இலங்கை பிரதான செய்திகள்

இணைய வழி மோசடிகள் யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


“இணைய வழி மோசடிகள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளன. கடந்த மாதத்தில் இரண்டு சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்தன” என்று யாழ். நீதிமன்றுக்கு காவற்துறையினர் அறிவித்துள்ளனர்.

கடனட்டை ஊடாக இணைய வழியில் மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய போதே காவற்துறையினர் இந்த விடயத்தை நீதிமன்றில் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள ஒருவர் வெளிநாடு ஒன்றுக்குச் செல்வதற்கான நுழைவிசாவுக்கு (விசா) இணையம் மூலம் (ஒன்லைன் அப்லிக்கேசன்) விண்ணப்பிக்க கொழும்பிலுள்ள உறவினரின் உதவியை நாடியுள்ளார்.

அவர் நுழைவுவிசாவுக்கான கட்டணத்தை இணையம் மூலம் செலுத்த விண்ணப்பதாரியின் வங்கிக் கடனட்டையின் குறியீட்டு இலக்கங்களைப் பெற்றுள்ளார்.

அதனைப் பயன்படுத்தி தனது உறவினரான பெண்ணுக்கு நுழைவுவிசா பெற்றுக்கொடுத்துள்ளார். நுழைவு விசா பெற்றவரும் வெளிநாடு சென்று திரும்பியுள்ளார்.

அந்தப் பெண் வெளிநாடு சென்றிருந்த போது, அவரின் கடனட்டை குறியீட்டு இலக்கத்தைப் பயன்படுத்தி இணையம் மூலம் மின்னியல் சாதனங்களை அந்த உறவினர் கொள்வனவு செய்துள்ளார்.

இவ்வாறு கடனட்டையில் மோசடி செய்வதனை அந்தப் பெண் அறியாதிருக்க, அவரது கைபேசி இணைப்பு வழங்குனரான டயலொக் நிறுவனத்துக்குச் சென்றுள்ள இந்த நபர், தனது தாயாரின் சிம் இயங்கவில்லை எனவும் அந்த இலக்கத்துக்கு புதிய சிம் அட்டையை வழங்குமாறும் கோரியுள்ளார்.

டயலொக் நிறுவனமும் புதிய சிம் அட்டையை வழங்கியுள்ளனர்.

இதனால் கடனட்டையின் ஊடாக அந்த நபரால் செய்யப்பட்ட கொடுக்கல் வாங்கல் செயற்பாடு தொடர்பான குறுந்தகவலை கடனட்டை வாடிக்கையாளரான பெண்ணால் பெறமுடியவில்லை.

அந்த நபரின் செயற்பாட்டால் கடனட்டை வங்கிக் கணக்கில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நிலுவையை செலுத்தவேண்டியுள்ளது என வங்கியால் அந்தப் பெண்ணுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண், வங்கிக்குச் சென்று ஆராய்ந்த போது, இணைய வழி ஊடாக கொடுக்கல் வாங்கல் செய்யப்பட்டமை அறியக் கிடைத்தது.

வங்கியின் உதவியுடன் அந்தப் பெண் உடனடியாகவே யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் அந்த நபருக்கு எதிராக முறைப்பாடு செய்தார்.

முறைப்பாட்டை விசாரித்த காவற்துறையினர், கொழும்பிலுள்ள அந்த நபரை யாழ்ப்பாணம் காவல் நிலையத்துக்கு வருமாறு அழைத்துள்ளனர். அவரும் கடந்த வாரம் யாழ். காவற்துறையினர் நிலையத்துக்கு சென்றுள்ளார்.

அந்த நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட காவற்துறையினர், அவரைக் கைது செய்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

வழக்கை ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபரை வரும் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers