Home இலங்கை எண்ணிமப் படுத்தப்படுகின்ற ஏட்டுச் சுவடிகள் – நூலகம் நிறுவனத்தின் பிறிதொரு முயற்சி – கணபதி சர்வானந்தா…

எண்ணிமப் படுத்தப்படுகின்ற ஏட்டுச் சுவடிகள் – நூலகம் நிறுவனத்தின் பிறிதொரு முயற்சி – கணபதி சர்வானந்தா…

by admin

இந்த நூற்றாண்டிலும் சாதாரண மக்களிடையே ஏட்டுச் சுவடிகள்  பிரபல்யமாக இருப்பதற்குரிய  காரணங்களில் ஒன்றாக  ஏடுகளில் எழுதி வாசிக்கப்படும் சாத்திரமுறைமையைச்  சொல்லலாம். ஏடுகளென்றதும் முதலில் திருவள்ளுவரே எமது நினைவுக்கு வருகிறார். ஒரு கையில் ஏடுகளுடனும், மறு கையில் எழுத்தாணியுடனும் படங்களாகவும், சிலைகளாகவும் பல இடங்களில்  அப்பெருந்தகை காட்சிதருகிறார். வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், கணிதம், வானியல், சித்த வைத்தியம், ஆயுர்வேதம்,  யுனானி, சிற்ப சாத்திரம், இசை, கட்டடக் கலை, வரலாறு, நுண்கலைகள், இலக்கணம் போன்ற பல்துறை சார்ந்த விடயங்கள் எல்லாம்  ஆரம்பத்தில் ஏட்டுச் சுவடிகளிலேயே எழுதப்பட்டிருக்கின்றன.

பனை ஒலைச் சார்விலே தயாரிக்கப்படும் ஏடுகள் ஆகக் கூடிய காலம் 200 வருடங்கள் மாத்திரமே நிலைத்து நிற்கக் கூடியவை . மன்னர் ஆட்சிக் காலங்களில் அங்ஙனம் பழமை வாய்ந்ததாகக் காணப்பட்ட ஏடுகள் எல்லாம் மீண்டும் படியெடுக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டன. அக்காலத்தில் ஓலைச் சார்வுகளை வெட்டி எடுத்து இயற்கையான வேதிப்பொருட்கள் கொண்டு பரிகரித்து ஏடுகளாக்க ஒரு சாராரும், எழுதுபவர்கள் படி யெடுப்பவர் என இன்னொரு சாராரும், மரங்களினால் செய்யப் பட்ட சட்டங்களுக்கிடையே அவை பாதுகாப்பாகக் கட்டுவதற்கென இன்னொரு பிரிவினரும் எனப் பலர் இவ்வகையான ஏட்டுச்ட சுவடிப் பதிப்புப் பணிகளிலே ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மன்னர்கள் இத்தகைய பணிகளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தினாலேயே அரிய  பல பொக்கிஷங்கள் இன்றும் எமது பார்வைக்குக் கிட்டியிருக்கின்றன.

ஆங்கிலேயர் இந்திய மண்ணை ஆட்சி செய்த போது  ஏடுகள் பற்றியும், அதனில் பதிக்கப்பட்ட எழுத்துக்கள் பற்றியும் நன்கு அறிந்திருந்தனர். எனவே இத்தகைய சுவடிகளைச் சேகரித்து அவற்றை ஆய்வதில் பெரும் ஈடுபாடு காட்டிய ஆங்கிலேய அதிகாரிகளான, கொலின் மெக்கன்ஸி (Colin Mackenzie), லேய்டொன் (Leydon) ஆகியவர்கள் சுவடிகளைச் சேகரிக்கத் தொடங்கினர். 1869 ஆம் ஆண்டு சுவடிகளைப் பாதுகாப்பதற் கென ஒரு பாதுகாப்பகம் நிறுவப்பட்டது. அதன்வழி இன்று  ஓலைச்சுவடிகளை அறிவியல் பூர்வமாகப் பேணுகின்ற  இடங்களில் ஒன்றாக ,  சென்னை அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம் (Government Oriental Manuscripts Library and Research Centre, Chennai) விளங்குகிறது.அங்கு 50,180 ஓலைச்சுவடிகளும், 22,134 காகித ஆவணங்களும், 26,556 புத்தகங்களும் உள்ளன. சிவலிங்க வடிவில் அமைந்துள்ள திருவாசக ஓலைச்சுவடி, உருத்திராட்ச வடிவில் அமைந்துள்ள திருமுருகாற்றுப்படை ஓலைச்சுவடி எனப் பல அரிய சுவடிகள் இந்நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.

அது போன்று சுவடிகள் சார்ந்த செயற்பாடு ஒன்று தற்போது  இலங்கையிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ் அரிய செயற்பாட்டை   நூலக நிறுவனம்  ஆரம்பித்திருக்கிறது.  அவர்கள் இலங்கைத்  தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு, தகவல் வளங்களையும் அறிவுச்சேகரங்களையும் ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்துவருகிறார்கள்.   தொடக்க காலத்தில் இந்த நூலக நிறுவனமானது எண்ணிம நூலகம் (Noolaham Digital Library –  www.noolaham.org)  சார்ந்த செயற்பாட்டிலேயே முதன்மையாக ஈடுபட்டு வந்தது. இப்பொழுது ஆவணப் படுத்தல், ஆவணகப்படுத்தல் துறைகளிலும் தனது பணியை விரிவாக்கியுள்ளது.  ஆராய்ச்சி அடிப்படையிலான ஆவணப்படுத்தல், அறிவைப் பரப்புதல் சார்ந்தும் தமது நிகழ்ச்சித் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான தில்லைநாதன்  கோபிநாத் எம்மிடம் தெரிவித்தார். இதுவரை இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களுடைய 55,000 க்கும் அதிகமான  பல்வேறுபட்ட வடிவங்களில் வெளிவந்த நூல்களையும் அறிவுசார் வளங்களையும் உள்ளடக்கி இருக்கிறது நூலக நிறுவனம். 2005 ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்திலன்று  இந் நூலக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இதைத் தில்லைநாதன்  கோபிநாத் மற்றும் முரளிதரன் மயூரன்  ஆகியோர் இணைந்து உருவாக்கியிருக்கின்றனர்.

சென்னை அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தின் செயற்பாடுகளைப்போல நூலக நிறுவனத்திலும்  ஏடுகளைச் சேகரித்துப் பாதுகாக்கின்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அறிந்து, மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக  நூலக நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான தில்லை நாதன் கோபிநாத் அவர்களைத் தொலேபேசியில் தொடர்பு கொண்டு இது பற்றிக் கேட்டோம்.

பிரித்தானிய நூலகத்தின் நிதி உதவியுடன்  EAP – 1056 என்ற இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஏட்டுச் சுவடிகளைச் சர்வதேச நியமங்களைப் பயன்படுத்தி ஆவணப்படுத்தினால் மட்டுமே அவற்றைப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் பயன்படுத்த முடியும். இத்தகைய ஆவணப்படுத்தல் மிகுந்த பொருட்செலவு மிக்கது. அவ்வகையில் பிரித்தானிய நூலகத்தின் (British Library) அழிவாபத்தில் உள்ள ஆவணங்களைப் பாதுகாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் (Endangered Archives Programme) ஆதரவு கிடைத்தமை  இந்த ஏட்டுச் சுவடி ஆவணகத் திட்டத்தினைச் சாத்தியமாக்கியுள்ளது- என்கிறார்  கோபிநாத்.

இது பற்றி மேலதிக விபரங்களைப் பெறுவதற்காக  185 ஆடியபாதம் வீதி, கொக்குவில், யாழ்ப்பாணம் என்ற முகவரியில் அமைந்துள்ள நூலகம் நிறுவனத்தை தொலை பேசி இலக்கம் 076 203 8032 இனூடாகத் தொடர்பு கொண்டு அங்கு சென்றோம்.அச் செயற்திட்டத்திற்குப் பொறுப்பாளராக இருக்கின்ற ஆர்த்திகா எம்மை வரவேற்றார். தாங்கள் எடுத்திருக்கின்ற ஓலைச் சுவடிகள் சார்ந்த இவ்வரிய பணிபற்றி அறிய ஆவலாக இருக்கிறோம் – என்றோம்.

இச்செயற்றிட்டத்தின் ஆய்வாளராக தில்லைநாதன் கோபிநாத் மற்றும் இணை ஆய்வாளராக லெட்சுமிகாந்தன் நற்கீரன் ஆகியோருடன்  களப்பணியில் என்னுடன் திலக்சன், டெல்சான், விதுசன், ஐதீபன் ஆகியோரும் செயற்பட்டு வருகின்றனர். இதுவரை 20,000 க்கும் அதிகமான சுவடிப் பக்கங்களை அடையாளங் கண்டுள்ளோம்.. அவை படிப்படியாக எண்ணிமப்படுத்தப்பட்டும் வருகின்றன. தற்போது வடக்கு மாகாணத்திலேயே இச்செயற்றிட்டம் மேற்கொள்ளப்படுகிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் கிழக்கு மாகாணத்துக்கும் விரிவுபடுத்தவுள்ளோம். அரிய சுவடிகளை அவை இருக்கும் இடத்துக்கே சென்று எண்ணிமப் படுத்துகிறோம். அவ்வகையில் சுவடிகள் அவற்றின்  உரிமையாளரிடமே இருக்கும். எண்ணிமப்படுத்தலின் பிரதியொன்றைச் சுவடியின் உரிமையாளர்களுக்கும் வழங்குகிறோம் – என்று இரத்தினச் சுருக்கமாகத் தங்கள் பணி பற்றி விபரித்தார் ஆர்த்திகா.

தொடர்ந்து களப்பணியாளராகக் கடமையாற்றுகின்ற திலக்சன், ஐதீபன் ஆகியோருடனும்  கலந்துரையாடி அவர்கள் பணிபற்றியும் கேட்டோம். இதில் மிகவும் பெருமைப்பட வேண்டிய விடயம் ஒன்றையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம். இந்தப் பணிகளிலே தம்மை ஈடுபடுத்திக் கொண்ட அந்த இளைஞர்களின் ஆர்வம் எம்மை மிகவும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் அதற்கூடாகப் பெறப்படும் பயனிலும் துல்லியமாக விடயங்களை அவர்கள் பேணியிருப்பார்கள் என்ற நம்பிக்கையும் வலுப்பெறுகிறது.

இத்திட்டம் ஆரம்பிக்க முன்னரே நூலக நிறுவனத்தினர் யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்ற  ஓலைச் சுவடிகளை எண்ணிமப்படுத்த வேண்டும் என்று தன்னிச்சையானதொரு  முயற்சியாகத் தெல்லிப்பழை துர்க்கா ஆலயத்தில் காணப்பட்ட கந்தபுராண ஓலைச் சுவடிகளை எண்ணிமப்படுத்த முயன்றனர். அந்த நிகழ்வே ஓலைச் சுவடிகளைச் சேகரித்துப் பாதுகாத்து எண்ணிமப்படுத்துகின்ற முயற்சியின் ஆரம்பம் எனலாம். அது மட்டுமல்ல இவ்வரிய முயற்சிக்கு உந்து கோலாகவும் அமைந்ததுவும் அதுவே.  இந்த EAP – 1056 என்ற இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவென  சென்ற வருடம் மார்கழி மாதத்தில் அதற்கானதொரு குழு ஆரம்பிக்கப்பட்டது. இதற்காகப் பல பட்டதாரிகள் நேர்முகம் காணப்பட்டனர். முடிவில்  ஐந்து பேர் இப்பணிக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் முதலில் களஆய்வுக்காக அனுப்பப்பட்டனர். ஓலைச் சுவடிகளைத் தேடி,  அது பற்றிய விபரங்களைச் சேகரிக்கும் பணியிலேயே அவர்கள் முதலில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆய்விலே ஏறத்தாழப் பல ஆயிரம் ஒலைச்சுவடிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.  அவற்றை ஆவணமாக்க வேண்டிய செயற்திட்டத்தை வடிவமைத்துக் கொள்ள வேண்டிய பணியை ஆரம்பித்தோம் என்றவாறு தொடர்ந்தார் திலக்சன்.

