இலங்கை பிரதான செய்திகள்

மத்தியை ஆத்திரமூட்டினால் கிடைப்பதும் கிடைக்காமல் போய்விடுமோ என எமது மாகாண அலுவலர்கள் அஞ்சுகின்றார்கள்

வடக்குமாகாணம் சம்பந்தமான
பூர்வாங்க
தேவைகள் மதிப்பீடு பணிக்கூடம்
யாழ் யு.எஸ்.ஹொட்டேலில்
2018ம் ஆண்டு மே மாதம் 25ந் திகதி காலை 09.30 மணிக்கு
முதலமைச்சர் உரை

2003ம் ஆண்டில் நடந்தது போல் போருக்குப் பின்னரான வடமாகாணம் சம்பந்தமான தேவைகள் மதிப்பீட்டுக் கோரிக்கை சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் எம்மால் ஐக்கிய நாடுகள் வதிவிடப்பிரதிநிதி முன்வைக்கப்பட்டது. அதனைத் தட்டிக்கழித்துக்கொண்டிருந்த வதிவிடப் பிரதிநிதி அவர்கள் தாம் மாற்றலாகிச் செல்ல முன் எமது கோரிக்கையின் ஒரு பகுதியை மட்டும் இயற்றிவிட்டுச் சென்றுவிட்டார். அது மனித இன நலம் சார்ந்த மதிப்பீடு. அதில் அவர் அன்றைய அரசாங்கம் கையளித்த தரவுகளையே பாவித்திருந்தார். அவை உண்மை நிலையை பிரதிபலிப்பதாக இருக்கவில்லை. பின்னர்தான் நாங்கள் எங்கள் கோரிக்கையை சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் கௌரவ பிரதம மந்திரி முன் சமர்ப்பித்தோம்;. உடனே அது பற்றி அவர் திரு.பாஸ்கரலிங்கம் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கியதன் பயனாக 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ந் திகதி திரு.பாஸ்கரலிங்கம் முன்னிலையில் ஒரு பூர்வாங்கக் கூட்டம் நடந்தது. அதைத் தொடர்ந்து எமது அலுவலர்கள் காலத்திற்குக் காலம் சந்தித்து கூட்டங்கள் நடாத்தினார்கள்.

சென்ற மார்ச் மாதம் 23ந் திகதி கைதடியில் உள்ள எமது முதலமைச்சர் மாநாட்டு மண்டபத்தில் CEPA  என்ற நிறுவனத்துடன் ஒரு கூட்டம் வைத்தோம். அதன்போது ஒரு பணிக்கூடத்தை (Workshop) நடாத்துவதாகவும் எமது மக்களுக்கு, முக்கியமாக அலுவலர்களுக்கு, குறித்த தேவைகள் மதிப்பீடு சம்பந்தமாகவும், அதைக் கொண்டு நடாத்தும் விதம் சம்பந்தமாகவும், இதற்கு நிதி உதவி செய்யும் உலக வங்கியால் தயாரிக்கப்பட்ட சமூகப் பொருளாதார மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டவற்றை அலசி ஆராய்வதற்குமாக இந்தப் பணிக்கூடம் ஒழுங்கு செய்வதாகக் கூறப்பட்டு இன்று நடைபெறுகிறது.

நாம் யாவரும் எம்மைப்பற்றியும் எமது சூழல் பற்றியும் சில விடயங்களை மனதில் நிறுத்த வேண்டும். முதலாவதாக எமது வடகிழக்கு மாகாணங்கள் ஒரு கொடூரமான போரினைச் சந்தித்து அதிலிருந்து விடுபட்டுள்ள மாகாணங்கள் ஆவன. நாம் மற்றைய மாகாண மக்களைப் போன்றவர்கள் அல்ல. எமது தேவைகளும் நோக்குகளும் எதிர்பார்ப்புக்களும் மற்ற மாகாணங்களில் இருந்து வேறுபட்டிருப்பன. 2003ம் ஆண்டுக்குப் பின்னர் இன்றுவரையில் ஒரு முழுமையான கண்ணோட்டத்துடன் எமது வடமாகாணம் நோக்கப்பட்டு எமது தேவைகளைப்புரிந்து கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எமக்கெனத் தனித்துவமான தேவைகள் இருப்பதை நாம் உணர வேண்டும். மீள் குடியேற்றம், காணிகள் விடுவிப்பு, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டு வசதிகள் செய்து கொடுத்தல், போரில் உடலாலும் உள்ளத்தாலும் காயப்பட்டவர்கள் சம்பந்தமான பிரத்தியேகத் தேவைகள் போன்ற பலவற்றையும் ஆராயவேண்டியுள்ளது. இன்னமும் அடிப்படைக் கட்டமைப்புக்கள் முழுமையாக உருவாக்கப்படாது இருக்கின்றன. வடமாகாணத்தில் இலட்சத்துக்கும் மேற்பட்ட படையினரின் தொடர் குடியிருப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் கணிப்பீடு செய்யவேண்டியுள்ளது. நாட்டுக்கு நாம் வழங்கிவந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி Gross Domestic Product (GDP ) தற்பொழுது வெகுவாகக் குறைந்து விட்டது. இதற்குப் பல காரணங்கள் உண்டு. ஒன்று போர் முடிந்து ஒன்பது வருடங்கள் ஆகியும் படையினர் தொடர்ந்து எமது மக்களின் காணிகளைப் பிடித்துவைத்துத் தாம் அவற்றில் பயிரிட்டு அவற்றிலிருந்து வரும் வருமானங்களைத் தாமே பெற்று சுகித்திருப்பது. இதனால் மக்களின் பொருளாதார விருத்தி தடைப்பட்டுள்ளது.

அடுத்து நிர்வாகத்தை ஒரு நிலைப்படுத்தாது மூன்று நிர்வாக அதிகார மையங்களைத் தொடர்ந்து வைத்திருந்து பேணிவருதல். எமது மாகாணசபைகளுக்கு 1987ம் ஆண்டு தரப்பட்ட ஓரளவு அதிகாரங்களைக் கூட பறிக்கும் முகமாக 1992இன் 58ம் இலக்கச் சட்டத்தை நிறைவேற்றி மாவட்ட செயலாளர்களையும் கிராம சேவையாளர்களையும் இன்னும் சிலரையும் மத்திய அரசாங்கத்தின் நிர்வாக அலகின் கீழ் வைத்திருந்து வருகின்றார்கள். இவர்கள் ஒரு அதிகாரமையம்.

அடுத்து எமது மாகாணசபையின் அதிகார மையம்.

மூன்றாவது ஆளுநரின் அதிகார பீடம். எம்iமைப் பொறுத்த வரையில் சட்டத்தின் குறைபாடுகளால் மாகாண அதிகாரங்களைப் பறிக்கக்கூடிய வகையில் ஆளுநர்கள் நடந்து வருகின்றார்கள். எனவே எம் மக்களுக்கான தேவைகள் பற்றி மக்களின் பிரதிநிதிகளாக விளங்கும் எம்மிடம் கோராமல் அரசாங்கத்தின் கைப்பொம்மைகளிடமும் ஜனாதிபதியின் கையாளிடமுமே விபரங்கள், தரவுகள் கோரப்படுகின்றன.

இவ்வாறு மத்திய அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ள தரவுகள் எந்தளவுக்குப் பிழையானதாகவும் பிறழ்வானதாகவும் அமைந்துள்ளன என்பது பற்றி CEPA  அலுவலர்களுக்கு ஏற்கனவே கூறியுள்ளோம். ஆகவே உங்களின் முக்கியமான கடப்பாடு தரவுகளைச் சரியாகப் பெற்றுக்கொள்வதேயாகும்.

