இலங்கை கட்டுரைகள்

ராஜபக்ஸவும் – சீனாவும் – இலங்கையின் துறைமுகத்தை சீனா பெற்றுக்கொண்டது எப்படி?

மரியா அபி-கபீப்-  நியூயோர்க் ரைம்ஸ் – மொழியாக்கம் – குளோபல் தமிழ்ச் செய்திகள்…

Jul 6, 2018 @ 20:14

இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஸ தனது பதவிக்காலத்தில் தனது நட்பு நாடான சீனாவிடம் கடன் மற்றும் உதவிகளைப் பெறுவதற்காக ஒரு துறைமுக நிர்மாணத் திட்டத்துடன் போகும் சீனாவிடமிருந்து ஆம் என்ற பதில்களே வந்தது.

அதன் சாத்தியப்பாடு குறித்த ஆய்வுகள் இத் துறைமுகத் திட்டம் சரிவராது என்று கூறிய போதும், அடிக்கடி இலங்கைக்குக் கடன் கொடுக்கும் இந்தியாவே இந்தத் திட்டத்துக்கு கடன் கொடுக்க மறுத்துவிட்ட போதும், ராஜபக்ஸாவின் காலத்தில் இலங்கையின் கடன் பெருகிக்கொண்டே போன போதும் இதற்குச் சீனா சம்மதம் தெரிவித்து இருந்தது.

அம்பாந்தோட்டைத் துறைமுகக் கட்டுமானத்தில் பல ஆண்டுகளாக ஈடுபட்ட நிறுவனமாகிய சீன அரசுக்கு சொந்தமான பெரிய நிறுவனங்களில் ஒன்றான China Harbor Engineering Company” பல தடவைகள் மீள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட பின்னர் அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்தி திட்டமானது ஏலவே எதிர்பார்க்கப்பட்டதைப் போல தோல்வியுற்றதாகத் தன்னை இனங்காட்டியுள்ளது. பத்தாயிரக் கணக்கான கப்பல்கள் பயணிக்கும் உலகின் பரபரப்பான கப்பல் வழித்தடங்களில் ஒன்றாக இந்தத் துறைமுகத்தை அண்டிய பாதை இருக்கையில் 2012 ஆம் ஆண்டில் இந்தத் துறைமுகத்துக்கு 34 கப்பல்கள் மட்டுமே வந்திருக்கின்றன.


பின்னர் இது சீனாவின் துறைமுகமாகியது..

2015 இல் நடைபெற்ற தேர்தலில் ராஜபக்ஸ தோல்வியடைந்த பின்னர் வந்த இலங்கையின் புதிய அரசாங்கமானது ராஜபக்ஸ காலத்தில் சீனாவிடம் பெற்ற கடனைச் செலுத்துவதற்கு சிரமப்பட்டது. சீனாவுடன் பல மாதங்கள் நடத்திய பேச்சுவார்த்தைகளிலான பாரிய அழுத்தங்களின் பின்னர் டிசம்பர் மாதம் துறைமுகத்தையும் அதைச் சுற்றியுள்ள 15,000 ஏக்கர் நிலத்தையும் சீன அரசுக்கு 99 ஆண்டுகளுக்கு இலங்கை அரசாங்கம் கையளித்தது.

இந்தக் கையளிப்பின் மூலம் சீனாவின் போட்டி நாடான இந்தியாவின் கடற்கரையிலிருந்து ஒரு சில நூறு மைல்கள் மட்டுமே தொலைவில், இராணுவ கேந்திர வர்த்தக முதன்மைவாய்ந்த கடல்பாதை சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது,

சீனா உலகெங்கிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட உலக நாடுகளுக்குக் கடன்களையும் உதவிகளையும் வழங்குவது மற்றும் அதனைத் திரும்பப் பெற விட்டுக்கொடுப்பில்லாத கிடுக்குப் பிடியைப் பயன்படுத்துவதில் அதன் ஈடுபாடு என்பனவனவற்றைத் தெளிவாகக் காட்டும் எடுத்துக் காட்டு இந்த அம்பாந்தோட்டைத் துறைமுக நிர்மானத் திட்டமாகும்.

சீனாவின் உலக நாடுகள் மீதான முதலீடு மற்றும் கடன் திட்டம் என்பன Xi Jinping மீதான பல கடுமையான குற்றச்சாட்டுகளைத் தீவிரப்படுத்தின. இப்படியான கடன் திட்டங்கள், முதலீடுகள் போன்றன உலகிலிருக்கும் நலிவடைந்த நாடுகளின் மீதான கடன்பொறியாகி ஊழல் மற்றும் எதேச்சதிகார நடவடிக்கைகளினைத் தூண்டுவனவாகவுள்ளன.

இலங்கை, இந்திய, சீன மற்றும் மேற்கத்திய அதிகாரிகளுடனான பல்வேறு நேர்காணல்கள் அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் குறித்த ஆவணங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பான ஆய்வுகள் என்பன சீனா மற்றும் அதன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிறுவனங்களும் தங்கள் நலன்களை நிலைநாட்டுவதற்காக ஒரு சிறிய நாட்டின் முதலீட்டுப் பசியை எவ்வாறு பயன்படுத்தியுள்ளார்கள் என்பதை மிகத் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளன.


2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கைத் தேர்தலின் போது, தெற்காசியாவில் இந்தியாவின் செல்வாக்கைச் சரிக்கும் முயற்சியில் இருக்கும் சீனாவை மிக முக்கியமான நாடாகப் பார்த்து ஒப்பந்தங்களில் அது சொல்லும் ஒவ்வொரு சரத்துகளையும் ஏற்றுக்கொண்ட மகிந்த ராஜபக்ஸவின் தேர்தல் பரப்புரைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் சீன துறைமுக நிர்மாண நிதியில் இருந்து பெருந்தொகையான பணம் நேரடியாகத் திரும்பியது. இப்படிப் பணம் வழங்கப்பட்டதை அரசாங்க விசாரணையில் உறுதிப்படுத்திய ஆவணங்கள் மற்றும் காசோலைகள் என்பவற்றை The New York Times பார்வையிட்டது.

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் சீனாவின் ஆர்வம் முற்றிலும் வர்த்தக ரீதியாக இருப்பதாக சீன அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் வலியுறுத்தியிருந்தார்கள் என்றாலும் உளவு மற்றும் கேந்திரோபாய நடவடிக்கைகளுக்கான இந்தத் துறைமுகத்தின் அமைவிடம் தொடர்பான சாத்தியப்பாடுகள் என்பன குறித்த பேச்சுக்கள் ஆகியன ஆரம்பம் தொடக்கமே பேச்சுக்களில் ஒரு பகுதியாக இருந்தன என இலங்கை அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

துறைமுகத் திட்டத்திற்கு கடனுதவி வழங்குவதற்கான நிபந்தனைகளில் இலங்கை அதிகாரிகள் சீனாவிடம் காலக்கெடுவை மறுபரிசீலனை செய்யுமாறும் மேலும் மேலதிக நிதியுதவியைப் பெறவும் ஆரம்பத்தில் கேட்டுக் கொண்டதால் கடன் நிபந்தனைகளில் மிதமான நிலை ஆரம்பத்தில் இருந்தது.

அண்மைய ஆண்டுகளில் தங்களது கடனைத் தள்ளுபடி செய்ய இலங்கை அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்ட போதும், இலங்கைக்கு எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யாமல் துறைமுகத்தில் தனது பங்குகள் தொடர்பான நிலைநாட்டலே சீனாவின் நோக்கமாக இருக்கிறது.

இந்த ஒப்பந்தம் துறைமுகத் திட்டத்திற்கான கடனில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனை இல்லாது செய்தபோதிலும், இலங்கை அரசு முன்னெப்போதும் இல்லாதளவுக்குச் சீனாவிற்குக் கடனாளியாக இப்போது இருக்கிறது. ஏனெனில் மற்றைய பன்னாட்டு கடன் வழங்கும் நிறுவனங்களிலும் சீனாவின் வட்டி விகிதங்கள் மிகவும் அதிகமாக இருக்கிறது.

இந்தக் கட்டுரைக்காக இது குறித்துக் கருத்துச் சொல்லுமாறு இராஜபக்ஸவும் அவரது உதவியாளர்களும் பல மாதங்களாகப் பலமுறை வேண்டப்பட்டும் அவர்கள் எதற்கும் பதிலளிக்கவில்லை. China Harbor நிறுவனத்தின் அதிகாரிகளும் இது குறித்துப் பதிலளிக்கார்கள்.

இலங்கை நிதி அமைச்சின் மதிப்பீடுகள் ஒரு இருண்ட படத்தை வரைகின்றது. அதனது மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த ஆண்டு 14.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு உலகெங்கிலும் இருந்து காசு வழங்கிய கடன் வழங்குநர்களுக்கு 12.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொடுக்க வேண்டும்.


”ஒரு நாட்டை அடிபணியச் செய்வதற்கான வழிமுறைகளில் ஒன்று வாள் மற்றது கடன்” என John Adams இழிந்து கூறியதை மேற்கோள் காட்டிய என்ற இந்திய அரசுக்கு ஆலோசனை கூறுபவரும் கொள்கை ஆய்வு நடுவத்தில் செயற்படுபவருமான டெல்லியை தளமாகக் கொண்டு செயற்படும் சிந்தனையாளர் Brahma Chellaney சீனா இதில் ”கடன்” என்ற செயற்பாட்டைக் கையிலெடுத்துள்ளது என்று கூறுகிறார்.

இலங்கை அழைத்தாலேயன்றி இராணுவ நடவடிகைகளில் சீனா அங்கு ஈடுபட முடியாது என இறுதியான குத்தகை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், குறிப்பாக அம்பாந்தோட்டை துறைமுகத்தைப் போன்ற இராணுவப் பயன்பாட்டிற்குப் பயன்படக் கூடிய சொத்துகளை கடனால் அவதியுறும் இலங்கை அரசாங்கத்தின் இக்கட்டான நிலையைப் பயன்படுத்தி சீனா கடனிற்கு மாற்றாக இதனைச் சொந்தமாக்க முடியும் என இந்திய அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தை கொண்டு வந்து தேசிய பாதுகாப்பினைச் சுட்டுவது தான் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் முதலிட்டதை நியாயப்படுத்த இருக்கும் ஒரே வழி என இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளராகவும் பின்னர் அம்பாந்தோட்டைத் துறைமுகம் கட்டப்பட்டுக்கொண்டிருந்த போது இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகராகவும் இருந்த சிவசங்கர் மேனன் கூறினார்.


ஈடுபாட்டுடனான நட்புநாடு

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் நல்லுறவு மிக நீண்டகாலமாக இருந்தது. சீனப் புரட்சியின் பின்னர் மாவோவின் கொம்மியூனிச அரசை முன்கூட்டியே அங்கீகரித்த நாடாக இலங்கை இருந்தது. இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் நல்லுறவு மிக நீண்டகாலமாக இருந்தது. சீனப் புரட்சியின் பின்னர் மாவோவின் கொம்மியூனிச அரசை முன்கூட்டியே அங்கீகரித்த நாடாக இலங்கை இருந்தது. தமிழினப் பிரிவினைவாதிகளுடனான 26 ஆண்டுகால மிருகத்தனமான இலங்கை அரசின் போர் நடைபெற்ற காலத்தில் சீனா தவிர்க்க முடியாததாகியது.

2005 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஸ போரின் இறுதி ஆண்டுகளில் அதாவது மனித உரிமைக் குற்றச்சாட்டுகள் பெருகி இலங்கை தனிமைப்படுத்தப்பட்ட காலங்களில் சனாதிபதியாக இருந்தார். பொருளாதார ஆதரவு, இராணுவ உபகரணங்கள் மற்றும் போடப்படக் கூடிய தடைகளில் இருந்து ஐ.நா. சபையில் அரசியல் பாதுகாப்புப் பெறுதல் போன்றவற்றிற்காக மகிந்தவின் காலத்தில் இலங்கை பெருமளவில் சீனாவில் தங்கியிருந்தது.

2009 இல் போர் முடிவுக்கு வந்ததும் ராஜபக்ஸவும் அவரது குடும்பத்தினரும் நாட்டில் தமது பிடியை உறுதிப்படுத்தினர். மொத்த அரச செலவீனத்தின் 80% இனையும் முக்கியமான அமைச்சுகளையும் மகிந்தவும் அவரது மூன்று சகோதரர்களும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். சீனா போன்ற அரசுகள் இவர்களுடன் நேரடியாகப் பேச்சுக்களில் ஈடுபட்டது.

அவரது சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் பாரிய துறைமுக அபிவிருத்தித் திட்டத்தினை மேற்கொள்ள சனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அழைத்த பொது, சில தடைகள் இந்தத் திட்டம் வினைத்திறனற்றது என்பதை நிரூபித்தது.


பிரிட்டனின் அளவில் கால்வாசியானதும் 22 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டதுமான இலங்கைக்கு ஏற்கனவே தலைநகரில் முதலாவது பெரிய துறைமுகம் விரிவுபடுத்தக் கூடிய நிலையிலுள்ள போது இரண்டாவது பெரிய துறைமுகம் தேவையா என்று ஆரம்பத்தில் இருந்தே அதிகாரிகள் கேள்விகள் எழுப்பியிருந்தனர். அம்பாந்தோட்டையில் அமையும் துறைமுகம் பொருளாதார ரீதியில் பயனளிக்கக் கூடியதல்ல என அரசாங்கம் மேற்கொண்ட சாத்தியப்பாடுகள் தொடர்பான ஆய்வுகள் முடிவாகக் கூறியிருந்தன.

“அவர்கள் இந்தத் துறைமுக அபிவிருத்தித் திட்டத்திற்கு முதலில் எங்களை அணுகினார்கள். அதற்கு இந்திய நிறுவனங்கள் “இல்லை” எனவே பதிலளித்தார்கள். அது பொருளாதார அடிப்படையில் பயனற்றதொன்றாக இருந்தது. இப்போதும் அப்படித்தான் இருக்கிறது”, என இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் மேனன் கூறினார்.

ஆனால் ராஜபக்சா இந்தத் திட்டத்திற்குப் பச்சைக்கொடி காட்டியிருந்தார், இந்தத் திட்டத்திற்காக எல்லா சவால்களையும் எதிர்கொண்டு இறுதியாக சீனா இதற்கு வந்து விட்டது என இது குறித்த பெருமிதத்தை செய்தியாகவும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

இலங்கைத் துறைமுக அதிகாரசபை அதிகாரிகள் 2007 ஆம் ஆண்டில் கவனமாகவும், பொருளாதார ரீதியாகவும் வடிவமைக்கப்பட்ட திட்டத்தை நம்பியிருந்தார்கள் என இந்தத் திட்டத்தில் ஈடுபட்டவர் ஒருவர் கூறினார். ஏதாவது பெரிய விரிவாக்கத்திற்கு முன்புவரை, 2010 ஆம் ஆண்டில் வர்த்தகத்திற்காக ஒரு எல்லைக்குட்பட்ட வகையில் துறைமுகத்தைப் பயன்படுத்தும் வகையில் அழைக்கப்பட்டிருந்தது.

சீன அரசாங்கத்தின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடம் இருந்து 307 மில்லியன் டொலர்கள் இந்த திட்டத்திற்கான முதற் பெரிய கடனாகப் பெறப்பட்டது. சீனாவின் தெரிவான ”China Harbour” என்ற நிறுவனத்திற்கே துறைமுகக் கட்டுமானப் பணிகள் வழங்கப்பட வேண்டும் என்பது கடனைப் பெறுவதற்குத் தேவையாக இருந்தது இந்தத் தகவல் அந்த நேரத்தில் அமெரிக்க தூதரக கேபிள் செய்தி பரிமாற்றத்தின் வழியாக விக்கிலீக்ஸிற்கு கசிந்தது.

இது ஒரு வெளிப்படையான திறந்த ஏல ஒப்பந்தத்தை அனுமதிக்காமல், உலகம் முழுவதும் அதன் திட்டங்களுக்கு சீனா முன்வைக்கும் ஒரு பொதுவான கோரிக்கையாகயாகும். . இத்தகைய கட்டுமான ஒப்பந்தத்தின் போது சீன அரசாங்கம் சீன நிறுவனங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான சீனத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கடனாகக் கொடுத்த பில்லியன் கணக்கான டொலர்களை மீளவும் அது பெற்றுக் கொள்கிறது என பிராந்தியத்தில் உள்ள அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது தவிர இந்தக் கடனில் வேறு சில விடயங்களும் தொடர்புபட்டுள்ளன. ஆரம்பத்திலிருந்து இந்த ஒப்பந்தம் தொடர்பில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் கேந்திர மூலோபாயம் குறித்துச் சீனா நோக்கி வந்தது.


உளவுப் பரிமாற்றம் முதன்மையானதாக அல்லது ஒரு பொதுப் பகுதியாக சீனாவுக்கு இருந்தது என்பது ஆரம்பத்திலிருந்து சீனா அதிகாரிகளுடன் நடைபெறும் கலந்துரையாடல்களிலிருந்து தெளிவாகியது என இலங்கையின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளரும் சீனாவுக்கான தூதுவருமான Nihal Rodrigo கூறினார். The Times உடனான தனது நேர்காணலில் Nihal Rodrigo “யார் இந்தத் துறைமுகத்திற்கு வருகிறார்கள், நிறுத்துகிறார்கள் என எங்களுக்கு அறியத்தருமாறு உங்களிடம் நாம் எதிர்பார்க்கிறோம்” என சீனா தரப்பில் கூறிய வரியை அப்படியே மேற்கோள் காட்டுகிறார்.

பின்வந்த ஆண்டுகளில், சில நிபந்தனைகளை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்ட ராஜபக்ஸவுடன் சீன அதிகாரிகளும் China Harbor company யும் மிக நல்ல நீடித்த உறவைப் பேணலானார்கள்.
சீன அரசுடனான பொருளாதார உடன்படிக்கைகளை கிழிப்பதாக அச்சுறுத்திய எதிர்த் தரப்பிற்கு எதிராக ராஜபக்ஸவிற்கு ஆதரவாக லாபி செய்யும் அளவிற்கு இராஜதந்திர உறவின் வரமுறையையும் மீறியவராக சீனத்தூதுவர் இலங்கையின் 2015 தேர்தலை ஒட்டிய இறுதி மாதங்களில் செயற்பட்டார்.

தேர்தல் நெருங்கி வருகையில் பெருந் தொகைப் பணம் ஜனாதிபதி ராஜபக்ஸவின் வட்டாரத்தை நோக்கி வர ஆரம்பித்தது.

The Times பார்வையிட்ட அரசாங்கத்தின் விசாரணையில் கிடைத்த ஆவணத்தின் படி, China Harbor கம்பனியின் Standard Chartered வங்கிக் கணக்கிலிருந்து குறைந்தது $7.6 மில்லியன் பணம் ராஜபக்ஸவின் தேர்தல் வேலைகளுக்குச் சென்றது. China Harbor கம்பனியின் வங்கிக் கணக்கு எண், அதன் உரிமையாளர் விபரம் என்பன சரிபார்க்கப்பட்ட விபரம் மற்றும் யாருடைய பெயர்களுக்கு காசோலை இடப்பட்டதோ அவர்களிடமிருந்து பெற்ற விசாரணைத் தகவல்கள் என்பன அந்த ஆவணத்தில் இருந்தது.

தேர்தலிற்கு பத்தே நாட்கள் இருக்கும் போது $3.7 மில்லியன் வரையிலான தொகை காசோலையாகப் பரிமாறப்பட்டது. பரப்புரைக்கான சேட்டுகளுக்காகவும் ஏனைய பரப்புரை பொருட்களுக்கும் $678,000 தொகையும் பெண்களுக்கான சேலை உள்ளடங்கலான ஆதரவாளர்களுக்கான அன்பளிப்பிற்காக $297,000 தொகையும் வழங்கப்பட்டுள்ளது. $38,000 தொகை மகிந்த ராஜபக்ஸவுக்குத் தேர்தலில் ஆதரவளித்த பிக்கு ஒருவரிற்குச் செலுத்தப்பட்டுள்ளது. $1.7 மில்லியன் பெறுமதியைச் சேர்த்தியாகத் தரும் இரண்டு காசோலைகள் சனாதிபதியில் இல்லத்திற்குத் தொண்டர்களாக அனுப்பப்பட்டுள்ளது. பெரும்பாலான கொடுப்பனவுகள் China Harbor கம்பனியின் உப கணக்கான “அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்தித் திட்டம்- நிலை2” என்ற பெயருள்ள கணக்கிலிருந்து நடைபெற்றுள்ளது.


சீனாவின் வலையமைப்பு

“உலகெங்கிலுமுள்ள சீனாவின் பாதையமைப்பு விரிவாக்கத்தில் கடந்த 5 ஆண்டுகளான குழப்பங்களின் பின், எத்தனை ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன? நாட்டின் நிதிநிலை என்னவாக இருக்கும் என்பன குறித்துத் தொடர்ச்சியாகத் திரட்ட சீன அதிகாரிகள் முயல்கின்றனர். இதற்கென எந்தவொரு தெளிவான விளக்கமும் இல்லை”, என ஏனைய சீனாவின் கொள்கை பற்றி பேசுபவர்களைப் போலவே தன்னை வெளிப்படுத்த விரும்பாது கருத்துத் தெரிவித்தார் சீனாவின் பொருளாதாரக் கொள்கை வகுப்பாளர்களில் ஒருவர்.

“இப்படியான திட்டங்களால் சீனாவிற்கு நிதிப் பொறுப்புகள் அதிகரிக்கின்றன என்றும் இலாபம் ஈட்ட வேண்டிய தேவை இருக்கின்றது எனவும் சில சீன அதிகாரிகள் அக்கறைகொள்கின்றனர். எமது பாதைவழிகளை அமப்பதற்காக சர்வதேச ஊழலுக்கெதிரான ஒத்துழைப்பை நாங்கள் வழங்க வேண்டும்”, என கடந்த ஆண்டு ஆற்றிய உரை ஒன்றில் தனது கவலையை சீன சனாதிபதி வெளிப்படுத்தினார்.

பங்காளதேசில், உதாரணமாக, வீதிகள் அமைச்சின் அதிகாரி ஒருவருக்கு $100,000 லஞ்சமாகக் கொடுக்க China Harbor கம்பனி முனைந்ததாகக் குற்றஞ்சாட்டி எதிர்கால ஒப்பந்தங்களில் இருந்து China Harbor தடைசெய்யப்பட்டது என கடந்த ஜனவரியில் அதிகாரிகளுடனான நேர்காணல்களின் போது தெரிவித்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் மேற்கொண்ட ஊழல் நடவடிக்கைகள் காரணமாக உலக வங்கியின் திட்டங்களுக்கு ஒப்பந்தம் கோருவதற்கு China Harbor கம்பனியின் தாய் நிறுவனமான China Communications Construction Company இற்கு 8 ஆண்டுகள் தடை 2009 இல் போடப்பட்டது.

