இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

இருமுகத் தோற்றம் -பி.மாணிக்கவாசகம்…

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட தினமாகிய மே 18 ஆம் நாள் நாட்டைஅரசியல் உணர்வு ரீதியாக இரு துருவங்களாக்கியிருக்கின்றது. இன ஐக்கியத்திற்கும், அமைதி, சமாதானத்தி;ற்கும் வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட யுத்த முடிவு தினமானது, அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறிவிட்டது.

அந்த தினம் நேர் முரணான இரு முகத்தோற்றத்தைக் கொண்டிருக்கின்றது. நாட்டின் பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் அது யுத்த வெற்றி தினமாகக் கொண்டாடப்படுகின்றது. ஆனால் வடக்கிலும் கிழக்கிலும், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் உள்ள தமிழ் மக்கள் மனங்களிலும் அந்த தினம் ஆழ்ந்த துயரத்தைத் தரும் ஒரு சோக தினமாக – துக்கதினமாக அமைந்திருக்கின்றது.

பயங்கரவாதம் என அரசுகளினால் வர்ணிக்கப்பட்ட தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்;டத்தை, நாட்டின் தென்பகுதி இன்னும் பயங்கரவாதச் செயற்பாடாகவே நோக்குகின்றது. அடக்குமுறைகளில் இருந்து விடுதலை பெறுவதற்கும், அரசியல் உரிமையை வென்றெடுப்பதற்குமாக நடத்தப்பட்ட அந்த யுத்தம் முள்ளவாய்க்காலில் கோரமான முறையில் முடிவுறுத்தப்பட்டது.

ஆயுதம் எந்தாத அப்பாவிப் பொதுமக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்ட பேரனர்த்தம் அங்கு நிகழ்த்தப்பட்டது. உணவுக்கும் மருந்துக்கும் வழியின்றி வாடிய மக்கள் மீது மிக மோசமான முறையில் எறிகணை தாக்குதல்களும், பீரங்கித் தாக்குதல்களும், விமானக்குண்டுத் தாக்குதல்களும் நடத்தப்பட்டன. இந்த மும்முனைத் தாக்குதலில் பலர் கோரமாகக் கொல்லப்பட்டார்கள். மழையென பொழிந்த துப்பாக்கி வேட்டுக்களும் மக்களை வேட்டையாடியிருந்தன.

யுத்தம் முடிவுக்கு வந்ததுகூட தெரியாத நிலையில், பாதுகாப்புக்காக பதுங்கு குழிகளில் மறைந்திருந்தபோது, பலர் அந்தக் குழிகளிலேயே சுட்டுக் கொல்லப்பட்ட பேரவலமும் நடைபெற்றுள்ளது. இந்த மனிதப் பேரவலத்தின்போது முள்ளிவாய்க்காலிலும், அதனைச் சூழ்ந்த பிரதேசங்களிலும் மக்கள் இரத்த வெள்ளத்தில் மிதந்தார்கள். கடலோரப் பிரதேசமாகிய அந்தப் பகுதி இரத்தத்தில் தோய்ந்தது. மனித அவயவங்களும் இறந்த உடல்களும் அங்கு சிதறிக்கிடந்தன. ஆண், பெண், குழந்தைகள், முதியவர்கள் என்ற பால் நிலை பாராமலும், வயது வித்தியாசமின்றியும் மக்கள் கொல்லப்பட்டார்கள். நேரடியாகக் கண்ட பலர் இந்தத் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றனர்.

இனவாத அரசியல் மனோபாவத்தில் மாற்றமில்லை

முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த சம்பவங்கள் மிகக் கோரமான நிகழ்வாக வரலாற்றில் பதிவாகியிருக்கின்றது. இந்த அவலத்தில் படுகாயமடைந்த பலர், உடனடியான உரிய வைத்திய வசதிகள் கிடைக்காத நிலையில் புண்கள் சிதழ் பிடித்து, சிலருக்குப் புழுக்கள் வைத்த மிக மோசமான துன்ப நிலைக்கு ஆளாகி, மறுபிறவி எடுத்து, உயிர்தப்பி உள்ளனர். முள்ளிவாய்க்கால் சம்பவங்களில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய பலர், காயமடைந்தவர்களுடன் அங்கு நிகழ்ந்த நிகழ்வுகளின் நேரடி சாட்சியாக இருக்கின்றனர். உயிர் தப்பியவர்கள், குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட தமது இரத்த உறவினர்களது சடலங்களை எடுத்;து அடக்கம் செய்யக்கூட முடியாத நிலையில் தமது உயிர்களைப் பாதுகாப்பதற்காக ஓடி வந்திருந்தார்கள்.

உயிர்ப்பாதுகாப்புக்கு வழியின்றி, ஏதிலிகளாகத் தவித்த நிலையில் மக்கள் கொல்லப்பட்ட துயர சம்பங்களை நினைவுகூர்ந்து, அங்கு இறந்தவர்களுக்காக அஞ்சலி; செலுத்தும் நாளாகவே மே 18 ஆம் திகதி வடக்கிலும் கிழக்கிலும் அனுட்டிக்கப்படுகின்றது. ஆனால், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்வதென்பது, தென்னிலங்கையில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கும், விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் தவிர்ந்த ஏனைய அரசியல்வாதிகளுக்கும் விடுதலைப்புலிகளை நினைவுகூர்வதற்கான நிகழ்வாகவே தெரிகின்றது.

மே 18 ஆம் திகதி விடுதலைப்புலிகளையே தமிழ் மக்கள் நினைகூர்கின்றார்கள். இதன் மூலம் யுத்தத்தில் அழிக்கப்பட்ட விடுதலைப்புலிகளை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான முயற்சிகளையே அவர்கள் மேற்கொள்கின்றார்கள் என்று நிலைமையைத் திரித்துக்கூறி இனவாத ரீதியிலான பெரியதொரு பிரசாரமே தென்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலேயே யுத்த மோதல்கள் இடம்பெற்றன. பயங்கரவாதிகளாக மிகைப்படுத்தி உருக்காட்டப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு எதிராகவே இராணுவத்தினர் போரிட்டதாகவும், அந்த வெல்ல முடியாத எதிரிகளை, உயிர்த்தியாகம் செய்து அவர்கள்; வெற்றி கொண்டிருப்பதாகவும் பெருமளவிலான பிரசாரத்தை அன்றைய அரசு மேள்கொண்டிருந்தது. இதனால், விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்த இராணுவத்தினர் சாகசங்கள் புரிந்த வெற்றிக்தாநாயகர்களாகவே சிங்கள மக்கள் மத்தியில் கருதப்படுகின்றார்கள். இனவாத ரீதியிலான இந்த அரசியல் மனோபாவம் அல்லது அரசியல் உளவியல், யுத்தம் முடிவுக்கு வந்து ஒன்பது வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் இன்னும் மாற்றமடையவில்லை.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகளைச் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டு முன்னைய கெடுபிடிகள் நீக்கப்பட்டிருந்த போதிலும் இந்த வருடம் நிலைமைகள் தலைகீழாக நேரிட்டிருக்கின்றது. தடைகள் இல்லாத போதிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் விடுதலைப்புலிகளே நினைவுகூரப்பட்டார்கள் என தெரிவித்து, அந்த நிகழ்வை நடத்திய வடமாகாண சபையை உடனடியாகக் கலைக்க வேண்டும் முதலமைச்சரைக் கைது செய்ய வேண்டும் என்ற கூக்குரல்கள் நாட்டின் தென்பகுதியில் எழுந்திருக்கின்றன.

யுத்தத்தின் பின்னர், இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும், சமாதானத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்துவதற்காக ஒரு பக்கம் நல்லிணக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆயினும் மறுபக்கத்தில், அதற்கு நேர்மாறான இனவாத அரசியல் உளவியலை எந்த அளவுக்கு வளர்த்தெடுக்க முடியுமோ அந்த அளவுக்கு வளர்த்தெடுப்பதற்கான பிரசாரமும், அதற்கிசைவான நடவடிக்கைகளும் மே 18 ஆம் திகதிய நிகழ்வுகளின் பின்னர் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இதனால், பாடுவது தேவாரம், இடிப்பது சிவன்கோவில் என்ற நிலைமையே நாட்டில் உருவாகியிருக்கின்றது.

நினைவேந்தலை நடத்துவதில் நிலவிய போட்டி

இத்தகைய ஒரு பின்னணியில்தான், 2018 ஆம் ஆண்டின் மே 18 ஆம் நாள் வடக்கில் துயரம் தோய்ந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடந்தேறியிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின்போது, பொருந்தாத வகையில் அரசியல் பேசப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி, அங்கு பிரதான உரையாற்றிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் மக்களின் மிக மோசமான துயரநாளாகிய மே 18 ஆம் நாள், அதுவும் அந்தத் துயரங்கள் நடந்தேறிய முள்ளிவாய்க்கால் மண்ணில் பெரும் எண்ணிக்கையானவர்கள் உயிர்த்தியாகம் செய்த இடத்தில்; வடமாகாண சபையின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு ஓர் அரசியல் நிகழ்வாகவே நடத்தப்பட்டது என்ற தோற்றப்பாட்டை அன்றைய நிகழ்வில் இடம்பெற்ற குழப்ப நிலைமை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து நடப்பு வருடமாகிய 2018 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அரசியல் கலப்பற்ற நிகழ்வாக நடத்த வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலானவர்களுடைய மனங்களில் முனைப்பு பெற்றிருந்தது. அதற்கு உருவம் செயலுருவம் கொடுப்பதற்கான முயற்சிகள் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைந்துள்ள வளாகத்தையும் சிரமாதானத்தின் மூலம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களே சுத்தம் செய்தனர். அத்துடன், இம்முறை நாங்களே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தி முடிப்போம் என்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் அறிக்கை விட்டிருந்தனர். அவர்களின் முயற்சிக்கு பொது அமைப்புக்களும் வேறு சில அரசியல் தரப்புக்களைச் சேர்ந்தவர்களும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

ஆயினும் வடமாகாணசபையே தொடர்ச்சியாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தி வருகின்றது. அதன் அடிப்படையில் இம்முறையும் தாங்களே அதனை நடத்தப் போவதாக மாகாண சபையினர் அறிவித்திருந்தனர். ஆயினும் அரசியல்வாதிகளுக்கு இம்முறை இடமளிக்கப் போவதில்லை என்று யாழ் பல்கலைக்கழக மாணவர்; ஒன்றியம் உறுதியாக இருந்தது. தங்களாலேயே நினைவேந்தல் நடத்தப்படும் என்ற நிலைப்பாட்டையும் அது விட்டுக்கொடுக்கவில்லை. இருப்பினும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இம்முறை யார் செய்யப் போகின்றார்கள் என்பதை அறிந்து கொள்வதில், பொதுமக்களையும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரையும் ஆர்வம் மேலிடச் செய்யும் அளவு, இரு தரப்புக்கும் இடையிலான இழுபறி நிலைமை காணப்பட்டது. இறுதியில் ஒருவாறு இரு தரப்பினரும் இணைந்து முதலமைச்சரின் தலைமையில் நிகழ்வை நடத்துவது என்றும், நிகழ்வை நடத்துவதில் பங்களிப்பு செய்வதற்கு முன்வந்த முன்னாள் போராளிகளையும் இணைத்துக் கொண்டு செயற்படுவது என்றும் முடிவாகியது.

என்ன நடந்தது?

நினைவேந்தல் நிகழ்வுக்கான இறுதி ஆயத்தங்களில் முன்ளாள் போராளிகளும், பல்லைக்கழக மாணவர்களும் இணைந்து ஈடுபடுவது என்ற முடிவுக்கு அமைய நினைவேந்தல் முற்றத்தில் செய்யப்பட வேண்டிய ஒழுங்கமைப்பு வேலைகளில் முன்னாள் போராளிகள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். பல்கலைக்கழக மாணவர்களும் அதில் பங்கேற்கச் சென்றிருந்தனர். ஆயினும் பல்கலைக்கழக மாணவர்களே நினைவேந்தல் நிகழ்வை ஆக்கிரமித்திருந்ததைக் காண முடிந்தது.

நினைவுச் சின்னம் அமைந்துள்ள இடத்தைச் சூழ்ந்து, சீருடையிலான ஓர் அணி போன்று கறுத்த உடையணிந்த பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நின்றிருந்தனர். நினைவுச் சின்னத்திற்குப் பாதுகாப்பு வழங்கவா அல்லது அந்த நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய முதலமைச்சருக்குப் பாதுகாப்பு வழங்கவா அவர்கள் நின்றிருந்தனர் என்று கூடியிருந்தவர்கள் மனங்களில் கேள்வி எழும் வகையில் அந்தச் சூழல் அமைந்திருந்தது.

நிகழ்வு என்னவோ முதலமைச்சரின் தலைமையில்தான் நடந்தது என்றாலும், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரே தலைமை தாங்கி இருந்ததையும், அவரை மையமாகக் கொண்டு பல்கலைக்கழக கறுத்த சீருடையில் காணப்பட்ட மாணவர்கள் செயற்பட்டதையும், சூழ்ந்திருந்தவர்களினால் விசேடமாக அவதானிக்காமல் இருக்க முடியவில்லை.

முதலமைச்சருடன் நினைவுச் சின்னம் அமைந்துள்ள இடத்திற்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அனுமதி வழங்கவில்லை. அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததன் காரணமாகவோ என்னவோ நினைவேந்தல் முற்றத்திற்கு வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் முக்கியஸ்தர்கள் எவரும் வேலி வடிவத்தில் பாதுகாக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னத்திற்கு அருகில் செல்லவில்லை.

பதுங்கு குழிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி தனது பெற்றோரையும், உடனிருந்த மாமாவையும் கோரமான முறையில் பறிகொடுத்து, விபரம் அறியாத குழந்தைப் பருவத்தில் தானும் காயமடைந்தவரான கே.விஜிதா, ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தவாறு பிரதான நினைவேந்தல் சுடரை ஏற்றினார. அந்த சம்பவத்தில் அவருடன் இருந்த இளைய சகோதரன் தெய்வாதீனமாக உயிர்தப்பியிருந்தார்.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரிடமிருந்து பெற்ற சுடரை, முதலமைச்சர் கையளிக்க, பெற்று பிரதான சுடர் ஏற்றப்பட்டது, முதலாவதாக விஜிதா மலர் அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் மலரஞ்சலி செலுத்தினார். பிரதான சுடரேற்றப்பட்டபோது, முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைந்துள்ள வளாகத்தில் திட்டமிடப்பட்ட வகையில் சீராக நிறுவப்பட்டிருந்த இடங்களில் இறுதி யுத்தத்தின்போதும், யுத்தச் சூழலிலும் பலியாகிப்போனவர்களின் உறவினர்கள் கண்ணீர் சிந்தி அழுது அரற்றி உணர்வு மேலிட சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

சுடரேற்றி மலர் அஞ்கலி செலுத்தப்பட்டதும், முதலமைச்சர் உரையாற்றினார். நினைவுச் சின்னத்தின் அருகில் எந்த இடத்தில் இருந்து அவர் உரையாற்றுவது அதற்கான மேசையை எவ்விடத்தி;ல் வைப்பது என்பதில் அங்கு குழுமியிருந்த மாணவர்கள் தடுமாறிக்கொண்டிருந்தார்கள். அவிடத்தில் சூழ்ந்திருந்த செய்தியாளர்கள் முதலசை;சருடைய உரையைத் தெளிவாகப் பதிவு செய்வதற்கும் காணொளி மற்றும் புகைப்படம் எடுப்பதற்கும் சிரமம் அடைய நேர்ந்திருந்தது. முதலமைச்சர் உரையாற்றுவதற்கான ஒலிவாங்கியை எங்கு வைப்பது என்பதில் அவர்களும் தீவிர அக்கறை காட்டினார்கள். இதனால் முதலமைச்சரின் உரை இடம்பெறுவதற்கு சீரான ஏற்பாடின்றி, சில நிமிடங்கள் தாமதமாகின. உணர்வுபூர்வமாக சோகம் சூழ்ந்த அந்த இடம் உரையாற்றுவதற்கான ஏற்பாட்டுக்காக இடறிக்கொண்டிருந்தது.

இதனால்தானோ என்னவோ சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தியபோதிலும், உயிரிழந்தவர்களின் ஆன்ம சாந்திக்கான அகவணக்கம் செய்யப்படவில்லை. நிகழ்வுகளை ஒழுங்கமைந்திருந்த பல்கலைக்கழக மாணவர்கள் அதற்கான நிகழ்ச்சி நிரல் இல்லாமல் அலைமோதியதன் விளைவாகவே இதனைப் பார்க்க முடிந்தது.

இத்தகைய ஒரு நிலையிலேயே முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைந்துள்ள இடத்தில் இருந்து செயற்பட்டிருந்த முன்னாள் போராளியான துளசி, அந்த இடத்தில் இருந்து பல்கலைக்கழக மாணவர்கள் சிலரால் தள்ளிச் சென்று வெளியேற்றப்பட்டார். இதனை முதலமைச்சர் கவனித்தாரோ இல்லையோ தெரியவில்லை. ஆனால், அஞ்சலி நிகழ்வில் கூட்டாகப் பங்கேற்றிருந்த முக்கியமான ஒருவர் அந்த இடத்தில் இருந்து இங்கிதமில்லாத முறையில் வெளியேற்றப்பட்டதைக் கண்டுகொண்டதாகவும் தெரியவில்லை. இந்த சம்பவம் பலரையும் மனம் நோகச் செய்திருந்தது. சீற்றடையவும் செய்திருந்தது. இருப்பினும் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட துளசி உட்பட அனைவரும் அமைதி காத்தனர். துயரம் தோய்ந்த அந்த நிகழ்வில் தங்களால் குழப்பம் ஏற்பட்டது அல்லது சலசலப்பு ஏற்பட்டது என்ற பழிச்சொல்லுக்கு ஆளாகிவிடக் கூடாது என்ற எண்ணம் அவர்களிடம் மேலோங்கியிருந்தது என்பதைப் பின்னர் தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது.

நினைவேந்தலின் தன்மை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது ஒரு சாதாரண நிகழ்வல்ல. அது தமிழர்களின் தேசிய அரசியல் சோகம் சார்ந்தது. காலத்தாலும், அடக்குமுறைச் செயற்பாடுகளினாலும் தடுத்து நிறுத்திவிட முடியாத ஆழமான வலிமை கொண்டது. பாதுகாப்பின்றி அலைக்கழி;ந்து, அஞ்சிப் பதை பதைத்து, உடலும் ஆவியும் துடிதுடிக்க அவலமாக மடிந்து போன ஆயிரக்கணக்கானர்களின் ஆன்மாக்கள் அமைதியின்றி அலைமோதுகின்ற ஓரிடத்தில் நிகழ்கின்ற ஒரு நினைவேந்தலாகும். அது மனதைப் பிழிந்து வாட்டுகின்ற சோகம் நிறைந்தது. அமைதியை வேண்டி ஆறாத துயரத்துடன் நெஞ்சங்கள் திடுக்கிடத்தக்க வகையில் நினைவுகூர்கின்ற ஒரு புனிதமான நிகழ்வாகும்.

இந்த நிகழ்வில் அரசியல் இருக்கக் கூடாது என்ற தீர்மானம் ஏற்புடையது. வரவேற்று ஆதரிக்க வேண்டியது. ஆயினும் கட்சி அரசியல் இருக்கக் கூடாது என்பதே அதன் உள்ளார்த்தமாகும். தேர்தல் கால நலன்களைக் கருத்திற்கொண்ட அரசியலாகவோ அல்லது எதிர்கால சுயநல தேவைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியலாகவோ அது அமையக் கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். ஏனெனில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அரசியல் இருக்கக் கூடாது. அரசியல் கலக்கக் கூடாது என்ற நிலைப்பாடும் தன்னளவில் ஓர் அரசியலாகும். கட்சி அரசியல் மற்றும் சுயலாப அரசியல் என்பவற்றை இலக்காகக் கொண்ட குறுகிய நோக்கமுள்ள அரசியலுக்கு அப்பால், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது தமிழ் மக்களின் தேசிய சமூக, கலை, கலாசார ஆட்சி உரிமை சார்ந்த அரசியலை அடிப்படையாகக் கொண்டது. அந்த அரசியல் வெளி பரந்துபட்டது. விசாலமானது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அரசியல் இருக்கக் கூடாது. அரசியல்வாதிகள் எவரும் பங்கேற்கக்கூடாது என்று வரையறை செய்திருந்த பல்கலைக்கழக மாணவர் அரசியலிலும் பார்க்க முள்ளிவாய்க்காலின் உண்மையான அரசியல் அதிக பரிமாணம் கொண்டது. அது தமிழ்த்தேசியத்தை அடிநாதமாகக் கொண்ட தேசிய அரசியலாகும். தமிழ்த் தேசிய அரசியலின் ஓர் அங்கமாக பல்கலைக்கழக அரசியல் இருக்கலாமே தவிர, அந்தத் தேசிய அரசியலின் தலைமையாக மாணவர்களின் அரசியல் வகிபாகம் கொண்டிருக்க முடியாது.

நடந்து முடிந்த முள்ளிவாய்க்காலின் கோர சம்பவங்களை நினைவுகூர்ந்து, அவற்றில் பலியாகிப் போனவர்களின் இறப்பினால் ஏற்பட்ட ஆறாத துயரம் வடிந்தோடுவதற்கான ஒரு வடிகாலாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அமைய வேண்டியது அவசியம். ஆறாத மனத்துயரினால் வாழ்க்கையில் நடைப்பிணமாக மாறியுள்ள ஆயிரக்கணக்கானவர்களின் உளவியல் ஈடேற்றத்திற்கும், துயரங்களைத் தாங்கிக் கொண்டு சவால்களை எதிர்கொண்டு வாழ்க்கையில் எதிர் நீச்சலடிப்பதற்கான மனோ திடத்தை அளிப்பதற்கும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் ஆற்றுப்படுத்தல் வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.

முள்ளிவாய்க்;கால் அவலம் என்பது ஒரு சமூகத்தின் கூட்டுத் துயரம். அந்தத் துயரம் வடிந்து தணிவதற்கு சமூகம் சார்ந்த கூட்டு நினைவேந்தல் அவசியம். மனங்களில் மாறாத துயர வடுக்களாக அமைந்துவிட்ட முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் துயரங்கள் கூட்டுச் செயற்பாட்டின் மூலமாகவே களைந்து தெளிய முடியும். அதேவேளை, ஆறூத துயரத்தைப் போலவே தீராத பிரச்சினையாகத் தொடர்ந்து மனங்களை அழுத்திக் கொண்டிருக்கின்ற அரசியல் உரிமை மறுப்பு என்ற அடக்குமுறைகளைத் தகர்த்தெறிவதற்கான அரசியல் ரீதியான உறுதியையும் உள வலிமையையும் இந்த நினைவேந்தல் நிகழ்வின் ஊடாகப் பெற்றே ஆக வேண்டும். அந்த வகையில் அதற்குரிய தேசிய அரசியல் அவசியம். அது அங்கு புடம்போடப்பட வேண்டியதும் முக்கியம்.

நடந்ததும் நடக்க வேண்டியதும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வையொட்டி, மே 18 ஆம் திகதி காலை 11 மணிக்கு மக்கள் தாங்கள் தாங்கள் இருக்கும் இடங்களில் எழுந்து நின்று அகவணக்கம் செலுத்த வேண்டும். அமைதியான பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும் என்று முதலமைச்சர் அறிக்கையொன்றில் பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், பிரதான நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்ற முள்ளிவாய்க்காலில் அகவணகக்ம் செலுத்தப்படவில்லை. இறந்தவர்களின் ஆன்ம சாந்திக்காக சில நொடிகளாவது கண்களை மூடி அமைதியாக பிரார்த்தனை செய்யவில்லை.

நினைவேந்தல் நிகழ்வுக்கான நிகழ்ச்சிகள் பல்கலைக்கழக மாணவர்களின் நிரல் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றிருக்கலாம். ஆனால், சாதாரண ஒரு நிகழ்வில்கூட ஆரம்பத்தில் மங்கல விளக்கேற்றலுடன் அமைதிப் பிரார்த்தனை செய்வது எம்மவர்களின் பாரம்பரிய வழக்கம். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின்போது பாரம்பரிய பழக்கத்திற்கு அமைய அமைதிப் பிரார்த்தனை செய்யப்படவில்லை. அகவணக்கம் இடம்பெறவில்லை.

வடமாகாண சபையும், பல்கலைக்கழக மாணவர்களும், முன்னாள் போராளிகளும் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், முன்னிலையில் இருந்து செயற்பட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முக்கியஸ்தர்கள் அந்த நிகழ்வை முழுமையான ஆக்கிரமிப்பு நோக்கில் நடத்தியிருந்தமை பலரையும் முகம் சுழிக்கச் செய்திருக்கின்றது. மனம் வருந்தவும் செய்திருக்கின்றது. எரிச்சலடையவும் செய்துள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கடந்த வருடம் அரசியல் ரீதியான தலையீடு இடம்பெற்றிருந்தது என்ற ஒரே காரணத்திற்காக வடமாகண சபையினருக்கோ அல்லது முன்னாள் போராளிகளாக இருக்கலாம் அல்லது வேறு யாராகவும் இருக்கலாம் அவர்களால் அரசியல் கலப்பின்றி அந்த நிகழ்வை நடத்த முடியாது என்று தீர்மானித்துச் செயற்பட முற்படுவது அல்லது செயற்படுவது ஏற்புடையதல்ல.