இது சம்பந்தமாக இந்த செயற்றிட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தையும் சேர்த்துக்கொள்ளுமாறு நான் விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் நிதி வழங்குநர்களாகவே சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள் என்று காண்கின்றேன். ஆசிய அபிவிருத்தி சபை, ஐரோப்பிய ஒன்றியம், உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சேர்ந்து பாகிஸ்தானின் ஆதிவாசிகள் பிரதேசமான கைபர்- பக்டுன்க்குவா சம்பந்தமாக அவர்களின் ஒத்துழைப்புடன் 2010 ல் தேவைகள் மதிப்பீடு ஒன்றை நடாத்தினார்கள். அதில் ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றின் பங்குபற்றல் மாகாணப் பங்குபற்றலையும் உறுதி செய்தது. அங்கு நெருக்கடி நிலையின் பின்னரே மதிப்பீடு நடாத்தப்பட்டது.

எமது அரசியல் ரீதியான பிரச்சனைகள் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை. வடகிழக்கு மாகாணங்களுக்குத் தம்மைத் தாம் ஆள இன்னமும் வழி அமைத்துக் கொடுக்கப்படவில்லை. ஆகவே போரின் பின்னரான ஒரு கணிப்பீடுதான் இங்கு நடைபெறுகின்றது.

தென்ஆபிரிக்காவில் உண்மையும் நல்லிணக்கத்திற்குமான குழு அரசியல் ரீதியான தீர்வைப் பெற்றதன் பின்னரே நியமிக்கப்பட்டது. ஆனால் இங்கு படையினரைப் பெருவாரியாக எம் மத்தியில் இருத்தி வைத்து எமது சட்ட பூர்வமான நியாயமான அதிகாரங்களை எமக்கு வழங்காமல்த்தான் தேவைகள் மதிப்பீடு நடைபெறுகின்றது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் மத்தியின் உள்ளீடல்கள், தலையீடுகள், அதிகாரங்கள் கூடிய வலுவுடன் செயற்படுத்தப்படுவன. மாகாணத்தின் தேவைகள், நோக்குகள், எதிர்பார்ப்புக்கள் மத்தியின் அதிகார வரம்பினுள்ளேயே கட்டுப்படுத்தப்பட்டிருப்பன.

பாகிஸ்தானில் நடைபெற்ற தேவைகள் மதிப்பீடு பாதிக்கப்பட்ட மக்களை மையமாக வைத்தே நடாத்தப்பட்டது. இங்கும் அவ்வாறான ஒரு கலந்துறவாடி உண்மைகளைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

எமது மாகாண அலுவலர்கள் சிலரின் நடவடிக்கைகளை நான் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றேன் மத்தி என்ன நினைக்குமோ, மத்தியை ஆத்திரமூட்டினால் கிடைப்பதும் கிடைக்காமல் போய்விடுமோ, மத்திக்கு ஏற்றவாறு நாங்கள் நடந்து கொள்ள வேண்டும், அவ்வாறு நடந்தால்த்தான் சலுகைகளைப் பெறலாம் என்ற மனோநிலையில் அவர்கள் நடந்து வருகின்றார்கள்.

உதாரணத்திற்கு ஒரு உணவகம் அண்மையில் திறக்கப்பட்டது. அதற்கு தெற்கத்தைய உணவகங்களின் சிங்களப் பெயரைச் சூட்ட வேண்டும் என்று மத்தி எதிர்பார்த்தது. ஹெலபொஜூன் என்ற பெயரைச் சூட்ட வேண்டும் என்று கூறப்பட்டது. நான் அதற்கு சம்மதிக்கவில்லை. வேண்டுமெனில் ஹெல பொஜூன் என்ற சொல்லின் தமிழாக்கத்தைப் பாவிக்கலாம் என்றேன். அதாவது ஹெல -ஈழம், பொஜூன் – உணவகம் என்றவாறு ஈழ உணவகம் என்று பெயர் வைக்கலாம் என்று மத்திய அமைச்சருக்குக் கூறினேன். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. அவ்வாறாயின் எமது வடமாகாண அதிகாரத்தின் கீழ்வரும் உணவகங்கள் போன்று அம்மாச்சி என்று பெயர் சூட்டுவோம் என்றேன். அவர் எதுவும் கூறவில்லை. உணவகத்தைத் திறக்கவும் வரவில்லை. உணவகம் திறக்கப்பட்டு விட்டாலும் எமது அலுவலர்கள் இதுவரையில் அதற்குப் பெயரிடவில்லை. அவ்வளவு பயம் மத்திக்கு. மத்திய அரசாங்கத்தினர் என்ன கூறுவார்களோ என்று தம்மைத்தாமே ஒடுக்கிக்கொள்ளும் நிலைமையையே நான் இங்கு காண்கின்றேன். மக்களின் ஆதரவைப் பெற்ற மக்கள் பிரதிநிதிகள் இங்கு அதிகாரம் செலுத்துகின்றார்கள் என்பதை இங்குள்ள அதிகாரிகள் பலர் ஏற்றுக்கொள்வதாக இல்லை. மத்தியின் அதிகாரம் எப்பொழுது திரும்பவும் வரும் மத்திக்கு காக்காய் பிடித்து எமது தனிப்பட்ட நலன்களை எவ்வாறு நிறைவேற்றலாம் என்றே அவர்கள் சிந்திக்கின்றார்கள் போல்த் தெரிகிறது. அண்மையில் கொழும்பு சென்று ஒரு அலுவலர் முல்லைத்தீவில் கடற்படையினர் காணிகளை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்று மக்கள் கோரவில்லை அரசியல் வாதிகளே கோருகின்றார்கள் என்று அரசாங்கத்துக்கு ஐஸ் வைத்திருக்கின்றார். மக்கள் அல்லும் பகலும் அவர்களை வெளியேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது அவருக்குத் தெரியவில்லை.

ஆகவே நான் கூறவருவது என்னவென்றால் தேவைகள் மதிப்பிடும் போது எமக்கிடையேயான பரஸ்பரம் கருத்துப்பரிமாற்றம் போதியவாறு நடைபெற வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றேன். இத்தேவைகள் மதிப்பீடு எமது முழுமையான பங்குபற்றலுடன் நடைபெற்றுள்ளது என்று எமது மக்கள் ஏற்றுக்கொள்வதாய் அமைய வேண்டும். இதுவரைகாலமும் மத்தியின் தலையீடு வெகுவாக இருந்து வந்துள்ளது. மத்தி தனது நலனையே முன்னிறுத்த நடவடிக்கைகளை எடுத்து வந்தது. உதாரணத்திற்குப் போரினால் பாதிக்கப்பட்ட விதவைகள் பற்றிய தரவுகளில் 29000 பேரின் போரில் மாண்ட கணவர்மார் இயற்கை மரணம் எய்தினார்கள் என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றில்ப் புதைத்தார்கள். இவ்வாறு மத்திக்கு மத்தளம் அடிக்காது எம்முடன் வெகுவாகக் கலந்துரையாடும் நடைமுறையை ஊநுPயு மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன். வடமாகாண மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும்.
எமக்கு வேலைவாய்ப்பு வசதிகளை உண்டுபண்ணும் விதத்தில் தேவைகள் மதிப்பீடு நடைபெறவேண்டும். துறைசார்ந்த அடிப்படை அளவைகள் முறையாக நடாத்தப்பட்டு எமது குறைகளைக் களைய என்ன செய்யவேண்டும் என்பதைப்பற்றி எல்லாம் நீங்கள் எமக்கு வலியுறுத்த வேண்டும். அடிப்படைக் கட்டுமானங்களின் அவசியத்தை எடுத்துக்காட்ட வேண்டும். நல்லிணக்கத்திற்கான சூழலை எவ்வாறு ஏற்படுத்துவது என்பது பற்றி எல்லாம் உங்கள் சிந்தனை ஆராய்வில் ஈடுபட வேண்டும். அரசாங்கங்களின் அகந்தையுடனான அதிகாரப் பாங்கும் தொடர்ந்து இங்கு ஆதிக்கம் செலுத்தும் படையினரின் தொடர் தங்குதலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஏற்ற சூழல் அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தேவைகள் மதிப்பீடானது காலாகாலத்தில் நிலையான அபிவிருத்திக்கு வித்திட வேண்டும். எமது தேவைகள் பௌதீக, சமூக – பண்பாட்டு மேலும் சூழலை மையமாக வைத்து, போரின் பின்னரான சமூக மனோநிலை போன்றவற்றை கருத்தில் எடுத்து ஆராயப்பட வேண்டும். இது போரின் குறுகிய கால, இடைக்கால, தூரகால பாதிப்பை மனதில் வைத்து அணுகப்பட வேண்டும். உங்கள் தேவைகள் மதிப்பீட்டு அறிக்கை ஆயிரம் காலத்துப் பயிர் என்பதை மறந்து விடாதீர்கள். உங்கள் அறிக்கைகளின் அடிப்படையில்த்தான் எமது சகலதுறை எதிர்கால முன்னேற்றங்களும் நடைமுறைப்படுத்தப்படப்போகின்றன என்பதை மறவாதீர்கள்.

எனவேதான் தரவுகள் சரியாகப் பெறவேண்டும் என்று முன்னர் கூறியிருந்தேன். எமக்குத் தெரிந்தவரையில் நாம் 2013ல் பதவி ஏற்ற போது நாம் இங்கு கண்ட தரவுகள் பிறழ்வானவை, தப்பானவை, தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக தவறாகத் தயாரிக்கப்பட்டவை என்பதைக் கண்டுகொண்டோம். இவ்வாறான தப்புகளையும், தவறுகளையுஞ் செய்ய எமது அலுவலர்கள் பலர் உடந்தையாக இருந்தனர் என்பதையும் கண்டுகொண்டோம். எனவே சுதந்திரமாகச் செயற்படும் நீங்கள் இவ்வாறான அலுவலர்களின் மனோநிலையைப் புரிந்து கொண்டு உண்மையைத் தெரிந்து கொள்ள முன்வர வேண்டும். பாதிக்கப்பட்டோர் நலன்கருதி அவர்களை மையமாக வைத்தே மதிப்பீடு நடைபெற வேண்டும்.

2003ம் ஆண்டில் தேவைகள் மதிப்பீடு நடந்த பின்னர் பல்உயிர்களைப் பறிகொடுத்து விட்டோம்;, பலவித பாதிப்புக்களுக்கும், அழிவுகளுக்கும் முகம்கொடுத்துவிட்டோம். எனவே அவற்றைக் கணக்கில் எடுத்து மீள் தேவைகள் மதிப்பீடு நடைபெற வேண்டும். இதற்கு உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றின் பங்களிப்பு அத்தியாவசியமானது. அவர்கள் இவ்வாறான தேவைகள் மதிப்பீட்டை உலக ரீதியாக பல நாடுகளில் செய்துள்ளதால் போதிய அனுபவங் கொண்டுள்ளார்கள் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். மாசுபட்ட சூழல் அபிவிருத்தியை நடைமுறைப்படுத்த சிலர் முனைகின்றார்கள். அது காலாகாலத்தில் எமக்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தி விடுவன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

மற்ற மாகாணங்களில் மத்தி மறுத்துவி;டும் செயற்திட்டங்களை வடக்கில் நடைமுறைப்படுத்த சிலர் எத்தனிக்கின்றார்கள். இவற்றை நாம் சுட்டிக்காட்டும் போது பொருளாதார விருத்தியில் ஈடுபாடு அற்றவர்கள் நாங்கள் என்று கூறித் திரிகின்றார்கள். சூழல் மாசுபடுத்தும் செயற்திட்டங்களை நாம் தடுக்க முன்வர வேண்டும்.

எல்லோரையுஞ் சேர்த்து நடைமுறைப்படுத்தும் நிலையான அபிவிருத்தியே எமது நோக்கம். பாதிக்கப்பட்ட எமது மக்களின் மனோநிலை அறிந்து தயாரிக்கப்படும் தேவைகள் மதிப்பீட்டு அறிக்கையே எமக்கு நிலையான நன்மைகளைப் பயக்கும்.
எமது பாரம்பரிய எதிர்பார்ப்புக்கள் அனுபவங்கள் போன்றவை கணக்கில் எடுக்கப்பட வேண்டும். ஐக்கிய நாடுகளின் 2015க்குப் பின்னரான நிலையான அபிவிருத்திக்கான அபிவிருத்திச் செயற்திட்ட முன்மொழிவுகள் உங்களின் மதிப்பீட்டின்போது கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டும்.

எமக்கான உதவிகள் பலவற்றைச் செய்ய எமது புலம்பெயர் மக்கள் தயாராக உள்ளார்கள் என்பது கவனத்திற்கெடுக்கப்பட வேண்டும் .இங்கிருந்து வெளிநாடு சென்றவர்கள் மீண்டும் எமக்கு என்ன விதத்தில் உதவி புரியலாம் என்பது சிந்தனைக்கு எடுக்கப்பட வேண்டும். அண்மையில் இங்கிலாந்தின் கிங்ஸ்டன் நகராட்சியுடனும், கனேடிய ஒன்டாரியோ நகராட்சியுடனும் இருதரப்பு உடன்பாடுகளில் கைச்சாத்திட்டுள்ளோம். எமது நிலையான அபிவிருத்திக்கு இவ்வாறான உடன்பாடுகள் எவ்வாறான நன்மைகளைப் பெற்றுத்தருவன என்பதை நீங்கள் ஆராய்ந்தறிய வேண்டும்.

எமது அலுவலர்களின் போதாமை பற்றியும் ஆராயப்பட வேண்டும். முப்பது ஆண்டுகாலப்போர் எமது அலுவலர்களை ஆணைகள் இயற்றும் அலுவலர்களாகவே ஆக்கியுள்ளது. பொறுப்பெடுத்து மக்கள் சேவையில் ஈடுபடப் பின்னிற்கின்றார்கள். மத்தி என்ன சொல்லுமோ என்ற பயமே அவர்களை ஆட்டிப்படைத்து வருகின்றது. ஆகவே பொதுச்சேவைகள் சீர்திருத்தம் அலுவலர்கள் திறமைகள் விருத்தி போன்றவை எமக்குத் தேவையாக இருப்பதை மறவாதீர்கள்.

இறுதியாக எமது கரிசனைகளையும் எதிர்பார்;ப்புக்களையும் கூறி வைக்கின்றேன்.
1. எம் மக்களுடன் கலந்துறவாடி உண்மை நிலையை அறியமுன்வாருங்கள். எமது மக்கள் பிரதிநிதிகளின் கருத்தறிந்து கொள்ளுங்கள். இது சம்பந்தமாக எமது முதலமைச்சர் அமைச்சுடன் முறையான சரியான தரவுகளைப் பெற முயற்சியுங்கள். தொடர்பு வைத்திருந்தால் நாம் எம்மால் ஆன உதவிகள் யாவற்றையும் செய்து தருவோம்.

2. போர்க்காலத்தில் இருந்து சமாதான காலத்திற்கு நிலை மாறியமை சம்பந்தமான கருத்துக்களைப் பாதிக்கப்பட்ட மக்கள் வசமிருந்து பெறுங்கள். ஐக்கிய நாடுகளின் 2015ம் ஆண்டுக்குப் பின்னரான நிலையான அபிவிருத்திக்கான நிகழ்ச்சித்திட்டமும் ஜெனிவாவில் எமது அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐ.நா பிரேரணையும் உங்கள் ஆய்வுக்கு அனுசரணையான ஆவணங்களாகப் பாவிக்கப்பட வேண்டும். அவ்வாறு மேல்வாரியாக அகன்ற பார்வையின் கீழ் உங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டால் 10, 15 வருடங்களுக்கான அபிவிருத்தித் திட்டமொன்றை வடமாகாண பாதிக்கப்பட்ட மக்கள் நலன் கருதி தயாரிக்க உதவியாய் அமையும்.

3. உங்கள் ஆய்வை மேற்கொள்ளும் போது எமது வடமாகாண நிலையை நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்கள் மனிதாபிமான முறையில் கருத்துக்கு எடுக்க நீங்கள் வழிவகுக்க வேண்டும். எமது மக்களின் உண்மை நிலையை அறிந்து கொள்ளுங்கள். தெற்கில் கூறுவது போல பிரிந்து செல்லவும் வன்முறையில் ஈடுபடவுமே இங்குள்ளவர்கள் நாட்டம் கொண்டுள்ளார்களா என்பதை நீங்களே அறிந்து தெற்கத்தையவர்களுக்கு வெளிப்படுத்துங்கள். உங்கள் அறிக்கை நாட்டின் நல்லெண்ணத்தை உண்டாக்க வழிவகுக்க வேண்டும். உண்மை நிலை வெளிப்பட்டால்த்தான் நிலையான சமாதானம் உருவாகலாம். இன்று சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகள் எம்மைப் பிழையாக சித்தரித்து வருகின்றனர். எமது கருத்துக்களை முறையாக வெளியிடாது வருகின்றனர். உதாரணத்திற்கு எம்மைப் பயங்கரவாதிகள் என்றும் எம்மைக் கண்காணிக்கப் போர்ப்படைகள் தேவை என்றும் கருதுகின்ற தென்னவருக்கு உண்மையை எடுத்துரைக்க முன்வாருங்கள்.

ஐக்கிய நாடுகள் சமாதானத்திற்காகப் பல்லாயிரம் டொலர்களை இங்கு செலவிட முன்வந்துள்ளது. ஆனால் அவ்வாறான செலவின் போது போர்க்குற்றங்களோ தொடர்ந்து இராணுவத்தினர் இங்கிருப்பதால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களோ அடையாளம் காணப்படவில்லை. எல்லாம் முறையாக நடைபெற்றுவருகின்றது என்றவாறே வடகிழக்கு மாகாணங்கள் சித்தரிக்கப்படுகின்றன. எமது பழைய பாதிப்புக்கள், நடைமுறைப்பாதிப்புக்கள் மற்றும் வருங்காலப் பாதிப்புக்கள் அடையாளங்காணப்பட்டு வெளியிடப்பட வேண்டும். உதாரணத்திற்கு இராணுவத்தினரின் அளவுக்கு மிஞ்சிய நீர்ப்பாவனை எவ்வாறு சுற்றுவட்டாரக் கிணறுகளைப் பாதித்து வருகின்றன என்பது கணக்கில் எடுக்கப்பட வேண்டும்.
4. வடகிழக்கில் சமச்சீர்மையற்ற (யளலஅஅநவசiஉயட) அதிகாரப் பகிர்வு இடம்பெறவேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறுங்கள். எமது வடகிழக்கு மாகாணங்கள் பலவிதங்களில் மற்றைய மாகாணங்களுடன் ஒப்பிடும் போது வேறுபட்டவை. அவற்றின் தனித்துவம் பேணப்பட வேண்டும். அதனை வலியுறுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.
5. சர்வதேச மக்களுக்கு ஐக்கிய நாடுகள் மூலம் எமது மத்திய அரசு பல உத்தரவாதங்களை நல்கியுள்ளது. நாம் செய்து முடிப்போம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளது. அவ் வாக்குறுதிகள் பேணப்பட்டால் வட மாகாண மக்களுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி நீங்கள் ஆராய்ந்தறிந்து வெளிப்படுத்த வேண்டும்.
இறுதியாக ஒன்றைக் கூற விரும்புகின்றேன். எமது பிரச்சனைகள் தோன்றிய காலத்தில் இருந்த மனோநிலையை வைத்துக்கொண்டு எமது மக்களின் பிரச்சனைகளை இன்று தீர்த்து விடமுடியாது. இன்றைய நிலைமையைச் சரியாகப் புரிந்தே நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதற்கு ஊநுPயு வின் ஒத்துழைப்பும் உதவியும் கிடைக்கும் என்று நம்புகின்றேன்.
நன்றி
வணக்கம்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.