இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

விஜயகலா உணர்ச்சி வசப்பட்டார், அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறவில்லை…

வை எல் எஸ் ஹமீட்:-

சர்ச்சைக்குள்ளாகியுள்ள பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பேச்சு அரசியல் ரீதியில் கண்டனத்திற்குரியதா? என்பது ஒரு விடயம். அரசியலமைப்புச் சட்டத்தை அது மீறியிருக்கின்றதா? என்பது இன்னுமொரு விடயம். இன்று பலரும் அவர் அரசியலமைப்புச் சட்டத்தை மீறிவிட்டார். அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்; என்று கோசமெழுப்புகின்றனர். இது தொடர்பாக பார்ப்போம்.

குறித்த பேச்சுத் தொடர்பாக அரசியலமைப்புச் சட்டம் சம்பந்தப்படுகின்ற பிரதான சரத்துக்கள் 157A,161(d) (6 வது அரசியலமைப்புத் திருத்தம்) என்பனவாகும்.

இவை பிரதானமாக கூறுபவை என்ன? என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.

157A(1) இன் பிரகாரம், இலங்கையிலிருந்தோ, வெளிநாட்டில் இருந்தோ நேரடியாகவோ மறைமுகமாகவோ யாரும் இலங்கை நிலப்பிராந்தியத்திற்குள் ஒரு தனிநாட்டை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கவோ, நிதிவழங்கவோ, பிரச்சாரம் செய்யவோ, அல்லது அச்செயலை முன்கொண்டு செல்லவோ அல்லது அதற்கு தைரியம் அல்லது உற்சாகம் கொடுக்கவோ கூடாது.

இங்கு கவனிக்க வேண்டியது, இங்கு குறிப்பிடப்படுகின்ற செயல்களை ஒரு தனிநாட்டை உருவாக்குவதற்காக செய்யப்படுவதுதான் தடைசெய்யப்பட்டுள்ளது.

இதன் உப பிரிவு (2) ஒரு கட்சியோ அல்லது ஏதாவதொரு அமைப்போ ஒரு தனி நாட்டை உருவாக்குவதை தனது இலக்காகக் கொள்வதைத் தடைசெய்கிறது.

இதன் உப பிரிவு (3) யாராவது ஒருவர் மேற்படி முதலாம் பந்தியில் குறிப்பிடப்பட்டதற்கு முரணாக செயற்பட்டதாக மேன்முறையீட்டு நீதிமன்றில் நிருபிக்கப்பட்டால் அவருக்குரிய தண்டனைகள் பற்றி குறிப்பிடுகின்றது.

a) ஏழு வருடத்திற்கு மேற்படாத காலத்திற்கு குடியுரிமை முடக்குதல்

b) அவருடைய குடும்ப வாழ்வுக்கு அவசியமானவை தவிர்த்து அவருடைய ஏனைய அசையும் அசையா சொத்துக்களைப் பறிமுதல் செய்தல்.

c) ஏழுவருடத்திற்கு மேற்படாத காலத்திற்கு குடியுரிமைக்கு உரித்தில்லாமலாக்குதல்

d) அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவோ, அரச உத்தியோகத்தவராகவோ ( சரத்து 165 இல் குறிப்பிடப்பட்ட) இருந்தால் அந்தப் பதவியை இழத்தல்

மேற்குறிப்பிடப்பட்டவர்கள் Seventh Shedule இல் குறிப்பிடப்பட்ட அதாவது அரசியலமைப்பைப் பேணிப்பாதுகாப்பேன் என்றும் ஒரு ஒரு தனிநாட்டை உருவாக்குவதற்கு குறிப்பிட்ட ( சரத்து 157A(1) இல்) செயல்களைச் செய்யமாட்டேன் என்றும் சத்தியப்பிரமாணம் செய்யவேண்டும்; என்று 157A(7)(a) கூறுகின்றது.

இங்கு பிரதானமானது 157A(1) இல் குறிப்பிடப்பட்ட ஏதாவது செயல்கள் செய்யப்பட்டுள்ளதா?, அச்செயல்கள் ஒரு தனிநாட்டை உருவாக்குவதற்காகவா? என்பனவாகும். வேறு நோக்கங்களுக்காக செய்யப்படுகின்ற எந்தவொரு செயலையும் இந்த சரத்து தடைசெய்யவில்லை.

விஜயகலா மகேஸ்வரன் புலிகள் மீண்டும் வரவேண்டும் என்று பேசினார். புலிகள் இன்று இல்லை. அதேநேரம் அது தடைசெய்யப்பட்ட இயக்கமாகவும் தொடர்ந்தும் இருக்கின்றது. அதன் இலக்காக தனிநாடு இருந்தது. அது அரச உத்தியோகபூர்வ நிலைப்பாட்டின்படி ஒரு பயங்கரவாத இயக்கமாகவும் இருந்தது.

பிரதிஅமைச்சர் ‘ புலிகள் மீண்டும் வரவேண்டும்’ என்று கூறியதன்மூலம் புலிகள் தற்போது இல்லை என்கின்ற அவரது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறார். இந்த சரத்தோடு சம்பந்தப்பட்ட ஒரேயொரு கேள்வி அவர் புலிகளை மீண்டும் வரவேண்டும் என்று சொன்னது தனிநாட்டை உருவாக்குவதற்காகவா அல்லது வேறு ஏதாவது ஒரு நோக்கத்திற்காகவா?

அவர் ‘ தனிநாட்டை உருவாக்குவதற்காகத்தான் புலிகள் மீண்டும் வரவேண்டும்’ என்று சொல்லியிருந்தால் அடுத்து எழுகின்ற கேள்விகள் அவரது அந்தக்கூற்று “ குறித்த சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, support, espouse, promote, encourage, advocate என்ற ஏதாவது ஒரு சொல்லுக்குள் வருகின்றதா? என்று பார்க்கப்படவேண்டும்.

அவருடைய பேச்சு ‘தனிநாட்டை உருவாக்குவதற்காக அல்ல’ என்றால் அதற்குமேல் செல்வதற்கு எதுவுமில்லை. சிறு குழந்தைக்கும் தெரியும், தனிநாட்டை உருவாக்கும் நோக்கில் அவர் அவ்வாறு பேசவில்லை என்பது.

அவருடைய பேச்சு வடக்கில் இன்று சட்டம் ஒழுங்கு கெட்டிருக்கின்ற நிலை, குறிப்பாக பெண்களுக்கு நிலவுகின்ற பாதுகாப்பற்ற தன்மை போன்றவற்றினால் ஏற்பட்ட கவலையில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய வார்த்தைகள்.

அரசியல்ரீதியாக அவருடைய பேச்சு ஏற்புடையதா? என்பது வேறாக ஆராயப்படவேண்டிய கேள்வியாகும். ஆனால் அரசியலமைப்பை மீறினாரா? தனிநாடு பெறுவது ஐ தே கட்சியின் அங்கத்தவரான அவரது நோக்கமா? இல்லையென்றால் அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறவில்லை.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers