Home இலங்கை யுத்த காலத்திலும் கூட, வடக்கின் வர்த்தக நடவடிக்கைகள் சிறப்புற்றிருந்தன, யுத்தம் முடிந்த பின் பூச்சியமாகின…

யுத்த காலத்திலும் கூட, வடக்கின் வர்த்தக நடவடிக்கைகள் சிறப்புற்றிருந்தன, யுத்தம் முடிந்த பின் பூச்சியமாகின…

by admin


இன்றைய நிகழ்வின் தலைவர் அவர்களே, இந் நிகழ்வை சிறப்பிப்பதற்காக வருகைதந்திருக்கும் அதி கௌரவத்திற்குரிய பிரதமர்ரணில் விக்கிரமசிங்க அவர்களே, கௌரவ நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களே, வர்த்தக மற்றும் வணிக அமைச்சர் கௌரவ ரிசாட் பதியுதீன் அவர்களே,மற்றும் இந்த நிகழ்வைச் சிறப்பிப்பதற்காக வருகை தந்திருக்கும் கௌரவ அதிதிகளே, விசேட  அதிதிகளே,யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் உறுப்பினர்களே, தேசிய வர்த்தக அபிவிருத்தி அதிகாரசபையின் உயர் அதிகாரிகளே, வர்த்தகப் பெருந்தகைகளே, புதிய தொழில் முனைவோரே, சகோதர சகோதரிகளே!

இன்றைய தினம் யாழ்ப்பாணம் வர்த்தக தொழில்துறை மன்றம் மற்றும் தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியன இணைந்துகொண்டு இந்தக் கூட்டத்தை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருக்கும்புதிய தொழில் முனைவோரையும் முதலீட்டாளர்களையும் வடமாகாண வர்த்தக நீரோட்டத்தில் இணைத்துக் கொண்டு சாதனைகள் படைக்கும் முகமாக அவர்களை ஊக்கப்படுத்தி மென்மேலும் வளர்ச்சி பெறச் செய்வதற்கும் புதிய உந்துசக்திகளை அவர்களுக்கு வழங்குவதற்குமாக ஒழுங்கு செய்யப்பட்ட இந்த கௌரவிப்பு விழாவும் விருதுவழங்கும் வைபவமும் நடைபெறும் இத் தருணத்தில் உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.

வடமாகாணத்தில் மூன்றாவது தடவையாக மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்ற இந்த நிகழ்வில் இலங்கையின் அதி கௌரவத்திற்குரிய பிரதம மந்திரி அவர்களும், கௌரவத்திற்குரிய நிதி அமைச்சர் அவர்களும் மற்றும் கௌரவ வர்த்தக,வணிக அமைச்சர் அவர்களும் கலந்துகொண்டு இந்த நிகழ்வுகளை சிறப்பிப்பது மகிழ்விற்குரியது. இலங்கைப் பாராளுமன்றத்தின் பிரதம மந்திரி அவர்களும் முக்கிய அமைச்சர்களும் கலந்துகொண்டிருக்கின்ற இத் தருணத்தில் வடமாகாணத்தின் தொழில் முயற்சிகள் பற்றிய சில முக்கிய விடயங்களை வெளிக்கொண்டு வருவது பொருத்தமானது என எண்ணுகின்றேன்.

வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியான யுத்தம் நடைபெற்ற காலத்தில் கூட இப் பகுதியின் வர்த்தக நடவடிக்கைகள் மிகுந்த நெருக்கடிகளின் கீழும் ஒரு ஒழுங்கான முறையில் மேற்கொள்ளப்பட்டுவந்தன. அக் காலத்தில் அனைத்துத்தர வர்த்தக முயற்சிகளும் பல சிரமங்களுக்கு மத்தியிலும் சிறப்பாக நடைபெற்றதை இத்தருணத்தில் பெருமையுடன் அறியத்தருவதில் மகிழ்வடைகின்றேன். அத்துடன் அக் காலத்தில் பெரிய, நடுத்தர, சிறிய வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட வர்த்தகர்களினதும்மேலும் அனைத்துத்தர பொது மக்களினதும் கைகளில்பணப்புழக்கம் போதுமானதாக இருந்தது.

ஆனால் யுத்தநிலை முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் அமைதியான சூழ்நிலையில் கடந்த 9 வருடங்களில் வடபகுதியின் வர்த்தக நடவடிக்கை என்ன வகையில் வளர்ச்சியடைந்திருக்கின்றதுஎன்பது பற்றி ஆராய்வோமானால் விடை வெறும் பூச்சியமாகவே காணப்படுகின்றது. தொடர்ச்சியாக வடபகுதியின் வர்த்தக நடவடிக்கைகள் பல பின்னடைவுகளை சந்தித்த வண்ணமே உள்ளன.  எமது உள்ள வர்த்தகர்களின் வர்த்தக முயற்சிகள் பல்வேறு இரகசியக் காரணிகள் மூலம் முடக்கப்படுகின்றன.இதை நான் வர்த்தகர்களுடன் பேசித் தெரிந்து கொண்டே வெளியிடுகின்றேன்.

முதலாவது இங்கிருக்கும் வர்த்தகர்களின் வர்த்தக நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெறமுடியாத வகையில் வடமாகாணத்திற்கு வெளியே உள்ள வர்த்தகர்களின் பாரியளவிலான உள்நுழைவுகள் வர்த்தக நடவடிக்கைகளில் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. இராணுவம் கூட உணவகத் தொழிலில்ஈடுபட்டு வருகின்றது.

யுத்தத்திற்குப் பின்னர் எமது புலம் பெயர்ந்த மக்கள் இங்கு வந்து நம்பிக்கையுடன் முதலீடுகளைச் செய்ய ஏற்ற சூழல் இங்கு உருவாக்கப்படவில்லை. தெற்கில் இருந்து வந்து முதலீடுகள் நடைபெற வேண்டும் என்பதே அரசாங்கத்தின் குறிக்கோளாக இருக்கின்றது. வடகிழக்கு மாகாணங்களை பொருளாதார ரீதியில் தம்மை மிஞ்சி மேம்படவிடக்கூடாது என்ற எண்ணம் தெற்கில் உள்ளதோ நான் அறியேன். முதலமைச்சர் நிதியம் இன்று வரை முடக்கப்பட்டிருப்பதும் இந்தவாறு சிந்திக்கத் தூண்டுகின்றது.

அடுத்து வடமாகாண வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களை கையாள்வதற்கும் பிற விடயங்களை கவனிப்பதற்குமாக வடமாகாண அமைச்சு அமைக்கப்பட்டுள்ள போதும் எம் அமைச்சின் அதிகாரங்களை மீறி மத்திய அரசின் அனுமதியுடன் வடபகுதியில் பல வர்த்தக முயற்சிகள் பாரிய அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இவை வடமாகாணத்தில் பலகாலமாக வர்த்தக முயற்சிகளில்ஈடுபட்டு வந்த பெரிய, நடுத்தர, சிறிய அளவிலான அனைத்து வர்த்தகர்களையும் பாதிப்புக்குள்ளாக்கியிருப்பதுகவலையளிக்கின்றது. போரின் பின்னர் விசேடமான கவனிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டிய வடகிழக்கு மாகாணங்கள் தெற்கின் ஆக்கிரமிப்புக்கே உள்ளாக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இங்கு ஆரம்பிக்கப்பட்ட பல நுண்கடன் நிதி நிறுவனங்களின் பசப்பு வார்த்தைகளில் ஏமாந்து அவர்களின் இயல்புக்கு மேற்பட்ட வகையில் பாரிய கடன் தொகைகளை கடனாகப் பெற்று அவற்றை மீளச் செலுத்த முடியாமலும் அவற்றின்அதிகரித்த வட்டித்தொகைகளைக் கட்ட முடியாத நிலையிலும்தமது சொத்துக்கள் அனைத்தையும் இழந்து கடுமையான மன விரக்திக்குட்பட்ட பல வர்த்தகர்களின் செய்திகள் பற்றி நாம் அறிந்திருக்கின்றோம்.

ஏனைய பகுதிகளில் இருந்து வருகைதந்து இப் பகுதிகளில் வர்த்தகங்களில் ஈடுபடுபவர்கள் பற்றி எமக்கு ஆட்சேபனை இல்லாதபோதும் அவர்களின் வர்த்தக நடவடிக்கைகள் இங்குள்ள ஒட்டுமொத்த வர்த்தகர்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்குப்பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அமையுமாயின் அவ்வாறான வர்த்தகங்கள் வரவேற்கக்கூடியன. தற்போதைய நிலையில் இப்பகுதிகளில் உள்ள வர்த்தக மூல வளங்கள் மற்றும் மனித வளங்கள் அனைத்தும் பிற தேவைகளுக்காக அதுவும் வடபகுதிக்கு வெளியேயானபகுதிகளின் முன்னேற்றகரமான நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுவது இப் பகுதியின் வளர்ச்சியை பின்நோக்கித் தள்ளுவதான ஒரு நடவடிக்கையாகவே நாம் பார்க்கின்றோம்.

அண்மையில்கொக்கிளாய், கருவாட்டுக்கேணி போன்ற இடங்களில் இல்மினைட் அகழ்வுகள் நடாத்துவது பற்றி எமக்குக் கூறப்பட்டது. புல்மோடை இணைந்த வடகிழக்கு மாகாணத்தின் கீழ் உள்ளடங்கியிருந்தால் அது வேறு விடயம். இப்போது வடக்கு மாகாணத்தில் இருந்து வளங்களை வெளியே எடுத்துச் செல்ல எத்தனிக்கின்றீர்கள் என்று நான் கூறவும் எமது பிரதேசத்திற்கு இதற்கான ஒரு ஆலையைப் பெற்றுத்தருவதாகவும் இங்குள்ளவர்களை அதில் வேலை செய்ய இடமளிக்கப் போவதாகவும் கூறப்பட்டது. நான் இன்னொரு வேண்டுதலை முன் வைத்தேன். ஒரு மாகாணத்தின் வளங்களின் வருமானத்தின் பெரும் பகுதி திரும்பவும் அதே மாகாணத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்றேன். அந்த வருமானங்கள் மத்திக்குக் கிடைக்கும் என்றும் மத்தி எல்லோருக்கும் பொதுவாக அவற்றைப் பாவிக்கும் என்று கூறப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட எமது பிரதேசம் கூடிய வருமானங்களைப் பெற வேண்டியிருக்கும் இந்த நேரத்தில் வளங்களை மத்திய அரசாங்கம் தான் எடுக்கப் பார்ப்பதால் தான் நாங்கள் சமஷ;டி கேட்கின்றோம் என்றேன். ஆகவே அதிகாரப் பகிர்வு பற்றிக் கூறிக்கொண்டு மாகாணங்களை சுயமாக இயங்க விடாது மத்தி தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கப் பார்ப்பது நியாயமான ஒரு விடயம் அல்ல.

எனவே தான் வடபகுதியின் உள்ள வர்த்தக நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெற இடமளிக்க வேண்டும் என்று அபிப்பிராயப்படுகின்றேன்.எமது பகுதிகளில் அமைந்துள்ள நட்சத்திர ஹொட்டேல்கள், பல்பொருள் அங்காடிகள், பாரிய உணவுக் களஞ்சியங்கள் ஆகியவற்றின் செயற்பாடுகள் இப்பகுதியின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட வேண்டும். இவ்வாறு எமது நோக்கங்களையுந் தேவைகளையும் அறிந்து செயற்பட்டால்எமது வர்த்தகர்களும் நன்மையடைவார்கள். அதே நேரம் பிற பகுதிகளில் இருந்து இங்கு வருகைதந்து பாரிய வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களும் நன்மை அடைவார்கள்.

எமது பிரதேசங்களில் காணப்படும் மூல வளங்கள் முழுமையாக வடபகுதிக்கு வெளியில் எடுத்துச் செல்லப்படுவது தொடர்பில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டிய நிலை இன்று அவதானிக்கப்பட்டுள்ளது. தெங்குப் பொருட்கள்,கடல் வளங்கள்மற்றும் இன்னோரன்ன அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வகைதொகையின்றி இப் பகுதிகளில் இருந்து வெளியில் எடுத்துச் செல்லப்படுகின்றன. விளைவு இப் பகுதியில் உள்ள மக்களுக்கு இந்த உணவுப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடுகள் ஏற்படுவதுடன் அவற்றை நாம் பெற அதிகூடிய பணச் செலவுகளும் ஏற்படுகின்றன. வளங்களின்வருமானம் தெற்கை வளம்படுத்துகின்றது. இதை முன்வைத்தே ஒன்பது மாகாணங்களும் சுயாட்சி உரிமை பெற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தேன்.

எனவே இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டே வர்த்தக முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட இருக்கின்ற வர்த்தக அபிவிருத்திகள் தொடர்பில் வடமாகாண சபையின் ஒத்திசைவுகளையும் பெற்றுக் கொண்டு முன்னெறிச் செல்வதேசிறப்பானது.எனது உரையை நிறைவு செய்வதற்கு முன்பதாக இன்றைய தினம் பாராட்டுக்களையும் கௌரவங்களையும் பெறுகின்ற அனைத்து வர்த்தக முயற்சியாளர்களையும் முதலீட்டாளர்களையும் இத் தருணத்தில் வாழ்த்தி அவர்களின் எதிர்காலம் சுபீட்சமானதாக அமைய இறையருள் வேண்டி எனது உரையை நிறைவு செய்கின்றேன்.
நன்றி
வணக்கம்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

யாழ்ப்பாணம் வர்த்தக தொழில்துறை மன்றம்
மற்றம்
தேசிய வர்த்தக அபிவிருத்தி அதிகாரசபையின்
ஆதரவில்
புதிய தொழில்முனைவோருக்கான கௌரவிப்பும் விருது வழங்கும் வைபவமும்
செல்வா பலஸ்
21.07.2018 சனிக்கிழமை பிற்பகல் 6.00 மணியளவில்
கௌரவ விருந்தினர் உரை

குருர் ப்ரம்மா ……………………

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More