நெருக்கடிகள் மிகுந்திருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் 2010 ஆம் ஆண்டு வவுனியாவில் அப்போதைய வவுனியா பிரஜைகள் குழு மற்றும் பல்வேறு தரப்பினருடைய ஒத்துழைப்புடன், மோசமான உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுட்டிக்கப்பட்டது. இதற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மிகுந்த துணிவோடு செயற்பட்டிருந்தார்.

முதல் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மண்டபத்தில் அதனை நடத்த முடியாது என்று இறுதி நேரத்தில் மண்டபத்திற்குப் பொறுப்பானவர்கள் கைவிரித்துவிட்டார்கள். மண்டபக் கதவுகள் இறுக்கி மூடப்பட்டு எவரும் உள்ளே நுழைய முடியாதவாறு தடுக்கப்பட்டிருந்தது. புலனாய்வாளர்களின் நேரடியான அச்சுறுத்தல் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டிருந்தது. இதனால் அப்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அறிவிக்கப்பட்டவாறு நடைபெறுமா என்பது சந்தேகத்திற்குரியதாகியது. இருப்பினும் இறுதி நேர ஏற்பாடாக வவனியா நகரசபை மண்டபத்தில் எண்ணிக்கையில் அதிகூடிய புலனாய்வாளர்களுடனும், பாதிக்கப்பட்ட மக்களில் சிலரும் மற்றும் பொதுஅமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் அனைவரையும் புலனாய்வாளர்கள் பல கோணங்களில் படம் பிடித்தும் வீடியோ காட்சிகளில் பதிவு செய்தும் எடுத்துச் சென்றார்கள். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களாக 2015 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்;தியில் அந்த நினைவேந்தல் நிகழ்வு அனுட்டிக்கப்பட்டது. மாகாணசபை இயங்கத் தொடங்கியதையடுத்து, 2016 ஆம் ஆண்டு முதன் முறையாக முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நடத்தப்பட்டது.

இதேபோன்று யாழ் பல்கலைக்கழகத்தின் உள்ளே அன்றைய மாணவர்கள் மோசமான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்தியிருந்தார்கள். இந்த நினைவேந்தல் நிகழ்வை நடத்தியதற்காகப் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டார்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். இதேபோன்று கிளிநொச்சியிலும் பின்னர் முல்லைத்தீவிலும் அருட்தந்தையர்களினால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இந்து ஆலயங்களிலும் ஆத்ம சாந்திப் பூசையுடன் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. கிழக்கு மாகாணத்தில் பலராலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுட்டிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் யார் பங்கேற்க முடியும் யார் பங்கேற்க முடியாது என்பதைத் தீர்மானிப்பதற்கு எவருக்குமே அதிகாரம் கிடையாது. எனவே, நடந்து முடிந்த நிகழ்வில் விமர்சிக்கப்படுகின்ற அளவுக்கு இடம்பெற்றிருந்த குறைகள் அடுத்த நினைவேந்தலின்போது இடம்பெறக்கூடாது என்பதை இப்போதே உறுதி செய்து கொள்ள வேண்டும். யுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்;வு விடுதலைப்புலிகளுக்கு மீண்டும் உயிரூட்டுவதற்காகவே நடத்தப்படுகின்றது என்ற பேரினவாதிகளின் இனவாத அரசியல் மனோபாவம் உயிர்த்திருக்கின்ற சூழலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அரசியல் ரீதியான உயிர்ப்பை அடிப்படையாகக் கொண்டு திறம்பட திட்டமிட்டுச் செயற்படுத்தப்பட வேண்டும்.

மோசமடைந்து செல்கின்ற நாட்டின் அரசியல் சூழலில் இது மிகவும் அவசியம். இது ஒரு வரலாற்றுத் தேவை என்றே கூற வேண்டும்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.