Home இலங்கை தியாகங்களுக்கு மதிப்பளியுங்கள்- பசீர்காக்கா- யோகன்பாதர்- ரூபனின் உருக்கமான வேண்டுகோள்…

தியாகங்களுக்கு மதிப்பளியுங்கள்- பசீர்காக்கா- யோகன்பாதர்- ரூபனின் உருக்கமான வேண்டுகோள்…

by admin
 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

தமிழரின் தேசிய விடுதலைப்போராட்டத்தில் நீண்டகாலம் பங்களித்த பாலிப்போடி சின்னத்துரை (யோகன்-பாதர்-மட்டக்களப்பு, முத்துக்குமார் மனோகர் (பசீர்-காக்கா-யாழ்ப்பாணம்), ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன் – திருமலை) ஆகிய நாங்கள் மூவரும் இன்றெழுந்துள்ள சுழலில் எமக்கான கடமை யைச் செய்யாமலிருப்பது எம்மோடு நீண்டகாலம் பயணித்து மாவீரர்களான எமது நண்பர்கள், சகோதரிகளுக்கும், விடுதலையை நேசித்து முள்ளிவாய்க்கால் வரை எம்மோடு பயணித்து கடல், வான், தரை ஆகிய மும்முனைத் தாக்குதல்களால் இனப் படுகொலைக்குள்ளான எமது உறவுகளின் ஆத்மாக்களுக்கு செய்யும் துரோகம் எனக் கருதுகிறோம்.

கடந்த மாவீரர்நாள் தொடர்பாக எங்களில் ஒருவரான முத்துக்குமார் மனோகர் (காக்கா) விடுத்த வேண்டுகோளை ஏற்று எவ்வித அரசியல் கலப்புமின்றி அமைதியான முறையில் வடக்கு – கிழக்கு பகுதிகளில் மிகவும் கட்டுப்பாடாக அனைத்துத் துயிலும் இல்லங்களிலும் நிகழ்வுகள் நடந்தேறின. ஒழுங் கான நேர்த்தியான தமிழ்த் தலைமையால் 2009 மே 18 வரை வழிநடத்தப்பட்டோம் என்பதை முரசறைந்து கூறினர் எமது மக்கள். இதற்காக முள்ளிவாய்க்கால் வரை பயணித்த நாங்கள் மூவரும் எமது மக்களுக்கு சிரம் தாழ்த்தி வணங்கி நன்றி கூறுகிறோம். இந்த அமைதிச் சூழலைக் குழப்பும் விதமாக செயற்படாதிருந்த மைக்காக ஊடகங்களுக்கும் எமது சிறப்பான நன்றிகள்.

ஏற்கனவே நினைவுகூரல் நிகழ்வுகளை வழிநடத்த சமூக, சமயத் தலைவர்கள் அடங்கிய குழுவொன்றினை உருவாக்கி அந்நிகழ்வுகளின் நோக்கத்தையும், புனிதத்தினையும் சரியான முறையில்கொண்டு செல்ல வேண்டுமென இம்மண்ணினை நேசித்த பலரும் ஆலோசனை வழங்கியிருந்தனர். இன்றுள்ள பதற்றமான சூழலில் உடனடியாக இது சாத்தியப்படாதென்றே எமக்குத் தோன்றுகிறது.

ஒற்றுமையாய் வாரீர் என்ற கோஷங்களுக்கு மத்தியில் வேறு வேறு நோக்கங்கள் இருப்பதாகக் கருதுகிறோம். தாம் எதிர்பார்த்த ஒழுங்கில் நிகழ்வுகள் நடைபெறாவிட்டால் குழப்பங்கள் ஏற்படும் என எச்சரிப்பது எம்மை வேதனையில் ஆழ்த்துகிறது. எமது உறவுகளுக்காக மட்டுமல்லாது இன்றைய நிலைமைக்காகவும் சேர்த்து கண்ணீரைப் பங்கு போடுகிறது. மாவீரர்நாள் நிகழ்வுகளில் அமைதியைப் பேணிய எமது மக்களின் அமைதியையும் கட்டுப்பாட்டையும் மதிக்காததோடு எமது கடந்தகாலப் பங்களிப்பை எச்சரிப்போர் நிராகரிப்பதாகவே கொள்ளவேண்டியுள்ளது.

இந்த விடுதலைப்போராட்டத்தில் யாழ். பல்கலைக்கழகம் தொடர்ச்சியாக ஆற்றிய பங்களிப்பை போராட்டத்தின் பங்காளர்களான நாம் நன்கு அறிவோம். மாவீரர்நாள் தொடர்பான தனது வேண்டுகோளில் மனோகர் (பசீர் காக்கா) இதனை மறக்காது குறிப்பிட்டிருந்தார் என்பதையும் நினைவு படுத்துகிறோம்.

கிழக்கு மாகாணசபையில் தமிழரின் பிரதான கட்சி ஆட்சியில் பங்காளராக இருந்தது. இக்கட்சி யின் செயலர் உட்பட இருவர் அமைச்சர்களாக இருந்தனர். இவர்களில் எவரும் இனப்படுகொலை என்ற தீர்மானத்தை தமது சபையில் நிறைவேற்றக்கூடிய சாத்தியப்பாடுகள் குறித்து ஆராயவேயில்லை. இது தமது வரலாற்றுக்கடமை என்பதை உணரவுமில்லை. நடந்தவைகள் இனப்படுகொலை என்ற வகையறை க்குள் அடங்கமாட்டாதென்று வாதிடும் திறன்மிக்கோரால் தவறாக வழிநடத்தப்பட்டிருந்தனர்.

எது எவ்வாறிருந்தாலும் உலகத்தைப் பொறுத்தவரை வடமாகாணசபை நிறைவேற்றிய இனப்படு கொலை என்ற தீர்மானம் காத்திரமானது, எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை உலகுக்கு ஆணித்தரமாக எடுத்துரைத்தது. இதன் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில் எவரும் செயலாற்றக் கூடாதெனக் கருதுகிறோம். இத்தீர்மானத்தைக் கொண்டு வந்த வடக்கு முதல்வரின் பங்களிப்பை வேறெவரினதும் தேவைகளுக்கோ, நோக்கங்களுக்கோ நிராகரிப்பது ஏற்புடையதல்ல.

இந்த மே 18 க்குப்பின் நாம் எதிர்பார்க்கும் அரசியல் கலப்பற்ற, மதகுருமார் தலைமையிலான நினைவேந்தல் குழுக்களின் உருவாக்கம் குறித்து விடுக்கப்படும் பொது அறிவித்தலொன்றின் பிரகாரம் செயற்படவேண்டும் என்றும் மாவீரர்நாள், திலீபனின் நினைவு, அன்னைபூபதி, மாமனிதர் சிவராம் நினைவு உட்பட மே 18 நிகழ்வையும் கூட இந் நினைவேந்தல் குழுக்களின் அறிவுறுத்தல் பிரகாரம் நடைமுறைப் படுத்த வேண்டுமென எதிர்பார்க்கிறோம். எமது விடுதலைப்போராட்டத்தில் தம்மை இழந்த மற்றும் பலியான அனைவரையும் மதிக்கும் அனைவரும் இவ்வேண்டுகோளை ஏற்பார்கள் என நம்புகிறோம். அன்னை பூபதி மற்றும் மாமனிதர் சிவராமின் நினைவு நிகழ்வுகளில் தவறாக வழிநடத்தப்பட்டோரால் நிகழ்ந்த வேதனையான சம்பவங்கள் அத் தியாகங்களுக்கு மதிப்பளித்த எமது மக்களால் ஜீரணிக்க முடியாதவை.

எமது எதிர்பார்ப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புடனும் கலந்துரையாட ஆர்வமாக உள்ளோம். தயவு செய்து எமது வேண்டுகோளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம். இரு தலைமுறையினராக இந்தப்போராட்டத்தில் பங்களித்த எமது வேண்டுகோளை நிராகரிக்க மாட்டீர்கள் என நம்புகிறோம்.

நன்றி
இவ்வண்ணம்

பாலிப்போடி சின்னத்துரை  (யோகன்-பாதர்)
முத்துக்குமார் மனோகர்  (பசீர் – காக்கா)
ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன் – திருமலை)

10.05.2018
யாழ்ப்பாணம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More