Home இலங்கை மண் மீட்புப் போராட்டம் நிகழும் இரணைதீவு – ஒரு நேரடி விஜயம் – 01 – பி.மாணிக்கவாசகம்

மண் மீட்புப் போராட்டம் நிகழும் இரணைதீவு – ஒரு நேரடி விஜயம் – 01 – பி.மாணிக்கவாசகம்

by admin
இருபத்தாறு வருடங்களின் பின்னர், தமது சொந்தப் பிரதேசத்தில் இரணைதீவு மக்கள் அடியெடுத்து வைத்திருக்கின்றார்கள். ஆயினும் அவர்கள் அங்கு மீள்குடியேறுவதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. இதனால், அங்குள்ள செபமாலைமாதா ஆலயத்தில் தங்கியிருந்து மீள்குடியேறுவதற்காக அவர்கள் போராடுகின்றார்கள்.
மீள்குடியேற்றத்திற்கான அவர்களுடைய போராட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகியது. மன்னாரில் இருந்து வெள்ளாங்குளம், முழங்காவில், பூனகரி ஆகிய பிரதேசங்களின் ஊடாக சங்குப்பிட்டி கேரதீவு வழியாக கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரத்தில், யாழ்ப்பாணத்திற்குச் செல்கின்ற ஏ 32 பிரதான வீதிக்கருகில் உள்ள இரணைமாதாநகர் என்ற கிராமத்தில் இந்தப் போராட்டத்தை அவர்கள் ஆரம்பித்திருந்தார்கள்.
இரண்டு சிறிய தீவுகளைக் கொண்ட இரணைதீவு வரலாற்றுப் பாரம்பரியம் மிக்கது. இரட்டைத் தீவுகளைக் கொண்டதனால் முன்னோர்கள் இதற்கு இரணைதீவு என்ற பெயரைச் சூட்டியிருப்பதாக ஊர் முக்கியஸ்தர் ஒருவர் கூறினார். இரணைமாதாநகர மீன்பிடித்துறையில் இருந்து மேற்குப் புறமாக அரை மணித்தியால படகுப் பயணத் தொலைவில் இந்தத் தீவு அமைந்துள்ளது.பூலோக வரைபடத்தில் இரணைதீவு வடக்கு என்றும், இரணைதீவு தெற்கு என்றும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இரணைதீவை சிறுதீவு பெருந்தீவு என்று ஊர் மக்கள் குறிப்பிடுகின்றார்கள்.
 
மூன்று தலைமுறைகளுக்கு மேலாக பூர்வீகமாக இங்கு மக்கள் வசித்துள்ளார்கள். யுத்த மோதல்கள் காரணமாக 1992 ஆம் ஆண்டு முழுமையாக இவர்கள் இடம்பெயர்ந்தபோது 230 ஆக இருந்த குடும்பங்கள் கால் நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலத்தில் 430 ஆக உயர்ந்திருப்பதாகப் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரணைதீவின் பெருந்தீவில் 142 காணித்துண்டுகளும் சிறுதீவில் 35 காணித்துண்டுகளும் அங்க வசித்த மக்களுக்கு 1982 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட காணி உரித்துக்கான ஆவணங்களே அவர்களுடைய மீள்குடியேற்ற கோரிக்கைக்கான எழுத்து வடிவிலான ஆதாரங்கள்.
கரையில் நிறைந்துள்ள பவளப்பாறைகள் இரணைதீவின் வற்றாத கடல்வளத்தின் அடையாளமாகத் திகழ்கின்றன. மீன்பிடியும், கரைசார்ந்த சிறு தொழில்களும், மந்தை வளர்ப்பும், இரணைதீவின் வாழ்வுக்கு ஆதாரமானவை. இந்தத் தொழில்களுடன், தென்னைகளும் ஏனைய வான்பயிர்களும் இரணைதீவு மக்களின் வாழ்க்கையை சுயநிறைவுடையதாக்கி இருந்தன.
பெருநிலப்பரப்புக்கான இயந்திரப்படகின் அரை மணித்தியாலத்துக்கும் மேற்பட்ட கடல்வழிப் பயணத் தாமதத்தைத் தவிர்த்து, அனைத்துத் தேவைகளையும் இங்குள்ள மக்களுக்குப் பூர்த்தி செய்யும் வகையில் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பாடசாலை, வைத்தியசாலை, அஞ்சல் அலுவலகம் மட்டுமல்லாமல், பிரதேச சபையின் உப அலுவலகம் ஒன்றும்கூட இங்கு செயற்பட்டு வந்துள்ளது.
