Home இலக்கியம் தென்னிந்திய சடங்குகளில் சூடும் வண்ணங்களும் …..

தென்னிந்திய சடங்குகளில் சூடும் வண்ணங்களும் …..

by admin

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவகம் தனது 3வது உலக ஆய்வு மாநாட்டை எதிர்வரும் 15, 16, 17, 18ம் திகதிகளில் நடத்த தீர்மானித்துள்ளது. இந்நிகழ்விற்கு ஆதார சுருதி உரைகளை (மநலழெவந ளிநநஉh) வழங்குவதற்காக பல அதிதிகள் வருகை தரவுள்ளனர். அவர்களில் கலாநிதி பிரெண்டா ஈ. எஃப். பெக் அவர்கள் தென்னாசியா மற்றும் தமிழ் நாட்டைப் பற்றி வாழ் நாள் பூராகவும் ஆராய்ந்தவர். கலாநிதி பெக்குக்குத் தென்னாசிய புராணவியல் பற்றி அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டின் நாட்டார் கதைகள் பற்றி ஈடுபாடு உண்டு. இவர் இம் மாநாட்டில் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக கனடாவிலிருந்து வருகைதந்து இவ் மாநாட்டின் அதிதி உரையில் ‘அண்ணன்மார் பொங்கல் பானை பொங்கி வழிகிறது:- அதனோடு இணைந்து ஆச்சரிய மூட்டும் தமிழ் ஒரு நாட்டார் காவியம் மீது கொண்ட பேரார்வமும் பிரவாகம் கொடுக்கிறது’ என்ற தொனிப் பொருளில் தனது உரையை நிகழ்த்தவுள்ளார்.அத்துடன் ஆய்வு மாநாட்டில் ‘தென்னிந்திய சடங்குகளில் சூடும் வர்ணமும்’ என்ற தலைப்பில் கட்டுரையையும் சமர்பிக்கவுள்ளார். அக்கட்டுரையின் சாராம்சம் இங்கு தரப்படுகின்றது.

தென்னிந்திய சடங்குகளில் சூடும் வண்ணங்களும்

இந்திய திருவிழாக்கள் ஒரே வண்ணமயமானது என்று பல நூலாசிரியர்கள் எழுதியுள்ளனர். அதிலும் சில குறிப்பிட்ட வண்ணங்களை இந்தியர்கள் திரும்பத் திரும்ப அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று கூறியுள்ளனர். அதற்கான காரணங்கள் பற்றி யாரும் ஆராய்ந்ததாகத் தெரியவில்லை. இந்தக் கட்டுரை அதற்கான காரணங்களையும் தேட முனைகிறது. இந்த விளக்கங்களும், காரணங்களும் இந்தியச் சடங்குகளில் சூடு பற்றிய கோட்பாட்டுடன் சம்பந்தமுறுகிறது.
தென்னிந்திய வாழ்க்கை ஒவ்வொரு நாளும் சூட்டோடும், குளிரோடும் சம்பந்தப்பட்டது. உதாரணமாக இந்தியர்கள் ஒவ்வொரு நாள் உணவை உள் எடுக்கும் போது அது சூடா, குளிரா என்று எண்ணுகிறார்கள். இன்னும் சில பாவனைப் பொருட்களும் அவ்வாறு எண்ணப்படுகின்றன. மேலும் மனித வாழ்க்கையின் சில பருவங்கள் சூடானவை என்றும் குளிரானவை என்றும் கருதப்படுகின்றன. சூடு கூடும் போது தூய்மைக்கேடு உண்டாகிறது என்று எண்ணுகிறார்கள். இந்த சூடு, குளிர் கருத்து இந்தியாவின் வண்ணக்கோட்பாட்டோடு இணைந்து செயற்படுகிறது. சூடு அதிகாரத்தினதும், வளத்தினதும் குறியீடாகவும் உள்ளது. சிவப்பு நிறம் சூட்டிற்கும் வெள்ளை நிறம் குளிருக்கும் அடையாளமாக கொள்ளப்படுகின்றன. இதனால் சூடும் குளிரும் இணைந்து சமநிலை கொண்டது தான் வாழ்க்கை என்ற அர்த்தத்தில் தென்னிந்தியத் திருவிழாக்களில் வெள்ளை, சிவப்பு நிறங்கள் முக்கிய வண்ணங்களாக இருக்கின்றன.

தெய்வம் சில நிறங்கள் மூலமாக சில செய்திகளை பக்தர்களுக்கு உணர்த்துகிறது என்று கருதப்படுகிறது. உதாரணமாக தென்னிந்திய கோயில்களில் பூசாரி பச்சை இலைகளால் ஆன ஆறு கூடைக்குள் பூக்களை வைத்திருப்பார். மூன்று கூடைக்குள் வெள்ளைப் பூக்களும், மூன்று கூடைக்குள் சிவப்புப் பூக்களும் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். ஒருவர் வந்து தனது எதிர்காலம் பற்றிக் கேட்டால் அவ்வாறு கூடைகளையும் எடுத்து கோயில் வாசலில் பூசாரி எடுந்தமானமாகப் போடுவார். குழந்தை ஒன்றைக் கொண்டு: ஒரு கூடையை எடுக்கச் செய்வார். அக்குழந்தை வெள்ளை மலர் அடங்கிய கூடையை எடுத்தால் கல்யாணம் போன்ற சுப காரியங்கள் சம்பவிக்கும் என்றும் சிவப்புமலர்க் கூடையை எடுத்தால் நோய் போன்ற தீயவிளைவுகள் ஏற்படும் என்று அர்த்தமாகும்.

சிவப்பு தீயின் நிறமாகும். தீ வழமையாக மனிதனின் வழங்கல்களை கடவுளிடம் கொண்டு சேர்க்கும் ஊடகமாகும். சிதை (சடலம் எரியும் தீ) மனிதனை அவனின் முன்னோர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் கருவியுமாகும். தீயின் ஊடாக மறுபிறப்பை அடையலாம். இந்தப் பிறவிச் சக்கரத்திற்கு முடிவில்லை. ஒரு இந்துப் பெண் கணவனின் சடலம் எரியும் தீயில் மூழ்கி அவனை அடையலாம். பல இந்தியப் புராணங்கள் இவற்றைக் கூறுகின்றன.

சூடு மாற்றத்தின் அடையாளமாகவும் இருக்கின்றது. பொங்கல் சடங்குகள் இதனை எடுத்துக்காட்டுகின்றன. இது தென்னிந்தியாவில் முக்கிய சடங்காக உள்ளது. பொங்கல் என்றால் பொங்குதல் அதாவது அபரிமிதமாதல், செழிப்பாதல், நல்வாழ்வு என்று கருத்தாகும். இதற்கு எதிர்ப்பதம் மங்கு என்பதாகும். மங்கு என்றால் சோபை இழுத்தல், குறைந்து போதல், சீரழிதல் என்றெல்லாம் கருத்துக் கொள்ளலாம். மேலும் மங்கு இருளடைதல், கறுதல் என்றும் பொங்கு வெளிப்படல், ஒளிர்தல் என்;றும் கருத்தில் கொள்ளப்படுகிறது. அங்கே பல குடும்ப நிகழ்வுகளிலும் வருடாந்த சடங்குகளிலும் பொங்கல் இடம்பெறும். பொங்கல் என்றால் பிரதானமாக அரிசியும், பாலும் ஒரு பானையில் இட்டு கொதிக்க வைக்கப்படுவதாகும். இங்கு இரு முக்கிய விடயங்கள் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளன. ஒன்று சூடாக்குதல் மற்றது வெள்ளை நிறமான பொங்கலை உண்ணுதல். இந்தப் பொங்கல் சூடால் உருவான வெள்ளைப் பதார்த்தமாகும். பொங்கல் முடிந்தவுடன் அதைக் கடவுளுக்குப் படைத்து, பின்னர் உறவினர்களோடு இருந்து உண்ணப்படுகிறது.

தென்னிந்திய சடங்குகளில் காணப்படும் இன்னொரு அம்சம் இரத்தப்பலியாகும். இங்கே இரத்தம் சூட்டின் குறியீடாகும் என்று ஏற்கனவே சொல்லப்பட்டது. சூடு மாற்றத்தைக் கொண்டு வருவதாகக் கருதப்படுகிறது. உதாரணமாக ஒரு சிறுமியைப் பிடித்த துஷ;ட தேவதை இரத்தப்பலி கொடுப்பதால் விலகி ஓடுகிறது. இங்கே இரத்தம், நெருப்பு, சூடு ஒத்திசைவான அம்சங்களாக உள்ளன.

தென்னிந்திய மொழிகளில் நான்கு நிறங்கள் அடிப்படையானவை என்று கருதப்படுகின்றன. அவைகள் வெள்ளை, சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், கறுப்பு என்பவைகளாகும். அவைகளில் இருந்தே மற்ற நிறங்கள் கிளைத்தன.

அவை நான்கு தன்மைகளின் வெளிப்பாடாகும். முன்னர் சொல்லப்பட்டது போல் வெள்ளை நிறம் தூய்மை, நல்வாழ்வைக் குறிக்கிறது. இன்னும் வெள்ளை குளிர்மையான நிறம் எனவும் கருதப்படுகிறது. குளிர்மையைத் தரும் நீர், பால் என்பனவற்றோடு வெள்ளை இணைந்துள்ளது. வெள்ளை உலகத்திற்கு மேலேயுள்ள வானத்தோடும், காற்றோடும் சேர்ந்துள்ளதாகக் கருதப்படுகின்றது. மற்றப்பக்கமாக கறுப்பு உலகத்திற்குக் கீழே உள்ளனவோடும், பாதாள உலகத்தோடும் இணைந்துள்ளது. சுருக்கமாக வெள்ளை தூய்மையோடும், கறுப்பு தூய்மைக் கேடோடும் சம்பந்தப்பட்டவைகளாக உள்ளன.

சிவப்பு தென்னிந்திய தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களைத் தரும் நிறமாகும். அடிக்கடி நாம் காணுவது போல் அது ஆரோக்கியம், உயிர்ப்பு என்பவற்றின் குறியீடாகவும் கருதப்படுகிறது. ஏனென்றால் சிவப்பு இரத்தத்தின் நிறமாகும். அதேவேளை அது மாசு, சண்டை, இறப்பின் வெளிப்பாடாகவும் உள்ளது. உதாரணமாக தமிழில் உள்ள செம்புலம் (செம்மை – சிவப்பு) என்ற சொல் இரு வேறு கருத்துக்களைக் கொண்டது. ஒரு கருத்து செழிப்பான நாடு மற்றது மயானம் அல்லது சுடலை. இதனால் சிவப்பு என்ற நிறம் அது அமைந்திருக்கும் தன்மையைப் பொறுத்து இரு வேறு கருத்துக்களைத் தரும். வெள்ளையோடு சிவப்பு கலந்து வரும் சந்தர்ப்பங்களில் அது மங்களமான சம்பவங்களைக் குறிக்கும். கறுப்போடு சிவப்பு சேரும் போது அது தூய்மைக் கேடாவும், சூடானதாகவும் மாறுகிறது. மாந்திரிகம், பேய் விரட்டல் என்பவைகளில் சிவப்பும் கறுப்பும் இணைந்திருக்கும். பலி கொடுப்பதற்குக் கறுப்பு விலங்குகள் தான் அதிகம் விரும்பப்படுகின்றன. சூட்டையும், தூய்மைக் கேட்டையும் தரும் சிவப்பு வெள்ளையோடு சேரும் போது அவைக் கட்டுக்குள் வரும். கறுப்போடு சேரும் போது கட்டுக்குள் வராது.

எஞ்சியிருக்கும் மஞ்சள் ஃ பச்சையும், நீலம் ஃகறுப்பும் தென்னிந்திய சடங்குகளில் முக்கியமான வண்ணங்கள். மஞ்சளும் பச்சையும் ஒரே நிறமாகக் கொள்ளப்படுகின்றன. புராதனத் தமிழில் அவைகளிடையே வேறுபாடு இருக்கவில்லை. தெலுங்கில் இன்று அவை பச்சை என்ற ஒரே சொல்லால் குறிக்கப்படுவது கருதத்தக்கது. மஞ்சள் நிறமான மஞ்சளும், குங்குமப் பூவும் குளிர்மையான பதார்த்தங்களாகும். மஞ்சளைப் பருவமடைந்த சிறுமியின் உடலில் பூசி குளிப்பாட்டுவதால் அவள் உடலில் உள்ள சூடும், மாசும் நீங்குகிறது என்று நம்பப்படுகிறது. மிருகம் பலியிடுவதற்கு முன் மஞ்சள் அதன் நெற்றியில் அப்பப்படும். புதிய உடைகளைப் பரிசலிப்பதற்கு முன்னர் அதில் சிறிது மஞ்சளைப் பூசுவர். கலியாணத்தாலியிலும் கொஞ்சம் மஞ்சளைப் பூசுவர். இன்னும் மஞ்சள் சந்ததிப் பெருக்கம், செல்வம் என்பனவற்றின் அடையாளமாகவும் உள்ளது. இதனால் விதவைப் பெண்களை இதனைக் கையாளாமல் தடுப்பர்.

சடங்குகளில் பச்சையின் பங்கும் மஞ்சளின் பங்கும் ஒன்றாக உள்ளது. இது சந்ததிப் பெருக்கத்திற்கும், குளி;ர்மைக்கும் குறியீடாகக் கொள்ளப்படுகிறது. பச்சை அதிகளவில் சூழலில் தாவரங்களின் இலைகளில் காணப்பட்டு செழிப்பின் அடையாளமாக இருப்பதால் மஞ்சள் போன்று மங்களகரமானதாகக் கொள்ளப்படுகிறது.
இந்திய சடங்குகளில் வெள்ளை, சிவப்பு, மஞ்சள் நிறங்களில் பயன்பாடு சாதி அமைப்புடன் இணைந்துள்ளது. நான்கு கால்கள் நட்டு பந்தல் ஒன்று சதுரமாகக் கட்டுவார்கள். ஒவ்வொரு காலின் கீழும் நான்கு சாதிகளின் குல தெய்வங்கள் பிரதிஷ;டை செய்யப்பட்டிருக்கும். பிராமண சாதிக்கு வெள்ளையும், அதன் எதிர்த்திசையில் உள்ள சைத்திரிய சாதிக்கு சிவப்பும், வைசிய சாதிக்கு மஞ்சளும், சூத்திர சாதிக்கு நீலமும் ஒதுக்கப்பட்டிருக்கும். இதனால் வர்ணங்கள் உயர்வு, தாழ்வு வரிசைக்குள் வருகின்றன. இதற்கு சமூக எதிர்ப்பும் உண்டு.

ஆட்சியதிகாரம் கொண்ட சைத்திரியர்களின் நிறமான சிவப்பை எதிர்ப்பது போல் பிராமணர்களின் நிறமான வெள்ளை எதிர்ப்பக்கத்தில் அமைந்துள்ளது. பொதுவாக இந்திய சடங்குகளில் சிவப்பும், வெள்ளையும் முக்கிய இடம்பெறுகின்றன. அது பிராமணர்களும், சைத்திரியர்களும் ஒன்று சேர்ந்து நாட்டை, மக்களை பரிபாலிப்பதைக் குறிக்கிறது. வெள்ளை முன்னர் குறிப்பிட்டது போல தூய்மையின், குளிர்மையின் அடையாளம். சிவப்பு செழிப்பு, உயிர்ப்பின் குறியீடு. இந்த இரு நிறங்களும் மஞ்சளுக்கும், பச்சைக்கும் உயர்வானவை. பச்சை இயற்கையில் பசுமைக்கு அடையாளமாக இருந்தாலும் அது மனித உடலுக்கு அவசியமானதில்லை என்று கருதப்படுகிறது.

இவைகள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டவை. வெள்ளை, சிவப்பு. மஞ்சளுடன் ஒப்பிடுகையில் நீலம்ஃகறுப்பு பெரும் முரண்பாட்டையும், கீழ்நிலையையும் கொண்டது. இரு பிறப்பாளர்களான பிராமணர், சைத்திரியர், வைசியர். ஒரு பிறப்பாளர்களான சூத்திரர்களிலிருந்து வேறுபட்டவர்கள். இதனால் நிற அதிகார அடுக்கில் நீலம்ஃகறுப்பு அடிநிலையை அடைகின்றது. அல்லது புறம்பாக ஒதுக்கி வைக்கப்படுகிறது.

செவ்வியல் இலக்கியங்கள் கீழ்நிலைச்சாதிகளின் தோல் நிறத்தை கறுப்பெனச் சித்தரிக்கின்றன. பொதுவாக சடங்குகளில் நீல நிறப் பொருட்கள் இடம்பெறுவதில்லை. அதே போல் சூத்திரர்களின் பலி கொடுத்தல் முதன்மை பெறுவதில்லை. செம்மொழி இலக்கியங்களில் அது விபரிக்கப்படவில்லை. இருந்தபோதிலும் பெருந்தெய்வங்களான சிவனும், கிருஷ;ணனும் நீல நிறம் கொண்டவர்களாகக் காட்டப்படுவது ஏன்? அவர்கள் மாபெரும் யோகிகளாக இருப்பதே அதற்குக் காரணம் ஆகும். அவர்கள் சகலதையும் துறந்து அதிகார அடுக்கிலிருந்து விடுபட்டவர்கள். இதனால் அவர்கள் நீலமாக சித்தரிக்கப்படுகிறார்கள். யோக செயற்பாடுகளால் எழும் சூடு உள்ளார்ந்து போக மேலுடம்பு குளிர்மை அடைவதால் நீலமாகி உள்ளது.

இந்தியக் கடவுளர்கள் தமது தவ வலிமையால் அளவிறந்த சூட்டை அல்லது சக்தியை பிறப்பிக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. வேத காலத்தில் தவம் என்றால் பலியிடுதல் மூலம் உருவாகும் சூடு என்று கருத்தாகும். உபநிடத காலத்தில் அதன் கருத்து யோகிகளால் தியானத்தால் உருவாகும் சூடு என்று மாற்றம் அடைகிறது. அது அவர்கள் காமத்தில் இருந்து விலகி இருப்பதால் உருவாவதாகும். அச்சூடு உள்ளடங்கி மேனி குளிர்மை அடைந்து நீல நிறமாகிறது.

யோக நடவடிக்கையின் போது யோகி சம்மணமிட்டு உடகார்ந்திருப்பதால் உடல் முள்ளந்தண்டில் நிலை கொள்கிறது. புலன்களை அடக்கி ஒடுக்கும் போது சூடு மேலெழுந்து சிரசை அடைகிறது. சிவன் கிருஷ;ணன் பற்றி சொல்லப்படும் புராணக் கதைகளின் படி ஒரு தடைவ அச்சக்தி சிரசை அடைந்தால் அது கீழிறங்காது. யோகிகளுக்கெல்லாம் யோகியான சிவன் தனது தவ வலிமையால் உருவான பெரு நெருப்பை நெற்றிக்கண்ணூடாக செலுத்தி படைக்கவோ அழிக்கவோ முடியும். அதை எடுத்துக்காட்டும் கதை ஒன்று உள்ளது. பெரும் காம வேடகையைத் தூண்டும் காமன் தியானத்திலிருந்த சிவனை மடக்கி மணம்புரிய வைத்து அவனை ஒரு குழந்தைக்கு தகப்பனாக்கிறான். தனது உயர் நிலையை கெடுத்த காமன் மீது கோபம் கொண்ட சிவன் தனது நெற்றிக்கண்ணால் காமனை எரிக்கிறான். இவ்வாறான கதைகள் உள்ளூர் தெய்வமான மாரியம்மன் பேரிலும் வழங்குகின்றன. இந்த தெய்வம் தென்னிந்தியா பூராகவும் பிரபலமாக இருக்கிறது. ஆயினும் அவள் பற்றிய கதைகள் இடத்துக்கிடம் வேறுபடுகின்றன. கோயம்புத்தூர் பகுதிகளில் வழங்கிவரும் கதைகளின் பிரகாரம் சிவன் அவளின் கற்பொழுக்கத்தையும் துர்த் தேவதைகளை அழித்ததையும் கண்டு மகிழ்ந்து அவளுக்கு ஒரு நெருப்புப் பானையையும் பரிசளித்தான். பின்னர் அவன் அவளை நாடியபோது அவன் சினமடைந்து அந்த நெருப்பு பானையை அவன் மீது விட்டெறிந்தாள். இந்தக் கதை சிவன் தனது தவத்தைக் கெடுத்த காமனை எரித்த கதையை நினைவுபடுத்துகிறது. இந்த இரு கதைகளும் காமத்தை அடக்குவதால் பெரும்சக்தி சேகரமாகும் என்பதைக் கூறுகின்றன. அவளின் வருடாந்த திருவிழாவில் இக்கதை பாவனை செய்து காண்பிக்கப்படுகிறது. இங்கே சூடு முக்கிய இடம்வகிக்கிறது.

மாரியம்மனின் எட்டு நாள் திருவிழாவில் ஒரு பால்மரம் கோயிலின் எதிரில் நாட்டப்படும். அதன் உச்சியில் ஒரு வெள்ளை நெருப்புச்சட்டி இரவு முழுதும் எரிய விடப்படும். ஒவ்வொரு நாளும் காலையில் அந்த நெருப்புச்சட்டி அகற்றப்பட்டு அதனிடத்தில் பச்சை இலைகள் கொண்ட நீர்ப்பானை வைக்கப்படும். இம்மாதிரி எட்டு நாட்களும் செய்யப்படும். பக்தர்கள் வெள்ளைப் பானை மாரியம்மனை விரும்பிய துர்த்தேவதையைக் குறிக்கும். அதில் உள்ள நெருப்பு அவளின் அடையாளம் என்றும், கோபமடங்கி குளிர்ந்து அருள் புரிவதை இலைகள் கொண்ட நீர்ப் பானை காட்டுகிறது என்றும் கூறுகிறார்கள்.

பக்தர் இந்த இரு பானைகளும் மாரியம்மனின் இரு வேறு பண்புகளை எடுத்துக்காட்டுகிறது என்று கூறுகின்றனர். ஒரு பக்கமாக மக்களின் பாரம்பரிய நம்பிக்கையின் படி கோபங் கொண்டு கொடிய வியாதிகளை ஏவும் தெய்வமாக இருக்கிறாள். பெரியம்மை, கண்குருடாதல் போன்ற கொடிய நோய்கள் உடல் சூட்டால் ஏற்படுபவை ஆகும். அவன் தான் கோபங்கொண்டவர்கள் உடலை சூடாக்குகிறாள். அவள் சூடு தனியும் போது நோயும் தனிகிறது. மறுபக்கமாக அவள் மழையை ஏவி சூட்டைத் தனிக்கிறாள். அவளது பெயரான மாரி என்பது மழையைக் குறிக்கும் சொல்லாகும். சில இடங்களில் அவளுக்கு பச்சியம்மன் (பசுமைத் தெய்வம்) என்ற பெயரும் உண்டு. பானையில் இருக்கும் இலைகளை கொண்டு பேய் பிடித்தவரை குணப்படுத்துமாறு வேண்டி விசுறுவர். மாரியம்மன் பெயரில் உள்ள மாறு என்பது இங்கே கவனிக்கத் தக்கது. அவளைப் பக்தர்கள் மாற்றத்தின் தெய்வமாக கொண்டாடுகின்றனர்.

உண்மையில் சூடாதல், குளிராதல் கடவுளின் செயலால் உருவாவதில்லை. பல்வேறு தாவர, கனிப்பொருட்களோடு மனித உடம்பு தொடர்பு கொள்ளும் போது அது சூடாதல், குளிரால் செயல்பாட்டுக்கு உட்படுகிறது. வருடத்தில் பல பருவங்களில் பல்வேறு திசைகளில் வீசும் காற்றாலும் மனித உடல் இந்த சூடு, குளிர் வினைகளை எதிர்நோக்குகிறது. உண்மையில் நல்ல உணவு இந்த இரு கூறுகளையும் உட்கொண்டது.

