இலங்கை பிரதான செய்திகள்

வலிமைமிக்க சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்ப ஆசிரியர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்

‘வலிமைமிக்க சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்ப ஆசிரியர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்’ என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
வடக்கு மாகாணசபையின் 2017 ஆம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கற்கோவளம் மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்….
ஒரு நாட்டினுடைய உயர்ச்சியையும் வீழ்ச்சியையும் தீர்மானிப்பதென்பது அந்த நாட்டின் மக்களுடைய அறிவு வலிமை. இந்த அறிவு வலிமையினுடைய அடித்தளம் பாடசாலை. அதனைக் கொடுப்பவர்கள் ஆசிரியர்கள். ஆகவே எங்களுடைய சமூகத்திலிருக்கும் ஆசிரியர்களின் முக்கியத்துவம் இரட்டிப்பாகும். எங்களுடைய ஆசிரியர்கள் பல விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என நான் இந்த இடத்தில் கேட்டுக்கொள்கிறேன்.  எங்களுடைய மாணவர்கள் ஒவ்வொருவரையும் நீங்கள் வல்லுனர்களாக ஆக்கவேண்டும்.  அவ்வாறு அவர்களை வல்லுனர்களாக ஆக்கவேண்டுமாக இருந்தால் அவர்களுடைய ஆற்றல்களை ஆசிரியர்கள் அடையாளம் காணவேண்டும். அவர்களின் ஆற்றல்களை அடையாளம் கண்டு அவர்களை உச்சாகப்படுத்த வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் 70,80 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏறத்தாள 68மூ மான மாணவர்கள் விஞ்ஞான கணிதத்துறைகளிலேயே கல்வி கற்றனர்.  ஆனால் தற்போது உயர் தரத்தில் அதிக மாணவர்கள் கலை வர்த்தக பாடங்களையே தெரிவு செய்கின்றனர்.
வடக்கு மாகாணத்திலே 70 ஆம் 80 ஆம் ஆண்டு காலப்பகுதிகளிலே தன்னுடைய தேவைக்கு மேலதிகமாக கல்வி நிர்வாக சேவையாளர்களையும்  சிவில் சேவையாளர்களையும் நீதி நிர்வாக சேவையாளர்களையும் உருவாக்கியிருந்தது. இலங்கையின் சனத்தொகையில் 12% மான சனத்தொகையை கொண்டிருந்தாலும் நாங்கள் 30% மான கல்வி நிர்வாகசேவையாளர்களையும் சிவில் சேவையாளர்களையும் நீதி நிர்வாக சேவையாளர்களையும் ஏனைய மாகாணங்களுக்கு வழங்கிக்கொண்டிருந்தோம்.
ஆனால் தற்போது அந்த நிலை மாறி எமது மாகாணத்தில் கடமையாற்றக்கூடிய சிற்த வல்லுனர்களை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றது. எங்களுடைய வைத்தியசாலைகளிலே தமிழ் வைத்தியர்கள்,தமிழ் தாதியர்கள் அருகிக்கொண்டு செல்கிறார்கள். அதிகமாக சிங்கள வைத்தியர்களும்,சிங்கள தாதியர்களும் தென்னிலங்கையிலருந்து வந்து பணி செய்துகொண்டிருக்கின்றார்கள்.
ஆகவே எங்களுடைய மாணவர்கள் அதிகமாக விஞ்ஞானத்துறையை நோக்கி நகர வேண்டும். மாணவர்கள் விஞ்ஞானத்துறையை நோக்கி நகர வேண்டுமாக இருந்தால் ஆசிரியர்களினுடைய பங்களிப்பு மிக மிக அவசியமானது.  ஆசிரியர்கள் மாணவர்களை ஆரம்பத்திலிருந்தே விஞ்ஞானத்துறை நோக்கி நகர்த்த வேண்டும்.
இவ்வாறு நாங்கள் செய்வோமாக இருந்தால் கண்டிப்பாக நாங்கள் எங்களுடைய ஒவ்வொரு மாணவர்களையும் வல்லுனர்களாக்க முடியும். எந்தவொரு மாணவனும் குறைந்தவனல்ல. எல்லா மாணவர்களிடத்திலும் ஏதாவது ஒரு ஆற்றல் ஒளிந்திருக்கிறது. அந்த ஆற்றல்களை அடையாளம் காணுகின்ற ஆற்றல் ஆசிரியர்களுக்குத்தேவை.
மாணவர்களுடைய ஆற்றலைக் கண்டுபிடித்து வளர்ப்போமாக இருந்தால் ஒவ்வொரு மாணவர்களும் ஏதாவது ஒரு துறையில் வல்லுனர்களாவார்கள். அவ்வாறு வல்லுநர்களாக மாறுகின்ற போது எங்ளைப்பொறுத்தவரை எங்களுடைய இனம் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் அறிவிலும் வலிமையிலும் அதிகமாக இருக்கவேண்டும். வலிமைமிக்க சமூகமாக இருக்கும். அத்தகைய வலிமைமிக்க சமூகமாக எமது சமூகம் நிலைபேறானதாக இருக்கும்.
நிலைபேறான ஒரு சமூகமாக இருப்பதற்கு எங்களுடைய பரம்பரை இங்கு தலை நிமிர்ந்து வாழ்வதற்கு எங்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய பொறுப்பிருக்கிறது.  அந்தப்பொறுப்பு சாதாரணமானதல்ல. அந்த மிகப்பெரிய பொறுப்பை உணர்ந்து ஒவ்வொரு ஆசிரியர்களும் மேலும் தங்களுடைய சேவைகளை அதிகமாக்கி செயற்படவேண்டும். என்றார்.
வடக்கு மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கிகீட்டில்  வடமராட்சி கற்கோவளம் மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலைக்கு புதிய விஞ்ஞான ஆய்வு கூடம் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு 30.05.2018 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான தர்மலிங்கம்,சுகிர்தன் வடமராட்சி கல்வி வலய பணிப்பாளர் நந்தகுமார், வடக்கு மாகாண கல்வி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் அனந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.