யூன் 23 முதல் யூலை முதல் வாரம் வரை, குளோபல் தமிழ்ச் செய்திகளின் (குளோபல் தமிழ் மீடியா நெற்வேக்) உருவாக்கம் பற்றிய பின்னோக்கிய நினைவுளை மகிழ்வடன் மீட்டுப் பார்கிறோம். உயிர் ஆபத்து காரணமாக இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சில மாதங்களிலேயே 2008 யூன் பிற்பகுதியில் யூலை முதல்வாரத்தில் குளோபல் தமிழ் மீடியா நெற்வேக் நிறுவனம் உருவாக்கப்பட்டது. இப்போது 10 வருடங்களை ஒரு தசாப்த்தத்தை குளோபல் தமிழ்ச் செய்திகள் எட்டியிருக்கிறது.
ஆரம்பத்தில் ஒரு புளொக்காக ஆரம்பிக்கப்பட்ட குளோபல் தமிழ் செய்திகள் இணையம், 2008 யூன் 23ல் வெளிவந்த போதும் செப்டம்பர் வரையிலான ஆரம்ப பதிவுகள் தவிர்க்க முடியாத பல காரணங்களால் Archives ல் இல்லாது போயின. 2008 செப்டம்பர் மாதத்தில் இருந்து 10 வருடகால பதிவுகள் இந்த இணைப்பில் சென்றால் பார்வையிடமுடியும். (http://old.globaltamilnews.net/Home/tabid/38/language/ta-IN/Default.aspx ) ஆரம்பத்தில் தமிழ் மொழியில் மட்டுமே வெளிவந்த இணையம் ஒரு சில மாதங்களிலேயே ஆங்கிலம் சிங்களம் ஆகிய மொழிகளை உள்ளடக்கிய மும்மொழி இணையமாக வெளிவரத் தொடங்கியது.
இதே காலப்பகுதியில் GTBC.FM என்ற செய்மதி, மற்றும் இணைய மூலமான வானொலியும் GTNTV.NET என்ற இணைய தொலைக்காட்சியும் ஆரம்பிக்கப்பட்டன. 2014ஆம் ஆண்டுடன் இணைய தொலைக்காட்சி தன் சேவையை நிறுத்திக்கொண்டது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பிருந்து சிங்கள இணையமும் தனது சேவையை செலவு சிக்கனம் கருதி மட்டுப்படுத்திக்கொண்டது. அதன் இயக்கத்திற்கு கடந்த 10 வருடமாக, (யுத்த நெருக்கடிகாலத்தில் இருந்து) பயனித்த அதன் பிரதம ஆசிரியர் இப்போதும், தன்னார்வ அடிப்படையில் ஒரு சில செய்திகளை பதிவேற்றுகிறார்.
அது போன்றே குளோபல் தமிழ்ச் செய்திகளின் வெற்றியில் கடந்த 10 வருடமாக பங்காற்றிய சிலரது சேவையையும் செலவு சிக்கனம் கருதி நிறுத்திக்கொண்டோம். நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட போது இலங்கையில் 21 பணியாளர்களையும், இந்தியா, மலேசியா, லண்டன் உட்பட 12 பணியாளர்களையும் கொண்டிருந்த குளோபல் தமிழ் மீடியா நெற்வேக் நிறுவனம் இப்போ பூரணி தலைமையில் ஐவர் கொண்ட நிறுவனாமக (இலங்கையில் நால்வர்) மாற்றம் பெற்று இருக்கிறது. இந்த ஒரு தசாப்த்த பயணத்தில் எம்முடன் கைகோர்த்த அனைவரையும் நினைவில் நிறுத்துகிறோம்..
2016 ஒக்டோபர் 3ஆம் திகதி 8 வருடங்களின் பின் GTBC.FM வானொலியும் ஆதவன் வானொலியாக பெயர் மாற்றம் பெற்றது. GTBC.FM வானொலி ஆதவன் ஊடகவலையமைப்புடன் இணைக்கப்பட்ட பின் அதன் முழுநேர பணியாளராக என்னையும் இணைத்துக் கொண்டேன்.
ஆதவன் வலையமைப்புடனான என் இணைவின் பின் குளோபல் தமிழ்ச் செய்திகளின் உரிமையாளராக, நிறைவேற்று பணிப்பாளராக, பிரதம செய்தி ஆசிரியராக எல்லாமுமாக, பூரணியே பணியாற்றுகிறார். குளோபல் தமிழ் மீடியா நெற்வேக்கின் இணை நிறுவனரான பூரணியை அவரது பணியை குளோபல் தமிழ்ச் செய்திகளின் வெற்றியோடு, GTBC.FMன் வெற்றியோடு இன்றைய தினம் வாழ்த்துவதும் பாராட்டுவதும் பொருத்தமானது.
பூரணியின் ஊடக பயணம் 2002ல் ஆரம்பமானது. நான் சூரியன் எவ்.எம் வாணொலியில் இணைந்தபோது, பல புலம்பெயர் ஊடகங்களின் தொடர்பு கிடைக்கப்பெற்றது. இலங்கையில் இருந்து செய்திகளை பெற பல ஊடகங்கள் என்னிடம் உதவி கோரியிருந்தன. அன்றைய காலப்பகுதியின் பொருளாதார நெருக்கடியை ஈடுசெய்யவும், இலங்கையில் வெளிக்கொணர முடியாத செய்திகளை, இலங்கைக்கு வெளியிலாவது வெளிப்படுத்த வேண்டிய தேவையும் இருந்ததனால், வெளிநாட்டு செய்தி சேவை நிறுவனம் ஒன்றை ஆரம்பித்திருந்தோம். அதன் செயற்பாட்டில் நான் ஈடுபட முடியாததனால் பூரணியை அந்தத் துறையில் இணைத்தேன். தன்னுடைய ஆர்வத்தின் ஊடாக எனது உதவியுடன் குறுகிய காலத்திலேயே செய்தித் துறையில் தனது ஆற்றலை வெளிப்படுத்த தொடங்கினார்.
அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் (ATBC) நண்பர் நடா மோகனின் லண்டன் தமிழ் வானொலி (First Audio) நடாமோகன் பணியாற்றிய CITV தமிழ், கனேடிய தமிழ் வானொலி (CTBC), லண்டன் TBC ஆகியவற்றிற்கான செய்தியாளராக பயணத்தை ஆரம்பித்திருந்தார்.
இதுவரை காலமும் தனது பணியை எனது பெயரில் வைப்புச் செய்து (Credit) தன்னை வெளிப்படுத்தாது அவையடங்கியிருந்தவர். தன்னை முதன்மைப்படுத்தவதிலோ, என்னைப் போல் பெயர் போடுவதிலோ ஈடுபாடு இல்லாதவர். பின் தூங்கி முன்னெழுந்து, குடும்பத்தை சுமந்ததுடன், GTBC.FM வானொலியையும், குளோபல் தமிழ்ச் செய்திகளையும் உலகறியச் செய்தவர். எல்லாப் புகழும் பூரணிக்கே.. அவரது பணி தொடர வாழ்த்துக்கள்…
10 வருடங்களை, ஒரு தசாப்த்தத்தை, கடக்கும் குளோபல் தமிழ்ச் செய்திகள், வலிகளை கடந்திருக்கிறது. புலம்பெயர் சூழலில், குறிப்பாக யுத்தத்தின் பின்னான சூழலில், தமிழ் ஊடகங்களின் இருப்பு என்பது கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு வரும் நிலையில் 10 வருட உழைப்பு, அதன் கடினமான பாதை இலகுவானதல்ல என்பதை நாம் அறிவோம்.
இந்தப் பயணத்தில் துணை நின்ற அனைவரையும் வாழ்த்துகிறோம் வணங்குகிறோம். (செய்தியாளர்கள், கட்டுரையாளர்கள், மொழபெயர்பாளர்கள், நலன் விரும்பிகள்) ஆரம்பத்தில் பணிபுரிந்த பலருக்கு பாதுகாப்பு பிரச்சனைகள் தொடர்கின்றன. அதனால் பெயர் குறித்து வாழ்த்த முடியவில்லை…
தவிரவும் – எழுத்துப் பிழை, சொற்பிழை, பொருட் பிழை, இலக்கணப் பிழை என பல பிழைகள் தொடர்கின்றன. இவற்றை இயலுமான அளவிற்கு தவிர்க்க முயல்கிறோம். சில நேரங்களில் முடியவில்லை. அவற்றை நியாப்படுத்த முனையவும் இல்லை. பல தடவைகள் இணையத் தவறுகளுக்கு பகிரங்கமாக மன்னிப்புகளை கோரியிருக்கிறோம். இவற்றையும் தாண்டி தமிழ் இணைய உலகில் குளோபல் தமிழ்ச் செய்திகள் தனக்கென ஒரு அடையாளத்தை பெற்றிருக்கிறது என நம்புகிறோம். காலம் ஒத்துழைத்தால் இன்னும் பல தசாப்தங்களை குளோபல் தமிழ்ச் செய்திகள் கடந்து செல்லும்….
நடராஜா குருபரன்..
இணை நிறுவனர்…
10 ஆண்டுகளுக்கு மேலாக உலக அளவில் தரமான தமிழ்ச் செய்திகளையும் வாசகர்களின் கருத்துகளையும் வெளி கொண்டுவரும் நடராஜா குருபரனுக்கும் அவரின் குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள்.
இத்துடன் எதிர்கால செய்திகளை தொடர்ச்சியாகக் கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறேன்.