இலக்கியம் உலகம் பிரதான செய்திகள்

‘என் குரல் ஒருவரைக் கொல்லுமென்றால், இனி பேசவே மாட்டேன்!’ 

கறுப்பினப் பெண் கவிஞர் மாயா ஏஞ்சலோவின் நினைவுநாள் இன்று


உங்கள் கடுப்பான, திரிக்கப்பட்ட பொய்களால் வரலாற்றில் என்னை நீங்கள் வரைந்திருக்கலாம்
பாழ் சகதியில் என்னை நீங்கள் மிதித்துத் துவைத்திருக்கலாம். அப்படி இருந்தாலும், தூசிப்புழுதியாக, நான் உதித்தெழுவேன்.

– மாயா ஏஞ்சலோ.

கறுப்பின எழுத்தின் பெண்ணிய அடையாளமாக ஒளிவீசியவர் மாயா ஏஞ்சலோ. ஆனால், மாயாவின் வாழ்க்கை மகிழ்ச்சியின் பிரகாசம் படர்ந்ததாக இல்லை. மிக எளிய குடும்பத்தில் பிறந்து எண்ணற்ற ஒடுக்குமுறைகளைச் சந்தித்தவர் மாயா. மாயா ஏஞ்சலோ ஓர் எழுத்தாளர் மட்டுமல்ல. கவிஞர், நடிகை, நாடக ஆசிரியர், பாடலாசிரியர், பத்திரிகையாளர், பெண்ணுரிமைப் போராளி… இப்படிக்கூறிக்கொண்டே செல்லலாம்.

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் 1928 ஆம் ஆண்டு ஏப்ரல் 4- ம் நாள் பிறந்தவர் மாயா ஏஞ்சலோ. இவருடைய சகோதரர் பெய்லி ஜூனியர் தான் ‘மாயா’ எனும் பெயரைச் சூட்டுக்கிறார். குழந்தைகள் மீதான வன்முறை அவர்களுடன் நன்றாக பழகும் உறவினர்கள் அல்லது தெரிந்தவர்களால்தான் நிகழ்கிறது என்பார்கள். அதுபோன்ற சம்பவம்தான் மாயாவுக்கும் நிகழ்ந்தது. மாயாவுக்கு எட்டு வயதாக இருக்கும்போது, அவரின் அம்மாவின் நண்பரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். தன் உடல் பற்றிய முழுமையாக அறிந்துகொள்ளும் வயதுக்கு முன்பே இப்படியான நடந்ததில் கதறி அழுகிறார். தனக்கு நேர்ந்த கொடுமையை தன் சகோதரனிடம் சொல்கிறார். மாயாவை பலாத்காரம் செய்தவர் ஓரிரு நாட்களில் இறந்துவிடுகிறார் எனும் செய்தி கிடைக்கிறது. இதனால், மாயா மன ஆறுதல் அடைவார் என எண்ணத்திற்கு மாறாக, மாயா இன்னும் பேரதிர்ச்சியில் ஆழ்கிறார்.

‘தன் குரல் ஒருவரைக் கொல்லும் என்றால் இனி நான் பேசவே மாட்டேன்’ என முடிவெடுக்கிறார். சில ஆண்டுகள் வரை அவரின் உறுதி நீடிக்கிறது. பெர்கா ஃபிளவர்ஸ் என்பவர் மாயாவின் நண்பர் மட்டுமல்ல ஆசிரியரும்கூட. அவரே மாயாவை இயல்பு நிலைக்குத் திரும்ப வைக்கிறார். புகழ்பெற்ற இலக்கியப் படைப்புகளைத்தந்து படிக்க வைக்கிறார். எழுதவும் தூண்டுகிறார்.

மாயா தனது 17 வது வயதில் தன் வலிகளை எழுத்தாக இறக்கி வைத்து ‘I Know Why the Caged Bird Sings’ என்ற நூலை எழுதுகிறார். அதனை தொடர்ந்து வெவ்வேறு விஷயங்களை எழுதுகிறார். மாயா ஏஞ்சலோவுக்கு மூன்று கட்டுரைத் தொகுப்புகளும் பல கவிதைத் தொகுதிகளும் வெளிவந்துள்ளன. நாடக நடிகை, நைட் கிளப் டான்ஸர் உள்ளிட்ட ஏராளமான வேலைகளைப் பார்த்துள்ளார்.

மாயா ஏஞ்சலோவின் வாழ்க்கை வரலாறாக ஆறு நூல்கள் வெளிவந்துள்ளன. கறுப்பினப் பெண்களின் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் வலிமிகுந்த சிக்கலான தருணங்களை, அதன் துயர் கொஞ்சமும் குறையாமல் தன் படைப்புகளில் பதிவுசெய்பவராக மாயா திகழ்ந்தார். இவரின் கவிதைகள் வெளிப்படையாக தன் குரலை உரக்கக் கூறியப்போதிலும் இலக்கிய நுட்பங்களிலும் கொஞ்சமும் குறை வைப்பன அல்ல. ‘கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது என்று எனக்குத் தெரியும்’ எனும் தன் சுயசரிதை மூலம் உலகம் முழுவதும் கவனம் பெற்றார். சர்வதேச அளவில் பலவித விருதுகளையும் பெற்றார்.

பெண் விடுதலையின் முகமாக வாழ்ந்த மாயா கடந்த 2014 ஆம் ஆண்டு தன் இன்னுயிரை நீத்தார். ஆயினும் அவரின் படைப்புகள் வாசகர்களோடு உரையாடிக்கொண்டேத்தான் இருக்கின்றன. அவை மாயா ஏஞ்சலோவின் இருப்பை தொடர்ந்து தக்கவைக்கும் என்று நிச்சயம் நம்பலாம்.

மாயா ஏஞ்சலோவின் கவிதை…

கூண்டுப் பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத் தெரியும்

சுதந்திரப் பறவை காற்று மீதேறித் தாவிப் பாயும்
விசைதீரும் வரை சமநிலைகொண்டு மிதக்கும்
ஆரஞ்சுவண்ண சூரியக் கதிர்களில்
தன் சிறகுகளை நனைக்கும்
வானத்தை உரிமைகொள்ளும் தைரியமும் பெறும்.

ஆனால் கூண்டுப்பறவை தன்
குறுகிய கூட்டுக்குள் அலைகிறது.
ஆத்திரம் அதன் கம்பிகள்
எப்போதாவது அதன் வழியே பார்க்க முயலும்

அதன் சிறகுகள் கத்தரிக்கப்பட்டும்
அதன் கால்கள் விலங்கிடப்பட்டும் உள்ளன.
பாடுவதற்காக அது தன் வாயைத் திறக்கிறது.

கூண்டுப் பறவை பாடுகிறது
அறியாத விஷயங்களை நினைத்து
பயந்து நடுங்கிக்கொண்டு,
ஆனால் சாசுவத ஏக்கம்கொண்டு.
சுதந்திரத்துக்காகக்
கூண்டுப்பறவை பாடுகிறது
தொலைதூர மலைகளில்
அதன் இசை எதிரொலிக்கிறது.

சுதந்திரப்பறவை இன்னுமொரு தென்றலை நினைக்கிறது
பருவக்காற்று சலிக்கும் மரங்கள் வழியே மெதுவாக வீசும்.
கொழுத்த புழுப்பூச்சிகள் உணவாகக்
விடியல் வெளித்த புல்தரையில் காத்திருக்கும்,
வானம் தனக்கே சொந்தம் என்று அது பெயரிட்டழைக்கும்.

ஆனால் கூண்டுப் பறவை
கனவுகளின் கல்லறையில் நிற்கிறது.
ஒரு பயங்கரக் கனவின் அலறல் மீது
அதன் நிழல் பிரவேசிக்கிறது
அதன் சிறகுகள் கத்தரிக்கப்பட்டும்
அதன் கால்கள் கட்டுண்டும் உள்ளன,
பாடுவதற்காக அது தன் வாயைத் திறக்கிறது.

கூண்டுப் பறவை பாடுகிறது,
அறியாத விஷயங்களை நினைத்து
பயந்து நடுங்கிக்கொண்டு
ஆனால் சாசுவத ஏக்கம்கொண்டு.
சுதந்திரத்துக்காகக்
கூண்டுப்பறவை பாடுகிறது,
தொலைதூர மலைகளில்
அதன் இசை மோதி எதிரொலிக்கிறது.

(‘I Know Why The Caged Bird Sings’)

(நன்றி: கால சுப்ரமணியன் மொழிபெயர்த்து, மலைகள் இதழில் வெளிவந்தது)

-வி.எஸ்.சரவணன்

நன்றி: விகடன்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.