Home இலங்கை தொடர்ந்து மறுக்கப்படும் நீதி – பி.மாணிக்கவாசகம்

தொடர்ந்து மறுக்கப்படும் நீதி – பி.மாணிக்கவாசகம்

by admin

யுத்த மோதல்கள் இடம்பெற்ற காலத்தில் மிக மோசமான அடக்குமுறைகளுக்கும் நெருக்குதல்களுக்கும் ஆளாகியிருந்த பத்திரிகை சுதந்திரம் இப்போது முன்னேற்றம் அடைந்திருக்கின்றது. இதனை எவரும் மறுக்க முடியாது. அதேவேளை, யுத்தத்தின் பின்னர் நிலைமாறு கால நீதி பற்றி பேசப்படுகின்ற சூழலில் இது போதிய அளவில் முன்னேற்றம் அடையவில்லை என்பதையும் மறுக்க முடியாது.
இலங்கையின் பத்திரிகை சுதந்திரம் முன்னைய ஆண்டிலும் பார்க்க சிறிது முன்னேறியிருக்கின்றது என்பதை ஆர்.எஸ்.எவ் என்ற அமைப்பு, அகில உலகளாவிய தனது ஊடக சுதந்திர நிலைமை குறித்த வருடாந்த மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது. ஊடக சுதந்திரத் தர வரிசையில் 141 ஆவது இடத்தில் இருந்த இலங்கை 131 ஆவது இடத்திற்கு முன்னேறியிருப்பதாக அந்த அறிக்கை மதிப்பிட்டிருக்கின்றது.
பத்திரிகை சுதந்திரம் உலகின் 180 நாடுகளில் மதிப்பீடு செய்யப்பட்டு வருடந்தோறும் தரவரிசை அறிக்கை வெளியிடப்படுகின்றது. ஆங்கிலம் உள்ளிட்ட 20 மொழிகளில் தயாரிக்கப்படுகின்ற 87 கேள்விகளை உள்ளடக்கிய ஒரு வினாக் கொத்தின் ஊடாக தர வரிசை மதிப்பீட்டுக்கான தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.
இந்தத் தரவுகள், பன்மைத் தன்மை, ஊடக சுதந்திரம், சூழலும் சுய செய்தித் தணிக்கையும், ஊடகச் செயற்பாடுகள் தொடர்பிலான சட்ட நிலைமைகள், வெளிப்படைத் தன்மை, செய்தித் தயாரிப்புக்கான கட்டமைப்பு, ஊடகத்தின் மீதான துஸ்பிரயோகம், வன்முறை பற்றிய தகவல்கள் ஆகிய 7 விடயங்களில் மதி;ப்பீடு செய்து, புள்ளிகள் இட்டு தர வரிசை நிர்ணயிக்கப்படுகின்றது.
இவ்வாறு பெறப்படுகின்ற புள்ளிகளின் அடிப்படையில் வெள்ளை நிறத்தில் குறிப்பிடப்படுகின்ற முதல் 15 புள்ளிகள், நல்ல நிலையில் உள்ளது, மஞ்சள் நிறத்தில் குறிப்பிடப்படுகின்ற 15.01 இலிருந்து 25 வரையில் பரவாயில்லை, சிவந்த மஞ்சள் (ஆரஞ்சு நிறம்) நிறத்தில் குறிப்பிடப்படுகின்ற 25.01 இலிருந்து 35 வரையிலான புள்ளிகள் பிரச்சினைக்கு உரியது, சிவப்பு நிறத்தில் குறிப்பிடப்படுகின்ற 35.01 இலிருந்து 55 வரையிலான புள்ளிகள் மோசமானது, கறுப்ப நிறத்தில் குறிப்பிடப்படுகின்ற 55.01 இலிருந்து 100 வரையிலான புள்ளிகள் மிகவும் மோசமானது என்றவாறாக நாடுகளின் ஊடக சுதந்திர நிலைமை மதிப்பீடு செய்யப்படுவதாக ஆர்.எஸ்எவ் நிறுவனம் கூறுகின்றது.
இந்த வகையில், ஜனநாயகத்தை அச்சுறுத்துகின்ற ஊடகங்கள் மீதான வெறுப்புணர்வு என்ற தலைப்பில் ஆர்.எஸ்.எவ் அமைப்பு 180 நாடுகளில் ஊடக சுதந்திரத்தின் நிலைமை தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கின்றது. இந்தத் தர வரிசை தேசப்படத்தில் இலங்கையை உள்ளடக்கிய ஆசிய பிராந்தியம் மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஊடகவியலாளர்கள் எவரும் 2017 ஆம் ஆண்டு எவரும் கொலை செய்யப்படாத போதிலும், ஊடக நிறுவனங்களும், ஊடகவியலாளர்களும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்களும் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றார்கள். ஊடகவியலாளர்கள் அல்லாதவர்கள் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்ட நிலையில் அச்சுறுத்தலுக்கும் பாதிப்புக்கும் ஆளாக்கப்பட்டிருக்கின்றனர் என்பது ஊடக சுதந்திரத்தின் அம்சமாக உள்ளடக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
முன்னைய ஆட்சியில் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் இறுக்கமான வரைமுறைகள், கட்டுப்பாடுகளைக் கொண்ட செயற்பாடுகளின் மூலம் மோசமான அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டிருந்தார்கள். குறிப்பாக யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களில் இடம்யெர்ந்த மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டு, இயல்பு நிலைமையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. ஆயினும் அந்தப் பிரதேசங்கள் இராணுவ கட்டுப்பாட்டிலும், முழுமையான இராணுவ புலனாய்வு கண்காணிப்பிலும் இருந்தன. அரச நிர்வாகக் கட்டமைப்பின் செயற்பாடுகளிலும் இராணுவ அதிகாரம் மேலாதிக்கம் கொண்டிருந்தது.
இந்தப் பிரதேசங்களுக்கு பாதுகப்பு அமைச்சின் முன் அனுமதி பெறாமல் ஊடகவியலாளர்கள் செல்ல முடியாது. அவ்வாறு அனுமதி பெற்றுச் சென்றாலும்கூட, அந்தந்தப் பிரதேசங்களுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரிகளின் முன் அனுமதி பெற்ற பின்னரே செய்தி சேகரிக்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டிருந்தது. புகைப்படங்கள்  எடுக்கவும், வீடியோ காட்சிகளைப் பதிவு செய்யவும்கூட அந்த இராணுவ அதிகாரிகளின் முன் அனுமதி பெற வேண்டிய நிலைமை நிலவியது.
அவ்வாறு அனுமதி பெற்றிருந்தாலும், நிழலைப்போல பின்தொடர்கின்ற இராணுவ புலனாய்வாளர்களின் இறுக்கமான கண்காணிப்பின் கீழேயே ஊடகவியலாளர்கள் செயற்பட நேர்ந்திருந்தது. சில வேளைகளில் பொதுமக்களிடம் செய்யப்படுகின்ற நேர்காணல்கள், அவர்களுடன் நடத்தப்படுகின்ற கலந்துரையாடல்களும் பின்தொடர்கின்ற இராணுவ புலனாய்வாளர்களின் கைத்தொலைபேசியில் வீடியோ காட்சிகளாகப் பதிவு செய்வதும் உண்டு. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னர், இந்த நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆயினும் சில பல இடங்களில் பிரதேச சிவில் உடையில் காணப்படுகின்ற புலனாய்வாளர்களின் அவதானிப்பும். நிழல் போன்ற கண்காணிப்பும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன.
நிலைமைகள்
யுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்களாகப் போகின்ற போதிலும், இடம் பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றம் இன்னும் இழுபறி நிலையிலேயே உள்ளது. இடம்பெயர்ந்துள்ள மக்களின் காணிகளில் இராணுவம் நிலைகொண்டிருப்பதும், அந்த இடங்களை இராணுவம் தனது நிரந்தரமான இருப்பிடமாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதுமே இதற்கு முக்கிய காரணமாகும். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த அரசாங்கமும்சரி, ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள அரசாங்கமும்சரி, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தில் அதிக ஈடுபாடும் அதிக கவனத்தையும் செலுத்துவதற்குப் பதிலாக, யுத்தமோதல்கள் இடம்பெற்ற தமிழ்ப்பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை வலிந்து மேற்கொள்வதிலேயே ஆர்வமாகச் செயற்பட்டிருக்கின்றன.
இத்தகைய சிங்களக் குடியேற்றமும், கரையோர தமிழ் மீனவர்களின் வாழ்விடங்களையம் வாழ்வாதாரப் பகுதிகளையும் சிங்களக் குடியேற்றத்தின் மூலம் ஆக்கிரமிக்கின்ற செயற்பாடுகளும் முல்லைத்தீவில் அரசாங்கத்தின் அனுசரணையோடு பகிரங்கமாக இடம்பெற்று வருகின்றன. இந்த ஆக்கிரமிப்பச் செயற்பாடு குறித்து மக்கள் பிரதிநிதிகள் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்த போதிலும், அது குறித்து அரசாங்கம் அலட்டிக்கொள்ளாத போக்கே காணப்படுகின்றது.
