Home இலங்கை அரசாங்கம் என்ற படகை கடற்பாறையில் முட்டி கடலில் மூழ்கடிக்க தயார் இல்லை – மனோ கணேசன்

அரசாங்கம் என்ற படகை கடற்பாறையில் முட்டி கடலில் மூழ்கடிக்க தயார் இல்லை – மனோ கணேசன்

by admin

இன்று இந்நாட்டில் 5 அமைச்சரவை, 2 ராஜாங்க, சுமார் 5 பிரதி அமைச்சர்கள்களாக முஸ்லிம்கள் இருக்கிறார்கள். சுமார் 70 அரச நிறுவனங்கள் ஒட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர்கள் வசம் உள்ளன. அவை மூலம் கிடைக்கும் அந்த சேவைகளும் போதாது, என்று முஸ்லிம்கள் தமது அரசியல் தலைவர்களை விமர்சனம் செய்தாலும் கூட, இதுதான் உண்மை. உண்மையில் நான் முஸ்லிம் மக்களை பாராட்ட விரும்புகிறேன். முஸ்லிம் மக்களை பார்த்து தமிழர்கள் பாடம் படிக்க வேண்டும்.

இந்நாட்டின், மொத்த சுமார் 200 இலட்சம் ஜனத்தொகையில், சுமார் 150 இலட்சம் சிங்களவர்கள், சுமார் 30 இலட்சம் தமிழர்கள், சுமார் 20 இலட்சம் முஸ்லிம்கள். இந்த அரசாங்கத்தை உருவாக்க வழங்கப்பட்ட சிறுபான்மை இன வாக்குகளில் தமிழர் வாக்குகளே பெரும்பான்மை வாக்குகள். ஆனால், தமிழர்களை பொறுத்தவரையில், 3 அமைச்சரவை, 1 ராஜாங்க, 3 பிரதி அமைச்சர்கள் தான் இருக்கிறோம்.

தமிழர்களின் வாக்குகளை பயன்படுத்திகொள்ளும் அரசாங்கங்கள், தமிழர்களுக்கு உரிய அந்தஸ்த்தை தருவதில்லை. இதற்கு முன் இருந்த அரசாங்கங்களும் தரவில்லை. இந்த அரசாங்கமும் தரவில்லை. இதனால், தமிழர்களுக்கு, “எக்சகியூடிவ் பவர்” என்ற அமைச்சரவை நிறைவேற்று அதிகாரம் போதுமானளவு கிடைப்பதில்லை என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சரும், முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

, மனோகரனின் “உள்ளதைச் சொல்கின்றேன்  நல்லதைச் சொல்கின்றேன்” நூல் வெளியீடு கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்புரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,  

இதனால்தான், தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெறும்படி நான் பகிரங்கமாக அழைப்பு விடுத்தேன். ஒரு சிலர், எனது அந்த அழைப்பை விமர்சனம் செய்தார்கள். ஒரு சிலர், நான் சொல்வதில் உள்ள நியாயத்தை புரிந்துக்கொண்டார்கள். இன்று நிலைமை என்ன? தமிழர்களுக்கு  அரசியல் தீர்வும் இல்லை. அபிவிருத்தியும் இல்லை. இதுதான் இன்று தமிழர்களின் நிலைமையா? என்று நான் கேட்பதில் என்ன தவறு இருக்கின்றது? இந்த எனது கேள்வி வடக்கு, கிழக்கு, மலைநாடு, மேற்கு, தெற்கு என்று நாடு முழுக்க வாழும் தமிழர் மனங்களில் எதிரொலிக்கின்றது. உண்மையில் தமிழர் மனசாட்சியின் குரல்தான் என் குரல்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசில் இணையாவிட்டால், உள்ளே இருக்கும் தமிழ் எம்பிகளை தேடிப்பிடித்து, அவர்களுக்கு மேலதிக அமைச்சு பதவிகளை இந்த அரசு கொடுக்க வேண்டும். தமிழ் அமைச்சர்களின் அமைச்சுகளுக்கு மேலதிக நிதி வளம் ஒதுக்க வேண்டும். ஆனால், இன்று தமிழ் அமைச்சர்களின் அமைச்சுகளும் மென்மேலும் பலவீனப்படுத்தப்படுகின்ற போக்கையே நாம் பார்க்கிறோம்.

இன்று இவை பற்றி யாராவது பேச வேண்டும். அதனால்தான், நான் இன்று பகிரங்கமாக பேசுகிறேன். இதன் மூலம் இது பற்றிய நாடு தழுவிய ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்த நான் விரும்புகிறேன். இது தமிழர் மத்தியில் பேசுபடு பொருளாக மாற வேண்டும்.

இதனால், எமது அரசாங்கம் என்ற படகை கடற்பாறையில் முட்டி கடலில் மூழ்கடிக்க நான் தயார் இல்லை. ஆனால் வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்கவும் தயார் இல்லை. அரசுக்கு உள்ளே இருந்தபடியே இயன்ற உள்போராட்டங்களை செய்கிறேன்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More