இந்தியா கட்டுரைகள் பிரதான செய்திகள் விளையாட்டு

தாதாசாகேப் பால்கேயும் இந்தியா சினிமாவும்! அலாவுதின் ஹுசைன்

 

நூற்றாண்டைக் கடந்து நிற்கும் இந்திய சினிமா பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. வெள்ளையர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சினிமாவை மக்கள் பார்க்கவே அஞ்சிய காலம் அது. போட்டோ எடுத்தாலே ஆயுள் குறையும் என்ற நம்பிக்கையிருந்த அந்தக் காலகட்டத்தில் நகரும் போட்டோக்களைப் பார்த்தால், மக்கள் அலருவார்கள். அத்தகைய சினிமாவை மக்களுக்குப் பிடிக்கத்தக்கதாக மாற்ற காலம் பிடித்தது. இன்றைக்கு இந்திய சினிமா கலை மற்றும் வியாபார ரீதியாக ஒரு தனிப் பெரும் துறையாக வளரக் காரணமாய் இருந்தவர்களில் ஒருவரான தாதாசாகேப் பால்கே பிறந்த தினம் இன்று. சினிமாவை மிகத் தீவிரமாக நேசித்த பால்கே, அதைப் பார்த்து வியந்ததோடு நிற்காமல் அந்தப் பேரானந்தத்தையும், மகிழ்ச்சியையும் மற்றவர்களிடம் பகிர விரும்பினார்.

பால்கே

1870- ம் ஆண்டு மும்பையில் இருக்கும் நாசிக் பகுதியில் பிறந்தவர், பால்கே. பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் கலைக் கல்லூரியில் பயின்றார். நாடகக் கம்பெனியில் பெயின்டர், தொல்லியல் துறையில் புகைப்படக் கலைஞர், அச்சக உரிமையாளர், மேஜிக் கலைஞர் எனத் தனக்குப் பிடித்த வேலைகளைச் செய்துவந்த பால்கே, மனைவி மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் வசித்து வந்தார். 1911, ஏப்ரல் 14- ம் தேதி ‘பிக்சர் பேலஸ்’ என்ற டூரிங் டாக்கீஸில் இவர் பார்த்த ‘The Life of Christ’ என்ற இயேசு கிறிஸ்துவைப் பற்றிய ஐரோப்பிய படம், பால்கேவை ஆட்கொண்டது. ‘அந்தத் திரையில் கிருஷ்ணர், ராமர், பிருந்தாவனம், அயோத்தி என இந்திய உருவங்களைக் காணமுடியுமா?’ என அப்போது எண்ணியதாக அவரே கூறியுள்ளார்.

தாதாசாகேப் பால்கேராஜா

திரையில் இந்தியக் கடவுள்களான ராமனையும், கண்ணனையும் உலவவிடுவது என முடிவு செய்தார். காலை மாலை எனப் பலமுறை படம் பார்த்து, ஃபிலிம் ரீல் எப்படி வேலை செய்கிறது எனக் கற்றுக்கொண்டார். பல சோதனைகளைச் செய்துவந்த பால்கேவுக்குக் கண் பார்வை மங்கியது. கண் பார்வை குணமாவதற்குள் தன் மங்காத கனவை அடையவேண்டும் என லண்டனுக்குப் பயணம் ஆனார்.

பிரிட்டிஷ் இயக்குநர் செசில் ஹெப்வொர்த்திடம் படம் தயாரிப்பதற்கான பயிற்சிகளைப் பெற்றார். மனைவியின் நகைகள் மற்றும் வீட்டில் இருக்கும் பொருள்களை விற்றார். தனது இன்சூரன்ஸையும் அடகு வைத்து, அதன் மூலம் வந்த பணத்தில் வில்லியம்சன் கேமிரா, ஃபிலிம் ஸ்டாக், படச்சுருளினை ப்ராசஸ் செய்ய கெமிக்கல்… என அனைத்தையும் வாங்கி வந்தார், பால்கே. நகரும் போட்டோவை எப்படிச் செய்யமுடியும்? என அனைவரும் சந்தேகங்களை எழுப்ப, ஒரு செடி விதையிலிருந்து முளைப்பதை ஓடும் படமாக எடுத்துக் காட்டினார். இதன்பிறகு பால்கே மீது நம்பிக்கை வைத்த நண்பர்கள் பணம் கொடுத்து உதவிசெய்ய, ‘ராஜா ஹரிஷ்சந்திரா’ படம் தயாராகத் தொடங்கியது. மேடை நாடகங்களில் பெண் கதாபாத்திரங்களை ஆண்களே வேடமிட்டு நடிப்பதுபோல இல்லாமல், தனது படத்தில் ஹரிஷ்சந்திராவின் மனைவி தாராமதி கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு பெண்ணைத் தேடி வந்த பால்கேவுக்கு, நடிக்கச் சம்மதம் சொன்னார், ஒரு விலைமாது. ஆனால், அவளும் பாதியில் வெளியேற ஹோட்டல் சர்வர் ஒருவரை வைத்துப் படமெடுத்தார். பால்கேவின் மனைவி சரஸ்வதி, பால்கேயின் சினிமா பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார்.

இந்தியாவிலேயே இந்தியர்களால் எடுக்கப்பட்ட ‘சுதேச சினிமா’ என்று விளம்பரம் செய்யப்பட்டது, ‘ராஜா ஹரிஷ்சந்திரா’ திரைப்படம். இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படமான இது மே 3, 1913- ம் ஆண்டு வெளியாகி, இந்தியா மட்டுமல்லாது லண்டனிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இங்கிலாந்தில் படம் இயக்க வாய்ப்புகள் வந்தபோதிலும், சினிமாவை இந்தியாவில் ஒரு தொழில் துறையாய் மாற்றுவதற்கான முயற்சியை விரும்பினார், பால்கே. எதிர்காலத்தில் வசனப் படங்களோடு மெளனப் படங்கள் ஈடுகொடுக்க முடியாது என்பதை உணர்ந்த பால்கே, 1937- ம் ஆண்டு ‘கங்கவர்தன்’ என்ற இந்தியாவின் முதல் வசனப் படத்தை எடுத்துவிட்டு,  சினிமாவிலிருந்து ஓய்வுபெற்றார்.

சமகாலக் கலைஞன் இல்லையென்றாலும், தனது சினிமாக்களில் புது யுக்தியைக் கையாண்ட விதத்தில் தாதாசாகேப் பால்கே பிரெஞ்ச் சினிமா தயாரிப்பாளர் ஜார்ஜ் மிலியஸுடன் ஒப்பிடப்பட்டார். பால்கே, ‘சினிமாவைக் கற்பிக்கத் தகுந்த பயிற்சிக் கூடங்கள் அமைக்க வேண்டும். அப்போதுதான் சினிமாவை ஒரு துறையாக முன்னேற்ற முடியும்’ எனப் பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார். பால்கேவை கௌரவிக்கும் விதமாக இந்திய அரசு 1969- ம் ஆண்டு முதல் ‘தாதாசாகேப் பால்கே விருது‘ என்ற பெயரில்  திரைத்துறையின் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறது. பால்கே நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி ஓர் அஞ்சல் தலையையும் வெளியிட்டது, இந்திய அரசு.

தாதா சாகேப் பால்கே

பால்கே தனது முதல் திரைப்படத்தை எடுக்கும்போது நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு 2009-ல் பரேஷ் மொகாஷி இயக்கத்தில் ‘ஹரிஷ்சந்திராச்சி ஃபேக்டரி’ என்ற மராத்தியத் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

நன்றி – விகடன்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.