இலக்கியம் இலங்கை பிரதான செய்திகள்

நுண்கலைத்துறையின் அரங்க விழா 2018…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை பல்வேறுபட்ட கல்விசார் செயற்பாடுகளான ஆய்வு மாநாடுகள், காண்பியக்கலைக் காட்சிகள், நாடகத்தயாரிப்புக்கள், சர்வதேசத் திரைப்படவிழா, கலைஞர்களை ஆவணப்படுத்தல், கருத்தரங்குகள், புலமையாளர் மற்றும் மாணவர் உரைகள் என்பவற்றினைத் தொடர்ச்சியாக ஒழுங்கு செய்து வருகிறது. இச் செயற்பாடுகளின் அங்கமாக வேறு வேறு நாடக மோடிகளை உள்ளடக்கிய அரங்கவிழா ஒன்றினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையும், அதன் நாடக அரங்க மாணவர் அமைப்பான வெறுவெளி அரங்கக் குழுவும் இணைந்து 2018 ஐ{லை மாதம் 19, 20, 21 ஆகிய திகதிகளில் ஏற்பாடு செய்துள்ளன.

நாடகமும் அரங்கக் கலைகள் ஒரு முறைசார் கல்வித்துறையாக உருவாகியுள்ள நிலையில், அதன் கற்றல் செயற்பாடுகளை மேலும் ஆழப்படுத்தவும், அகலப்படுத்தவும் வேன்டிய இன்றியமையாத சூழலில் யாழ்பாணப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை மேற்படி வருடாந்த அரங்க விழாவினை அறிமுகம் செய்கிறது. மரபுவழி நாடகங்களை இளைய தலைமுறையினருக்கு அறிமுகம் செய்தல், தொடர்ச்சியாக அவற்றை பயில் நிலையில் வைத்திருக்க உதவுதல், நவீன அரங்கக் கோட்பாடுகளுக்கூடாக உள்ளூர் அரங்கினை உற்றுநோக்குதல் மற்றும் நவீன அரங்கின் பல்வேறுபட்ட போக்குகளை இவற்றோடு இணைத்தல் மற்றும் நாடக அரங்கின் பன்மைப் போக்குகளோடு மாணவர்களை ஈடுபாடுடையவர்களாக ஆக்குதல் எனும் கற்றல் செயற்பாடுகளையும்இ இதனூடாக கல்வியை பிரயோக நிலையிலும்இ சமூக நிலையிலும் வளர்த்தெடுத்தல் என்பனவற்றையும் நோக்கமாகக் கொண்டு இவ்விழா கட்டமைக்கப்பட்டுள்ளது. அரங்கக் கல்வியாக, சமூக வலுவூட்டும் செயற்பாடாகஇ படைப்பாக்க அனுபவமாகஇ மகிழ்வூட்டும் ஒருசந்தர்ப்பமாக இவ் அரங்க விழா செயற்பட முனைகிறது.

இதன் ஒரு பகுதியாக அரங்கத் துறைக்கு பாரிய பங்களிப்பு செய்த மூவர் கௌரவிப்பு தொடக்க விழாவின் போது நிகழ்கின்றது. கலாநிதி குழந்தை ம. சண்முகலிங்கம், ஏனெஸ்ட் தனபாலசிங்கம மைக்கின்ரையர், கலாநிதி அருட்தந்தை மரியசேவிய அடிகள் என்போர் இவ்விழாவில் கௌரவிக்கப்படுகின்றனர். கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம் நாடக அரங்கக்கல்லூரியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரும், நாடக ஆசிரியர், நெறியாளர, நடிகர், அரங்கப் பயிற்றுவிப்பாளர், நாடக மொழிபெயர்ப்பாளர் என பன்முக ஆளுமை உடையவர். ஈழத்து அரசியல் அரங்கில் அவரது இடம் மிக முக்கியமானது. யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட ஏனெஸ்ட் தனபாலசிங்கம் மைக்கின்ரையர் ஈழத்தில் ஆங்கில நாடக அரங்க மரபை கட்டியெழுப்பியதுடன் இலங்கையின் நவீன நாடகத்தின் உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியவர். நாடகங்களுக்கூடாக அரசியலைப் பேசியவர்களில் ஒருவர். வணக்கத்திற்குரிய மரியசேவிய அடிகள் கத்தோலிக்கக் கூத்து மற்றும் திருப்பாடுகளின் நாடகம் முதலிய அரங்குகளை வலுவூட்டியவரும், ‘திருமறைக்கலாமன்றம்’ என்ற அமைப்பினூடாக பல்வேறுபட்ட அரங்கச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருபவர்.

இதன் மற்றொரு பகுதியாக இலங்கை அரங்கக் கல்வி மற்றும் ஆற்றுகை செயற்பாட்டுக்களத்தில் முக்கியத்துவம் வாய்ந்த படைப்பாளிகள் புலமையாளர்களுடனான ‘சமகால அரங்கின் சவால்கள்’ எனும் தலைப்பிலான கலந்துரையாடல் இடம் பெறவுள்ளது. ‘இசைநாடகம்’, ‘வசந்தன் கூத்து’, ‘காத்தவராயன் கூத்து’, ‘மன்னார் தென்பாங்குக்கூத்து’, முதலான பாரம்பரிய ஆற்றுகைகளும் ‘சுந்தரம் எங்கே?’ ‘உறவுகள்’ ‘நாய்கடிக்கும் கவனம்’ முதலான உரையாடல் ஆற்றுகைகளும் ‘பறத்தல் மறந்த பறவைகள்’இ,சமகால நடன ஆற்றுகைகள் (முல்லைமண், நூலாடிகள், இரப்பை) முதலான சமகால அரங்குகளும் ‘கடவுளும் குட்டியும்’, ‘சப்பிகள்’ முதலான சிறுவர்பாணி ஆற்றுகைகளும், யதார்த்தப்பாணியிலமைந்த ‘ஹிருநோனகே’ என்ற சிங்கள (எந்தையும் தாயும்) நாடகமும், சமூகத்துடன் நெருக்கமாக ஊடாடி, விழிப்புணர்வூட்டும் தெருவெளி ஆற்றுகையும் இடம்பெறவுள்ளது.

இந்த அரங்க விழா நாடக இரசிகர்களுக்கும், மாணவர்களுக்கும் ஓர் அரிய கலை அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்;கலாம். இரசிகர்கள் பெருமளவில் கலந்து கொண்டு இந்த யாழ்பாணத்தில் அரங்க சூழலுக்கு ஆதரவளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers