இலக்கியம் இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

சுசிமன் நிர்மல வாசனின் காண்பியக்கலைக் காட்சி ’90’ ஐ முன்வைத்து- கலாநிதி சி. ஜெயசங்கர்….

‘எஞ்சி இருப்பவை கரித்துண்டுகளாயினும் எழுதியே முடிப்போம்! ‘ என்பது ஈழக் கவிஞர் செழியனது கூற்று. இந்தக் கூற்றை நடைமுறையில் நடத்திக் காட்டியவர் ஓவியர் மாற்கு.

போர்க் காலத்தில் ஓவியக் கித்தான்கள்,வர்ணங்கள் என்பவை பொருளாதாரத் தடை காரணமாக வராது நின்றுபோக, கையில் கிடைத்தவற்றைக் கொண்டு போர்க்கால அனுபவங்களை ஓவியங்களாக்கி பொதுமக்கள் பார்வைக்கு தொடர்ச்சியாக அவரது மாணவர்களுடன் இணைந்தும், தனித்தும் கொண்டு வருவது மாற்குவின் வாழ்க்கையாக இருந்தது.

நவீன ஓவியங்களை பொது மக்களும் திரண்டு வந்து பார்க்கின்ற சூழலை ஈழத்தில் உருவாக்கிய தனித்துவ ஆளுமையாக ஓவியர் மாற்கு திகழ்ந்தார். மேலும் ஈழத்து ஓவியர்கள் என குறிப்பாகப் பெண்கள் நவீன ஓவியர்களாக உலகப் பரப்பில் இயங்கும் நிலையை உருவாக்கிய தனிமனித கலை நிறுவனமாக ஓவியர் மாற்குவும் அவரது சிறியதேயான வீட்டு முன்றிலும் திகழ்ந்திருப்பதும் வரலாறாகும்.


போர்க்காலத்தில், பொருளாதாரத் தடை காரணமாக ஓவியங்களை உருவாக்குவதற்கான ஊடகங்கள் வராது போக, நினைத்தும் பார்க்க முடியாத ஊடகங்கள் எல்லாவற்றிலும் ஓவியங்களை உருவாக்கி காட்சிபடுத்தல்களுக்கு கொண்டு வந்து கொண்டேயிருந்தார் ஓவியர் மாற்கு. அலையலையாக எதிர்கொண்டு வந்த தடைகளை எல்லாம் தனதும் தனது மாணவர்களதும் ஓவிய ஆக்கங்கள் மூலம் எதிரலைகளை மாற்கு உருவாக்கிக் கொண்டிருந்தார்.
கடைசியில்,’காட்போட்’ மட்டைகளில் கரித்துண்டுகளால் போர்க்கால ஓவியங்களை எழுதியே முடித்திருந்தார்.

ஈழ ஓவிய வரலாற்றின் மூத்த ஓவிய ஆளுமையின் கிழக்கின் வெளிப்பாக இளம் ஓவிய ஆளுமையான சுசிமன் நிர்மலவாசன் விளங்குகிறார். பாடசாலைக் காலந்தொட்டு தன்னார்வத் தேடல்களுடு ஓவியராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள சுசிமன் நிர்மலவாசன் உள்ளுர் சந்துகளுக்கு தனது ஓவியப் படைப்புக்களை எடுத்துச் செல்லும் அதேவேளை உலகப் பரப்பிலான ஓவியக் காட்சிபடுத்தல்களுக்கு அழைக்கப்படும் கலை ஆளுமையாகவும் தன்னைத் தாபித்துக் கொண்டிருக்கிறார்.

பாடசாலை ஆசிரியராக மாணவர்களுடன் இணைந்து பல புத்தாக்கங்களை தொடர்ச்சியாக நிகழ்த்திவரும் சுசிமன் நிர்மலவாசன் மூன்றாவது கண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழு ,வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர் குழு,சமதைஆகியவற்றுடன் இணைந்து செயல்வாதமாகக் கலை முன்னெடுப்பின் பங்காளியாகவும் இயங்கி வருபவர். ஓவியத்தை பார்ப்பதில் இருந்து பங்குபற்றுவதற்கானதாகவும் ஓவியக் காட்சிபடுத்தல்களை வடிவமைத்ததன் முக்கிய கலை ஆளுமையாகவும் சுசிமன் நிர்மலவாசன் அவர்கள் திகழ்கின்றார்.

கிராமங்களை நோக்கி காண்பியச் செயற்பாட்டையும், காண்பியக் காட்சிபடுத்தல்களையும் எடுத்துச் செல்லும் மூன்றாவது கண் நண்பர்கள்,’சமதை’வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர் குழுவினரது செயற்பாடுகளில் தீவிரமாக இயங்கி வருபவர் சுசிமன் நிர்மலவாசன்.


