இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

“குளோபல்” நெருக்கடிச் செய்திகளையும் செய்திக் கட்டுரைகளையும் துணிச்சலோடு வெளியிட்டது…

இணையத்தை பாதிப்புக்கு (Damage) உள்ளாக் விரும்பவில்லை உங்கள் கவனத்திற்கு மட்டும் என எமது நண்பர் ஒருவர் அனுப்பிய குளோபல் தமிழ்ச் செய்திகள் தொடர்பான விமர்சனக் குறிப்பை எந்தவிதமான மாற்றங்களும் இன்றி உங்கள் முன் வைக்கிறோம்… (அவர் பெயர் குறிப்பிட விரும்பவில்லை)

நாம் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அத்துடன் தவறுகளுக்கு, நெருக்கடி நிலைகளை காரணம் காட்டி தப்பித்துக்கொள்பவர்களும் அல்ல.

கடுமையான புலி ஆதரவு நிலைப்பாடு, கடுமையான புலி எதிர்பு நிலைப்பாடு, புனைவுகள், கவர்ச்சி, பாலியல் நிலை ததும்பும் செய்திகள் படங்கள், பரபரப்புகள், திகில்கள், செய்திகளை – கட்டுரைகளை – குறிப்புகளை வாசகர்களுக்கு விற்பனை செய்யும் வியாபார உத்திகள் என வாசகர்களை சுற்றி வளைத்து தாக்கும் இணைய ஊடக கலாசாரத்தின் இடையே 10 வருடங்கள் நிலைத்திருக்கிறோம் – தொடர்ந்து நிலைகொள்ள முயல்கிறோம்.

அந்த வகையில் வாசகர்களிடம் இருந்து வருகின்ற விமர்சனங்களை பொறுப்போடு எதிர்கொண்டு எமது இயலுமையின் விளிம்புவரை சென்று ஊடக நெறி – ஊடக ஒழுக்கம் – மொழிப் பயன்பாடு உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் செயற்படுத்த முயல்வோம் என்பதனை அன்போடு தெரிவித்துக்கொள்கிறோம்…

இதே வேளை தமிழீழ விடுதலைப் புலிகளும், அவர்களின் ஆயுதங்களும் மொனித்து, 9 வருடங்கள் கடந்துவிட்டன. இந்தக் காலப்பகுதியில் இலங்கைத் தமிழரின் வாழ்வியலில் ஏற்பட்ட மாற்றங்கள், ஏற்படுத்தப்பட்ட மாறுதல்கள், புலிகளுக்கு பின்னரான, யுத்தத்திற்கு பின்னரான காலத்தை சுமந்த தமிழ்  அரசியல் கட்சிகள், தமிழ் அரசியல் தலைமைகள் குறித்த ஆரோக்கியமான ஆழமான ஆய்வுகள், கட்டுரைகள், தொடர்கள் எமக்கு அனுப்பி வைத்தால் (radiokuru@yahoo.com)அவற்றை பிரசுரிக்க தயாராக உள்ளோம். தவிரவும் ஈழத் தமிழரின் எதிர்காலம், எதிர்காலத்தை தலைமை தாங்கிச் செல்ல முயலும் அரசியல் கட்சிகள், அரசியல் தலைமைகளின் செல்நெறியின் முக்கியத்துவம் குறித்தும் பதிவுகளை எதிர்பார்க்கிறோம்…

ஆ.ர்

அன்புள்ள குரு  பூரணி

வணக்கம். முதலில் இந்தக் குறிப்பை சொன்னபடி உரிய நாளில் அனுப்பாமல், தாமதமாக அனுப்பி வைப்பதற்கு மன்னிக்கவும். இடையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட ஒரு பயணமும் அதைத் தொடர்ந்த உடல் நலக்குறைவும் தாமதத்திற்குக் காரணமாகி விட்டன. “குளோபல் தமிழ்” பத்தாண்டு நிறைவுக்கு முன்பாகவே இந்தக் குறிப்பை எழுத நினைத்தேன். அதுவும் தவறி விட்டது. இப்பொழுது ஒரு சுருக்கக் குறிப்பாக உங்கள் கவனத்திற்கு மட்டும்.

00

“குளோபல் தமிழ்” இணையத்தளம் பத்தாண்டுகளாக ஊடகப் பங்களிப்பைச் செய்து வருகிறது. பொருளாதார நெருக்கடி, தனிமனித உழைப்பு போன்றவற்றின் மத்தியில் இதைச் செய்து வருவதையிட்டு மகிழ்ச்சி. ஒரு வகையில் இது ஒரு சாதனையே.

இந்தப் பத்தாண்டுகளும் தமிழ் மக்களின் வாழ்க்கை நிலையும் அரசியலும் நெருக்கடி, குழப்பம், கொந்தளிப்பு, உறுதிப்பாடின்மை, தளர்வு என்ற மோசமான சூழலில் இருக்கும் காலமாகும். இதற்குள் எட்டுத் தேர்தல்களை மக்கள் சந்திக்க வேண்டியிருந்தது. இந்தச் சூழலில் தமிழ் ஊடகங்களின் பாத்திரம் எப்படி இருந்தது? அதிலிருந்து “குளோபல் தமிழ்” எப்படி வேறுபட்டுத் தனித்துவமாக இருக்கிறது என்பதே நாம் கவனிக்க வேண்டியது.

தமிழ்ப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளின் இணைப்புத்தளங்களாக இருக்கும் இணையத்தளங்களுக்கு அப்பால், செய்தி இணையத்தளங்களாக உள்ளவை தமிழில் மிகக் குறைவு. அதாவது சார்பு நிலைப்பட்டவையாக இல்லாமல் பொதுத்தன்மையோடுள்ள இணையத்தளங்கள் என்பது குறைவே. இந்தக் குறைந்த வரிசையில் ஒன்றாகவே “குளோபல் தமிழ்” இணையத்தளத்தை அடையாளம் காண வேண்டும்.

“குளோபல் தமிழ்” முடிந்தளவுக்கு முதல் நிலையில் செய்திகளை அளிப்பதற்கு முயற்சிக்கிறது. ஆனால், செய்தி அளிக்கை முறை முன்னரை விட வரவர “படு மோசமான” நிலையில் வீழ்ச்சியடைந்துள்ளது. செய்தியின் சாரம், அதை வெளிப்படுத்தும் முறை, மொழி என எல்லாவற்றியும் குறைபாடுண்டு. செய்தி ஆசிரியர் இதைக் கவனிப்பது அவசியம். செய்தியே ஒரு தளத்தின் கவர்ச்சிப் புலமாகும். அதை இழப்பதென்பது தளத்தின் வீழ்ச்சியாகவே அமையும்.

இப்பொழுது தகவல் பரிமாற்றங்கள் பல வழிகளில் நடக்கின்றன. சமூக வலைத்தளங்கள் இதில் முக்கியமான பங்காற்றுகின்றன. ஆனால், அவற்றினால் எல்லாச் சந்தர்ப்பத்திலும் முழுமையான செய்தியை வழங்க முடிவதில்லை. இதைக் கடந்து செய்திகளை முழுமையாக – அவற்றின் மெய்த்தன்மையை அறிய வாசிப்பதற்கு ஒருவர் இணையத்தளமொன்றுக்கு வருகின்றார் என்றால், அதற்குரிய வாய்ப்பை அந்தத் தளம் வழங்க வேண்டும். இதை “குளோபல் தமிழ்” எந்தளவுக்கு வழங்குகிறது என்று பார்க்க வேண்டும்.

குளோபலின் செய்திகளில் மிகச் சுருக்கமான குறிப்புகளே பெரும்பாலும் காணப்படுகிறது. எழுத்துப் பிழைகள் மலிந்துள்ளது. இதைத் தவிர்க்க வேண்டும் என்று அன்போடு கேட்கிறேன். மொழிச் சிதைப்பை எந்த நிலையிலும் நாம் அனுமதிக்க முடியாதல்லவா.

குளோபலின் முக்கியத்துவமாக நான் கருதுவது அது சில நெருக்கடிச் செய்திகளை துணிச்சலோடு வெளிப்படுத்தியமையாகும். கூடவே அவ்வாறான செய்திக் கட்டுரைகளையும் வெளியிட்டது. படைநெருக்கடி சம்மந்தமான, மக்களின் போராட்டங்கள் தொடர்பான வெளிப்பாடுகளைச் செய்ததில் குளோபல் தமிழுக்கு முக்கியத்துவமான பாத்திரமுண்டு.

அரசியல் விவாதங்கள் மற்றும் அரசியல் கட்டுரைகள் தொடர்பில் விரிவான பன்முகப் பார்வை அவசியம். நிலாந்தனின் கட்டுரைகள் ஒரு தரப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கின்றன. அதற்கான களத்தை குளோபல் தமிழ் தொடர்ச்சியாக வழங்கி வந்திருக்கிறது. அதேவேளை ஏனைய பக்கங்களை – ஏனைய தரப்பின் நியாயப்பாடுகளை முன்வைப்பதற்கான களம் போதவில்லை. இது புதிய உலகத்தை நோக்கிய காலம். பன்முகத்தன்மையே இந்த உலகத்தின் அடையாளம். அதிலும் பல்லினச் சமூகங்கள் வாழ்கின்ற, வாழ வேண்டிய ஒரு நாட்டின் புதிய அரசியலை நோக்கிய பார்வைகளை முன்வைப்பதில் குளோபலின் பங்களிப்பு போதாது என்பதே என்னுடைய அவதானம். முக்கியமாகத் தமிழ்ச் சமூகத்தையும் அதனுடைய அரசியலையும் உணர்ச்சி மயப்பட்ட நிலையிலிருந்து அறிவு நிலைப்பட்ட சிந்தனா முறைக்கு மாற்றுவதற்கு “குளோபல் தமிழ்” உதவ வேண்டும். இதைச் செய்ய வேண்டியது கட்டாயம்.

ஏனெனில் ஜனநாயகத்தின் அடிப்படை இதுவாகும். ஜனநாயகத்தின் அடிப்படை என்பது எல்லோருக்கும் எல்லாத்தரப்பினருக்கும் எல்லாக் கருத்தியலுக்கும் இடமளிப்பதாகும். அதுவே ஊடகப் பண்புமாகும். இதை நான் தங்களுக்குச் சொல்ல வேண்டியதல்ல. போராட்ட அரசியல், ஊடகத்துறை, புலம்பெயர் வாழ்வனுபவம் என்ற பன்முக அனுபவத்தைக் கொண்டுள்ள தங்களுக்கு இது புரியும். அவ்வாறில்லாமல் ஒற்றைத் தரப்பிற்கு – ஒற்றைக் கருத்தியலுக்கு மட்டுமே ஒரு தளம் செயற்படுமாக இருந்தால், அது சார்பு நிலைத்தளமாக – பரப்புரைத்தளமாகவே கருதப்படும். அப்படித்தான் மாறிப்போகும்.

இனி வரும் “குளோபல் தமிழ்” புதிய அரசியற் தேவைப்பாடுகளை நோக்கித் தன்னுடைய துணிச்சலான பார்வைகளை – கருத்துகளை முன்வைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை. பத்தோடு பதினொன்றாக இல்லாமல், வரலாற்றுத் திருப்பு முனையை ஏற்படுத்தும் ஊடகமாக மாற வேண்டும். “குளோபல் தமிழ்” குடும்பத்தின் உழைப்புக்கு வரலாற்றுப் பெறுமதி இருக்க வேண்டுமானால், அது தன்னை விரிப்பதில்தான் உள்ளது.

இதில் உடனடி நெருக்கடிகள் இருக்கக் கூடும். அதைக் கடந்து பயணிப்பது அவசியமேயாகும்.

பத்தாண்டுகளாகச் செயற்பட்டுத் தமிழ்ச்சமூகத்தில் இன்று வலுவான அறிமுகத்தைப் பெற்றிருக்கும் “குளோபல் தமிழ்” தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத தளமாக – ஊடகமாக மாற வேண்டும். அதை எல்லோரும் கூடி நின்று மாற்றுவோம்.

முக்கியமாக தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சி பற்றிய கட்டுரைகளும் செய்திகளும் முக்கியத்துவப்படுத்தப்படுவது அவசியம். குறித்த துறையினரின் உரையாடல்கள், அவர்களின் கட்டுரைகள் போன்றன தளத்தில் இடம்பெற வேண்டும்.

அடுத்தது, தமிழ் அடையாளம் பற்றிய கவனம். இதற்கான கலை, இலக்கிய, பண்பாட்டு விடயங்கள், நிலம் குறித்த (நிலம் பற்றிய பதிவுகளைச் செய்ததில் குளோபலுக்குத் தனியிடமுண்டு. குறிப்பாக தீபச்செல்வனின் கட்டுரைகள். சில கட்டுரைகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். அல்லது செம்மைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். எனினும் ஒட்டுமொத்தத்தில் அவை கவனத்திற்குரியவை) வெளிப்பாடுகள், கரிசனை.

மற்றது தமிழர்களின் அரசியல் பற்றிய பன்முகப் பார்வை.

தமிழ் அறிவியல் பற்றிய கவனம். இப்படிப் பலவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

“குளோபல் தமிழ்” நேற்றுத்தான் தொடங்கியதைப்போல உள்ளது. அதற்குள் பத்தாண்டுகளா? என்று வியப்பாக உள்ளது. இந்தப் பத்தாண்டுகளும் சோர்வின்றி, லாபமின்றிச் செயற்பட்ட “குளோபல் தமிழ்” இணையச் செயற்பாட்டாளர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும்.

“குளோபல் தமிழ்” ஆரம்பிக்கப்பட்டபோது மிகுந்த நெருக்கடிச் சூழலை ஈழத்தமிழர்கள் எதிர்கொண்டிருந்தனர். இப்போதும் அதுதான் நிலைமை. ஆனால் அப்பொழுது யுத்தம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. நாடு முழுவதும் அச்சுறுத்தலான நிலைமை. நீங்களும் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டிருந்த சூழலில் நாட்டை விட்டு வெளியேறியிருந்தீர்கள். எனினும் உங்கள் குரலையும் உங்கள் செயற்பாட்டையும் எப்படியாவது பொதுவெளியில் முன்வைக்க வேண்டும் என்ற பேரார்வத்தோடும் விடாப்பிடியான முயற்சியோடும் “குளோபல் தமிழை” உருவாக்கினீர்கள். இது ஒரு பெரும் சவால்தான். இந்தச் சவாலின் மத்தியிலேயே மேலும் சில காலம் பயணிக்க வேண்டியுள்ளது. உங்களோடு அதற்கு ஆதரவாக இருப்போம் என்று உறுதியளிக்கிறேன்.

ஏதோ வகையில் தமிழ் இணைய ஊடகப் பரப்புப் பெருகிக் கிடக்கிறது. ஆனால் எத்தனை ஊடகங்கள் பெறுமதியானவையாக உள்ளன? என்று பார்த்தால் நமது பணி இலகுவாகும்.

தொடருங்கள் பயணத்தை. வாழ்த்துகள் குரு பூரணி..

தசாப்த்தத்தை கடந்து செல்லும் குளோபல் தமிழ்ச் செய்திகள்…

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.