எந்த உணவு சூட்டைத் தருகிறது, எந்த உணவு குளிரைத் தருகிறது என்று வகைப்படுத்துவது கடினமானது. அவற்றின் சுவை, நிறம் தன்மைகளைக் கொண்டு அவ்வாறான பாகுபாட்டை செய்ய இயலாது. ஒரு உணவு பதார்த்தம் தயாரிப்பதைக் கொண்டோ, அதில் அடங்கி இருக்கும் கருத்துக்களை கொண்டோ அதை சூடானது அல்லது குளிரானது என்று தீர்மானிக்க முடியாது. இருந்த போதிலும் தென்னிந்தியாவில் எலுமிச்சை மர வகைகளின் பழங்களும், பசுவின் பாலும் குளிரானவை என்று கருதப்படுகின்றன. வாசனைப் பொருட்களும் எண்ணெய் வகைகளும் குளிர் உணவுகளின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன. பல தானியங்களும், மதுபான வகைகளும் சூடான உணவுகளாக கணிக்கப்படுகின்றன. இறைச்சி, பருப்புகள், பழங்கள் என்பவைகள் இரண்டுக்குள்ளும் வகைப்படுத்துகிறார்கள். பொதுவாக மிகப் பிரபலமான உணவுகள் குளிரானவை எனக் கணிக்கப்படுகின்றன. ஆயினும் அவைகளின் விதிவிலக்குகளும் உண்டு. இன்னும் உணவுப்பொருட்களை பாகுபடுத்துவதில் சாதி ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் வித்தியாசம் உண்டு. இந்த வித்தியாசங்களால் மக்கள் சிரமப்படுவதில்லை. அவர்களின் அக்கறை இந்த இரு வகைக்குள்ளும் உணவுப் பொருட்களை கொண்டு வருதலாகும்.

அதிக சூடான உணவை அதிகம் அல்லது அதிகம் குளிரான உணவை அதிகம் உண்பதால் நோய் வருகிறது என்று கருதப்படுகிறது. பரிகாரம் அவற்றைச் சமப்படுத்துவதால் நிகழ்கிறது. ஆரோக்கியம் சூடான உணவு, குளிரான உணவு என்ற சமநிலையால் ஏற்படுவதாகும் என நம்பப்படுகிறது. முக்கிய உணவுகள் கொஞ்சம் குளிரானவை என்று கருதப்படுகின்றன. கறுத்த மயிர், மெல்லிய நிறம், சதைப்பிடிப்போடிருத்தல் என்பன குளிர்மையின் வெளிப்பாடுகளாகும். கடும்வெளிர் நிறம் சூட்டின் அடையாளம் ஆகும். உடம்பில் ஏற்படும் பருக்கள், தழும்புகள் போன்றவை சூட்டின் வெளிப்பாடுகளாகும். அவ்விடத்திலுள்ள சூட்டை குளிர் மாற்றிவிடும். முகத்தில் தோன்றும் பருக்கள் காம வேட்கையின் அடையாளமாகும். இதற்குப் பரிகாரம் கல்யாணம் செய்தல் அல்லது கலவியியலில் ஈடுபடுதல் ஆகும்.
சரகசம்ஹிதா (இந்திய மருத்துவம் பற்றிய செம்மை நூல்) மூன்று அடிப்படை அம்சங்களைக் குறிப்பிடுகிறது. கபம், பித்தம், வாயு என்பன முதலாவது இளமைக்காலத்திலும் இரண்டாவது நடுத்தரப் பருவத்திலும், கடைசியாக சொல்லப்பட்டது வயோதிபத்திலும் ஏற்படுகின்றன. இன்னும் முதலாவது பயிர் வளர் பருவத்திலும், இரண்டாவது மழை காலத்திலும், மூன்றாவது வறண்ட பருவங்களிலும் அதிகமாக வெளிப்படும். முதலாவது குளிர் உணவுகளாலும் கடைசி சூட்டுணவுகளாலும் ஏற்படுகிறது. இவைகள் இணைந்த நிலையில் பித்தம் ஏற்படும். செவ்வியல் கிரேக்க வகைப்பாட்டில் பித்தத்தில் இரு வகைகள் சொல்லப்படுகின்றன. அவை மஞ்சள், வெள்ளை என்ற இரு வகைகளாகும். இதனால் கிரேக்கர்கள் நான்கு அடிப்படைகளைக் கொண்டிருந்தனர்.

உணவுகளுக்கும் நோய்களுக்கும் அப்பால் உடம்பு காமத்தோடும் கட்டுண்டு கிடக்கிறது. இதற்கு தென்னிந்திய குடியானவர்கள் கூறும் காரணம் சூடாகும். காமத்துணைவரைத் தேடும் வேட்கை உடல் சூட்டை அதிகரிக்கிறது. கலவிக்குப் பின் சூடு தனிந்து உடல் குளிர்மையடைகிறது என்று கருதப்படுகிறது. இந்த வகையில் வயது சென்ற பருவம் குளிரானது. ஏனெனில் வயது செல்லச் செல்ல பாலுணர்வு குறைந்து செல்கிறது. அல்லது முற்றாக நின்றுவிடுகிறது. பெண்களில் நிகழும் முதலாவது மாதவிடாய் பொங்கல் பானையுடன் ஒப்பிடப்படுகிறது. சிறுமிகள் வயதுக்கு வருவதை குறிக்கப் பல இடக்கரடக்கல் வார்த்தைகள் உள்ளன. அவை எல்லாம் சூட்டோடு சம்பந்தப்பட்டவைகளாகும். உதாரணமாக சமைதல் என்றால் பருவமடைதலையும், உணவு சமைத்தலையும் குறிக்கும்.

சிறுமிகள் பருவமடைந்து இருக்கும் போது சூடானவர்களாகவும், தூய்மையற்றவர்களாகவும் கருதப்பட்டு அவர்கள் நீராடுவதற்கு முன்னர் அவர்கள் நெற்றியில் வெண்ணெய் அப்பப்படுகிறது. இதனால் அவர்கள் குளிர்மை அடைகிறார்கள். சூடாதனாலேயே அவர்களுக்குத் தூய்மைக்கேடு உண்டாகிறதென்பது பொதுவான நம்பிக்கை.
கற்பிணியாக இருக்கும் போது பெண்கள் சூடாக இருப்பதாக கருதப்படுகிறது. அதாவது, சூடான மாதவிடாய் உடலுள் சேகரமாவதால் கற்பிணி சூடாகி, பிள்ளைப்பேற்றுடன் இரத்தம் வெளியேறுவதால் குளிர்மை நிலையை அடைகிறாள். அவள் உடம்பைப் பச்சை உடம்பு என்று அழைப்பர். அதாவது பச்சை நிறமான குளிர்மையை அடைந்தவள். இதனால் குழந்தை உண்டாகி இருக்கும் போது சூடான உணவுகள் தவிர்க்கப்படுகின்றன. தவிர்க்காவிட்டால் பிறக்கும் குழந்தை சிறிதாக இருப்பது மட்டுமல்லாமல், பால் கொடுக்கவும் சிரமமாக இருக்கும். பால் கொடுக்கும் தாய்மார் சுடுநீரையே அருந்த வேண்டும். மிளகாயும், உள்ளியும் உணவில் கூடுதலாக சேர்க்க வேண்டும். ஏனென்றால் அவைகள் சூடான உணவுகள்.

இந்த ஆய்வு இந்தியக் கடவுள்களில், மருத்துவத்தில், வாழ்க்கையில் சூடு முக்கிய அம்சமாக உள்ளது என்பதை எடுத்துரைக்கிறது. சடங்குகளில் வண்ணங்கள் கருத்தைச் சொல்வது முக்கியமானவைகளாக இருக்கின்றன. இந்த வகையில் வெள்ளையும் சிவப்பும் தெளிவான விளக்கத்தை தருகின்றன. மற்றக் கலாசாரங்களிலும், இந்தியக் கலாசாரம் போல சிவப்பு இரத்தத்தோடும், நெருப்போடும் இணைந்து காணப்படுகிறது. இதனால் பல கலாசாரங்களில் சிவப்பு போர் வீரர்களுக்கும், அரசர்களுக்கும் உரிய நிறமாக உள்ளது. அதே நேரம் மீள் உற்பத்தியோடு தொடர்புடையதாகி இரத்தமும் அதனுடைய நிறமான சிவப்பும் காமத்திற்கும், சந்ததி விருத்திக்கும், பெண்மைக்கும் குறியீடாகிறது. இந்திய உலகப் பார்வையில் இரத்தமும் நெருப்பும் வாழ்க்கையின் உயிர்ப்புக்குக் குறியீடாக உள்ளன.

உண்மையில் சூடு, குளிர் ஆகிய இரு நிலைகளுக்கிடையே சமநிலை முக்கியமானது. யாரும் அதிக சூடாகவோ, அதிக குளிராகவோ இருக்கக் கூடாது. இருந்த போதிலும் குளிர்மையான உணவும், குளிர்ச்சியாக இருப்பதும் தென்னிந்தியாவின் தேர்வாகும். தமிழில் பச்சை என்ற சொல் புத்துணர்வு, குளிர்மை மற்றும் பசுமையானவைகளை குறிக்கின்றன. ஒருவரை புகழ்ந்து குறிப்பிடும் போது அவருக்குப் பச்சை மனது என்று குறிப்பிடுவதைக் கவனிக்க வேண்டும். அதன் கருத்து அவர் பெருந்தன்மையுள்ளவர் அல்லது கள்ளமில்லாதவர் என்பதாகும்.

அடிக்கடி முக்கிய நிகழ்வுகளுக்கு முன்னர் குளிர்மையான வரவேற்பு என்று எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். கோயம்புத்தூர் பகுதிகளில் சிவனுக்கான திருவிழாக்களுக்கு முன்னர் ஒரு சிறிய சடங்கொன்று நடைபெறும். அது அப்பிரதேசத்தை குளிர்மையாக்க செய்யப்படுவதாகும். சூட்டை உருவாக்கும் துட்டப்பிசாசுகளுக்கு முதலில் சோறும், இரத்தமும் கலந்து படைப்பர். அதன் பின் கிராமத்தவர்கள் தீப்பந்தம் கொழுத்திக் கூச்சலிட்டு ஓடிப்போவர். இது கெட்ட பிசாசுகளை விரட்டிக் கொண்டு போவதாக எண்ணப்படுகிறது. அந்தப் பிரதேசத்தைச் சூடாக்கி மாசுபடுத்திய பிசாசுகள் அகன்றதால் இனிக் குளிர்மை நிலவும் எனக் கருதுகிறார்கள். கல்யாணம் முடித்தவர்கள் முதல் இரவைக் கழிப்பதற்கு முன்னர் சாந்தி கல்யாணம் அல்லது கல்யாணக் குளிர்விப்பு என்னும் சடங்கு நிகழ்த்தப்படும். அது மணமகனும், மணமகளும் குளிர்ச்சியான பழங்கள் அடங்கிய தட்டு முன் அமர்த்தப்படுவர். பின்னர் பால் குடிக்கக் கொடுக்கப்படும். இருவரும் மற்றவர்களின் நெற்றியில் எண்ணெய் அப்பி நீராடுதல் வேண்டும்.

தென்னிந்திய பக்தர்கள் குளிர்மையடைவதை தீ மிதித்தல் மூலம் வெளிப்படுத்துவர். இது வருடாந்த திருவிழாவின் இறுதியில் நடைமுறைப்படுத்தப்படுவதாகும். இதன் போது தெய்வம் பக்கத்தில் உள்ள இடத்தில் துட்ட தேவதைகளுடன் சண்டையில் ஈடுபடுகிறது என்று நம்பப்படுகிறது. பின்னர் சிவன் பெண் தெய்வத்தின் கோயிலுக்கு வருவது போல் சடங்குகள் நடத்தப்படுகின்றன. கோயிலின் முன்னுள்ள பானையில் ஒரு வாள் நிறுத்தப்பட்டிருக்கும். அது சிவன் கோயிலுக்கு வந்து அம்மனுடன் பாலுறவில் ஈடுபடுவதன் குறியீடாகும். அதன் பின்னர் அம்மனுக்கு குளிர் உணவுகள் படைக்கப்படுகின்றன. 60 அடி நீள தீக்குழி வெட்டப்பட்டு வெண்ணெய் பூசிய அம்மன் சிலையுடன் பக்தர்கள் அதைக் கடப்பர்.

அம்மனின் பக்தர்கள் அம்மன் சிலைக்குப் பூசிய வெண்ணெய் அவர்கள் தீக்குழிக்கு மேலால் நடக்கும் போது கரைந்து உருகிப் போகும் என்கின்றனர். அவள் தனது சேலையின் முனையை தீக்குழிக்கு மேலால் விரிக்கிறாள் என்கின்றனர். அவள் மேல் பக்தி கொண்டோருக்கு மாத்திரமே கண்ணுக்குத் தென்படுவாள். அவர்களுக்கு தீ சுடாது என்று கூறுகிறார்கள். அம்மன் வெளியில் முன்னை வருடத்தில் இருந்து பாலுறவு தவிர்ப்பாள் சேகரமாகிய சக்தியைப் பயன்படுத்தி துட்ட தேவதைகளை விரட்டி அடிக்கிறாள். அடுத்து சிவனோடு பாலுறவில் ஈடுபடுவதால் அவளது சூடு தனிகிறது. அம்மன் இப்போது குளிர்மையான நிலையை அடைவதால் பக்தர்களை இப்பொழுது தீ சுடாது. கடைசியில் பொங்கல் தயார் செய்யப்பட்டு மஞ்சள் தண்ணீர் பக்தர் மேல் தெளிக்கப்பட்டு பொங்கல், பிரசாதம் பகிரப்படும். மாரியம்மன் நெருப்புப் பானை வெள்ளை மரத்தில் வைக்கப்பட்டிருக்கும். பொங்கல் உள்ள நெருப்பும், அரிசியும் சிவப்பு, வெள்ளை நிறத்துக்கு குறியீடாகின்றன.

இவற்றை விட வெள்ளை, சிவப்பு இன்னும் பல அம்சங்களில் தென்னிந்தியக் கோயில்களில் காணப்படுகின்றன. வெள்ளை அடித்த மதில் சுவர்களில் செங்குத்தாக சிவப்பு நிறக்கோடுகள் இடப்பட்டிருக்கும். இவற்றை விட நெற்றியில் கிடையான திருநீற்றுக் கோடுகளுக்கிடையே சிவப்பு பொட்டு இடப்பட்டிருப்பதும் இந்த வெள்ளை, சிவப்பு கோட்பாட்டின் வழி வந்தது தான். (வைணவர்கள் ரு வடிவ குறியீட்டின் நடுவில் சிவப்பு கோட்டை வரைந்திருப்பதும்) விஷ;ணுவினதும் இலட்சுமியினதும் குறியீடாக வைணவர்களின் நாமம் கொள்ளப்படுகிறது.

இந்தக் கட்டுரையில் விபரித்தவைகளை சுருக்கமாகக் கூறுகிறேன். பாரம்பரிய இந்திய நோக்கின் பிரகாரம் இயற்கை உணர்வுகளைக் கட்டுப்படுத்தி பெரும் சக்திகளைப் பெறலாம். இந்த சக்தியை விசேட செயற்பாடுகளால்தான் கட்டுப்படுத்தலாம். இது அழிவையும் தரும், ஆக்கத்தையும் தரும். இதனை அடக்கி, கட்டுப்படுத்தினால் தான் உள்ளார்ந்த நெருப்பாக மாறும். வாழ்க்கை சூடு, குளிர் என்ற வட்டம் கொண்டது. அவை சிவப்பு, வெள்ளை குறியீடாக குறிக்கப்படுகின்றன. அவற்றைச் சடங்குகளிலும், கோயில்களிலும் அவதானிக்கலாம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More