இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

கவனிப்பாரற்றுக் கிடக்கும் தலைமன்னார் மணியாட்டி நாவல்….

 குளோபல் தமிழ்ச் செய்தியார் மன்னார்….

ஆங்கிலேயருடைய ஆட்சிக் காலத்தில் மன்னார் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஓன்று கோட்டை என்றும் மன்னார் மற்றையது தலைமன்னார் என்றும் அழைக்கப்பட்டது.

இத் தலைமன்னார் மக்களுடைய வாழ்வியலானது சுமார் 500 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையைக் கொண்டது. இத் தலை மன்னார் மண்ணில் 7 முக்கிய சுற்றுலாத்தளங்கள் உண்டு. அதில் ஒன்று மணியாட்டி நாவலாகும். இது தலைமன்னார் பிரதானவீதியில் இருந்து 1கி.மீ தொலைவில் தலைமன்னாரின் தென் பகுதியின் காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. இம் மணியாட்டி நாவலது நிலப்பரப்பானது சிலிக்கன் மணலினால் சூழப்பட்டுள்ளது. இம் மணல்களுக்கு மத்தியில் அதிகமான நாவல் மரங்கள் வளர்ந்து பெரும் சோலையாக காணப்படுகின்றது. இதன் உயரம் 152 அடியும் சுற்றளவு 820 அடியையும் கொண்ட ஒரு உயர்ந்த மணல் குவியலாகும். இக் குவியலைச் சூழ்ந்தே அதிகமான நாவல் மரங்கள் காணப்படுகின்றன. இதன் உயரத்தில் நின்று பார்க்கின்ற போது மன்னார் தீவின் ஐந்தில் ஒரு பகுதி நிலப்பரப்பை எம்மால் பார்க்க முடியும்.

‘மணியாட்டி நாவல்’ எனும் பெயர் எப்படி வந்து?

ஈழத்தை ஐரோப்பியர்கள் ஆட்சி செய்த போது தலைமன்னார் மண்ணின் தற்போதைய சேமக்காலையில் போர்த்துக் கேயரினால் ‘புனித லோறன் சியாரின் தேவாலயம்’ ஒன்று நிர்மானிக்கப்பட்டிருந்து. இத் தேவாலயத்தில் போர்த்துக்கேயர்கள் பெருமதிமிக்க மணி ஒன்றை நிர்மாணித்திருந்தனர். இத் தேவாலயத்திலேயே எமது முன்னோர்கள் தமது ஆன்மீக காரியங்களை நிறைவேற்றி வந்தனர். அவர்களின் வாழ்வும் குடியிருப்பும் கடற்கரையை அன்மித்தே இருந்தது. போர்த்துக்கேயர் வீழ்த்தப்பட்டு ஒல்லாந்தரின் ஆட்சிக்காலம் ஈழத்தில் இடம்பெற்ற போது. இவர்கள் அதிகமான கோட்டைகளை நிர்மாணித்தனர். கத்தோலிக்க தேவாலயங்களை இடித்து உடைத்தனர். இவ்வாறு உடைக்கப்பட்ட தேவாலயங்களில் தலைமன்னார் புனித லோறன்சியார் தேவாலயமும் ஒன்று.

இவ்வாறு ஆலயங்கள் உடைக்கப்பட்டு புரட்டஸ்தாந்து மத ஆலயங்கள் நிர்மாணிக்கப்பட்டு வந்த காலத்தில் ஆங்கிலேயர்கள் இலங்கையை கைப்பற்ற முற்பட்டனர். இதன்போது ஒல்லாந்தர் தம்மிடமிருந்த பெறுமதிவாய்ந்த பொருட்களையும் ஆவணங்களையும் கொண்டு தப்பிக்க முற்பட்டனர்.அவ்வாறு அவர்கள் சேகரித்த பொருட்களில் தலைமன்னார் புனித லோறன்சியார் தேவாலயத்தில் இருந்த பெறுமதிவாய்ந்த ஆலய மணியும் ஒன்று. இம் மணியுடனும் ஏனைய பொருட்களுடனும் தலைமன்னாரின் வட பகுதி கடலினூடாக தப்பிக்க முற்பட்டனர்.

