இலங்கை பிரதான செய்திகள்

லசந்த படுகொலை வழக்கில் கோத்தா ஏன் கைது செய்யப்படவில்லை ? சுமந்திரன் கேள்வி


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராம் உள்ளிட்ட அனைத்து ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடாத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.உதயன் பத்திரிகையின் வேட்கை நிகழ்வில் கலந்து கொண்டு ‘ தமிழ் ஊடகங்களின் சொல் நெறியும் , அவை பயணிக்க வேண்டிய திசையும்’ எனும் தொனிப்பொருளில் சிறப்புரை ஆற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

சிலருக்கு கொல்லப்பட்ட சில ஊடகவியலாளரின் கொலைகள் பற்றி விசாரிக்க விருப்பமில்லை. ஏனெனில் அவர்கள் இப்போது எங்களுடன் தானே இருக்கின்றார்கள் எனும் ஆதங்கம் உண்டு. எங்களுடன் நின்றால் என்ன எழுக தமிழுடன் நின்றால் என்ன உண்மை கண்டறியப்பட வேண்டும். உண்மையின் அடிப்படையில் நீதி வழங்கப்பட வேண்டும்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த படுகொலை தொடர்பில் குற்றப்புலனாய்வு துறையினர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இரண்டு மூண்டு தடவை கைது செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இதுவரை எதுவும் நடக்க வில்லை.

லசந்த படுகொலை செய்யப்படுவதற்கு ஒருசில தினங்களுக்கு முன்னர் என்னைப் பற்றி அவதூறாக எழுகின்றார் எனவும் இனி எழுத கூடாது என நீதிமன்றில் இடைக்கால தடையுத்தரவு கூட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பெற்றிருந்தார்.

லசந்தவின் படுகொலையின் பின்னர் லசந்தவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் வெளியேறி விட்டனர். சட்டத்தரணிகள் இல்லாத நிலையில் என்னிடம் வந்தார்கள். நான் ஆஜரானேன்.

முதல் வழக்கு தவணையின் முன்னிலையாகிய பின்னர் வீட்டுக்கு வந்த போது பாதுகாப்பு அமைச்சின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் என் படத்தையும் என்னுடன் முன்னிலையான இளம் சட்டத்தரணிகளின் படங்களை போட்டு ‘ கறுப்பு கோர்ட் போட்ட துரோகிகள் ‘ என கட்டுரை எழுதி இருந்தார்கள். அதற்கு சட்டத்தரணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அதனை நீக்க இரண்டு வாரத்தின் பின்னரே எடுத்தார்கள்.

லசந்தவின் அந்த வழக்கில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சேவை ஆறு மணித்தியாலங்களுக்கு மேல் குறுப்பு விசாரணை செய்திருந்தேன். ஆனால் அது தொடர்பில் எந்த செய்தியும் பிரசுரிக்கப்படவில்லை. என தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.