இலங்கை பிரதான செய்திகள்

காவற்துறையினருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு…

 

யாழ்.மாவட்டத்தில் குற்றவாளிகள், போதைவஸ்து கடத்தல்காரர்களுடன் காவற்துறையினர் மிக நெருக்கமான தொடர்புகளை கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வரையில் குற்றங்களை குறைக்க இயலாது. என தாம் காவற்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கு எடுத்துக்கூறியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தின் சட்ட ஒழுங்கு நிலமைகள் குறித்து ஆராய்வதற்காக நேற்று யாழ்.வந்த சட்ட ஒழுங்கு அமைச்சர் றஞ்சித் மத்தும பண்டார மற்றும் பிரதி அமைச்சர், காவற்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோர் இன்று பிற்பகல் வடமாகாண முதல மைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,   வடமாகாணத்தில் போதைவஸ்து கடத்தல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. அதேபோல் குற்ற செயல்களும் அதிகளவில் இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் இவை அதிகளவில் இடம்பெறுகின்றன.

இவ் வாறான குற்றவாளிகளுடன் காவற்துறையினர் மிக நெருக்கமான தொடர்புகளை கொண்டிருக்கின்றார்கள். என காவற்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கு சுட்டிக்காட்டினேன். அதனை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதனடிப்படையில் குற்றவாளிகளுடன் அல்லது குற்றம் செய்பவர்களுடன் மிக நெருக்கமான தொடர்பை கொண்டிருக்கும் சில காவற்துறையினருடைய  பெயர் விபரங்களை நான் கூறியிருக்கிறேன். அவர்கள் தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ்மா அதிபர் கூறியுள்ளார்.

அதே சமயம் குற்றவாளிகளுடன் காவற்துறையினர்  மிக நெருக்கமான தொடர்புகளை கொண்டிருக்கும் நிலையில் வடக்கில் குற்றங்களை அல்லது போதைவஸ்த்து கடத்தல்களை தடுத்து நிறுத்துவது கஸ்டமான விடயம் என்பதையும் நான் சுட்டிக் காட்டியுள்ளேன். அதனை அவர் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்.

மேலும் தெற்கில் குற்றங்களை புரிந்தவர்களையா? வடமாகாணத்திற்கு அனுப்புகிறீர்கள்? என கேட்டதற்கு அவ்வாறில்லை. என கூறிய காவற்துறை மா அதிபர் காவற்துறையினர்  கட்டாயமாக வடக்கில் 2 வருடங்கள் சேவையாற்ற வேண்டும் என்பது கட்டாயம் என கூறினார்.

மேலும் குற்றவாளிகள் மற்றும் போதைவஸ்து கடத்தல்காரர்களுடன் தொடர்பில் உள்ள காவற்துறையினர் மற்றும் குற்றவாளிகளுடன் நெருக்கமாக உள்ள காவற்துறையினர்  தொடர்பாக தகவல்கள் இருப்பின் தனக்கு இரகசியமாக கடிதம் ஒன்றை அனுப்பிவைக்குமாறும் அதற்கமைய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார். என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.