
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதை தொடர்பான திரைப்படத்தில், அவரது வேடத்தில் நடிக்க அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தில் நடித்த மஞ்சிமா மோகன் விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலக சாதனையாளர்களின் வாழ்க்கையை திரைப்படம் ஆக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை ‘த டர்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாகி திரைக்கு வந்தது. சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்த வித்யாபாலனுக்கு தேசிய விருது கிடைத்தது.
சாவித்திரியின் வாழ்க்கையை தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் படமாக எடுத்து வெளியிட்டனர். இதில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இந்த படத்துக்கு இரு மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தமிழ் திரையுலகில் சாதனைகள் நிகழ்த்திய மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் வாழ்க்கையும் படமாக எடுக்கப்படவுள்ளது. மறைந்த ஆந்திர முன்னாள் முதல்–மந்திரியும், பிரபல தெலுங்கு நடிகருமான என்.டி.ராமராவ் வாழ்க்கை படமாகி வருகிறது. இதில் என்.டி.ராமராவாக அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார்.
இதேவேளை மலையாள பட உலகில் கவர்ச்சியாக நடித்து முன்னணி நடிகர்கள் படங்களை வசூலில் பின்னுக்கு தள்ளிய ஷகிலாவின் வாழ்க்கையும் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மறைந்த தமிழக முதல்– அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இந்தப படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் வித்யாபாலன் அல்லது கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் என்று பேசப்பட்டது. இந்த நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் ஜெயலலிதா வாழ்க்கை கதை படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘ஜெயலலிதா வாழ்க்கை கதை படத்தில் அவரது வேடத்தில் நடிக்க ஆசை உள்ளது. ஜெயலலிதாவின் தைரியம் எனக்கு பிடிக்கும். தனது முடிவில் இருந்து எந்த காரணத்துக்காகவும் அவர் பின்வாங்க மாட்டார். அவருடைய தைரியம் எல்லா பெண்களுக்கும் இருக்க வேண்டும்’’ என்று சிம்புவுக்கு ஜோடியாக ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நடித்து பிரபலமான மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார்.
Add Comment