இலங்கை பிரதான செய்திகள்

தூரநோக்குடன் செயற்படும் தலைமைத்துவம் தமிழ் மக்களுக்கு வேண்டும்…

இளையோர் மாநாடு – தமிழ் மக்கள் பேரவை……

வட கிழக்கு தமது தாயகப் பிரதேசமாக நீண்ட வரலாற்றினை கொண்டிருக்கின்ற ஓர் தேசிய இனமாக ஈழத்தமிழர்கள் தமது சுய நிர்ணய உரிமையினை நிலைநாட்டுவதற்கும் இதனடிப்படையில் மக்களுக்கு இருக்கக்கூடிய இறைமையையும் வலியுறுத்தி நீண்ட ஓர் விடுதலைப்போரில் தமது தேசியவிடுதலைக்காக தம்மை அர்ப்பணித்திருந்தனர். தமிழினம் இந்த விடுதலை வேள்வியில் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் சொத்துடமைகளையும் வாழ்விடங்களையும் பறிகொடுத்திருந்தது. உலகளாவிய மாற்றங்கள், உலக நாடுகளின் நோக்கங்கள் மற்றும் அவர்களது தவறான புரிதல்கள் இவ்விடுதலைப்போராட்டத்தின் பால் ஈழத்தமிழர்கள் அரசியல் அபிலாசைகளை பெற்றுக்கொள்வதில் பாரிய தடைகளை ஏற்படுத்தின. தமது விடுதலைக்காக நீண்ட நெடிய போர்ச்சூழலைத் தமிழ்மக்கள் எதிர்கொண்டார்கள் ஆயினும் 2009ம் ஆண்டு மே மாதம் அந்த ஆயுத விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கில், இளைஞர்கள் யுவதிகள், பொதுமக்கள் கொல்லப்பட்டனர், காணாமல் ஆக்கப்பட்டனர், அரசியல் கைதிகள் ஆக்கப்பட்டனர், தமிழர்களது சொத்துடமைகள் அழிக்கப்பட்டன தமிழர்களது பூர்வீகக் குடியிருப்புக்கள் ஆக்கிரமிக்கப்பட்டதுடன் திட்டமிடப்பட்ட குடியேற்றத்திட்டங்களுக்கு உள்ளாக்கப்பட்டன. ஆயினும் தமிழர்களது அரசியல் அபிலாசைகள் எட்டப்படவில்லை.

போருக்குப்பின்னரான சூழலில் தமிழ்மக்களின் நீண்டகால அபிலாசைகளை பூர்த்திசெய்யக்கூடிய ஆரசியல் நகர்வுகள் ஓர் தூரநோக்குடன் செய்யப்பட்டிருக்கவேண்டும். அவ்வாறான ஓர் தலைமைத்துவம் தமிழ் மக்களுக்குக் கிடைத்திருக்கவேண்டும். எமது இளம் சமுதாயத்தினர் குறிப்பாக இளைஞர்கள், யுவதிகள் எம் இனம் சார்ந்து ஆற்றக்கூடிய பங்களிப்புக்கள் நெறிப்படுத்தப்பட்டிருக்கவேண்டும். அவர்களை எதிர்காலத்தில் நல்ல சிறந்த தலைவர்களாக உருவாக்கக்கூடிய பொறிமுறை உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். ஆயினும் சுயநலன்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு ஓர் தேசிய இனத்தின் அபிலாசைகள் முற்கொண்டு செல்லப்படாத ஓர் அரசியற் சூழல் போருக்குப்பின்னர் உருவானது. இந்தப்பின்னணியில் தான் தமிழ் மக்கள் பேரவை ஓர் மக்கள் இயக்கமாக மக்களையும் இளைஞர்களையும் ஒன்றிணைத்து ஓர் நேர்மையான அரசியல் கலாச்சாரத்தினூடாக எமது அரசியல் அபிலாசைகளை வென்று கொள்வதற்கு இளைஞர், யுவதிகளை ஒன்றுதிரட்டி போருக்குப்பின்னரான சூழலில் எமது பிரதேச அபிவிருத்தியில் அவர்களது பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்கும் போருக்குப் பிந்திய சூழலில் இளைஞர்கள், யுவதிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், (குறிப்பாக சமூகப்பிறழ்வு நடத்தைகள் மற்றும் திட்டமிடப்பட்ட போதைவஸ்து பாவனை) சவால்களை அடையாளம் காண்பதும் அவற்றை நிவர்த்திக்கும் பொறிமுறைகளை நெறிப்படுத்திக் கொள்வதற்குமாக வேண்டித் தமிழ்மக்கள் பேரவை இந்த இளையோர் மாநாட்டை நடாத்துவதற்குத் தீர்மாணித்துள்ளது. இந்த மாநாட்டின் மூலமாக தமிழர் தாயகப்பிரதேசங்களில் மாவட்டங்கள் மற்றும் பிரதேசங்கள் தோறும் இளைஞர் அணிகள் உருவாக்கப்பட்டு அந்த மாவட்டங்களில் இளைஞர்கள், யுவதிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் மக்கள் பிரச்சனைகள் அடையாளப்படுத்தப்பட்டு இளைஞர், யுவதிகளின் பங்குபற்றலுடனேயே அப்பிரச்சனைகள் தீர்க்கப்படக்கூடிய வாய்ப்புக்கள் உருவாகும். இது மட்டுமல்லாமல் தமது இனம் சார்ந்து தாம் ஆற்றக்கூடிய பங்களிப்புக்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொள்வதோடு படிப்படியாக தலைமைத்துவப்பண்புகளையும் வளர்த்தெடுக்கக்கூடியதாகவும் அமையும்.

இந்த இளைஞர் மாநாட்டின் முதன்மை நோக்கம் என்பது போருக்குப்பின்னரான எமது சமுதாயத்தில் எமது சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறிப்பாக இளைஞர், யுவதிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் சவால்களை இனம்கண்டு பிரதேச அபிவிருத்தியில் அவர்களது பங்களிப்பினை அடையாளம் காண்பதாகும். இவை தவிர பின்வருவனவற்றையும் உள்ளடக்கும்.

1. சர்வதேச நியமங்களுக்கேற்ப எமது வாழ்வுரிமையை, அரசியல் உரிமையை நிலைநாட்டுதல்.

2. ஒழுக்க விழுமியங்கள் மிக்க ஆரோக்கியமான இளைய சமுதாயத்தை கட்டியெழுப்புதல்.

3. ஓர் ஆரோக்கியமான, நேர்மையான அரசியல் கலாச்சாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதலும் படிப்படியாக தலைமைத்துவத்திற்கு அவர்களைத் தயார்ப்படுத்துவதும்.

4. இளைஞர் யுவதிகளை வலுப்படுத்துதல்.

இளைஞர் காங்கிரஸ், தமிழ் மாணவர் பேரவை மற்றும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பின்னரான எழுச்சி போன்றன எமது விடுதலைப் போராட்டத்தில் பாரிய எழுச்சியைத் தோற்றுவித்தன. அந்தவகையில் தேங்கி நிற்கும் எமது பயனமானது மீளவும் இளைஞர்களாலேயே முன்னகர்த்தப்படும் எனும் அடிப்படையிலும் மேற்கூறப்பட்ட நோக்கங்களை நிறைவுசெய்வதன் பொருட்டு தியாகி பொன் சிவகுமாரனின் நினைவு நாளில் இளைஞர் மாநாட்டிற்கான அங்குரார்ப்பணம் செய்யப்படுகின்றது.

நன்றி
இளையோர் அணி
தமிழ்மக்கள் பேரவை

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers