Home இலங்கை பேராசை பெருநாசம் என்பதை மறவாதிருப்போமாக…….

பேராசை பெருநாசம் என்பதை மறவாதிருப்போமாக…….

by admin


வணக்கத்திற்குரிய சமயப் பெரியார்களே, இந்த நிகழ்வை சிறப்பிப்பதற்காக வருகை தந்திருக்கும் வடமாகாண ஆளுநர் கௌரவ இறெஜினோல்ட் குரே அவர்களே,இந்திய நாட்டின் உபஸ்தானிகர் அவர்களே,கௌரவ விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் அவர்களே, யாழ் மாநகரசபையின் நகரபிதா இம்மானுவேல் ஆனோல்ட் அவர்களே,கௌரவ அதிதிகளே, சிறப்பு அதிதிகளே, உயரதிகாரிகளே, சகோதர சகோதரிகளே, குழந்தைகளே!

ஒவ்வொரு ஆண்டும் யூன் ஐந்தாந் திகதி உலக சுற்றாடல் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்துள்ளது. இந்த நாளை சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக ஐக்கிய நாடுகள்சபைபயன்படுத்தி வருகின்றது. உயிர்களின் சுக வாழ்க்கை தொடர்பாக பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு மனித குலம் முகங்கொடுக்க வேண்டியுள்ளது.ஆகவே சுற்றுச் சூழலைச் சீராக்கவும் சூழலைப் பேணுவதில் விழிப்புணர்வை ஏற்படுத்தவுமே சுற்றாடல் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இயற்கை வளங்களான நீர் நிலைகள், காடுகள், வனாந்தரங்கள், வனசீவராசிகள், வளிமண்டலம், பறவைகள், கடற்கரைகள் என அனைத்தும்இறைவனால் வடிவமைக்கப்பட்ட இயற்கைப் பொக்கிஷங்களாவன. மனித குலம், விலங்கினம், பறவையினம், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு எங்கள் சுற்றுச்சூழலின் சமநிலையிலேயே தங்கியுள்ளது. இச்சமநிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் சுற்றுச்சூழலை மட்டுமன்றி உயிரினங்களின் நல்;வாழ்வுக்கு அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றன. நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப, கைத்தொழிற்துறை வளர்ச்சியின் காரணமாக சூழல் மிகமோசமாக மாசடைந்து வருகின்றது.அளவுக்கதிகமான பொலித்தீன் பாவனை சூழலை மிகமோசமாகப் பாதிப்படையச் செய்;துள்ளது. கடல்வாழ் உயிரினங்களுக்கும் நீர்நிலைகளில் வாழும் உயிரினங்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அதனாலேயே 2018ம் ஆண்டுக்குரிய சூழல் விழிப்புணர்வு திட்டத்தில் “Beat Plastic Pollution”   எனும் தொனிப்பொருளில் நெகிழ் எனப்படும் பிளாஸ்டிக் பாவனையால் சூழல் மாசடைதலை வெல்வோம் எனும் அர்த்தத்திலான முன்னெடுப்புக்கள் உலகம் பூராகவும் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில் வடமாகாணத்தின் யாழ் மாவட்ட எல்லைக்குட்பட்ட யாழ் பிரதேச செயலகம், நகர அபிவிருத்தி அதிகாரசபை, யாழ் மாநகரசபை ஆகியன எமது விவசாய அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கின்ற இன்றைய இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.

ஆதிகாலத்தில் மனிதன் இயற்கையை ஐம்பெரும் பூதங்களாக அடையாளங்கண்டு அவற்றை வணங்கி வாழ்ந்தான். நாகரீகம் சற்று வளர்ச்சிபெற மனிதன் இயற்கையைச் சார்ந்து வாழப் பழகிக் கொண்டான். இன்னும் சிறிது காலம் செல்ல இயற்கையை நம்பி தனது விவசாய முயற்சிகளையும் ஏனைய முன்னெடுப்புக்களையும் ஆற்றத் தொடங்கினான்.ஆனால் காலஞ் செல்லச் செல்ல மனிதனின் சுய நலமும் அகந்தையின் ஆதிக்கமும் இயற்கையை அழிக்க வழிவகுத்தது. இன்று இயற்கையை அழித்து வாழ முற்பட்டதால் சூழலில் பாரிய மாற்றங்களும் தீங்கான விளைவுகளும் ஏற்பட்டுள்ளன. இவ்வாறுமனித குலத்திற்கு ஏற்படக்கூடிய பாரிய தீங்குகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.

எம்மைச் சுற்றியுள்ள காடுகளும் அவற்றில் காணப்படும் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பாரிய விருட்சங்களும் வகைதொகையின்றி தறித்து அகற்றப்பட்டதன் விளைவே இன்று மழைவீழ்ச்சி குன்றி வருடாந்தம் ஏற்படக்கூடிய சாதாரண மழைவீழ்ச்சியான 1250அஅ கூட கிடைக்கமுடியாத அளவுக்கு சூழல் மாசுபடுத்தப்பட்டுள்ளது. இந்த நிலை தவிர்க்கப்பட வேண்டும். கடந்த வருடங்களில் வடமாகாணசபையினால் முன்னெடுக்கப்பட்ட மரம் நடுகை நிகழ்வுகளுக்கு ஒப்பாக இந்த வருடம் கௌரவ ஆளுநர் மற்றும் நகர பிதா ஆகியோரால் தெரிவுசெய்யப்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகளை நாட்டுகின்ற நல்ல நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றன. இவ்வாறு வருடா வருடம் நாட்டப்படுகின்ற மரக் கன்றுகள் அதே நிலையங்களில் திரும்பவும் நாட்டப்பட வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தக்கூடாது. ஆகவே மரம் நாட்டுகை விழாவின் பின்னரும் நாட்டப்பட்ட மரங்கள் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும். வீதியோரங்களில் இருமருங்குகளிலும் நாட்டப்படுகின்ற இம் மரங்கள் வீதி ஒழுங்குகளுக்கு இடையூறுகள் அற்ற வகையிலும் அதே நேரம் உயர்ந்து வளர்ந்து வீதிக்கு நிழலைக் கொடுக்கக்கூடியதாகவும் மழைவீழ்ச்சிக்கு உதவுவனவாகவும் அமைந்திருத்தல் அவசியம்.

பொலித்தீன் பாவனை தொடர்பாக பல்வேறு கவனயீர்ப்பு நடவடிக்கைகளை வடமாகாணசபை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. பொலித்தீனானது நூறு வீதம் பாவனைக்குதவாத பொருளாக பிரகடனப்படுத்தப்படாத போதும் மாற்றீடாக இலகுவில் உக்கக்கூடிய பிரதியீடுகளின் பாவனை மேற்கொள்ளப்படுகின்றமை விரும்பத்தக்கது.

பொலித்தீன் போன்ற பொருட்களால் கடற்கரையோரங்கள் மிகக்கூடுதலான அளவில் மாசடைகின்றன. இவற்றை மாசடையச் செய்யக்கூடிய நிறுவனங்கள் அல்லது தனி நபர்களின் விற்பனை ஸ்தாபனங்கள் ஆகியவற்றின் கழிவுகள் முறையாக அகற்றப்படுகின்றனவா என்பதை மாநகர சபை கண்காணித்தல் வேண்டும். புதிதாக முளைத்துள்ள மாபெரும் நட்சத்திர ஹோட்டல்களும் அவற்றிற்குச் சமமான விடுதிகளும் தமது கழிவுகளை எவ்வாறு அகற்றுகின்றார்கள் என்பது தொடர்பில் கண்காணிப்புக்கள் அவசியமானவை. அபிவிருத்தி அபிவிருத்தி என்று கூறி அமைக்கப்படும் கட்டிடங்களும், ஆலைகளும் எவ்வகையான சூழல் மாசடைவுகளை ஏற்படுத்துவன என்று யோசிக்காமலே நாம் பேராசையால் உந்தப்பட்டு நடவடிக்கைகளில் இறங்குகின்றோம். பேராசை பெருநாசம் என்பதை மறவாதிருப்போமாக.

விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ச்சியடைய முன்னர் வாழ்ந்த மக்களுக்கு சூழல் பற்றிய நுணுக்க அறிவோ அல்லது விஞ்ஞான விளக்கங்களோ தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவர்கள் சூழலைப் பாதுகாக்கின்ற அறத்தை நன்கு தெரிந்து வைத்திருந்தார்கள். இயற்கையைத் தெய்வமாகவே கணித்தார்கள். மழைக் காலங்களில் வீட்டைச் சுற்றியுள்ள புற்தரைகளில் தேங்கும் நீரைச் சேமித்து நிலத்தடி நீரின் மட்டத்தை அதிகரிக்கச் செய்வதற்காகத் தமது காணி எல்லைகளைச் சுற்றி வரம்பு அமைக்கப் பழகிக் கொண்டிருந்தார்கள். அதாவது இறைவன் தந்த கொடையைப் பாதுகாத்தார்கள். வீண்விரயம் செய்யவில்லை. அதே போன்று தனது குடிசை ஓட்டைக் குடிசையாக இருந்தாலும் மழை பெய்தால் வீடு முழுவதும் நனைந்து விடும் என்று தெரிந்திருந்தும் மாதத்திற்கு ஒரு மழையாவது பெய்ய வேண்டும் எனப் பிரார்த்திக்க அவன் தவறவில்லை. தென்னிந்தியாவில் மாதம் மும்மாரி மழை பொழிய வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள்.

சூழலை மனிதன் நேசித்து வாழ்ந்ததால் அல்லது மதித்து வாழ்ந்ததால் சூழலும் மனிதனுக்கு ஏற்றம் மிகுந்த வாழ்வை வழங்கியது. உணவுக்கு பஞ்சமில்லை, குடிநீருக்குப் பஞ்சமில்லை, சுவாசிக்கத் தூய காற்று கிடைத்தது. கிருமிநாசினி பாவனையற்ற மரக்கறி, உரப்பாவனையற்ற அரிசி என அனைத்தும் அவனுக்கு உதவுவனவாக இருந்தன. இன்று விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. மனிதன் செவ்வாயில் காலடி வைக்க எத்தனித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இயற்கையின் அழிவைத் தடுப்பதற்கு போதுமான முயற்சிகள்மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலைக்குரியது.

அண்டை நாடான இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.அவர்களுடைய விவசாய நிலங்கள் துண்டு துண்டாகப் பிரிக்கப்பட்டு, அடுக்குமாடிகள் கட்டப்பட்டும், தொழிற்சாலைகள் அமைத்தும் விற்பனை செய்யப்படுகின்றன. தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட செம்பு உற்பத்தி செய்யும் ஆலை கோடிக்கணக்கான ரூபா வருமதிகளை இந்தியாவிற்குப் பெற்றுக் கொடுக்கலாம். ஆனால் உணவை உற்பத்தி செய்வதற்கு விவசாய நிலம் அவசியமாகும். அதைப்பற்றி எமது அண்டை நாடு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. என்னை அண்மையில் சந்தித்த ஐக்கிய நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் உங்கள் விவசாய நிலங்களில் ஏன் தொடர்ந்து பணச்செலவையும் நட்டத்தையும் ஏற்படுத்தக்கூடிய நெல் உற்பத்தி செய்கின்றீர்கள் மாறாக அரிசி விலை குறைவான நாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்யலாமே என வினவினார்.

