இலங்கை பிரதான செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ஜெனீவா தீர்மானத்திற்கு எதிரானது – படங்கள் இணைப்பு…

கிளிநொச்சி  உறவினர்கள்,  அலுவலகத்தை நிராகரித்து ஆர்ப்பாட்ம் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

அரசின் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் ஜெனீவா தீர்மானத்திற்கு எதிரானது இதன் மூலம் எங்களுக்கு தீர்வுகள் எதுவும் கிடைக்கப் போவதில்லை என்று தெரிவித்து இன்று(15) கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மற்றும் ஆணையாளர்களுடனான கலந்துரையாடலை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

இன்று(15) காலை ஒன்பது முப்பது மணிக்கு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் காணாமல் ஆக்கப்பட்ட ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மற்றும் ஆணையாளர்களுடனான கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு தங்களின் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த அலுவலகம் சர்வதேசத்தை திருப்திப்படுத்தவும், காலத்தை கடத்துவதற்குமானது, கடந்த காலங்களில் இது போன்றே பல ஆணைக்குழுக்களுக்கும் கடந்த காலங்களில் உருவாக்கப்பட்டிருந்தது ஆனால் அதன் மூலம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்திற்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை.

அவ்வாறான ஆணைக்குழுக்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் நியாயங்களை திருப்தி படுத்தாத வகையில் முன் வைத்த பரிந்துரைகளை கூட அரசு நடைமுறைப்படுத்தவில்லை. எனவே இந்தநிலையில் தற்போது இந்த அலுவலகமும் அமைக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டங்கள் தோறும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் எங்களை பொறுத்தவரை கடந்த காலத்தின் அனுபவத்தின் வெளிப்பாடாக இந்த அலுவலகத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான நாம் இந்த காணாமல் ஆக்கப்பட்ட ஆட்கள் பற்றிய அலுவலகத்தை நிராகரிக்கின்றோம் எனத் தெரிவித்த உளவினர்கள், எங்களுக்கு எங்களுடை காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களே தேவை அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது? எங்களால் நேரடியாக முல்லைத்தீவிலும், ஓமந்தையிலும் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட உளவினர்களுக்கு பதில் சொல்லுங்கள், செட்டிக்குளம் முகாம்களிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே அவர்களுக்கு என்ன நடந்தது? அருட்தந்தையுடன் சரணடைந்தவர்கள் எங்கே? இவ்வாறானவர்கள் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன? போன்ற கேள்விகளை எழுப்பி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்றைய கலந்துரையாடலை புறக்கனித்திருந்தனர். இதனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பதின்மூன்று பேருடனும், கிராம அலுவலர்களுடனும் தங்களது கலந்துரையாடலை மேற்கொண்டனர்

நூற்றுக்கணக்கானவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மண்டபத்தின் பெரும் பகுதி வெறுமையாக காணப்பட்டது. அத்தோடு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட உறவினர்கள் பிற்பகல் இரண்டு மணிவரை கூட்டுறவாளர் மண்டப வாயிலில் நின்று தங்களின் எதிர்ப்பினை தெரிவித்தனர். மேலும் பாதுகாப்புக்காக பல பொலீஸார் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers