Home இலங்கை பார்த்தன் சாய்ந்த சரித்திரமும், மட்டக்களப்பு சிறை உடைப்பும்…..

பார்த்தன் சாய்ந்த சரித்திரமும், மட்டக்களப்பு சிறை உடைப்பும்…..

by admin


George Subramaniam என்பவரது முகநூலில் வரும் ஜெயச்சந்திரன் என்ற பார்த்தனின் இன விடுதலைக்கான பங்களிப்பு மற்றும், மட்டக்களப்பு சிறை உடைப்பு குறித்த வரலற்று பதிவின் தொடர் இங்கு அப்படியே மீள் பதிவு செய்யப்படுகிறது. வரலாறுகள் பேணப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்தப் பதிவை மீளவும் பதிவு செய்கிறோம். இந்த வரலாற்றுப் பதிவின் தரவுகள், கருத்துக்களுக்கு அதன் பதிவாளரே பொறுப்பு… இது போன்ற வரலாற்றுப் பதிவுகளை சுய விபரங்களுடன் அனுப்பி வைத்தால் அவை பிரசுரிக்கப்பட வேண்டியவை என ஆசிரிய பீடம் கருதினால் குளோபல் தமிழ்ச் செய்திகளில் வெளியிடப்படும் என்பதனை அறியத் தருகிறோம்… இதேவேளை இவ்வாறான பதிவுகள் குறித்து மாற்று கருத்துகள் இருப்பின் பதிவுகளிற்கு கீள் உள்ள விமர்சனப் பகுதியில் பதிவிட முடியும். தவிரவும் மாற்று கருத்து பதிவுகள் உரிய முறையில் அனுப்பி வைக்கப்பட்டால், அந்தக் கருத்துக்கள்  தனிப்பட்ட தாக்குதல்களாக அமையாவிட்டால்  அவையும் பிரசுரிக்கப்படும் என்தனையும் தெரிவித்துக் கொள்கிறோம்…

ஆசிரியர்…

– சாய்ந்த சரித்திரம்-
=================================================================
திருகோணமலை தந்த தவப்புதல்வர்களாக உதித்து மண்ணுக்காக தங்கள் உயிர்களை அர்ப்பணித்தவர்களில் முதன்மையான முழுப்போரளி ” பார்த்தன்” என்றால் அது மிகையாகாது. உயர் கல்வியில் திறமைச்சித்தி பெற்று பல்கலைகழகத்திற்கு செல்லும் வாய்ப்பையும் தூக்கி எறிந்து , பெற்றோரின் கனவுகளையும் பொருட்படுத்தாது தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

தமிழீழப்போராட்டம் மக்கள் போராட்டமாக பரிணமிக்க வேண்டும் என்பதில் அயராத நம்பிக்கை வைத்திருந்த பார்த்தன் அதற்கான அவரது தெரிவான தலைமையையும் ஏற்றுக்கொண்டார். இவரின் மேல் ஈர்ப்பு பெற்ற பல இளைஞர்கள் இணைந்து கொண்டனர். திருகோணமலையில் வர்த்தகம்,மீன்பிடி நிமிர்த்தம் பல சிங்களவர்கள் நகர்புறத்தை சுற்றி வாழ்ந்து வந்தனர்.என்றாலும் பெரிய வர்த்தககர்கள், மீன்பிடிக்குத் தேவையான பெரிய வள்ளங்கள் ,வலைகளை கொண்ட சம்மாட்டிமார் தமிழர்களாகவே இருந்தனர்.அரச ஊழியர்கள், நீதித்துறை வல்லுனர்கள் பலர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களாகவே இருந்தனர். வெள்ளிகிழமைகளில் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு போக்குவரத்து பஸ் சேவை அதிகளவு இருக்கும். அனைத்து பஸ்களிலும் பயணிகள் நிரம்பித்தான் செல்லும்.  இவை சிங்களவர்களுக்கு எரிச்சலை ஊட்டும் நிகழ்வுகளாகவே இருந்தது. இடைக்கிட தங்கள் எதிர்பலைகளை வன்முறைகளாக காட்ட அவர்கள் தவரவில்லை இவர்களுக்கு ஆதரவாக போலிசார், இராணுவமும் இருந்த துணிவு  இந்த காலப்பகுதியில் தான் திருமலையில் இவர்களை எதிர்க்க பார்த்தன் தலைமையில் பல இளஞர்கள் அணிதிரண்டனர்.

பாதுகாப்புக்காக உள்ளூர் தயாரிப்பு வெடிகுண்டு, பெற்றோல்வெடி என பல பரீட்சித்து பார்க்கப்பட்டன. ஆனால் இவற்றுக்கெல்லாம் பார்த்தன் என்று அழைக்கப்பட்ட ஜெயச்சந்திரனின் செயற்பாடு இருந்ததை பலர் அறிந்திருக்கவில்லை. திருகோணமலை தமிழர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதில் தனது முழுகவனத்தையும் செலுத்தியிருந்த காலப்பகுதியில் தான் தமிழர்களின் தலையெழுத்தை மாற்றியமைத்த அந்த சம்பவம் நடந்தது. அது தான் 13 இராணுவத்தின் மீதான கண்ணிவெடித்தாக்குதல் திருகோணமலையில் வன்முறை தலைவிரித்தாடியது.பல வர்த்தககடைகள் தீக்கிரையாக்கப்பட்டன,திட்டமிட்ட படி பலர் வெட்டியும் குத்தியும் கொலை செய்யப்பட்டார்கள், யாழ்ப்பாணத்திற்கு சென்ற பஸ் வண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டது. திருகோணமலை பெரிய ஆஸ்பத்திரி நிரம்பி வழிந்தது.

பார்த்தனின் பாதுகாக்கும் முயற்சியின் தறுவாயிலேயே வன்முறை திடீரென பரவியதால் அதை எதிர் கொள்ளும் திறன் இருக்கவில்லை தமிழர்களின் பொருளாதாரம் சிதைக்கப்பட்டது. திட்டமிட்டபடி தமிழர்கள் அழித்தொழிப்பு நடந்தேறியது. நாடு முழுவதும் ஊடரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு சொத்துக்கள் சூறையாடப்ட்டது. இதையடுத்து பேரிடியாக விழுந்தது அடுத்த துயரச்சம்பவம்  வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை  அரசியல் கைதிகளாக இருந்த தமிழ் இளைஞர்கள் கோரமாக கொல்லப்பட்டார்கள்.3 நாட்களாக இது தொடர்ந்து  நடந்தது. வெகுந்தெழுந்த  பார்த்தன்  நிதானமானான்,  எதிரியின் மூர்க்கக்குணத்தை புரிந்து கொண்டான் .மக்கள் போராட்டத்திற்கு முன் எதிரியை எதிர்கொள்ளும் கட்டாயத்தை உணர்ந்தான், அவனிடம் இளைஞர்கள் பலர் இருந்தனர். அவர்களை ஆயுததாரிகளாக்கி பயற்சி அளிக்கும் திட்டத்தை விரைவு படுத்த வேண்டும்.  அதற்கு முன் தப்பியுள்ள எஞ்சிய கைதிகளை மீட்க வேண்டும்.
பார்த்தனின் மனதில் விரிந்தது அந்த திட்டம்.அதுதான் மட்டக்களப்பு சிறையுடைப்பு………….
(தொடரும்)

– சாய்ந்த சரித்திரம்- 2
============================-
இலங்கை வரலாற்றில் என்றுமே நடந்திராத சிறைச்சாலை படுகொலை தமிழ் மக்களின் தலைவிதியையே மாற்றி அமைக்கும் ஆரம்பம்! என்பதை அப்போது எவருமே அறிந்திருக்க நியாயமில்லை. தமிழ் இளைஞர்கள் பலர் உளவியல் பாதிப்பிற்கு உள்ளானார்கள், பிரிந்து வாழ வேண்டும் என்ற கோரிக்கையும், ஆயுதப்போராட்டத்தின் பரிணாமமும் மேலோங்கியது.  பார்த்தனின் திட்டமும் வெகுவாக தீட்டப்பட்டு செயற்பாட்டிலும் இறங்கினார்.

வெலிக்கடை சிறைச்சாலயில் மயிரிழையில் உயிர் தப்பிய பலர் மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்டதில்லிருந்தனர், இன்னுமொரு திட்டமிட்ட சதியால் தாங்கள் நிராயுதபாணிகளாக கொல்லப்படலாம் எனவும் அதை எப்படி எதிர் கொள்வது என நினைத்த நேரத்தில் தான் பார்த்தனின் செய்தி அவர்களுக்கு கிடைத்தது. தமிழ் அரசியல் கைதிகளில் எல்லா இயக்கத்தினரும் இருந்தனர் இதில் பெருந்தொகையானோர் PLOTE புளட் அமைப்பை சார்ந்தவர்கள். அதற்கு அடுத்ததாக EPRLF அமைப்பை சேர்ந்தவர்களிருந்தனர்,TELO அமைப்பை சேர்ந்த முன்னணி போரளிகள் கொல்லப்பட்டிருந்தனர். சிறையிலிருந்து தப்பிச் செல்வது தான் ஒரே வழி என கூட்டாக முடிவெடுத்து, வெளியே உள்ள தங்கள் இயக்கத்தினருக்கு தகவல் பரிமாறப்பட்டது. பார்த்தனின் திட்டத்திற்கு சாதகமான சமிக்கைகள் உள்ளேயும் வெளியேயும் வரத்தொடங்கியது.மாற்று இயக்க தோழர்களுடன் திட்டத்தை பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தை பார்த்தன் உணர்ந்திருந்தார் . EPRLF இயக்கத்தின் சிரேஷ்ட தோழர்கள் வரதராயப்பெருமாள்,டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுடன் தோழர் தங்க மகேந்திரனும் சிறையினுள்ளே இருந்தார். திருகோணமலையை சேர்ந்தவர்.

பார்த்தனுக்கு இவர் முதலே பரீட்சையமானவர் இவர் ஊடாக வின் சிரேஷ்ட தோழர் “குன்சி “என்பவரின் தொடர்பும் கிடைத்தது. இவரும் பல பெரிய பொறுப்புக்களை தனது சக தோழர்களை கொண்டு செயற்படுத்துவதாக உறுதியளித்தார். சிறையுடைப்பை உள்ளே உள்ளவர்கள் இணைந்து செய்வதாகவும், தப்பிவருபவர்களுக்கு வெளியே உள்ள தத்தம் இயக்க போராளிகள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதாக தீர்மானிக்கப்பட்டது.

சிறையினுள்ளே தப்புவதற்கு தேவைப்படும் ஆயுதங்களை அவர்களுக்கு கொடுப்பதற்கு சிறைசாலையில் வேலை செய்யும் காவளாளி ஒருவரின் உதவியும் கிடைத்தது.(பின்நாளில் இவர் PLOTE உடன் இணந்தார்- PLOபிரசாத்) இவரினூடாக கத்தி,கம்பி அறுக்கும் சிறிய வாள், .38 கைத்துப்பாக்கி ஒன்று, அசலாகவே வடிவமைக்கப்பட்டு கறுப்பு நிறம் பூசப்பட்ட எஸ்.எம்.ஜி, கொப்பி எடுக்கப்பட்ட எல்லா செல் பூட்டுகளுக்கான துறப்புகள்,போன்றவை கடத்தப்பட்டன. தப்பி வரும் உறுப்பினர்களை பாதுகாப்பாக கடல்மார்க்கமாக இந்தியா கொண்டு செல்ல பல இடங்களில் ஒழுங்கு செய்யப்பட்டன. இதற்கு பல நாட்களுக்கு முன்பே பார்த்தனால் திருகோணமலை தம்பலகாமத்தில் ஒதுக்குப்புறமான காட்டை அன்டிய பகுதியில் சில இளைஞர்களுடன் ஒரு சிறிய முகாமும் அமைக்கப்பட்டது. இந்த முகாமில் இருந்த எவருக்கும் சிறை மீட்கும் திட்டம் தெரிந்திருக்கவில்லை.