மூத்த கலை ஆளுமைகளான குழந்தை ம. சண்முகலிங்கம், ஓவியர் மாற்கு போல சதா தேடல்களிலும், படைப்புக்களிலும் உழன்று கொண்டிருக்கும், தன்னைத் தனது செயற்பாடுகளினூடாகவே நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் முன்னுதாரணமான ஆளுமையாக சுசிமன் நிர்மலவாசன் திகழ்கின்றார். பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு குறிப்பாக காண்பியக் கலைப் பட்டதாரிகளுக்கு சுசிமன் நிர்மலவாசன் பலமானதொரு செய்தியாக இருக்கின்றார் என்பது வலுவான கவனத்திற்குரியதாகும்.  இத்தகைய ஆற்றலும் அர்பணிப்பும் தொடர் இயக்கமும் கொண்ட சுசிமன் நிர்மலவாசனது ஓவியக் காட்சிபடுத்தல் 15.07.2018 இல் பன்குடா வெளியில் நிகழ்த்தப்பட உள்ளது. அது பற்றிய அவரது கலைக் கூற்று மிகுந்த கவனத்திற்குரியது.

‘இராணுவத்தினர் சுற்றிவளைப்பிற்காக ஊருக்குள் வரும் செய்தி வேலிகளுக்கூடாக ஊர் முழுக்கப்பரவும். ஊர் ஆற்றைக்கடந்து நரிப்புல் தோட்டத்தற்கு ஓடும், சில சந்தர்ப்பங்களில் சிறுவர்களும் பெண்களும்; கண்ணாடிப்பெரியப்பா வீட்டிலோ, கோவிலிலோ ஒன்றுசேர பெரும்பாலான ஆண்கள் ஊரைவிட்டு ஒடுவார்கள். வேலைக்குப்போன பெரியமாமா அப்படி ஓடியபோது தான் சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கி இரவைகளில் இருந்து சிறுவர்கள் எங்களை பாதுகாக்க கண்ணாடிப்பெரியப்பாவின் பெரிய கட்டிலின்கீழ் அனுப்புவார்கள். மாமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் அவரும் எங்கள்கூட அனுப்பப்பட்டார். நாங்கள் கட்டிலின்கீழ் விழித்துக்கொண்டிருக்க கட்டில் எங்கள்மேல் தூங்கிக்கொண்டிருக்கும். சுற்றிவளைப்பின் போது அழைத்துச் செல்லப்படும் ஆண்களும் பெண்களும் தலையாட்டி பொம்மை முன்பாக நிறுத்தப்படுவார்கள், சின்ன மாமாவை பார்த்து தலையாட்டி பொம்மை தலையாட்டியதால் மாமா கைது செய்யப்பட்டார் அம்மாவும் மாமியும் முகாமின் முன்பாக நின்று அழுது அவரை விடுவிக்கப்பண்ணினார்கள். அவர் ஏற்கனவே நண்பர்களுடன் வீதியில் நின்றமைக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பூசா சிறைச்சாலைவரை சென்றுவந்தவர். இவ்வாறு என்னைச் சுற்றியிருந்த யுத்தமே எனது ஓவிய கருப்பொருளாக இருந்து வருகிறது.

கலைப்படைப்பின் கருத்தியலுடன் தொடர்புடைய இடங்களில் அக்கலைப்படைப்புக்கள் காட்சிப்படுத்தும் போது அதன் அர்த்தம் இன்னும் மிகுதியாகும் எனும் எண்ணம் 2003ல் எனக்கு உருவானது. ஆனாலும் 2018 ல் அது சாத்தியமாகிறது.’

சுசிமன் நிர்மலவாசன் – 2018

கதை கூறும் பாணியிலான சுசிமன் நிர்மலவாசனது ஓவியக் காட்;சிப்படுத்தலுக்கான கலையாக்க வாக்குமூலத்தின் எழுத்தும் பொருளும் அற்புதமான கலை ஆக்கமாகக் கனிந்திருப்பது இளம் ஆளுமையின் கனிவானதும் உறுதியானதுமான முதிர்ச்சியை வெளிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது.
ஓவியங்களை உருவாக்கி அவற்றைக் காட்சிபடுத்தும் இடத்தையும் அந்த இடத்துடன் சம்பந்தப்பட்ட எஞ்சியிருக்கும் உறவுகளையும் இணைத்து உருவாக்கப்படும் ’90’ என்ற தலைப்பிலான ஓவியக் காட்சிபடுத்தல் பல பரிமாணங்களை தன்னகத்தே இணைத்துக் கொண்டிருக்கிறது. இதுவொரு ஆற்றுகையாகவும் பரிணமிக்கிறது. இதனைப் பற்றி தனித்தும் விரித்தும் எழுதப்பட வேண்டியது. அது எழுதப்படும்.

15. 07. 2018 அன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பன்குடாவெளியில் ஆளரவமற்றும் சிதிலமடைந்தும்; வெளவால்களின் இருப்பிடமாகவும், பட்டிகள் களைப்பாறும் இடமாகவும் அமைந்திருக்கும் கண்ணாடிப்போடியார் இல்லத்தில் நிகழ்த்தப்படவிருக்கும் ஓவியர் சுசிமன் நிர்மலவாசனது காண்பியக் காட்சிபடுத்தல்களுக்கு விடுக்கும் அழைப்பாகவும் இக் கட்டுரை அமைகிறது. இக்காட்சிபடுத்தலை மூன்றாவது கண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள், எவரெஸ்ட் விளையாட்டுக் கழகம், இந்து இளைஞர் மன்றம், பன்குடா வெளி ஆகிய அமைப்புக்கள் இணைந்து முன்னெடுக்கின்றன.

கலாநிதி சி. ஜெயசங்கர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers