இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

கோழி வாங்க கடன் வாங்கினேன் தீனி போட காசில்லை- நுண் கடன்களும் துயர்சூழ் வாழ்வும்…

சிவலிங்கம் அனுஷா… 

முல்லைதீவு என்பது ஒரு விவசாய மண்ணை பெற்ற மாவட்டமாகும். விவசாயத்தை நம்பி வாழ்ந்த வரலாறு முல்லைதீவு மக்களுக்கு இருக்கின்றது. போர் முடிந்த இக் காலத்திலும் மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ் கலாச்சாரத்தின் ஒரு அம்சமாக விளங்கும் சேமிக்கும் பழக்கம் முல்லைதீவு மக்களுக்கும் இருந்தது. நகைகளை அடகு வைத்து விவசாயம் செய்தனர். இல்லையெனில் தங்களின் சொந்தங்களிடமிருந்து சிரிதளவிலான பணங்களை கைமாற்றாக பெற்றுக்கொண்டனர்.

ஆரம்பகாலத்தில் உலக வங்கியிலிருந்தும் கடன் திட்டங்களை நடாத்தினர். அத் திட்டங்கள் இன்னும் நடந்துக்கொண்டிருக்கின்றது. மைக்ரோ பினான்ஸ் அல்லது நுண் கடன் திட்டங்கள் நாடு முழுவதும் செயற்படுகின்றமையை காணக்கூடியதாக உள்ளது.

ஆரம்பக் காலத்தில் சர்வோதய போன்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் வறுமைக்குள் வாழும் மக்களின் அபிவிருத்திற்காக நுண் கடன் திட்டத்தை வழங்கினாலும் இதற்போதைய காலத்தில் அரசு சாரா நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தனி நபர் நிறுவனங்களினால் இத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நுண் கடன் பிரச்சினை என்பது முல்லைத்தீவில் காணப்படும் பிரதான சவாலாக காணக்கூடியதாக இருக்கின்றது. சில நிதி நிறுவனங்கள் நுண் கடனை வழங்குகின்றன. நுண் கடன் நிறுவனங்கள் முல்லைத்தீவில் மட்டும் இல்லாமல் இலங்கையில் பல்வேறு மாவட்டங்களிலும் செயற்படுகின்றன. இந் நுண் கடன் முறை என்பது இலங்கையில் புதிதாக செயல்முறையில் காணப்படும் திட்டமாக இயங்குகின்றது.

கூடுதலான மக்கள் இவ் முறையில் கடனை பெற்றுக்கொள்வதற்கு முன் வருகின்றனர். அதிகளவிலான வட்டியை பெறுகின்ற இம் முறையின் அடிப்படையில் மக்கள் கடன்களை பெற்றுகொள்வதற்கு முன்வந்து நிற்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துக்கின்றது.

நுண் கடன் நிறுவனங்களில் காணப்படும் முக்கிய விடயங்கள்:

• அதிகளவிலான வட்டி
• குறைந்தளவிலான அடிப்படையில் கடன்களை வழங்குவது.
• பெண்களை மையமாக பயன்படுத்துவது
• அதிகாரிகள் வீடுகளுக்கு வருவது
• நுண் கடன்களை வீட்டிற்கே வந்து வழங்குவது
• கடன்களை பெற்றுகொள்வதற்கு வீட்டிற்கே வருவது.
• வாராந்த முறையில் கடன்கள் மற்றும் வட்டி பெற்றுக்கொள்வது.
• விரைவிலேயே கடன்களை வழங்குவது

அதிகாரிகள் வீடுகளுக்கே வந்து கடன்களை வழங்குகின்றனர். இவர்களின் பிரதான இலக்கு பெண்கள். வீடுகளில் அதிக நேரம் இருப்பது பெண்கள் என்பதனால் பெண்களை மையப்படுத்தி கடன்களை வழங்குகின்றனர். ஆனாலும் முல்லைத்தீவில் அதிகளவிலான பெண்கள் கணவரை இழந்த நிலையில் வாழ்கின்றார்கள். மேலும் அதிகளவிலான குடும்பங்கள் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களாக காணப்படுகின்றன.

பெண் தலைமைத்துவ வீடுகளுக்கு அதிகாரிகள் தினசரி வருவதினால் அப் பெண்கள் சமூக பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது. கடன்தேவை இருக்கும் நபர்களுக்கும், இல்லாத நபர்களுக்கும் கடன்களை வழங்குகின்றார்கள். தேவையற்ற நபர்களுக்கும் தேவைகளை உருவாக்கி கடன்களை வழங்குவது இந்த நுண் கடன் நிறுவனங்களின் செயற்பாட்டில் காணக்கூடியதாக இருக்கின்றது. நுண் கடன் நிறுவனங்களில் நோக்கம் அதிகளவிலான வட்டியை பெற்றுக்கொள்வதே ஆகும்.

நுண் கடன் நிறுவனங்களினால் வழங்கும் கடன்களை பெற்று அதை பொருளாதார அபிவிருத்திக்காக பயன்படுத்தும் நபர்களும் இருக்கின்றனர். கடன்களை பெற்று அவர்களின் வளர்ச்சியை கண்டுகொண்ட மக்களும் முல்லைத்தீவில் சிறிதளவு காணக்கூடியதாக இருந்தன. நுண் கடன்களை பெற்று ஒரு சில நபர்கள் நிலம் வாங்குவது மற்றும் வீடு கட்டுவதும் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனாலும், அதிகளவிலான மக்கள் நுண் கடன்களை பெற்று அதை பிள்ளைகளின் கல்விகளுக்காக தனியார் கல்வி நிறுவனங்களுக்கு செலவிடும் சூழ்நிலையும் கண்டறியப்பட்டது. அத்துடன் அநேகமான நபர்கள் நுண் கடனை பெற்று அதிஸ்டஇலாப சீட்டுக்களை வாங்குகிறார்கள் என்பதும் குறிப்பிடவேண்டிய விடயமாகும்.

நுண் கடன் நிறுவனங்கள் கடன்களை வழங்கினாலும், மக்களினால் அவர்களின் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்திக்கொள்ளும் முறைகளை வழங்குவதில்லை என்பது தெரியவந்தது. வழிகாட்டல்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்திற்கான அறிவை வழங்குவது நுண் கடன் நிறுவனங்களினால் வழங்கப்படுவதில்லை. மக்கள் அபிவிருத்தி பெருகாமல் இருந்தாலும், நுண் கடன் நிறுவனங்கள் அதிகளவிலான அபிவிருத்தியை தினமும் பெற்றுக்கொள்கின்றன.

இவ்வாறான சூழ்நிலையில் வறுமையில் வாழும் மக்கள் இன்னும் வறுமை நச்சு வட்டத்திற்கு தள்ளப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர் என்பது கவனிக்கவேண்டிய விடயமாகும்.
பெற்ற கடனை கொடுக்க இயலாமல் மக்கள் தற்கொலை செய்துள்ளனர். 2016.01.02 முல்லைத்தீவு விசுவமடு பிரதேசத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது ஊடகங்கள் மூலம் வெளிவந்த செய்தியாகும். அதே போல் பலரும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடன்களை வழங்கும் மற்றைய நிறுவனங்கள் தொடர்பில் சட்டங்களை வழங்கினாலும் நுண் கடன் நிறுவனங்களுக்கு சட்ட வரைப்பு மாத்திரமே கொண்டுவர முடிந்தது. வடக்கில் செயற்படும் நுண் நிதி நிறுவனங்களில் அதிகளவிலான வட்டியை பற்றி இலங்கை மத்திய வங்கிற்கு புகார்கள் வந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்தது.

நுண் கடன்கள் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் பெறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு வெகு விரைவில் தீர்மானங்களை எடுப்பதாகவும் மத்திய வங்கி அறிவித்தது.

நுண் நிதி நிறுவனங்களில் கடன் வழங்கும் நோக்கமானது வறுமையில் வாழும் மக்களுக்கு கடன்களை வழங்குவதின் மூலம் அவர்களுக்கு சுய தொழில்கள் செய்வதற்கு உதவுவது ஆகும். ஆனால் மக்கள் நுண் கடன்களை பெற்று சுய தொழில்கள் செய்கின்றார்களா என்பதை நிறுவனங்கள் பார்ப்பதில்லை என்றே கூற முடிவும். நுண் கடன்களை பெற்றுக்கொள்ளும் அனைவரும் சுயதொழில்களுக்காக பெற்றுக்கொண்டாலும் அதை அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்தும் நிலைமையை அவர்கள் சந்திக்கின்றார்கள்.

“கோழி வளர்க்க கடன் வாங்கினன் நான். பிறகு அவைக்கு போட தீனி இல்லாமல் கோழி எல்லாம் செத்தது. நான் கடனை குடுக்க முடியாமக் நிக்கிறன்”

நுண் கடன்களை வழங்கும் நிறுவனங்கள் கடன்களை வழங்கிய பின் கடன்களை பெற்றுக்கொள்ளும் மக்கள் எவ்வாறு உபயோகிக்கின்றார்கள் என்பதை ஆராய்வதில்லை.

அத்துடன் நுண் கடன் நிறுவனங்களை நோக்கி மக்கள் செல்வதில்லை. அவர்கள் மக்களின் வீட்டிற்கு வருகின்றார்கள். முல்லைத்தீவில் ஒரு நபர் கூறியது போல் ஒரு நபர் தினத்திற்கு 100 ரூபா வருமானம் பெற்றுக்கொல்வாராயின், ஒரு நாளைக்கு 110 நுண் கடன் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும் என்பது மக்களின் நிலைமையாக உள்ளது.

கடன்களை வழங்கும் திட்டம் என்பது வறுமையில் வாழும் மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய உதவி என்பதில் எதுவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனாலும், அதிகளவிலான வட்டியை மக்களினால் கொடுக்க முடியாத நிலையில் அவர்களிடமிருந்து அதிகளவிலான வட்டியை பெற்றுக்கொள்வதற்கு இத் திட்டத்தை செயல்முறைப் படுத்துவது முறையற்றது. அரசு அல்லது எந்தொரு நிறுவனத்தின் மூலமாவது அதிகளவிலான வட்டியை குறைந்தபட்ச வட்டிற்கு கொண்டுவரமுடியுமெனில் அது வறுமையில் அவதிப்படும் மக்களுக்கு செய்யும் ஒரு மிகப்பெரிய உதவியாகும்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 11 other subscribers