பாக்குநீரிணையின் ஆழ் கடல் தீவாகிய இரணைதீவில் குடிநீர் வளம் நிறைந்துள்ள போதிலும், அது அங்கு வசித்த மக்களின் தேவையை முழுமையாகப் போதுமானதாக இல்லை.
குடிநீர்ப்பற்றாக்குறையைப் பூர்த்தி செய்வதற்காக மழைநீரைச் சேமித்து வைப்பதற்காக இங்குள்ள பிரதான ஆலயத்தின் வெளிவிறாந்தைப் பகுதியில் ந்pலத்தடித் தொட்டிகள் சீராக அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தேவாலயம் ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலப் பழைமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலயத்தின் அருகில் 1886 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட வெளிச்சவீட்டுப் பாணியிலான காவல் கோபுரம் இன்னும் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது.
இரணைதீவில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து சென்றதையடுத்து, அங்கு கடற்படையினர் நிலைகொண்டனர். யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, 2009 ஆம் ஆண்டு செட்டம்பர் மாதம் ஆரம்பமாகிய மீள்குடியேற்ற நடவடிக்கைகளின்போது இந்த மக்கள் மீள்குடியேற்றப்படவில்லை. மாறாக இங்கு நிலைகொண்டிருந்த கடற்படையினர் இடம்பெயர்ந்த மக்கள் இரணைதீவுக்குள் செல்வதை முற்றாகத் தடை செய்திருந்தார்கள்.
சொந்தத் தீவில் இருந்து இடம்யெர்ந்து முடிவின்றி தொடர்ந்த யுத்தச் சூழல் காரணமாக இடத்துக்கு இடம் இடம்பெயர்ந்து முள்ளிவாய்க்காலைச் சென்றடைந்து, அங்கிருந்து இராணுவத்தினரால் வவுனியா செட்டிகுளம் இடைத்தங்கல் முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்ட இரணைதீவு மக்கள் மீள்குடியேற்றப்படுவதற்குப் பதிலாகத் தற்காலிகமாக இரணைமாதாநகர் கிராமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். ஆயினும் தமது சொந்த மண்ணைச் சென்று பார்ப்பதற்கு இயலாதவர்களாக இருந்த மக்கள் பெரும் துயரமடைந்திருந்தார்கள்.
தமது பகுதிக்கான நிர்வாகச் செயற்பாடுகளுக்குப் பொறுப்பான பூனகரி பிரதேச செயலாளரிடமும், கிளிநொச்சி அரசாங்க அதிபரிடமும் சொந்த மண்ணில் தங்களை மீள்குடியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்தார்கள். இரணைதீவு கடற்படையின் பொறுப்பில் இருப்பதனால், அந்த அதிகாரிகளினால் இந்த மக்களின் மீள்குடியேற்ற கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை.
இதனால், மாவட்ட மட்டத்திலான அதிகாரிகளைக் கடந்து மீள்குடியேற்ற அமைச்சர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் என்று அமைச்சு மட்டத்தில் தமது கோரிக்கையை மக்கள் முன்வைத்தார்கள். கடிதங்கள் அனுப்பப்பட்டன. மகஜர்கள் கையளிக்கப்பட்டன. வேண்டுகோள்கள் பல்வேறு வழிகளிலும் முன்வைக்கப்பட்டன. பலன் கிடைக்கவில்லை. இதனால் மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இரணைமாதாநகரில் தொடங்கிய ஆர்ப்பாட்டம் பூனகரி பிரதேச செயலகம், கிளிநொச்சி அரச செயலகம் என்று விரிவடைந்து கொழும்பையும் எட்டிப்பார்த்தது. மீள்குடியேற்ற நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் வழங்கப்பட்ட உறுதிமொழியும் நிறைவேறவில்லை. ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட மீள்குடியேற்ற கோரிக்கைக்கும் உரிய பலன் கிடைக்கவில்லை.
