும் செய்ய முடியாது என்று பதிலளித்து விட்டார்.

இடைக்கால நிருவாக சபைக்கான பேச்சு

இக்காலப்பகுதியில் தொடர்ச்சியாக இடைக்கால நிருவாக சபையை அமைப்பது தொடர்பிலான பேச்சுக்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இப்பேச்சுவார்த்தைகளில் தீட்சித்தும் பங்கேற்றார். அவ்வாறு பங்கேற்பதற்கு டெல்லியின் உத்தரவு தான் காரணம் என்றும் தீட்சித் திபீந்தர் சிங்கிடம் குறிப்பிட்டுள்ளார். 12பேர் கொண்ட இடைக்கால நிருவாக சபையில் 7பேர் புலிகள் 5பேரில் சிங்களம், மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் தலா ஒவ்வொருவரை ஜே.ஆர். நியமிப்பது என்றும் ஈரோஸ் உள்ளிட்ட அமைப்புக்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதென்பதும் தான் ஏற்பாடு. புலிகள் தரப்பில் ஏழுபேர் கொண்ட பட்டியல் வழங்கப்பட்டது.  அதில் ஒரு முஸ்லிம் நபரும் இருந்தார். அதனை ஆட்சேபனை செய்ய வேண்டியது ஜே.ஆரே. ஆனால் தீட்சித் அதனை ஆட்சேபித்தார். அப்போது புலிகள் தரப்பில் அவர்களும் தமிழர்கள் தானே. அதனை நீங்கள் ஏன் எதிர்க்கின்றீர்கள் என்று தீட்சித்துடன் விவாதித்த நிலையில் சந்திப்பு நிறைவுக்கு வந்திருந்தது.

யாழுக்கான எனது இரகசிய பயணம்

இக்காலப்பகுதியில் நான் இரகசியமாக யாழ்ப்பாணத்திற்கு சென்று விடுதலைப்புலிகளுடன் தங்கியிருந்தேன். முஸ்லிம் நபரை பெயரிட்டதால் ஏற்பட்ட விவாத விடயத்தினை பேச்சுவார்த்தைக்குச் சென்றிருந்த பிரபாகரன் தலைமையிலான குழுவினர் என்னிடத்தில் தெரிவித்தனர்.  அச்சமயத்தில் பீல்ட் மார்ஷல் ஆர்ச்சிபொல்ட் பெர்சிவல் வேவல் (வைஸ்ரோயாக இருந்தபோது) இந்திய தலைமை ஆளுநராக இருக்கும் போது இடைக்கால அரசை அமைப்பதற்கான இணக்கம் காணப்பட்டது. அதன்பிரகாரம் முஸ்லிம் லீக் ஐவரையும், காங்கிரஸ் ஐவரையும் சீக்கிர் ஒருவரும் பரிந்துரைக்கப்பட்டனர்.

காங்கிரஸ் சார்பில் நேரு வழங்கிய ஐவரில் ஒருவர் முஸ்லிம். முஸ்லீம் லீக்கிற்கு தலைமை தாங்கிய ஜின்னா அதனை கடுமையாக எதிர்த்து நான் தான் முஸ்லிம் பிரதிநிதிகளை நியமிப்பேன் என்று வாதிட்டார். இருப்பினும் நேரு அதற்கு இணங்காமையினால் ஈற்றில் நேருவின் பட்டியல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆகவே இந்தியாவுக்கு ஒரு நியாயம். இலங்கைக்கு ஒரு நியாயமா என்று தீட்சித்திடம் நாளை கேள்வி எழுப்புங்கள் என்று நான் பிரபாகரனுக்கு ஆலோசனை வழங்கினேன்.

பதிலடியால் தீட்சித் கொண்ட சந்தேகம்

எனது ஆலோசனையை கேட்டுக்கொண்ட பிரபாகரன் தலைமையிலான குழுவினர் அடுத்த நாள் பேச்சுவார்த்தையின்போது நான் சொன்ன விடயத்தினை முன்வைத்தபோது தீட்சித், இந்த விடயத்தினை யார் சொன்னது? என்று கேள்வி எழுப்பினார். இருப்பினும் பிரபாகரன் தரப்பினர் எதனையும் கூறிவில்லை. எனினும் தீட்சித் உள்ளிட்டவர்கள் இராணுவ புலனாய்வாளர்களை வைத்து இந்தியாவைச் சேர்ந்தவர்கள் புலிகளுடன் இருக்கலாம் என்பதை கண்டுபிடித்து விடுவார்கள் என்பதை பிரபாகரன் உணர்ந்தார். உடனடியாக என்னை தமிழகத்திற்கு திரும்புமாறு கூறியதோடு அன்றைய தினம் இரவே வெற்றிலைக்கேணிக்கு கொண்டுவந்து என்னை தமிழகத்திற்கு அனுப்பி வைத்தனர். அதிகாலை சூரியோதயத்தின் போது நான் இராமேஸ்வரத்தினை வந்தடைந்தேன்.

தொடர்ச்சி அடுத்தவாரம்,

(நேர்காணல்:- ஆர்.ராம்)

நன்றி –  வீரகேசரி…

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 11 other subscribers