கொரியாவில் நடந்த போரின் காரணமாக பிரிந்த குடும்பத்தினரை எதிர்வரும் வரும் ஓகஸ்ட் மாதம் சந்திக்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 1950-ம் ஆண்டு முதல் 1953-ம் ஆண்டு வரை நடந்த கொரியப் போருக்குப் பிறகு, தென் கொரியா, வட கொரியா என 2 நாடுகளாகப் பிரிந்ததனால் லட்சக்கணக்கான மக்கள் தங்களது குடும்பத்தினரைப் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இந்தநிலையில் செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் முயற்சியால் இவ்வாறு பிரிந்த குடும்பத்தினர் சந்திக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கடைசியாக 2015-ல் இவ்வாறு பிரிந்த குடும்பத்தினர் சந்தித்து பேசியுள்ள நிலையில் வட கொரியா, தென் கொரியா நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் நேற்று சியோல் நகரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதன் போது பிரிந்த குடும்பங்களைச் சந்திக்க வைப்பதற்கான இடங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். அந்தவகையில் ஓகஸ்ட் 20 முதல் 26-ம் திகதிவரை இந்நிகழ்ச்சி நடைபெறும் எனவும் தென் கொரியாவிலிருந்து 100 பேரும், வட கொரியாவிலிருந்து 100 பேரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்க்பபட்டுள்ளது. போரின்போது பிரிந்தவர்களில் பெரும்பாலானோர் 70 வயதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
Add Comment