அடையாளங் காணப்பட்ட ஓலைச் சுவடிகளில் இதுவரை 16500ஒலைச் சுவடிகளை எண்ணிமப்படுத்தியுள்ளோம். கண்டறியப்பட்ட ஓலைச்சுவடிகளெல்லாம் ஏதோ ஒருவகையில் அழுக்குப் படிந்தவைகளாகவும், தூய்மைப்படுத்த வேண்டியவைகளாகவுமே காணப்பட்டன. எனவே அவற்றை முறைப்படி  தூய்மைப்படுத்தி எண்ணிமப்படுத்த நீண்டகாலம் தேவைப்படுகிறது. அதனாலேயே எமது பணிகள் தாமதமடைகின்றன. 200 வருடங்களாகப் பாதுகாக்கப்பட்டு வந்த அந்த ஓலைச்சுவடிகளை  ஒடிவுகள் ஏற்படாத முறையில் கையாளவேண்டும் என்பதில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளுகிறோம். பல சமயங்களில் சுவடிகள் ஒன்றோடொன்று ஒட்டுப்பட்டு பிரிக்க முடியாதவாறு காணப்படும். எனவே மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் பல தொழில் நுட்பங்களைக் கையாண்டு அவற்றைப் பக்கம் மாறாது தனித்தனியாக எடுத்து ஆவணப்படுத்துகிறோம். நேரம் காலம் என்றதைப் பாராது மிகவும் பொறுப்புடன் இப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

அது மட்டுமல்ல ஓலைச் சுவடிகளைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வுப் பயிற்சிப் பட்டறைகளையும் நடத்தியிருக்கிறோம். ஏனெனில் பலர் தாம் இதுவரை பாதுகாத்த விடயம் தங்களுடனேயே இருக்க வேண்டும் என்ற விடயத்தில் கவனமாக இருந்தனர். அவர்களுடன்  எமது முயற்சி பற்றிக் கலந்துரையாடி,  எமது அறிவையும் அனுபவத்தையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டோம். “வாருங்கள் யாவரும் ஊர் கூடி ஆவணப்படுத்துவோம்.” என்று  எமது இலவசப் பணி பற்றிச் சொன்னோம். இது ஒரு தொண்டு அடிப்படையிலே முன்னெடுக்கப்படுகின்ற பணி என்ற விடயத்தையும் எடுத்துரைத் தோம். இதுவரை பாடசாலை, சித்த வைத்தியர்கள், பொது நிறுவனங்கள் என்று மூன்று பிரிவுகளாக இப் பயிற்சிப் பட்டறை நடைபெற்றிருக்கிறது. இவற்றினூடாகப் பெறப்பட்ட தொடர்புகளுக்கூடாகவும் எமக்கு ஓலைச் சுவடிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இத்தகைய முயற்சியினூடாகப் பெறப்பட்ட  வெற்றிகளின் அடிப்படையில் எமது செயற்திட்டங்களைக் கிராமந்தோறும் விஸ்தரிக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். எமது நடவடிக்கைகளைப்பற்றி விழிப்புணர்வு மக்களைச் சென்றடைய எல்லாவிதமான  ஊடகங்களையும் பயன்படுத்துகிறோம் – என்றவரிடம் சுவடிகளை துப்பரவாக்குகின்ற பணி பற்றியும் கேட்டோம்.

ஓலைச் சுவடிகளை துப்பரவாக்குவதற்கு என்ன விதமான பொருட்களை, அதாவது வேதிப்பொருட்களைப் பயன்படுத்துகிறீர்கள்? உங்களைப் போன்று , இந்திய மண்ணிலுள்ள ஓலைச்சுவடிகள் காப்பகங்களோடு  உங்களுக்குத் தொடர்புகள் உண்டா? அவர்களது ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளுகிறீர்களா?

ஆம், அவர்களுடன் எமக்குத் தொடர்புகள் உண்டு. சுவடிகளிலுள்ள அழுக்குகளை நீக்கப் புல் எண்ணெயைப் பயன்படுத்தலாம் என்ற அறிவும், ஒலைச் சுவடிகளில் எழுதப்பட்டுத் தெளிவற்றுக் காணப்படும்  எழுத்துக்களை இனங்காண முருக்கம் இலைகளைப் பயன்படுத்தலாம் , விபூதி பூசிப் பார்க்கலாம் என்ற விடயங்களும் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டதே. . தற்போது வடக்கு மாகாணத்திலேயே இச்செயற்றிட்டம் மேற்கொள்ளப்படுகிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் கிழக்கு மாகாணத்துக்கும் விரிவுபடுத்தவுள்ளோம். இதுவரை எமது  முயற்சி பற்றி அறிந்தவர்கள் அறியாதாருக்குச் சொல்லலாம். ஓலைச் சுவடிகள் வைத்திருப்பவர்கள் பற்றிய விபரங்களை எமக்குத் தெரிவித்தால் நாம் அவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களிடத்தே சென்று சுவடிகளை எண்ணிமைப்படுத்த வேண்டிய முயற்சியை மேற்கொள்ளுவோம் – என்றார் திலக்சன்.

இத்தகைய ஓலைச் சுவடிகள் பற்றிய கலந்துரையாடல் ஒன்றில் கலந்கொண்டு இற்றைக்கு 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் ஈழத்திலிருந்த தொரு ஓலைச் சுவடிகள் காப்பகம் பற்றி உரையாற்றிய முனைவர் ஜெ.அரங்கராஜிடம் அது பற்றிக் கேட்டோம்.

