Home இலங்கை கருத்துக்களை முன்வைப்பது அடிப்படை உரிமை…

கருத்துக்களை முன்வைப்பது அடிப்படை உரிமை…

by admin

ஆட்சியாளர்களும் அரசியல்கட்சிகளும் பெண் அரசியல்வாதிகளின் செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகளை நசுக்கியே வருகின்றார்கள்…

அரசியலில் பெண்கள் அதிகமாக ஈடுபடவேண்டும் என பிரசாரம் செய்துவருகின்ற ஆட்சியாளர்களும் அரசியல்கட்சிகளும் பெண் அரசியல்வாதிகளின் செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகளை நசுக்கியே வருகின்றார்கள் என்பதற்கு சிறந்த உதாரணமாக கௌரவ இராஜங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் உரை தொடர்பில் ஏனைய மக்கள் பிரதிநிதிகளினதும், அரசியல்கட்சிகளினதும்;, கடும்போக்கு அமைப்புக்களினதும் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

இனப்படுகொலையை அரங்கேற்றி போர் வெற்றிப் பெருமிதத்துடன் தமிழ் மக்களை இரும்புக்கரம் கொண்டு நசுக்கிய ராஜபக்ஷவினருக்கு எதிராக தமிழ் மக்கள் தமது ஆணையை பயன்படுத்தினார்கள். அந்த ஆணையைப் பெற்ற அரசாங்கமும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக பல்வேறு வாக்குறுதிகளை அள்ளிவழங்கியது.

தற்போது மூன்றாண்டுகள் கடந்துள்ள நிலையில் நல்லாட்சியை உருவாக்கப்போவதாக கூறி ஆட்சிப்பீடத்தில் அமர்ந்த இருபிரதான கட்சித்தலைவர்களாலும் எதனையும் செய்ய முடியாதுள்ளது. வாக்குறுதிகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு தமது கட்சிகளை எவ்வாறு வளர்த்துக்கொள்ள முடியும். அடுத்த தேர்தலை எவ்வாறு எதிர்கொண்டு அதிகாரத்தினை கைப்பற்ற முடியும் என்ற நிலைப்பாட்டிலேயே செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றார்கள்.

அவ்வாறான நிலையில் வடக்கில் யுத்தப்பாதிப்பு ஒரு புறமிருக்கையில் அன்றாட வாழ்வியல் மணித்தியாலங்களை கொண்டு நகர்த்துவதற்கே முடியாத அளவிற்கு அச்சமான சூழலொன்றே நிலவி வருகின்றது. அரசில்தீர்வு, அபிவிருத்தி என்பன கானல் நீராகிவிட்ட நிலையில் கலாசாரம், பண்பாடு என்பன தடம் தெரியாது போவதற்குரிய நடவடிக்கைள் திட்டமிட்டு சிதைக்கப்பட்டுக்கொண்டிருக்கையில் எமது எதிர்காலமே கேள்விக்குட்பட்டுள்ளது.

கணவனை இழந்த பெண்கள், பெற்றோரை இழந்த சிறுவர்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் சிறார்கள், கொலை செய்யப்படும் சிறார்கள் இப்படி பட்டியல் நீண்டுகொண்டு செல்கின்றது. இவற்றின் வலிகளை திருமதி விஜகலா அவர்கள் நேரில் பார்த்துள்ளார். அதனை அவர் பெண் என்ற அடிப்படையில் உணர்ந்துள்ளார். அவர்களின் எதிர்காலத்திற்கு ஏதாவது செய்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் அமைச்சுப் பதவியினை பொறுப்பேற்ற போதும் அதன் ஊடாக எவ்விதமான செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கு அவருக்கு இயலவில்லை.

நன்மை பயக்கும் எந்த நடவடிக்கைகளை எடுத்தாலும் பெண் அமைச்சராக இருப்பதால் அதனை முன்னெடுத்துச் செல்வதற்கு ஆயிரமாயிரம் தடைகள் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறான பல்வேறு நெருக்கடியான நிலைமைகளின் காரணமாக ஏற்பட்ட ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே விடுதலைப்புலிகளை அவர் நினைவு படுத்தியுள்ளார்.

ஒரு மனிதன் தனது சிந்தனையில், அனுபவத்தில் எழுகின்ற கருத்துக்களை முன்வைப்பதற்கு இடமுள்ளது. அது அடிப்படை உரிமை என்பதுடன் ஜனநாயகப் பண்புகளில் மிகவும் முக்கியமானதுமாகும். விடுதலைப்புலிகளின் கட்டுக்கோப்பான ஒழுக்கங்கள், செயற்பாடுகளைப் பற்றி பேசுவதில் என்ன தவறுள்ளது. விடுதலைப்புலிகள் செயற்பட்ட சமகாலத்தில் வாழ்ந்த அனைவருமே அந்த விடயங்களை நன்கு அறிவார்கள்.

செயல் வடிவம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தால் தான் அது அரசியலமைப்பினை மீறுவதாக அமையும். உதாரணமாக இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட அமைப்பாக இருந்தாலும் அங்கு அந்த அமைப்பினைப்பற்றி, தலைமையைப் பற்றி, செயற்பாடுகள் பற்றி அனைவரும் பேசுகின்றார்கள். இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளது போன்று அங்கும் குண்டர் சட்டம் உள்ளது.

விடுதலைப்புலிகள் பற்றி பேசுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கவில்லையே. ஏனென்றால் விடுதலைப்புலிகள் பற்றி பேசுபவர்கள் அதற்கு செயல் வடிவம் கொடுக்கவில்லை. அதுபோன்று தான் விஜயகலா மகேஸ்வரன் அவர்களும் எண்ணப்பாட்டு ரீதியாக கருத்துக்களை முன்வைத்துள்ளாரே தவிர செயற்பாட்ட ரீதியாக எதனையும் செய்யவில்லை.

எனவே அவர் மீது நடவடிக்கை எடுப்பது என்பது ஜனநாயகத்தினை மீறும் செயற்பாடாகும் என்பதோடு ஒரு பெண் அரசியல்வாதியை திட்டமிட்டு நசுக்குகின்ற முயற்சியாகவே பார்க்கவேண்டியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More