உலகம் பல்சுவை பிரதான செய்திகள்

தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட சக்தி வாய்ந்த மருந்துப் பொருட்கள் – குளோபல் தமிழ்ச் செய்திகள்…

உலகில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திய சில வகை மருந்துப் பொருட்கள் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டவை, இவ்வாறான 10 முக்கிய மருந்துப் பொருட்கள் பற்றிய தகவல்கள் கீழே விபரிக்கப்பட்டுள்ளன.

அற்புதமான மருந்து வகைகளை கண்டு பிடிப்பதற்காக விஞ்ஞானிகள் தங்களது வாழ்க்கையின் பெரும்பகுதியை அர்ப்பணிக்கின்றனர். எனினும் சில வகை அரிய சக்தி வாய்ந்த மருந்துப் பொருட்கள் தற்செயலான முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகில் பாரிய தாக்கத்தை உண்டுபண்ணிய சில வகை மருந்துப் பொருட்கள் இவ்வாறு தற்செயலாக கண்டு பிடிக்கப்பட்டவை.

1. பென்சிலின் ((Penicillin))

நவீன மருத்துவத்துறையில் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தும் மருந்துப் பொருட்களில் பென்சிலின் மருந்து முக்கிய இடம் வகிக்கின்றது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கண்டு பிடிக்கப்பட்ட இந்த பென்சிலின் மருந்து பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. 1928ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் திகதி வெள்ளிக்கிழமை காலை வேளையில் இந்த மருந்துப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. லண்டனின் சென் மேரிஸ் வைத்தியசாலையில் கடமையாற்றிய ஸ்கொட்லாந்து விஞ்ஞானி அலெக்ஸான்டர் பிளமிங்கினால் இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. நுண்ணுயிர்கள் வளர்க்கப்பட்ட தட்டொன்று தவறுதலாக கீழே விழுந்த போது இந்த மருந்து வகையை ஆய்வாளர் பிளமிங் கண்டு பிடித்தார். ஸ்டாபைலொக்காக்கி எனப்படும் ஒரு வகை கிருமியை அழிப்பதற்கு மற்றுமொரு வகை நுண்ணுயிர்களை பயன்படுத்த முடியும் என்பதனை அவர் கண்டு பிடித்தார். இந்த தற்செயலான கண்டு பிடிப்பு நூதன மருத்துவ உலகின் முக்கியமான மருந்துப் பொருட்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.

2. பெரியம்மை தடுப்பு மருந்து (Smallpox Vaccine)

தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்னர் உலகின் மிகக் கொடிய நோய்களில் ஒன்றாக பெரியமை அல்லது வைசூரி நோய் கருதப்படுகின்றது. 18ம் நூற்றாண்டில் பிரித்தானிய விஞ்ஞானி எட்வர்ட் ஜென்னரினால் பெரியம்மைக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்பட்டது. கவ்பொக்ஸ் எனப்படும் தோல் அலற்சி நோய் பரவியவர்களுக்கு அம்மை நோய் தொற்றாது என மாடுகளைப் பராமரிப்போர் பேசிக் கொண்டதனை தற்செயலாகக் கேட்டதன் மூலம், ஜென்னர் இந்த அரிய கண்டு பிடிப்பை நிகழ்த்தினார். எட்டு வயது சிறுவன் ஒருவனிடம் குறித்த மருந்து முதலில் பரீட்சிக்கப்பட்டது. இந்த மருந்து வெற்றியளித்தனைத் தொடர்ந்து பெரியம்மை நோய் இந்த உலகத்தை விட்டு முற்று முழுதாக இல்லாதொழிக்கப்பட்டது.

3. வயகரா Viagra

வயகரா மருந்து மிக அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இருதய நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காகவே இந்த மருந்தினை விஞ்ஞானிகள் முதலில் கண்டு பிடித்தனர். எனினும், வயகரா பாலியல் பலவீனம் தொடர்பான நோய்களுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுத்த முடியும் என பின்னர் கண்டறியப்பட்டது. இந்த மருந்து வகை இருதய நோய்க்கு சிகிச்சை அளிக்காத போதிலும் பக்க விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த பக்க விளைவுகள் தொடர்பில் ஆராயப்பட்ட போது ஆண்மையைத் தூண்டக் கூடிய வகையிலான பொருட்கள் இந்த மருந்து காணப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டது.

4. கவ்மாடின்  Hghupd

மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களைத் தடுப்பதற்காக வார்பாரின் மருந்து வகைப்பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்ட விதம் மிகவும் சுவாரஸ்மானது. குளோவர் எனும் புல் வகைகளை உட்கொண்ட கால்நடைகள் திடீரென உயிரிழந்ததனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வகைப் புல் கால்நடைகளின் குருதி உறைத்தடுத்து நிறுத்தியதாக ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். குறித்த வகை புல்லில் காணப்படும் இரசாயனப் பதார்த்தை எலிகளை ஒழிப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. பின்னர், நடத்தப்பட்ட விரிவான ஆய்வுகளின் போது இந்த இரசாயனப் பதார்த்தத்தின் சரியான மாத்திரைகள் குருதி உறைதல் நோயுடையவர்களுக்கு மருந்தாகப் பயன்படுத்த முடியும் என கண்டறியப்பட்டது. 1952ம் ஆண்டு முதல் முறையாக இந்த மருந்து மனிதர்களில் பயன்படுத்தப்பட்டது.

5. எல்.எஸ்.டி ((LSD))

உளவியல் நோய்களுக்காகப் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான மருந்துப் பொருட்களில் ஒன்றாக எல்.எஸ்.டி கருதப்படுகின்றது. இசை விற்பன்னர்களான பீட்டல் மற்றும் ஜிமி ஹென்ரிக்ஸ் ஆகியோரும் இந்த மருந்தினைப் பயன்படுத்தியுள்ளனர். 1943ம் ஆண்டில் சுவிட்சர்லாந்து இரசாயனவியலாளர் அல்பர்ட் ஹொப்மானினால் தற்செயலாக இந்த மருந்துப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருந்தகத் தேவைகளுக்கான ஆய்வுகள் நடத்திக் கொண்டிருந்த போது இந்த மருந்துப் பொருட்களை தவறுதலாக உட்கொள்ள நேர்ந்ததாகவும், இதன் மூலம் பரபரப்பான உணர்வை அடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. மறுநாள் 250 மில்லிகிராம் எடையுடைய எல்எஸ்டி மருந்துப் பொருளை ஹொப்மான் உட்கொண்டதாகவும், அதன் பின்னர் விசித்திரமான உணர்வுகள் தோன்றியதாகவும், உள ரீதியான தாக்கத்தை எதிர்நோக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எல்எஸ்டி மருந்துப் பொருள் உளவியல் தாக்கங்களை குணப்படுத்துவதற்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது.

6. மினோக்ஸிடில் ((Minoxidil)

மினோக்ஸிடில் உயர் குருதி அழுத்த நோய்க்கான மாத்திரையாகப் பயன்படுத்தப்பட்டது. எனினும், இந்த மருந்துப் பொருளினால் பாரியளவு பக்க விளைவுகள் ஏற்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டது. லொனிடின் என்ற வியாபாரக் குறியுடன் இந்த மருந்து சந்தையில் விற்பனை செய்யப்பட்டது. இந்த மருந்துப் பொருளின் பிரதான பக்க விளைவுகளாக மயிர் உதிர்தலைத் தடுத்தல், முடி வளர்தல் ஆகியன ஏற்படுவதாக கண்டறியப்பட்டது. இதன் மூலம் வழுக்கையினால் பாதிக்கப்பட்ட பலருக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. தலை முடி உதிர்தலைத் தடுப்பதுடன் முடியை கருமையாக்குவதற்கும் இந்த மருந்துப் பொருள் பயன்படுத்தப்படுகின்றது. எனினும், இந்த மருந்துப் பொருட்கள் நச்சுத்தன்மை வாய்ந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.

7. நிட்ரோஸ் ஒக்சைட் (Nitrous Oxide)

நிட்ரோஸ் ஒக்சைட் பிரித்தானிய இரசாயனவியலாளர் ஹம்ரி டேவியினால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வாயு மனிதர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்துகின்றது, இதனால் இதனை சிரிப்பு வாயு என அழைக்கின்றனர். நிட்ரோஸ் ஒக்சைட் வலிகளை குறைப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது. நிட்ரோஸ் ஒக்சைட் ஓரிட உணர்ச்சி நீக்கி மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

8. முஸ்டின் (Mustine)

முஸ்டின் இரண்டாம் உலகப் போரின் போது இரசாயன ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது. யுத்த களங்களில் இந்த இந்த வாயு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. எனினும், தற்போது இந்த இரசாயனம் புற்று நோய் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றது. முஸ்டின் வெண்குறுதிக் கலன்களை கட்டுப்படுத்த உதவுகின்றது. லுக்கேமியா போன்ற நோய்களைக் கட்டுப்படுத்த இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது. இத்தாலியில் பாரி நகரில் பாரிய இரசாயன வாயுத் தாக்கத்தில் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களின் உடலில் வெண்குறுதி சிறுதுணிக்கைகளின் அளவு சடுதியாக குறைந்திருந்தமையை ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர். இதன் மூலமே புற்று நோய்க்கான மருந்து கண்டு பிடிக்கப்பட்டது.

9. போடொக்ஸ் ((Botox))

போடொக்கிஸின் மருத்துவப் பெயர் பொட்டலினம் என்பதாகும். சரியான முறையில் தயாரிக்கப்படாத இறைச்சி உணவு உற்பத்திகளிலிருந்து இந்த மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சொசேஜஸ் தயாரிப்பின் போது ஏற்பட்ட தவறுகளினால் உணவுப் பொருளில் விசம் கலந்துவிட்டது. இந்த விசம் கலந்த உணவுப் பொருட்களை உட்கொண்ட சிலர் உயிரிழக்க நேரிட்டது. குறைந்தளவான போடெக்ஸ் மருந்தைப் பயன்படுத்துவதன் மூலம் மருத்துவ ரீதியான நன்மைகளை அடைய முடியும் என பின்னர் கண்டறியப்பட்டது. குறிப்பாக கண் தசைகளை அழகுபடுத்த மற்றும் அக்குல்களில் ஏற்படும் வியர்வையைக் கட்டுப்படுத்த இந்த மருந்துப் பொருள் பயன்படுத்தப்படுகின்றது. தற்போது இந்தப் மருந்துப் பொருளைக் கொண்டு மேனியை எழில்படுத்தும் மருந்து வகைகள் தயாரிக்கப்படுகின்றன. கனேடிய சத்திரகிச்சை நிபுணர்களான அலிஸ்டர் மற்றும் ஜேன் கருத்தார்ஸ் ஆகியோர் கண் தசையில் ஏற்படும் சுருக்கங்களை நீக்குவதற்கு இந்த மருந்தைப் பயன்படுத்த முடியும் என கண்டறிந்தனர்.

10. இன்சுலீன் (Insulin)

உடலின் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துவதற்கு இன்சுலீன் மருந்துப் பயன்படுத்தப்படுகின்றது. நீரிழிவு நோய் ஏற்பட்ட மனிதர்கள் மற்றும் விலங்குகளினால் உடலின் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. நாய் ஒன்றின் சமிபாட்டுத் தொகுதி தொடர்பில் இரண்டு ஜெர்மனிய ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின் போது தவறுதலாக இன்சுலினின் தொழிற்பாடு கண்டு பிடிக்கப்பட்டது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.