சோழப்பேரரசின் வீழ்சிக்குப் பின்னர் ஆரியச் சக்கரவர்த்திகள் இலங்கையில் யாழ்ப்பாணக் குடாநாட்டை ஆட்சி செய்யத் துவங்கினார்கள். அக்காலத்தில் பாண்டியப் பேரரசு மிகவும் வலுப்பெற்றிருந்தது.அப் பாண்டியப் பேரரசின் கட்டுப்பாட்டிலேயே யாழ்ப்பாணக் குடாநாடும் இருந்தது.அதற்குச் சான்றாக யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட சேது நாணயங்களில் ஒரு பக்கம் நந்தியும் மறுபக்கத்தில் பாண்டிய மன்னர்களுடைய மீன் சின்னமும் காணப்பட்டது.மீன் சின்னத்தோடு மழு மற்றும் மங்கலப் பொருட்களும் இருந்தன. பாண்டியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு இங்கு தொடர்ந்து ஆரியப்பேரரசு இருந்து வந்தது. அச்சமயத்தில் தமிழகத்தில் விஜயநகர நாயக்கர்களின் ஆட்சி ஏற்பட்டது. அதில் தஞ்சை நாயக்கர்கள் தஞ்சாவூரில் சரஸ்வதி பண்டாரம் எனும் நூல்நிலையத்தைக் கட்டமைத்தனர்.தஞ்சை நாயக்க மன்னர்கள் கட்டமைத்த அந்த நூல் நிலையத்தில் பிற்காலத்தில் சரபோஜி மன்னர்களும், மராட்டியர்களான சரபோஜி மன்னர்களும் பேணி மேம்படுத்தினர். தஞ்சை நாயக்கர்கள் ஏற்ப்படுத்திய சரஸ்வதி பண்டாரம் போலவே அவர்களுடன் இணக்கமாக இருந்த ஆரியச் சக்கரவர்த்திகளும் யாழ்ப்பாணத்தில் சரஸ்வதி பண்டாரம் என்னும் நூல்நிலையத்தை ஏற்ப்படுத்தினார்கள். அந்த நூல் நிலையத்திலே அரிய பல ஓலைச் சுவடிகள் வைக்கப்பட்டிருந்தன. இதற்குச் சான்றாக , அந்த மன்னர்களே வைத்தியத்திலும் விற்பன்னர்களாக இருந்தமையினால் பரராஜசேகரம், செகராஜசேகரம் என்ற மருத்துவ  மற்றும் வான சாஸ்திர ஓலைச்சுவடிகள் வெளிவந்தன. சங்கிலிய மன்னனின் வீழ்சிக்குப் பிறகு போத்துக்கேயர் அந்த நூல்நிலையத்தை அழித்துவிட்டதாகவும் பின்னர் அதிலிருந்த ஓலைச் சுவடிகள் கோவாவுக்கும், லிஸ்பனுக்கும் கொண்டு செல்லப்பட்டதாகவும் குறிப்புகள் சொல்லுகின்றன. அதற்குச் சான்றாக கோவாவிலும், லிஸ்பனிலும் நிறையத் தமிழ் ஓலைச் சுவடிகள் இன்றும் காணப்படுகின்றன. ஆனால் அவை முழுமையாகப் பட்டியலிடப் படவில்லை.அதன் பின்பு ஆங்கிலேயர் காலத்திலே சங்க இலக்கியப் பதிவுகளும் , தமிழ் இலக்கியப் பதிவுகளும் வந்தபோது உ.வே.சாமிநாத ஐயர் தன்னுடைய சிலப்பதிகாரப் பதிப்பாகட்டும் மற்றும் பிற பதிப்பாகட்டும் அவற்றிற்கு தமிழகத்திலுமிருந்து சுவடிகளை  எடுத்திருப்பார். அந்த வரிசையில் நிட்சயம் ஈழத்திலிருந்தும் ஒரு ஏட்டை எடுத்திருந்தார்.கொங்குநாட்டுச் சுவடிகள், பாண்டிநாட்டுச் சுவடிகள், சோழநாட்டுச் சுவடிகள், தொண்டைநாட்டுச் சுவடிகள், ஈழத்துச் சுவடிகள் என்று எல்லாவற்றையும் ஒப்பு நோக்கியே தமது பதிப்புகளைச் செய்தார்கள்.இதே முறையினை உ.வே.சாமிநாதருக்கு முன்னர் சி.வை.தாமோதரம் பிள்ளை, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்கள் போன்றோரும் பின்பற்றினார்கள். அந்த வகையில் அக்காலத்தில் ஈழத்தில் தமிழ்சுவடிகளின் புழக்கம் இருந்திருக்கிறது.ஈழத்துச் சுவடிகளுக்கும் தமிழ்நாட்டுச் சுவடிகளுக்கும் ஒரு சிறு வேறுபாடு உண்டு.தமிழ் நாட்டுச் சுவடிகளைக் காட்டிலும் ஈழத்துச் சுவடிகள் வடிவில் பெரியவை.சில கூந்தல் பனை ஓலைகளால் செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். பண்டைய காலத்தில் இருந்த பதிப்பாளர்கள் எல்லோரும் தமது பதிப்புகளில் தமக்கு ஏடுகள் கிடைக்கப்பெற்ற விபரதத்தைக் குறிப்பிட்டிருக்கின்றனர்.அந்த வகையில் ஈழத்திலிருந்து யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் இருந்து பல ஏட்டுச் சுவடிகள் தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலே சுவடிகளைப் பேணுவதற்குக்  கோவை இலைகளைப் பயன்படுத்தி னார்கள். ஈழத்திலே முருங்கை இலைகளைப் பயன்படுத்தினார்கள்.இப்படிச் சிறு சிறு வித்தியாசங்களோடு சுவடிகள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More