இலங்கையில் துறைமுகம் கைப்பற்றப்பட்டதிலிருந்து, சீனாவின் இந்தப் பாதை ஆனது மூன்று கண்டங்களுக்கிடையில் அபிவிருத்திக்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் வரையறை இல்லாமல் நிதியளிப்பது என்பது அல்ல என சீன அதிகாரிகள் ஆலோசனை கூறத் தொடங்கியுள்ளனர்.

“வரும் இடர்களினை நாம் திறமையாக மேலாண்மை செய்யாது விடின் சீனாவின் பட்டுப் பாதை நல்ல நிலைக்குச் செல்லாது” என சீன அரசிற்குச் சொந்தமான மிகப் பெரிய முதலீடாகிய பட்டுப்பாதை நிதியத்தின் தலைவியான Jin Qi சீன அபிவிருத்தி மன்றத்தில் கடந்த மார்ச் மாதம் தெரிவித்தார்.

ஆனால் இலங்கை விடயத்தில், அம்பாந்தோட்டைத் துறைமுகம் இலாபகரமானதாக வரும் அல்லது ஆகக் குறைந்தது சீன வர்த்தகத்தின் அளவை பிராந்தியத்தில் வலுப்படுத்தும் என்ற அவர்களது பார்வையை துறைமுக அதிகாரிகளும் சீனாவின் ஆய்வாளர்களும் கைவிடவில்லை.


“இலங்கையின் அமைவிடமானது சர்வதேச வர்த்தகத்திற்கு மிகச் சிறப்பானது. அம்பாந்தோட்டை மிகச் சிறிய மீனவக் கிராமமாக இருக்கும் போது செய்த எதிர்மறையான ஆய்வுகளைக் கருத்திலெடுக்கவில்லை” என China Merchant Port இனுடைய இலங்கைக்கான பிரதிநிதியும் அம்பாந்தோட்டத் துறைமுகத்தின் செயற்பாட்டுத் தலைவருமான Ray Ren வலியுறுத்தினார்.

“அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் கேந்திர முக்கியத்துவத்தைச் சீனா தெளிவாக இனங்கண்டுள்ளது”, என தெற்காசியக் கற்கைகளுக்கான சர்வதேச சமகால உறவுகளின் சீன நிறுவனங்களின் தலைவரான Hu Shisheng தெரிவித்தார். “இதன் புவிசார் மூலோபாய மதிப்பைச் சீனா செலுத்த வேண்டி நேர்ந்தால், அதனது கேந்திர முக்கியத்துவம் இல்லாது போய்விடும். பெரிய நாடுகளால் இலங்கையில் போராட முடியாது. அது இல்லாமல் போய்விடும்”, என அவர் மேலும் தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை துறைமுகமானது 2010 ஆம் ஆண்டில் வரையறுக்கப்பட்ட பாதையிலேயே ஆரம்பிக்கப்பட்ட போதிலும், பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சி அறிவிக்கப்படுவதற்கு முன்னர், சீன அரசாங்கம் இந்த திட்டத்தை உலகளாவிய வேலைத்திட்டத்தில் விரைவில் முடுக்கிவிட்டது.

அம்பாந்தோட்டயின் இந்தத் துறைமுகக் கையளிப்பு விழா நடந்தவுடன், “சீனாவின் பட்டுப்பாதை வழியே அடுத்த மைல்கல்லை அடையப்பட்டுள்ளது” எனக் கூறும் காணொளியை சீனாவின் அரச செய்தி நிறுவனம் ருவிட்டரில் வெளியிட்டது.

எங்கும் ஒரு துறைமுகம்
மக்கள் அடர்த்தி குறைவாக இருக்கும் இலங்கையின் தென்கிழக்குக் கடற்கரைப் பகுதியான அம்பாந்தோட்டையில் சீனாவின் கடனில் அமைக்கப்பட்டும் ஒரேயொரு பாரிய திட்டம் இந்தத் துறைமுகம் மட்டுமல்ல. அம்பாந்தோட்டை மாவட்ட மக்கள் தொகைக்கு விஞ்சிய இருக்கைகளைக் கொண்ட விளையாட்டு மைதானம், FlyDubai என்ற ஒரேயொரு வர்த்தக விமானநிலையத்தையும் இழந்த மிகப் பெரிய சர்வதேச விமானநிலையம், விவசாயிகள் தமது அரிசிகளைக் காயப்போடுவதற்கும் யானைகள் கடப்பதற்கும் பயன்படும் இந்த மாவட்டத்தினூடாகச் செல்லும் நெடுஞ்சாலை என்பன அம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்பட்ட ஏனைய திட்டங்களாகும்.

இந்தத் துறைமுகம் திறந்து வைக்கப்பட்ட பின்னர் எவ்வாறு விஸ்தரிக்கப்படும் என்பதற்கு, மேலதிக கடன்களைப் பெறுவதற்கு முன்பாகவே குறிப்பிட்ட வருமானம் வருவதை உறுதிப்படுத்த வேண்டும் என ராஜபக்ஸவின் ஆலோசகர்கள் தமது அணுகுமுறையைச் சொன்னர்கள். ஆனால் 2009 ஆம் ஆண்டு பொறுமைகாக்க முடியாதவராக ராஜபக்ஸ அடுத்து ஆண்டு நடைபெறவிருந்த தனது 65 ஆவது அகவைக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஏற்கனவே தயாரித்த திட்டத்தின் கால அட்டவணையின் படி இன்னும் 10 ஆண்டுகளில் தொடங்க வேண்டிய துறைமுக விஸ்தரிப்புப் பணியைத் தொடங்கி கோலகலமாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுமாறு கூறினார்.