இதனால் இரணைதீவு மக்களின் மீள்குடியேற்ற கோரிக்கைக்கான போராட்டம் மண் மீட்புப் போராட்டமாக விரிவடைந்து தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது, இந்த மக்களின் சுயஎழுச்சிப் போராட்டத்திற்கு அருட்தந்தையர்களும், ஆலயப் பங்கு நிர்வாகமும், வேறு சில பொது அமைப்புக்களும் துணை புரிந்தனவே தவிர, அரசியல் ரீதியான ஆதரவு அவர்களுக்குக் கிட்டவில்லை. அவர்களுடைய மீள்குடியேற்றக் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் அந்த மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகளினாலும், அரசியல் கட்சிகளினாலும் அரசுக்கு, அழுத்தங்கள் உரிய முறையில் கொடுக்கப்படவில்லை என்று அந்த மக்கள் கவலையோடு சுட்டிக்காட்டுகின்றார்கள்.
இருந்த போதிலும் ஒரு வருடத்தை எட்டியுள்ள தமது போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதற்காக தமது போராட்டத்தின் 359 ஆவது நாளாகிய ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி சுமார் 50 படகுகளில் ஏறிய அந்த மக்கள், வெள்ளைக் கொடிகளை ஏந்திய வண்ணம், இரணைதீவில் சென்று இறங்கினார்கள். அவர்களுடன் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள், பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், ஊடகவியலாளர்கள் என பலதரப்பட்டவர்களும் சென்றிருந்தார்கள்.
முன் அனுமதியின்றி, அத்துமீறிச் செல்லும் தங்களை அங்குள்ள கடற்படையினர் கரை இறங்க அனுமதிப்பார்களா என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்தது. கரை இறங்கினாலும், அங்கு தங்கி இருக்க விடாமல் திருப்பி அனுப்பி விடுவார்கள் என்ற அச்சமும் இருந்தது. ஆயினும், கடற்படையினர் கரை இறங்கிய மக்களைத் தடுத்து நிறுத்தவோ அல்லது திருப்பி அனுப்பவோ முயற்சிக்கவில்லை.
சுமுகமான முறையில் நடந்து கொண்ட படையினர், அந்த மக்களுடைய வருகையின் நோக்கம் என்ன என வினவினார்கள்.
இரணைதீவு தங்களுக்குச் சொந்தமானது. தாங்கள் பூர்வீகமாக அங்கு வாழ்ந்தவர்கள். நீண்ட காலமாக இடம்பெயர்ந்துள்ள தங்களை மீள்குடியேற்ற அனுமதிக்காத காரணத்தினால் தாங்களே மீள்குடியேறுவதற்காக வந்திருப்பதாக அந்த மக்கள் கடற்படையினரிடம் தெரிவித்தார்கள். இருப்பினும், மீள்குடியேறுவதற்கு மேல் அதிகாரிகளின் அனுமதி அவசியம் என கூறிய படை அதிகாரிகள், அது குறித்து தமது மேலிடத்திற்கு அறிவிப்பதாகவும் குறிப்பிட்டார்கள். அதேநேரம், அங்கு தங்குவதற்கு அவர்களுக்கு உதவிகள் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இருப்பினும் அங்குள்ள செபமாலைமாதா தேவாலயத்தைப் புனரமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டு புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய கடற்படை அதிகாரிகள், புனரமைப்புப் பணிகளுக்கு அந்த மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
தாங்கள் பல வருடங்களின் பின்னர் தமது சொந்தத் தீவுக்குத் திரும்பியிருப்பதாகவும், தாங்கள் தமது ஆலயத்தில் தங்கி இருக்கப் போவதாகவும் தெரிவித்த மக்கள், தாங்களே தமது ஆலயத்தைப் புனரமைத்துக் கொள்ள முடியும் எனக் கூறி தங்களை அங்கு தொழில் செய்வதற்கும், மீள்குடியேறுவதற்கும் அனுமதித்தால் போதும் என்றும் கூறினர். இருப்பினும் காணிகளில் மீள்குடியேறுவதற்கு உயரதிகாரிகளின் அனுமதி அவசியம் என்று கூறிய படை அதிகாரிகள் அந்த இடத்தைவிட்டுச் சென்றனர்.
அலங்கோலமாகக் கிடந்த ஆலயம் செய்யப்பட்டதையடுத்து. பங்குத் தந்தையும், ஏனைய அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் கலந்து கொண்ட திருப்பலிப் பூசையில் உணர்வுபூர்வமாக அந்த மக்கள் பங்கேற்றிருந்தனர்.