இத்தகைய ஒரு பின்னணியில் முல்லைத்தீவு பிரதேசத்தின் ஆக்கிரமிப்புக் குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து தகவல் அறிந்து செய்தி சேகரிக்கச் சென்ற யாழ் ஊடகவியலாளர்கள் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள். அவர்கள் பதிவு செய்திருந்த வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் ஊடகவியலாளர்களைப் பின்தொடர்ந்து கணகாணித்த படையினரால் பலவந்தமாக அழிக்கப்பட்டிருக்கின்றன. இது அப்பட்டமான ஊடக உரிமை மீறலாகப் பதிவாகியிருக்கின்றது.
மீள்குடியேற்றப் பிரதேசங்களில் தேசிய பாதுகாப்புக்காக பெரும் எண்ணிக்கையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள் வாழ்வெழுச்சிக்கான உதவிகளிலும் அபிவிருத்திச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருப்பதாகவே கூறப்படுகின்றது. அத்துடன் யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முயற்சிகளிலும், அமைதி சமாதானம் ஐக்கியம் நிறைந்த தேசிய வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கும் இராணுவத்தினர் உதவி புரிவதாகவும் பிரசாரம் செய்யப்படுகின்றது. ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் பாதிப்பு ஏற்படத்தக்க வகையில் மீள்குடியேற்றப் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற அத்துமீறல்களையும் உரிமை மீறல்களையும் ஊடகங்கள் செய்தியாகப் பதிவு செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடக சுதந்திர நிலைமையைப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
ஊடகவியலாளர்களின் உரிமை சார்ந்து செயற்பாட்டைத் தடுத்ததுடன், ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவே இந்தச் சம்பவம் பதிவாகியிருக்கின்றது. ஊடக சுதந்திரம் குறித்து பேசப்படுகின்ற போது, இந்த முல்லைத்தீவு சம்பவம் ஊடக சுதந்திர மறுப்பு நடவடிக்கையாக எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது. ஊடக சுதந்திரம் முன்னேற்றமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டபோது, ஊடக சுதந்திரச் செயற்பாட்டில் மோசமான பின்னடைவுச் சம்பவமாக இந்தச் சம்பவம் அறிக்கை இடப்பட்டிருக்கின்றது.
இது மட்டுமல்லாமல் ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஊடகவியலாளர்கள் அவர்களுடைய நாளாந்தச் செயற்பாடுகளில் அரசுக்கு எதிரானதாகக் கருதப்பட்ட சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு அவர்களுடைய வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பிட்ட சம்பவம் தொடர்பான உண்மை நிலையைக் கண்டறிவதற்கான விசாரணையாக அது காட்டப்பட்ட போதிலும், அந்த விசாரணையும் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலமும், சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் பயன்படுத்தப்படக் கூடும் என்பதில் சந்தேகமில்லை.
ஊடகர்களின் படுகொலைகளுக்கான நீதி மறுப்பு 
இதேபோன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் எனக் கோரி நடத்தப்படும் போராட்டங்களில் முக்கிய பங்களிப்பு செய்தவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதும், அச்சுறுத்தப்பட்டதும் கூட பதிவாகியிருக்கின்றன. இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் காணாமல் போயுள்ளார்கள். இவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு பொறுப்பு கூற வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அதேபோன்று கைது செய்யப்பட்டவர்களும் கடத்திச் செல்லப்பட்ட பின்னர், காணாமல் போயிருப்பவர்கள் குறித்தும் பொறுப்பு கூற வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். இந்தக் கடமையைச் சுட்டிக்காட்டி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு பொறுப்பேற்று பதிலளிக்;குமாறு கோரியும், அந்தச் செயலுக்கு நியாயம் கோரியும் நடத்தப்படுகின்ற போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அச்சுறுத்தப்பட்டமை அப்பட்டமான கருத்து நிலைப்பாட்டு உரிமை மீறலாகும். அது கருத்து வெளிப்பாட்டு நடவடிக்கையைக் கட்டுப்படுத்துகின்ற செயற்பாடாகவும் கணிக்கப்பட்டிருக்கின்றது.
யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்கு பொறுப்பு கூறவேண்டும் என்ற கடப்பாட்டை அரசாங்கம் ஏற்று ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கி ஒப்புதல் அளித்திருக்கின்றது.
அதற்கான பொறிமுறைகளை வகைப்படுத்தி அவற்றை நிறைவேற்றுவதற்கும் அரசு இணக்கம் தெரிவித்திருக்கின்றது. அந்தச் செயற்பாடு குறித்த முன்னேற்ற அறிக்கைகளும்கூட ஐநா மனித உரிமைப் பேரவைக்கு அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த நடவடிக்கைகளில் வேண்டும் என்றே காலம் தாழ்த்தப்படுகின்றது. இழுத்தடிக்கப்படுகின்றது என்று சர்வதேச அளவில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின் றது. மனித உரிமைப் பேரவையில் இந்த விடயம் ஐநா மனித உரிமை ஆணையாளரினால் கடுமையான தொனியில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது .
அரசாங்கத்தின் இந்த இழுத்தடிப்புச் செயற்பாடுகள் மனித உரிமை நிலைமைகளில் ஏற்பட்டுள்ள தேக்க நிலைமையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன என்பதே சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் நிலைப்பாடாகும். மனித உரிமைச் செயற்பாடுகளில் போதிய அளவில் முன்னேற்றம் காணப்படவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கு ஆட்சியாளர்கள் நீதி வழங்க தவறியுள்ளமையும் வலு சேர்ப்பதாக அமைந்திருக்கின்றன.
ஊடக சுதந்திரத்துக்கு சாவுமணி அடிக்கும் வகையில் நாற்பதுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இந்தக் கொலைகள் ஒவ்வொன்றும் மிக மோசமான குற்றச் செயல்களாகும். அது மட்டுமல்லாமல், அந்தக் கொலைகள் ஜனநாயகத்தின் ஆணிவேராகிய ஊடக சுதந்திரத்தை அடித்து நொறுக்குவதற்கான மோசமான வன்முறைச் செயற்பாடாகவும் கருதப்படுகின்றது. ஜனநாயகதின் நான்கு தூண்களில் ஊடக சுதந்திரமும் ஒன்றாகும். ஊடக சுதந்திரம் நசுக்கப்பட்டால், அச்சுறுத்தப்பட்டால், அந்த சுதந்திரம் அடக்குமுறையின் மூலம் மறுக்கப்பட்டால், அங்கு ஜனநாயகம் இல்லை என்பதே கருத்தாகும்.
இலங்கையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஊடகவியலாளர்கள் கடமைக்குச் செல்லும்போது அல்லது கடமையில் இருந்து திரும்பும்போது வழிமறித்துக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதேபோன்று பகிரங்கமாக சிலர் கடத்திச் செல்லப்பட்ட பின்னர் வீதியோரங்களிலும் மறைவிடங்களிலும் படுகொலை செய்யப்பட்டு வீசப்பட்டிருந்தார்கள். சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டடமைக்கான அடையாளங்கள், சில ஊடகவியலாளர்களின் சடலங்களில் அவதானிக்கப்பட்டிருக்கி;ன்றன. இந்த சித்திரவதைகள் மோசமானவை. பாலியல் ரீதியாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  இந்தச் செயற்பாடுகள் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் மீது அவர்களைக் கொலை செய்தவர்கள் கொண்டிருந்த மிக மோசமான வன்மத்தையும் பகை உணர்வையும் வெறுப்புணர்வையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தன.
இத்தகைய மோசமான கொலைகள் இடம்பெற்றிருந்த போதிலும், கொலை செய்தவர்களும்சரி, கொலைகளுக்குக் காரணமானவர்களும்சரி இன்னும் அரசாங்கத்தினால் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயுதம் ஏந்தாத நிராயுதபாணிகளான ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்தவர்கள் யார் என்பதைக் கண்டறிவதற்கு அரசாங்கங்கள் ஆர்வம் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக நிலவுகின்றது. குறிப்பாக படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தமிழ் ஊடகவியலாளர்கள்தானே என்ற இனவாத சிந்தனையின் அடிப்படையில்தான் இத்தகைய பாரமுகமான போக்கு கடைப்பிடிக்கப்படுகின்றதோ என்று ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டாளர்களினால் சந்தேகிக்கப்படுகின்றது.