இதனைத் தொடர்ந்து இரவு பகலாகச் சீனத் தொழிலாளர்கள் வேலை செய்யத் தொடங்கினார்கள். துறைமுகத்தில் நீரைப் பாய்ச்சி சோதித்த போது, பாரிய பாறைகள் ஏற்கனவே இந்தத் துறைமுக வணிகத் திட்டம் பெரிதும் தங்கியிருந்த எண்ணெய் தாங்கிகள் மற்றும் பாரிய கப்பல்கள் வருவதை பகுதியளவில் தடுப்பனவாக இருந்தன. இது முன்னர் கணிக்கப்பட்டிருக்கவில்லை.

இதைப் போட்டு ஜனாதிபதியுடன் குழப்ப விரும்பாமல் இதனை மேலும் துறைமுக அதிகார அதிகாரிகள் முன்னெடுத்தனர். 2010 ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்சவின் பிறந்தநாளான நவம்பர் 18 ஆம் தேதி இந்தத் துறைமுகம் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது. பின்னர், பாரிய கப்பல்களைத் தடுக்கும் பாறை இருக்கும் போதே, வணிகத்திற்காக இந்தத் துறைமுகம் காத்திருந்தது.
$40 மில்லியன் செலவில் இந்தப் பாரிய பாறையை சீனா 1 ஆண்டின் பின் தகர்த்தது. இதனை மிகப் பெரிய மேலதிக செலவாக அரச அதிகாரிகளும் இராஜதந்திரிகளும் பார்த்தனர். இந்தத் தொகை நியாயமானதிலும் அதிகமாக அறவிடப்படுகிறது எனவும் அல்லது இதில் பெரும் பகுதி ராஜபக்ஸவிற்கு லஞ்சமாகச் செல்கின்றது எனவும் சிலர் அனுமானித்து வெளிப்படையாகவே சொல்லத் தொடங்கி விட்டார்கள்.

2012 ஆம் ஆண்டில் இந்தத் துறைமுகத்தை நோக்கிக் கப்பல்களை ஈர்ப்பது சிரமமாக இருந்தது. ஏனெனில் அருகில் இருக்கும் கொழும்புத் துறைமுகத்தில் தரிக்கவே கப்பல்கள் விரும்பின. திட்டத்தின் கால அட்டவணைக்கு முன்னதாகவே கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டமையால் செலவுகள் அதிகரித்த வண்ணமே இருந்தன. காரை இறக்குமதி செய்ய வரும் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தில் தரிக்காமல் அம்பாந்தோட்டைக்குத் தான் வர வேண்டும் என அரசாங்கம் அறிவித்து அம்பாந்தோடைத் துறைமுகத்தை இயங்க வைக்க முயன்றது. இருந்தபோதும், நிதி அமைச்சின் ஆண்டறிக்கையின் படி 34 கப்பல்கள் மட்டுமே 2012 ஆம் ஆண்டு இந்த அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு வந்திருந்தன. ஆனால் அதே நேரம் கொழும்புத் துறைமுகத்திற்கு 3,667 கப்பல்கள் வந்திருந்தன.

“நான் அரசாங்கத்திற்கு வந்த போது, தேசியத் திட்டமிடல் அமைச்சரை அழைத்து, அம்பாந்தோட்டை துறைமுகத்தை நியாயப்படுத்துமாறு கேட்டுக் கொண்டேன்”, என தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ராஜாங்க அமைச்சரான கர்ஷ டி சில்வா ஒரு நேர்காணாலில் தெரிவித்தார். அதற்கு “இதைச் செய்யுமாறு சொல்லப்பட்டோம். நாம் செய்தோம்” என பதிலளிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

துறைமுகத்தை விஸ்தரிப்பதாக முடிவெடுத்து 2012 ஆம் ஆண்டு சீன அரசாங்கத்திடம் சென்று $757 மில்லியன் கடனாக ராஜபக்ஸ கேட்டார். அதனை வழங்க சீனா உடன்பட்டது. ஆனால் இந்த முறை நிபந்தனைகள் இறுக்கமாக இருந்தன. 2008 இல் உலக நிதி நெருக்கடியின் பின்னர் வழக்கமாக 1 அல்லது 2 சதவிகிதத்திற்கு மேலானதாக மாறக்கூடிய மாறுபட்ட விகிதத்தில் முதல் கடன் $307 மில்லியன் கிடைத்தது. (ஒப்பீட்டிற்காக, இதே போன்ற கட்டுமானத் திட்டங்களிற்கான ஜப்பானின் கடன் 1/2% இற்கும் குறைவாகக் கிடைத்தது)


ஆனால் புதிய நிதியுதவி பெற, தொடக்கக் கடன் மிக அதிகமான 6.3 சதவிகிதம் நிலையான விகிதத்திற்கு மீள்பேச்சிற்கு உட்பட்டது. அதற்கும் மகிந்த ராஜபக்ஸ உடன்பட்டார்.திட்டத்திற்கான அதிகரித்த செலவுகள், அதிகரித்து வரும் கடன்கள், துறைமுகம் வணிகமீட்டாமல் நெருக்கடியில் இருந்தமை போன்றன எதிர்த் தரப்பால் பலமான எதிர்ப் பரப்புரைக்குப் பயன்படுத்தப்பட்டது. சீனா குறித்தும் சந்தேகங்கள் ஏற்படுத்திப் பரப்புரை செய்யப்பட்டது. இதனால் மகிந்த ராஜபக்ஸ தேர்தலில் தோல்வியடைந்தார்.

மைத்திரிபால சிறிசேனா தலைமையில் ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கம் இலங்கையின் நிதி உடன்படிக்கைகள் தொடர்பில் ஆராய வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அச்சுறுத்தும் செலுத்தப்பட வேண்டிய கடன் தொகைக்கு இந்தப் புதிய அரசாங்கம் முகங்கொடுத்தது. மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் இந்த நாட்டின் கடன் $44.8 பில்லியன்ஆக மூன்று மடங்கிற்கு அதிகரித்தது. 2015 ஆம் ஆண்டில் மட்டும் $4.68 பில்லியன் கடன் தொகை செலுத்தப்பட வேண்டியிருந்தது.

புதிய அரசாங்கம் இலங்கை, இந்தியா, ஜப்பான், மற்றும் மேற்கு நாடுகளை நோக்கியதாக மாறியது. ஆனால் இலங்கைக்குச் சீனாவால் வழங்கப்பட்ட கடனை மற்றும் நிதியை வேறு எந்த நாட்டாலும் ஈடு செய்ய முடியாது என்பதை இலங்கை அதிகாரிகள் விரைவில் உணர்ந்தனர்.

“எமது நாட்டின் பொருளாதாரம் கீழிறங்கி விட்டது. கிடைக்கும் வருவாய்கள் கடன்களிற்கான வட்டிகளைச் செலுத்தப் போதுமானதாக இல்லை என தற்போதைய அரசாங்கத்தின் முதலாம் ஆண்டு ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த ரவி கருநாயக்க தெரிவித்தார். “இந்த அரசாங்கமும் கடன்களைப் பெறுகின்றது. எம்மால் உடனடியாகக் கடன் வாங்குவதை நிறுத்த முடியாது. இது ஒரு அஞ்சல் ஓட்டம் போன்றது. பொருளாதாரம் ஒரு உறுதிப்பாட்டுக்கு வரும் வரை நாங்கள் இதனைச் செய்ய வேண்டியுள்ளது”, என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை கடந்த ஆண்டு $3பில்லியன் கடன் தொகையைத் திருப்ப வழங்க வேண்டியிருந்ததாக மத்திய வங்கி மதிப்பிட்டுள்ளது. சில கடன்கள் அரசாங்கப் பதிவேடுகளில் இல்லாமல் அதற்குப் பதிலாக தனிப்பட்ட திட்டங்களின் பகுதியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக Verité Research என்ற ஆய்வு நிறுவனத்தில் பொருளாதார நிபுனராக இருக்கும் நிசாந்த டி மெல் தெரிவித்தார். எனவே சீனா அரசிற்கு அந்த ஆண்டு கொடுக்க வேண்டியிருந்த கடன் தொகை $5பில்லியன் வரை ஆகுமெனவும் இந்தத் தொகை ஆண்டுதோறும் அதிகரித்துச் செல்கின்றது எனவும் கட்ட வேண்டிய கடன்களைக் கட்டுவதற்கக கடந்த மே மாதம் $1பில்லியன் கடன் தொகையை மேலும் சீன அபிவிருத்தி வங்கியிடம் இலங்கை பெற்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்க அதிகாரிகள் 2016 ஆம் ஆண்டில் மீண்டும் சீன அதிகாரிகளுடன் உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்காகச் சந்திக்கத் தொடங்கினர், தங்களது துறைமுகத்தை தாங்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றிக் கையாள வேண்டும் என்று இலங்கைத் தரப்பு எதிர்பார்க்கின்றது. ஆனால் சீன நிறுவனத்தைத் துறைமுகத்தின் முக்கிய பங்குகளை வாங்க அனுமதியளிக்க வேண்டும் என்று சீன அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


China Harbor அல்லது China Merchants Port போன்ற சீன அரசிற்குச் சொந்தமான நிறுவனங்கள் கட்டுப்பாட்டை எடுக்கும் என ஒரு தெரிவு இலங்கைக்கு வழங்கப்பட்டதாக இறுதி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வும் இன்னும் வெளிப்படையாக முழுமையாக வெளியிடப்படாத அதன் ஒரு நகல் தன்னிடம் இருப்பதாக The Times தெரிவிக்கின்றது. China Merchants இந்த ஒப்பந்தத்தைப் பெற்றதும் அது உடனடியாக மேலும் அழுத்தங்களை ஏற்படுத்தியது. தொழில்துறை வலயத்தை அமைப்பதற்கு துறைமுகத்தைச் சுற்றி 15,000 ஏக்கர் நிலத்தினை அந்த நிறுவனம் கோரியுள்ளதாக இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நடந்தவற்றை அறிந்த அதிகாரிகள் இருவர் தெரிவித்துள்ளனர். செலுத்தும் $1பில்லியனுக்கு இந்தத் துறைமுகத்தின் மதிப்பு இல்லை என அந்தச் சீன நிறுவனம் வாதாடுகிறது.

சில அதிகாரிகள் கடுமையாக இதனை எதிர்த்தும் அதற்கு எந்தவிதமான வெளியும் இருக்கவில்லை எனப் பேச்சுவார்த்தையில் பங்குபற்றிய அதிகாரிகள் தெரிவித்தனர். 2017 ஆம் ஆண்டு யூலையில் கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தமானது டிசம்பரில் நடைமுறைக்கு வந்தது.இந்த உடன்பாடு இலங்கையின் உரிமை என்ற தோற்றச் சிறிது அகற்றியது. துறைமுகத்தின் நடவடிக்கைகளை நிர்வகிக்கவும், வருவாயை சேகரிக்கவும் ஒரு கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. அது 85% China Merchants Port இற்கும் மீதி 15% இலங்கை அரசுக்கும் சொந்தமாக உள்ளது. இலங்கை அரசு வைத்திருக்கும் இந்த மிகச் சிறிய சதவிகிதப் பங்கானது சீனாவின் China Merchants Port நிறுவனமே செயற்பாடுகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்திற்கு வழிவகுக்கும் என துறைமுகக் கையகப்படுத்தலில் நிபுணத்துவம் வாய்ந்த சட்டவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த உடன்படிக்கை குறித்த ஆரம்பப் பேச்சுகளில், துறைமுகமும் அதனை அண்டிய நிலப்பரப்பும் சீன இராணுவத்தால் பயன்படுத்தப் பட முடியுமா என்பதில் அப்படியொரு விடயத்தை வெளிப்படையாகத் தடைசெய்யுமாறு இந்திய அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டனர். இலங்கை அரசு அனுமதிக்காத விடத்து, இந்தத் துறைமுகத்தை இராணுவத் தேவைகளுக்கு வெளிநாடுகள் பயன்படுத்துவது இறுதி ஒப்பந்தத்தில் தடுக்கப்பட்டுள்ளது. சீன கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்கள் ஏற்கனவே இலங்கைக்கு வந்துள்ளன என்பதால் இந்தச் சரத்துச் சேர்க்கப்பட்டுள்ளது.


மூலோபாய அக்கறைகள்

இலங்கையின் பிரதான துறைமுகத்திலும் சீனா தனது பங்கை வைத்திருந்தது. China Harbor என்ற சீனாவின் நிறுவனமானது புதிய முனையத்தைக் கொழும்புத்துறைமுகத்தில் கட்டிக்கொண்டிருந்தது. துறைமுக நகரம் என அந் நேரத்தில் அது அறியப்பட்டது. அந்த உடன்படிக்கையின் விளைவாக 50 ஏக்கர் நிலம் சீனாவால் பெறப்பட்டது. இதன் மீது இலங்கைக்கு எந்த இறையாண்மையும் இல்லை.

2014 ஆம் ஆண்டின் இறுதியில் அதாவது மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சி முடிவுக்கு வரும் காலப்பகுதியில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கைக்கு வந்து தரித்தன. அதே நாள் ஜப்பானின் பிரதமர் Shinzo Abe இலங்கைக்கு விஜயம் செய்தார். பிராந்தியத்தில் பீஜிங்கின் அச்சுறுத்தும் சமிக்ஞையாக இது பார்க்கப்பட்டது.சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்களை இலங்கையின் துறைமுகங்கள் மீண்டும் ஒருபோதும் வரவேற்காது என புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது உறுதியளித்தது. ஏனெனில் இவை இனங்காண்பதற்குக் கடினமானதாகவும் உளவுத் தகவல் சேகரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இலங்கை அதிகாரிகள் சிறிது உண்மையான கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தனர்.


கடன் காரணமாக சீனாவிற்கு அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைக் கையளித்தால் சீனா இராணுவப் பயன்பாட்டிற்கு அதனைப் பயன்படுத்தும் சாத்தியமே உள்ளது. அப்படிச் செய்வதில்லை என முன்னர் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தாலும், குறிப்பாகச் சீனா தென் சீனக்கடலில் தீவுகளைத் தொடர்ந்து வைத்திருப்பதும் அதனை இராணுவ மயமாக்குவதும் நடைபெறுகின்றது. இறுதியான உடன்படிக்கையானது சீனா அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை இராணுவப் பயன்பாடுகளுக்குப் பயன்படுத்துவதை தடுக்கிறது என்று இலங்கை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் மற்றவர்கள் சீனாவிடம் மோசமாகக் கடன்பட்டிருக்கும் இலங்கை அரசாங்கத்தைச் சீனா தனது இராணுவ நோக்கங்களுக்கு பயன்படுத்த அழுத்தம் கொடுக்க முடியும் என்கின்றனர்.

“அரசாங்கங்கள் மாறலாம்” தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ராஜாங்க அமைச்சரான டி சில்வா கூறினார்.
சீனாவின் விருப்பத்திற்குரியவரான மகிந்த ராஜபக்ஸ மீண்டும் அரசியலில் மீண்டு வந்துகொண்டிருப்பது குறித்துக் கவனமாக நோக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதியின் புதிய எதிர்க்கட்சி நகரசபைத் தேர்தலில் சிறப்பான நிலைக்கு வந்தது. சனாதிபதித் தேர்தல் வருகின்ற ஆண்டும் பொதுத் தேர்தல் 2020 ஆம் ஆண்டிலும் வருகிறது.மீண்டுமொரு பதவிக்காலத்தை சனாதிபதியாக மகிந்த ராஜபக்ஸ சட்டப்படி வகிக்க முடியாதிருந்தும் அவரது சகோதரர் அதற்குத் தயாராகி வருகிறார்.”இது மகிந்த ராஜபக்ஸவின் அழைப்பாகும். இது என்னுடைய தம்பிகளில் ஒருவர் என அவர் சொன்னால், அந்த நபர் வலுவாவார்”, என மத்திய வங்கியின் ஆளுநராக மகிந்த அரசாங்கத்தில் பதவி வகித்த இன்னமும் மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு ஆலோசனை வழங்கும் Ajith Nivard Cabraal கூறினார். “அரசியலமைப்புக் கட்டமைக்கப்பட்ட விதத்தினால் அவர் மேலும் ஜனாதிபதியாக முடியாவிட்டாலும், அவரே முதன்மையான ஆற்றலாக விளங்குவார்” என அவர் மேலும் கூறினார்.

குறிப்பு: நியூயோர்க் ரைம்ஸ் இதழில் யூன் 25 ஆம் தேதி ஆங்கிலத்தில் வெளியான இக்கட்டுரையைத் தேவை கருதி குளோபல் தமிழ்ச் செய்திகள் மொழியாக்கம் செய்திருக்கிறது. (மீள் பதிவு செய்பவர்கள் மொழியாக்கம் – குளோபல் தமிழ்ச் செய்திகள் என குறிப்பிட்டு மீள் பதிவு செய்யலாம்.)

 

 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.