நான் அவருக்கு பதிலளிக்கும் போது எமது மக்கள் குத்தரிசி சோற்றையே சாப்பிட்டுப் பழகியவர்கள். அவர்களுக்கு வெள்ளை அரிசி உணவு ஒத்துவராது. மேலும் நீங்கள் கூறுவது போல அனைவருமே அரிசியை விலைக்கு வாங்க முற்பட்டால் வெளிநாட்டு அரிசி கிடைக்கத் தாமதம் ஆகுந் தருணங்களில் எமக்காக அரிசியை உற்பத்தி செய்யப்போவதுயார்? என வினவினேன். ‘சந்தையில் கிடைக்கும்’ என்றார். பல காரணங்களுக்காக அரிசி வரத்தடைப்படலாம் என்று கூறி மழையின்மை, போர், சுனாமி போன்ற பலதையும் குறிப்பிட்டேன். அவர் சிரித்தார். ஆனால் இன்று ஐ.நா சபையினர் இந்தவாறான நாட்டுக்கு நாடு ஏற்படுத்தக்கூடிய ஒத்துழைப்பையே வலியுறுத்தி வருகின்றார்கள்.  எனவே சுற்றாடலும் சூழலும் எமக்கு இசைவாக அமையக்கூடிய வகையில் நாம் சூழலை மாற்றி அதனை நேசிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

எமது அளவுக்கு மிஞ்சியதான கிருமிநாசினிப் பாவனை,இரசாயனக் கலவைப் பாவனை ஆகியன எமக்கு உதவக் கூடிய சிறு சிறு பறவை இனங்களையும் பூச்சி, புழுக்கள் இனங்களையும் முற்றாக இல்லாது ஒழித்துவிட்டன. அதே போன்று கையடக்கத் தொலைபேசிகளில்குறுக்கும் நெடுக்குமாக செய்திகளைஅனுப்பிக் கொண்டிருக்கின்ற நுண் அலை வரிசைகள் சிட்டுக் குருவி போன்ற சிறிய சிறிய பறவை இனங்களை இல்லாது ஒழித்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.

எனவே எமது சிறு சிறு சந்தோஷங்களுக்காக பயன்படுத்துகின்ற இலத்திரனியல் சாதனங்கள் சூழலில் எவ்வளவு பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றனஎன்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் இன்று பழமையான வாழ்க்கை முறைக்கு திரும்ப வேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலையில் இருக்கின்றோம் என்றால் அது மிகையாகாது.

பூடானின் அரசர் அண்மையில் தமது நாட்டைப் பற்றி கூறியிருந்தார். அங்கு கட்டாயமாக 72 சதவீத அந் நாட்டின் நிலம் காடாக அமைய வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டிருக்கின்றது. எங்கள் வன்னியிலோ இருக்குங் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. கூகுள் மூலமாகப் பார்த்தால் அடர்ந்த காட்டினுள் எவ்வாறு மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வெட்டை வெளியாக நிலங்கள் காணப்படுகின்றன என்பது தெரியவரும்;. இவை தாமாக அழிவதில்லை. அழிக்கப்படுகின்றன.

ஆகவே சூழலை பாதுகாக்கக் கூடிய மரங்களை நாட்டுகின்ற கடமைகளையாவது நாம் விரைந்து செயற்படுத்த வேண்டும். இன்றைய நிகழ்வை சிறப்பாக நடத்த சகல வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கிய எமது ஆளுநர் அவர்களுக்கு எமது நன்றிகள் உரித்தாகுக! அதே போல் எமது நகரபிதா அவர்களுக்கும் எமது பாராட்டுக்கள் உரித்தாகுக! தொடர்ந்து மரங்கள் நாட்ட பொதுமக்கள் அனைவரதும் ஒத்துழைப்புக்கள் கிடைக்கப் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு இன்றைய இந்த நல்ல தினத்தில் வீட்டுக்கொரு மரம் நாட்டுவதற்கும் அனைவரும் முன்வர வேண்டும் எனத் தெரிவித்து எனது உரையை நிறைவு செய்கின்றேன்.
நன்றி
வணக்கம்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்
சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு யாழ் மாநகரசபை,வடமாகாண விவசாய அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் யாழ் பிரதேச செயலகம் ஆகியன
ஒன்றிணைந்து முன்னெடுக்கும்
மரம் நடுகை விழா – 2018
யாழ்ப்பாணம் முற்றவெளித் திடல், யாழ்ப்பாணம்
2018.06.05 காலை 8.00 மணியளவில்
பிரதம அதிதியுரை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More