பயிற்சிக்கு வந்தவர்களாகவே நடத்தப்பட்டனர், அந்த முகாமில் ஆனைக்கோட்டை போலீஸ் நிலையத்தில் கைப்பற்றிய 1-பம்மிங் ரிப்பீட்டர், 1-.38 ரிவால்வர்,3- சொட் கன்,1-டபிள் பெரல் சொட் கன் இருந்தன, சிறையிலிருந்து தப்புவர்களை பாதுகாக்கும் எல்லா ஏற்பாடுகளும் பார்த்தனால் கச்சிதமாக செய்யப்பட்டிருந்தது, இதைவிட மட்டக்களப்பிலிருந்து வாகறையூடாக கன்னியாவையும் தாண்டி தம்பலகாமம் முகாமுக்கும் வரும் காட்டு வழியையும் பார்த்தன் பல தடவை கால்நடையாக நடந்து அதற்கு ஏற்படும் நேரத்தை கூட பரீட்சித்து பார்த்துக்கொண்டார்.

மட்டக்களப்பு சிறைச்சாலை கட்டிட விபரமும் எந்த வாசலால் தப்பிவரும் வாய்ப்பு அதிகமுள்ளது என்பன காவளாளி பிரசாத்தின்(இவரது நிஐப்பெயர் தெரியாது) உதவியுடன் தீர்மானிக்கப்பட்டது. இதை விட வாகன ஏற்பாடுகளும் சரிபார்க்கப்பட்டன (இறுதியில் காந்திய வேன் பாவிக்கப்பட்டதாக தகவல்) சிறைசாலை அமைந்திருக்கும் வீதியில் போலீஸ் ரோந்து எவ்வளவு குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு தடவை தாண்டுவது என்பன துல்லியமாக கணிக்கப்பட்டது.இதை சமிக்கை மூலம் உள்ளே இருப்பவர்களுக்கு கேட்க சிறைசாலைக்கு அண்மையில் உள்ள ஆலயத்தின் மணியை அடித்து ஓசை எழுப்பச்செய்வது என்ற திட்டமும் இருந்தது.
பார்த்தனின் சிறைமீட்கும் திட்டம் பலரது ஒத்துழைப்புடன் மிக கட்சிதமாக நடந்தேறி அந்த நாளும் வந்தது……….
(தொடரும்)

சாய்ந்த சரித்திரம் பகுதி-3
======================
தென்கிழக்காசியா வரலாற்றிலேயே பெருந்தொகையான அரசியல் கைதிகளை சிறைமீட்டது தமிழர்களின் விடுதலைப்போராட்டதில் நிகழ்ந்தது ஒரு சரித்திரம்.
இதற்கு மூலகர்த்தாவாக செயற்ப்பட்ட பார்த்தனும் ஓர் சரித்திரம் தான். மட்டக்களப்பு சிறையுடைப்பு சரியான காலகட்டத்தில்,சரியான நேரத்தில் நடைபெற்று அதிலிருந்து வெளியேறிய முதன்மை போராளிகளால் ஆயுதப்போராட்டம் அடுத்த கட்டத்தை தாண்டியது என்றால் மிகையாகாது. அன்றைய காலத்தில் இலங்கை அரசின் பாதுகாப்பு படையில் இருந்த மிகப்பெரிய பலவீனமும் தமிழர்கள் தரப்பை குறைவாக மதிப்பிட்டதும் இச்சிறையுடைப்பு வெற்றிவாகை சூடியதிற்கு காரணமாக இருந்ததற்கு வாய்ப்புள்ளது. என்றாலும் பார்த்தனும், தோளோடு தோள் கொடுத்த மட்டுநகர் மைந்தர்களின் அபாரத்துணிவும் காலத்தால் அழியாத காவியங்களில் என்றும் நிலைத்திருக்கும்.

சிறையிலிருந்து தப்பியவர்கள் வெளியிலிருந்தவர்களின் ஏற்பாட்டுக்கு அமைய சிறிய படகுகள் மூலம் வாவியை கடந்து பனிச்சங்கேணியில் தரையிரக்கப்பட்டனர். அங்கிருந்து இரு பிரிவுகளாக EPRLF, PLOTE இரு வேறு திசைகளில் அடர்ந்த காடுகளுக்குள் பரவினர். பார்த்தனின் வழிகாட்டலில் வாகறையை ஊடறுத்து தம்பலகாமம், பாலம்போட்டாறை வந்தடைந்தனர். முன் கூட்டியே பார்த்தனால் வழிநடத்தப்பட்ட முகாமில் வைத்து உணவுகள் பரிமாறப்பட்டு, சாதாரண திருமலை வாசிகள் போன்ற உடைகள் மாற்றப்பட்டு திருகோணமலை நகரினுள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டனர்.

சிறைமீண்டவர்கள் தாண்டி வந்த இடங்கள் அவர்கள் விட்டுச்சென்ற தடையங்கள்,தகவல்களையும் மோப்பம் பிடித்து போலீசாரும்,பாதுகாப்பு படையும் ஒருநாள் இடைவெளியில் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆனால் பார்த்தனின் மதிநுட்பத்தால் போராளிகளை மக்களோடு மக்களாக கலந்து சாதரண வீடுகளில் தங்கவைத்ததை எவரும் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து அடுத்தநாட்களிலேயே திருகோணமலையின் கடற்கறை பிரதேசங்களான (10 ஆம் குறிச்சி, படுக்கை) போன்ற இடங்களிலிருந்து பகுதி பகுதிகளாக சிறிய இயந்திரம் பூட்டிய படகுகள் மூலம் முல்லைத்தீவு (கள்ளப்பாடு) அடைந்து அங்கிருந்தும் கடல்மார்க்கமாக தலைமன்னார் வழியாக இந்தியாவை (இராமேஸ்வரம்) அடைந்தனர்.

இங்கு ஓர் சுவார்சியமான சம்பவம் காடுகளைக் கடந்து கடினபாதைகளினூடாக வந்து கொண்டிருக்க யாருமே நினைத்துக்கூட பாராத பதுளை பெருந்தெரு வழியாக உல்லாசப்பிரயாணிகள் போன்று மினிபஸ்ஸில் தம்பாபிள்ளை மகேஸ்வரனும் அவருடன் சிலரும் ஹட்டன் ஊடாக சென்று மறைந்தனர். இது நிற்க கொஞ்சம் பின்நோக்கி நகர்ந்து சிறையுடைப்பை பார்ப்போம்! மட்டக்களப்பு சிறைக்கு வெளியே பாதுகாப்பு கொடுப்பதற்காக பல (சொட் கன்) துப்பாக்கிகள் தனி ஆட்களிடமிருந்து பெறப்பட்டது. இதற்கான திட்டமிட்ட செயற்பாடின் பெரும் பங்கு மட்டக்களப்பின் மைந்தன் வாசுதேவாவையே சாரும். தமிழீழ விடுதலை கழகம் சிரேஷ்ட உறுப்பினராக இருந்த வாசுதேவா பின்பு PLOT அரசியல் அமைப்பின் பொறுப்பாளராக இருந்தார்.

