இலங்கை பிரதான செய்திகள்

இராணுவத்திற்கு இடம் கொடுப்பது ஒட்டகத்திற்கு கொடுப்பது போல – (ஒரே பார்வையில் சிவாஜி)

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

யாழ்ப்பாணக் கோட்டையை இரானுவத்திற்கு வழங்க முடியாதென்றும் கோட்டைக்குள்ளிருந்து இரானுவம் வெளியேற்றப்பட வேண்டுமென்றும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மற்றும் விஐயகலா மகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் மாவட்டச் செயல கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.

இதன்போது தொல்லியல் ரீதியான முன்னேற்றங்களின் போது யாழ் ஒல்லாந்தர் கோட்டையில் இராணுவத்தினருக்கு காணி வழங்கும் விடயம் தொடர்பிலும் அங்கு இரானுவத்தினர் முகாம் அமைப்பது தொடர்பிலும் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினார்

யாழ் துரையப்பா விளையாட்டரங்கின் புனரமைப்பின்போது பாரிய இடையூறுகளை விளைவித்த தொல்லியல் திணைக்களம் தற்போது கோட்டைக்குள் இராணும் முகாம் அமைப்பதை எவ்வாறு அனுமதித்தது என்றும் உண்மையில் அனுமதி பெறப்பட்டதா என்றும் பல்வெறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இதன் போது அங்கு பிரசன்னமாகியிருந்த தொல்லியல் திணைக்கள அதிகாரி கோட்டையின் ராணி மாளிகை புணரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆதனால் அந்த மாளிகைக்கு அருகில் இருந்த இரானுவ முகாம் அகற்றப்பட்டுள்ளது.

அங்கு இருந்த அந்த முகாமில் ஏற்கனவே இரானுவம் இருந்ததால் அவர்கள் வேறு இடத்திற்கு மாறி அங்கு தங்குவதற்கான தற்காலிக முகாமையே தற்போது அமைத்து வருகின்றனர் என்றார்.

அதற்கு, கோட்டையில் எவ்வித இராணுவமும் தங்குவதை நாம் அனுமதிக்க முடியாது என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்ததுடன் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்வரை பொலிசாரை பாதுகாப்பில் ஈடுபடுத்துவதுடன் புனரமைப்பு நிறைவடைந்த பின்னர் பொலிசாரும் வெளியேறி கோட்டை முழுமையாக தொல்லியல் திணைக்களத்தின்கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என தீர்மானம் எடுக்கப்படவேண்டும் என தெரிவித்தார்

அத்தோடு அங்கு இரானுவம் இருப்பதற்கு தொல்லியல் திணைக்களம் அனுமதி கொடுத்து வருகிறது. ஆனால் அங்கு இராணுவம் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆகையினால் அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும். ஏனெனில் இரானுவத்தினருக்கு இடம் கொடுப்பதானது ஒட்டகத்திற்கு இடம் கொடுத்ததாகவே அமையுமென்றும் சுட்டிக்காட்டினார்.

இதன் போது சிரித்தக் கொண்டே கோட்டையில் ஒட்டகம் என இணைத் தலைவர்களில் ஒருவரான முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கூறினார். இதன் பின்னர் இவ்விடயம் தொடர்பாக மத்திய அரசிற்கு அறிவிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

தமிழர் தாயகப் பகுதிகளில் மீட்கப்படும் மனித எலும்புக் கூடுகள் மற்றும் காணப்படும் புதைகுழிகள் குறித்து உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்..

தமிழர் தாயகப் பகுதிகளில் மீட்கப்படும் மனித எலும்புக் கூடுகள் மற்றும் காணப்படும் புதைகுழிகள் குறித்து உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் செம்மணியில் எலும்புக் கூடுகள் காணப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்க கருத்து வெளியிடுகையிலையே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

செம்மணியில் எலும்புக் கூடுகள் மீட்கப்படுகின்றன. மன்னார் புதைகுழிகள் தோண்டப்படுகின்றன. இவ்வாறு எமது தாயகப்பகுதிகளில் மனித எலும்புக் கூடுகளும், மனித எச்சங்களும் மீட்கப்படுவதுடன் பல இடங்களிலும் மனிதப் புதைகுழிகளும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

பொதுத்தேவைகள் அல்லது சொந்தத் தேவைகளுக்கான நிலங்களைத் தோண்டுகின்ற போது இவ்வாறு மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டும் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டும் வருகின்ற நிலையில் அவை குறித்து உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானது.

ஆகவே அந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற காலப் பகுதியில் அத்தகைய நிலம் தோண்டுகின்ற பணிகள் நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு பணிகள் தொடருவதாயின் நீதிமன்ற அனுமதிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதைவிடுத்து விசாரணைகள் இடம்பெறுவதற்கு முன்னதாக தொடர்ந்தும் பணிகளை முன்னெடுக்க முடியாது.

இதே வேளை எங்கு எல்லாம் எலும்புக் கூடுகள் மீட்கப்படுகின்றவோ அல்லது புதைகுழிகள் கண்டு பிடிக்கப்படுகின்றன அங்கெல்லாம் அவை குறித்து உரிய விசாரணைகள் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு விசாரணைகள் முன்னெடுப்பதனூடாகவே எதிர்காலத்தில் புதைகுழிகள் இல்லாத நிலைமை காணப்படுமென்றும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.

தமிழர்களுக்கு நியமனம்

யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்தில் புதிதாக சிங்களவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படுவதை நிறுத்த வேண்டுமென வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.கே.சிவாஐிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்றைய யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்,   துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வின் போது, விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டது. அத் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்களால் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து விலை மதிப்பீட்டுத் திணைக்களம் உரிய முறையில் சிறப்பாகச செயற்படுவதற்கு விசேட அமைச்சரவை அனுமதியைப் பெற்று ஆளணிகளை உள்வாங்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

அவ்வாறு ஆளணியை உள்வாங்குகின்ற போது அந்த ஆளணி குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டுமென சிவாஜிலிங்கத்தால் சுட்டிக்காட்டப்பட்டது. அதாவது தற்போது யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணம் முழுவதும் மட்டுமல்லாமல் கிழக்கு மாகாணத்திலும் புதிதாக சிங்களவர்களுக்கே நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு ஒவ்வொரு இடத்திலும் எல்லா வேலைகளிற்கும் சிங்களவர்கள் வருகின்ற நிலை தடுக்கப்பட்டு தமிழர்களையே உள்வாங்க வேண்டும். தமிழர்களையே நியமிக்கவே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

சட்டவிரோத தொழில்

வடமராட்சி கிழக்கில் அத்துமீறி சட்டவிரோத தொழில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடு தொடர்ந்து வருகின்றதால் பாரிய பிரச்சனைகள் ஏற்படக் கூடிய நிலை காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கலகம் ஏற்பட்ட பின்னர் ஊரடங்கு போடுவதில் அர்த்தமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்,   வடமராட்சியில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

அதாவது அங்கு இடம்பெறுகின்ற சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் குறித்து இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கைகளும் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் இதனால் நேற்றும் படகு எரிக்கப்பட்டுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் இந்தப் பிரச்சனையை விரைவாகத் தீர்க்க வேண்டுமென்றும் வலிறுத்திய சிவாஜிலிங்கம் கலகம் வந்த பின்னர் ஊரடங்கு தேவையில்லை என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயத்தில் தெற்கிலுள்ளவர்கள் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்காது தாமதித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். ஆகவே இதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்றார்.

இதற்குப் பதிலளித்த மருதங்கேணி பிரதேச செயலர் அனுமதியில்லாமல் தொடர்ந்தும் அங்கு தொழிலில் ஈடுபட்டு வருவது குறித்து நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத் தீர்ப்பு விரைவில் வெளிவர உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.