ஆனால் அப்பகுதியை ஆங்கிலேயர் பாய்மரக் கப்பல்கள் மூலம் சூழ்ந்து கொண்டதை ஒல்லாந்தர் உணர்ந்தனர். எனவே இவர்களிடமிருந்து தப்பிக்க தென்பகுதி கடலை நாடினர். இவ்வாறு அவர்கள் தலைமன்னாரின் தென்பகுதியூடாக தப்பிச் செல்ல முற்பட்ட போது உயரமாக இருந்த மணல் குவியலையும் அதை சூழ நாவல் மரங்கள் இருப்பதையும் கண்டு கொண்டனர்.

அவ் உயரமான மணல் குவியலில் இருந்து ஆங்கிலேயரை நோட்ட மிட்ட போது அவர்கள் கொண்டு சென்ற ஆலயமணியானது இறை அருளினால் தொடர்ந்து அவ்விடத்தில் ஒலித்துக் கொண்டு இருந்ததாக எம் முன்னோர்கள் தமது பிள்ளைகளுக்கு பாரம்பரியமாக வாய் மொழியாக கூறிவந்தனர்.
அன்று முதல் மணி அவ்விடத்தில் ஒலித்தமையினாலும். ஆதிகமான நாவல் மரங்கள் சூழ்ந்திருந்தமையினாலும் அவ்விடம் அன்று முதல் மணியாட்டி நாவல் என அழைக்கப்பட்டது.

பின்னர் அவ் மணியைக் கொண்டு தென்பகுதியூடாக ஒல்லாந்தர் தப்பிக்க முற்பட்ட போது அவர்களுடைய பாய்மரக்கப்பலானது கடலில் மூல்கியதாகவும். அன்றிலிருந்து இன்று வரை எம் தொழிலாளர்கள் அம் மணியைத் தேடிவருகின்றனர் எனவும் இன்று வரை அம் மணி கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவத்தின் பின்னர் மணியாட்டி நாவலானது ஒரு ஆன்மீகத் தளமாகத் திகழ்ந்தது. குறிப்பாக இயற்கையாக அமைந்த அவ் மணல் திட்டுக்களில் சிலுவைப்பாதை வழிபாடுகள் திருப்பலிகள் இன்னும் பல ஆன்மீக நிகழ்வுகளை எமது முன்னால் குருக்கள் வழி நடாத்தி வந்தனர்.

இவ்விடத்திற்கு சென்று வருபவர்கள் மன அமைதியுடன் வீடு திரும்புவதை இங்கு சென்று வந்தவர்கள் உணர்வர். காலப்போக்கில் தலைமன்னாரில் இயற்கை அனர்த்தங்கள் மற்றும் கொள்ளை நோய்களினால் பாதிக்கப்பட்டு 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இவ் இழப்புக்கள் மக்களை அதிகம் பாதித்தமையினால் தலைமன்னார் மண்ணின் மக்களின் குடியிருப்பு நிலங்கள் சுருங்கியது. இதனால் மணியாட்டி நாவலைப்பற்றி மக்கள் தமது பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க மறந்தனர். மனச்சோர்வுகள் மக்களை அதிகம் பாதித்தது.

காலப்போக்கில் மக்கள் இவ்விடத்தை நாவல் பழம் பறிப்பதற்கான இடமாக மாற்றினர். சில காதலர்கள் தமது காதலை வளர்ப்பதற்காகவும் தனிமையாக கதைப்பதற்குமான இடமாக மாற்றினர்.

சிலபெற்றோர் உணவு உண்ண மறுக்கும் தமது பிள்ளைகளை மணியாட்டி நாவலில் உள்ள பேயிடம் உன்னை பிடித்துக் கொடுத்து விடுவேன் எனக்கூறி தமது பிள்ளைகளுக்கு உணவை ஊட்டத்தொடங்கினர்.

சில கடத்தல் காரர்கள் தாம் மறைந்து வாழ்வதற்கான அரணாக அவ்விடத்தைப் பயன்படுத்தினர். இவ்வாறு மணியாட்டி நாவலின் ஆன்மீகம் வீழ்த்தப்பட்ட நிலையில் இன்று வரை இவ்விடம் யாரும் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றது.

எனவே இவ் ஆன்மீக சுற்றுலாத் தலத்தை இனிவரும் காலங்களில் மன்னார் பிரதேசசபை மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனத்தில் எடுத்து அவ்விடத்திற்கு பாதையமைத்து மக்கள் தமது ஆன்மீகக் காரியங்களையும் அன்புறவையும் வளர்ப்பதற்கான உறவுப் பால இடமாக மாற்றியமைக்க தங்களுடைய மேலானஆதரவை தந்துதவுமாறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.