எந்தவிதமான தடைகளும் பிரச்சினைகளுமின்றி தமது தீவுக்குள் காலடி எடுத்து வைப்பதற்கு வழிசெய்த இறைவனை வாய்விட்டு இறைஞ்சிய அந்த மக்களின் அழு குரல்கள் ஆலய மண்டபத்தை நிறைத்து சுவார்களில் எதிரொலித்து அருகில் உள்ள கடல் வெளியில் கலந்தன. அந்த நேரம் ஆலயத்தில் குழுமியிருந்த அனைவரும் உள்ளம் கசிந்து உணர்வு மயமாகி மெய்சிலிர்த்திருந்தனர்.
அதன் பின்னர் பலரும் தமது காணிகளையும் வீடுகளின் நிலைகைளையும் பார்ப்பதற்காகச் சென்றபோதிலும் குறிப்பிட்ட சில இடங்களுக்குள் பிரவேசிப்பதற்குக் கடற்படையினர் அனுமதிக்கவில்லை. ஆயினும் அடுத்தடுத்த தினங்களில் மக்கள் தமது காடுகள் அடர்ந்திருந்த தமது காணிகளையும் அழிந்து பாழடைந்து கிடந்த தமது வீடுகள் பாடசாலை, வைத்தியசாலை, அருட்சகோதரிகளின் விடுதி, மீனவர் கூட்டுறவுச் சங்கக் கட்டிடம் போன்றவற்றையும் விளையாட்டு மைதானம், அங்குள்ள தென்னந்தோட்டத்தின் ஒரு பகுதி என பலவற்றையும் எவ்விதத் தடையுமின்றி பார்வையிடக் கூடியதாக இருந்தது.
முதல் நாள் இரவு, பதட்டமான மன நிலையில் ஒருவித அச்சம் நிலவிய போதிலும், இறைவனின் நிழலில் இருக்கின்றோம் என்ற ஆறுதல் அந்த மக்களை அரவணைத்திருந்தது. மறுநாள் அதிகாலையிலேயே ஆண்கள் தொழிலுக்காகக் கடலில் சென்றனர். பெண்கள் கரையில் மட்டி பொறுக்குவதில் ஈடுபட்டிருந்தனர். இரண்டாம் நாள் அந்த மக்கள் மனதில் திருப்தியும், மகிழ்ச்சியும் குடிகொண்டிருந்தன. இருப்பினும் தங்களுடைய காணிகளில் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்படும் வரையில் அங்கிருந்து வெளியேறப் போவதில்லை என்ற திடமான மன உறுதியோடு காரியங்களில் ஈடுபட்டிருந்தனர். தமது இந்த முடிவு குறித்து கடற்படை அதிகாரிகளுக்கும் அவர்கள் தெளிவாக எடுத்துக் கூறியிருந்தனர்.
அதேவேளை, தமது சொந்தத் தீவுக்குத் திரும்பியுள்ள தங்களை வந்து பார்வையிட வேண்டும். தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அந்த மக்கள் பூனகரி பிரதேச செயலாளருக்கும் கிளிநொச்சி அரசாங்க அதிபருக்கும் அனுப்பி வைத்து, அதற்கான பதில் நடவடிக்கையையும் அவர்களிடம் இருந்து எதிர்பார்த்திருப்பதாக அவர்களது நிலைமையைப் பார்வையிடுவதற்காக இரணைதீவுக்குச் சென்றிருந்த மனித உரிமைகள் இல்லத்தின் பணிப்பாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமாகிய கே.எஸ்.ரட்னவேலிடம் இரணைதீவு மக்கள் தெரிவித்தனர்.
ஆனால் அவர்களுடைய எதிர்பார்;ப்பு நிறைவேறவில்லை. எந்த அதிகாரியும் அவர்களைச் சந்திப்பதற்கு முன்வரவில்லை என்று ஊர் முக்கியஸ்தராகிய அமிர்தநாதன் அந்தோனி தெரிவித்தார்.
இரணைதீவுக்குப் பேரணியாக அந்த ஊர் மக்கள் சென்றிருந்த இரண்டாவது நாள் சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல் அவருடைய உதவியாளர் டொமினிக் ஆகியோருடன் நானும் இணைந்து ஒரு குழுவாக நாங்கள் அந்தத் தீவுப் பகுதிக்கு விஜயம் செய்திருந்தோம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More