இளம்பிராயத்திலேயே தமிழீழ விடுதலை போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்த மனிதர். இவரின் இளைய சகோதரர் பரமதேவா உம் இச்சிறையுடைப்பில் தப்பி மட்டக்களப்பு மண்ணில் மாவீரரான முதற் போராளி. பரமதேவா பார்த்தனின் பால் பெரும் மதிப்பு வைத்திருந்தாகவும் பார்த்தன் இறந்த போது அவருக்கான வீரவணக்கம் புலிகளின் பயிற்சி முகாம்களில் கடைப்பிடிக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.  மேலும் பார்த்தன் இறந்த களுவாஞ்சிக்குடி போலீஸ் நிலையத்தை தாக்கியழிக்கும் நடவடிக்கையில் பரமதேவா தன்னுயிரை மாய்த்தார். இது பார்த்தனுக்கான அவரது அர்ப்பணிப்பு என்ற கணிப்பும் உண்டு அதிகாலை மட்டக்களப்பு நகரம் ஆழ்ந்த தூக்கத்தில் நிசப்தமாக இருந்த நேரம்! தெருநாயொன்று நடக்கப்போகும் விபரீரத்தை முன் கூட்டியே அனுமானித்ததோ என்னவோ ஊளையிட்டபடி தெருவை கடந்து சென்றது. சிறைசாலைக்கு குறுகிய தூரத்தில் அமைந்துள்ள ஆனைப்பந்தி பிள்ளையார் கோவிலின் சுற்றுபுரங்களில் சில உருவங்கள் மறைந்தும் மறையாமல் எதையோ எதிர்பார்த்து பதுங்கிக்கொண்டன, வெறிச்சோடிப்போன வீதியில் இருளை கிழித்துக்கொண்டு இரண்டு பிரகாசமான வெளிச்சத்தை பாய்ச்சிக்கொண்டு ஒரு போலீஸ் வாகனம் மெதுவாக கோயிலைக்கடக்க பதுங்கி இருந்த உருவங்களில் ஒன்று சொல்லிவைத்தால் போல மணியை இழுத்தடிக்கவும் சரியாக இருந்தது.

உள்ளேயும் திட்டமிட்டபடி அரசியல் கைதிகள் முன்கூட்டியே வெட்டி இலேசாக ஒட்டிய கம்பிகளை கழற்றி முதல் செல்(சிறை அறை)ஐ உடைத்து வெளியே வந்தனர் அதில் மாணிக்கம்தாசன்,பரந்தன் ராஜன்,பாபஜி,வாமதேவன் போன்றோர் தாக்குதலை ஆரம்பித்து வைத்தனர். காவலாளிகளை மடக்கி சாவிகளை பறித்து ஒவ்வோரு செல்களும் திறக்கப்பட்டன. சிறை அறைகளுக்குள் இருந்த வெளியே வந்த ஒவ்வோருத்தரும் இணைந்தும் பலரை விடுவித்தனர். ஏறக்குறைய எல்லா செல்களும் திறக்கப்பட்டு பெரும்படைபோல் கைதிகள் அனைவரும் வாசலுக்கு வர சமீக்கைகள் கொடுத்ததன் பெயரில் வாகனங்கள் வந்து சேர்ந்தது. போலீஸ் ஜீப் அடுத்தமுறை அந்த வீதியால் ரோந்து வரும் முன்பே கைதிகள் தப்பிசெல்ல முயன்றனர்  வெளியே துப்பாக்கி தாங்கிய பலர் காவல் காக்க, தென்கிழக்காசியாவையே! உலுக்கிய சிறைமீட்பு! மட்டக்களப்பு மண்ணின் மைந்தர்களின் பெரும்பங்குடன், இயக்க வேறுபாடின்றி, பலரின் உதவியுடன் நடந்தேறியது. இதனை நேர்த்தியாக எல்லோரினதும் தகவல்களை பரிமாறி இன்றும் எல்லோராலும் மதிக்கப்படும் போராளியாக பார்த்தன் சரித்திரம் படைத்தான்.
இந்த சரித்திரம் எப்படி? சாய்ந்தது?

நன்றி – George Subramaniam
மிகுதி தொடரும்……………

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More