நல்லாட்சிக்கும் ஜனநாயகத்திற்கும் ஊடக சுதந்திரம் அவசியம் 
ஊடகங்களின் மீதான கட்டுப்பாடும், அடக்குமுறையும் ஊடகங்கள் மீதான அரசாங்கத்தினதும், ஆட்சியாளர்களினதும் வெறுப்புணர்வையே காட்டுகின்றன. இது ஜனநாயகத்தின் மீதான அச்சுறுத்தலின் வெளிப்படுத்தலே ஆகும். இதுவே ஆர்.எஸ்.எவ் என்ற எல்லைகளற்ற ஊடகவியலாளர்களின் அமைப்பு என்ற ஊடக சுதந்திரத்துக்கான அமைப்பு 2018 ஆம் ஆண்டின் ஊடகத் தரவரிசை அறிக்கையின் மகுட வாசகமாகக் கொண்டிருக்கின்றது. ஊடகங்களின் மீதான வெறுப்புணர்வு ஜனநாயகத்தை அச்சுறுத்தும் நடவடிக்கை என அது சுட்டிக்காட்டியிருக்கின்றது.
ஊடகங்கள் அரசாhங்கத்தற்கு எதிரான செயற்பாட்டைக் கொண்டவையல்ல. ஊடகமும், ஊடக சுதந்திரமும் ஜனநாயகத்தின் முக்கிய அம்சமாகும். ஜனநாயக நெறிமுறைகளை மீறும்போதும், பொதுமக்களுடைய நன்மைகளுக்கு விரோதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்போதும் அவற்றைச் சுட்டிக்காட்டி நேர்வழியில் அரசாங்கங்களைப் பயணிக்கச் செய்யும் பாரிய பொறுப்பையே ஊடகங்கள் கொண்டிருக்கின்றன. இதனால்தான் ஊடகம் என்பது காவல்நாயாக  வர்ணிக்கப்படுகின்றது. அந்த வகையில் நல்லாட்சி நிலவுவதற்கும் நல்லாட்சி தொடர்வதற்கும் ஊடகங்கள் உறுதுணையாக அமைந்திருக்கின்றன.
ஜனநாயகத்தின் பண்பு நிலைப்பாட்டில் உயர்ந்த முக்கியமான அந்தஸ்தைப் பெற்றுள்ள ஊடகங்கள் அரசாங்கங்களின் செயற்பாடுகள் அனைத்தையும் போற்றிப் புகழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் சரியானவை என மக்களிடம் கொண்டு செல்கின்ற ஊதுகுழல் கருவியாக ஊடகம் செயற்பட முடியாது. ஜனநாயகத்தையும் ஜனநாயக உரிமைகளையும் பேணிப் பாதுகாக்கின்ற பணியில் ஊடகங்களின் செயற்பாடுகள் இன்றியமையாதன.
ஆட்சியாளர்களும்சரி, அரசியல்வாதிகளும் சரி ஜனநாயக செல்நெறிகளில் இருந்து நெறி பிறழ்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாகவே இருக்கின்றன. அரசியல் என்பது அதிகரத்தையும் புகழையும் பிரபல்யத்தையும் மட்டுமல்லாமல் சமூக அந்தஸ்தையும் செல்வத்தையும் கூட பெற்றுத்தரவல்லது. உண்மையான அரசியல் மக்களுக்கு நேர்மையான நியாயபூர்வமான செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. அந்த ஜனநாயக இலக்கில் இருந்து வழிதவறிச் செல்வதற்கு அதிகார அந்தஸ்து, புகழ், பிரபல்யம், செல்வம் என்பன ஊன்றுகோல்களாக அமைந்திருக்கின்றன. இவற்றின் ஆதிக்கத்தில் இருந்து தப்பிச் செயற்படுவதற்கு உண்மையான ஜநாயகத் தன்மை கொண்ட ஊடகச் செயற்பாடுகள் உறுதுணையாக இருக்கின்றன.
எனவே, ஊடகங்கள் அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் வழிநடத்தல் காவலர்களாகத் திகழ்கின்றன. அத்தகைய முக்கியத்துவம் மிக்க ஊடகத்தை சுதந்திரமாகச் செயற்பட விடவேண்டியதும், அந்தச் சுதந்திரத்தைப் பாதுகாத்துப் பேணுவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். இந்த பொறுப்பில் இருந்து அரசாங்கம் தவறுமானால், அந்த ஆட்சி நல்லாட்சியாக அமைய முடியாது. அது மட்டுமல்ல. அந்த ஆட்சி உண்மையான ஜனநாயக ஆட்சியாகவும் இருக்க முடியாது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More