இலங்கை பிரதான செய்திகள்

விடுதலைப் புலிகளை எதிர்த்துப் போராடிய நாம் தற்போது குற்றச்செயல்களுடன் போராடவேண்டியுள்ளது :

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


வடக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல பகுதியில் காவல்துறை சேவையில் பல குறைபாடுகள் உள்ளன என்பதை ஏற்றுக்கொண்ட காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, அவற்றை சீரமைக்கும் பணிகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு இரண்டு நாள் பயணமாக வருகை தந்த சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பிரதி அமைச்சர் நளின் பண்டார மற்றும் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர், யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர்.

இந்தச் சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போதே காவல்துறை மா அதிபர் இந்த தகவலை செய்தியாளர்களிடம் வெளிப்படுத்தினார்.

மேலும் தெரிவிக்கையில் ,

காவல்துறை அதிகாரிகள் இலஞ்சம் பெறுகின்றனர், சில அதிகாரிகள் மதுபோதையில் அலுவலகத்துக்கு வந்து கடமையாற்றுகின்றனர், சிலர் தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றனர்.

சில காவல்துறை மீது தவறான நடத்தைகள் தொடர்பான முறைப்பாடுகளும் இங்கிருந்து எனக்குக் கிடைத்துள்ளன. அவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளேன்.

இவற்றை சீர்செய்து பொலிஸ் சேவையை சீரமைக்கும் பணிகளை தற்போது முன்னெடுக்கின்றேன். மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் போதுதான் மக்களுக்கும் காவல்துறையினர் மீது நம்பிக்கை ஏற்படும்.

காவல்துறையினரின் தேவைகள், அவர்களுடைய நலன்புரி விடயங்கள் மற்றும் காவல்துறைசேவையிலுள்ள குறைபாடுகள் தொடர்பில் ஆராயவே காவல்துறைமுறைக்கு பொறுப்பான சட்டம், ஒழுங்கு அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் நான் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளோம்.

குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதில் காவல்துறையினர் பொறுப்புணர்வுடனேயே செயற்படுகின்றனர். எனினும் குற்றச் செயல்களை அவர்களால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது. பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியம்.

அதற்காகவே சிவில் பாதுகாப்புக் குழுக்கள் ஒவ்வொரு கிராம சேவையாளர் மட்டத்திலும் அமைக்கப்பட்டன. அந்தக் குழுக்களுக்கு காவல்துறையினர்; முழுமையான – நெருங்கிய ஒத்துழைப்பை வழங்குவர்.

சிவில் பாதுகாப்புக் குழுக்களின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்குமாயின் காவல்துறையினரால் குற்றச்செயல்களை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த முடியும்.

காவல் நிலையத்தாலோ, உதவிக் காவல்துறை அத்தியட்சகராலோ பொது மக்களின் முறைப்பாடுகளுக்கு தீர்வு கிடைக்கவிடின், எந்தவொரு பொது மகனும் என்னுடன் எந்தவேளையிலும் தொடர்புகொள்ள முடியும்.

071 8591002, 071 7582222 ஆகிய எனது தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளுக்கு அழைப்பை மேற்கொண்டு எந்தவொரு அவசர பிரச்சினையையும் தெரிவித்தால், உடனடியாகவே அதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

விடுதலைப் புலிகளை எதிர்த்துப் போராடிய நாம் தற்போது குற்றச்செயல்களுடன் போராடவேண்டியுள்ளது என தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers