இலங்கை பிரதான செய்திகள்

அனந்தியும், அயூப் அஸ்மினின் துப்பாக்கியும் – மாகாணசபையின் களேபரமும்…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனிடம் துப்பாக்கி உள்ளது என கூறப்பட்ட விவகாரத்தால் இன்றைய தினம் வடமாகாண சபையில் பெரும் களோபரம் ஏற்பட்டது.

அமைச்சர் அனந்தி சசிதரன் துப்பாக்கி வைத்திருப்பதாக மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் கூறியிருந்த விடயம் தொடர்பில் மாகாணசபையின் 128வது அமர்வில் இன்று ஆளுங்கட்சிக்குள் கடுமையான வார்த்தை போர் இடம்பெற்றுள்ளது.

அனந்தி சசிதரன் பாதுகாப்பு அமைச்சை விமர்சித்துக் கொண்டு அவர்களிடமே துப்பாக்கி ஒன் றை பெற்றுள்ளார். என கடந்த 16ம் திகதி நடைபெற்ற வடமாகாணசபையின் விசேட அமர்வில் மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் அனந்தி சசிதரன் இன்று சபையில் தன்னிலை விளக்கம் ஒன்றை வழங்கியிருந்தார். அதன் போது , என்னை ஆயுததாரியாக சித்தரிக்கும் வகையில் மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் பொய்யான குற்றச்சாட்டு ஒன்றை சபையில் கூறியுள்ளார்.

நான் ஆயுதங்கள் வைத்திருக்கிறேன் என்றால் அதற்கான பூரண ஆதாரங்களை அவர் சபையில் காண்பித்திருக்கவேண்டும். இது எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் உயிர் ஆபத்தை உண்டாக்கும் வகையில் அமைந்துள்ளது.

அடுத்த மாகாணசபை தேர்தலை இலக்காக கொண்டு என்னை பலிக்கடா ஆக்குகிறார்கள். நான் 13 வயது தொடக்கம் போராட்டங்களில் பங்கெடுத்திருக்கிறேன். எனது இரு சகோதரர்களை போராட்டத்தில் இழந்திருக்கிறேன்.

எனக்கு ஆயுதங்கள் புதிதல்ல. அரச ஊழியராக இருந்து கொண்டு 3 நாட்கள் சிறையிலும், 3 நாட்கள் இராணுவமுகாமிலும் சித்திரவதைகளை அனுபவித்திருக்கிறேன். நான் இந்த அரசை விமர்சிப்பதற்கு தனிப்பட்ட பாதிப்புக்கள் எனக்குள்ளது என்றார்.

இதன்போது குறுக்கிட்ட மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் அமைச்சரின் உரைக்கு ஆட்சேபனை தெரிவித்தார். தொடர்ந்து எழுந்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் அமைச்சர் அனந்தியை தொடர்ந்து பேச இடமளிக்கவேண்டுமென கேட்டார்.

முதலமைச்சரை தொடர்ந்து எழுந்த எதிர்கட்சி தலைவர் சி.தவராசா அமைச்சர் அனந்தி சசிதரன் அவை தலைவரை நோக்கி கைகாட்டி பேசகூடாது என ஆட்சேபித்தார்.

எதிர்கட்சி தலைவரை தொடர்ந்து எழுந்த மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தன்னுடைய பெயரை குறிப்பிட்டு அமைச்சர் பேசியதால் தான் பதிலளிக்கவேண்டும் என கூறியிருந்ததுடன் அமைச்சர் தனக்கு எதிராக காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். தனக்கு காவற்துறை ஊடாக அந்த விடயம் கூறப்பட்டுள்ளது என கூறினார்.

இதன்போது குறுக்கி ட்ட அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம்  மாகாணசபையில் பேசப்படும் விடயங்களை குறித்து நீதிமன்றத்தில் கூட கேள்வி எழுப்ப இயலாது. அதனை பொலிஸாருக்கு கூறுங்கள். என கூறியிருந்தார்.

தொடர்ந்து எழுந்த மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன்  அமைச்சர் அனந்தி தனது தன்னிலை விளக்கத்தில் உறுப்பினர் அஸ்மினின் கருத்தால் தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டதாக கூறியிருந்த கருத்தையும், 87ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறிய கருத்தையும் அவை குறிப்பிலிருந்து நீக்கவேண்டும். காரணம் 87ம் ஆண்டு அமைச்சர் அனந்திக்கு 16 வயது என கூறினார். அதனை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எழுந்து பேசுகையில் அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு ஆதரவான கருத்துக்களை கூறியதுடன், தான் நாடாளுமன்றத்தில் இருக்கும்போது தனக்கு துப்பாக்கி வழங்க அன்றைய அரசாங்கம் மறுத்தமை தொடர்பாகவும், பின்னர் தனக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி தொலைந்து போயுள்ளதாகவும் கூறினார்.

தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் கருத்து கூறுகையில்,

அமைச்சர் அனந்தி சசிதரன் மீது காழ்ப்புணர்வு கொண்டு நான் 16ம் திகதி நடைபெற்ற சபை அமர்வில் அந்த கருத்தை கூறவில்லை. அனந்தி சசிதரன் தனக்கு துப்பாக்கி வேண்டும் எனக்கேட்டு தனது கையொப்பமிட்டு வழங்கிய கோரிக்கை கடிதம் எங்களிடம் உள்ளது.

இதற்காக பிரதம செயலாளரின் ஆலோசனையும் பெறப்பட்டிருக்கிறது. மேலும் அமைச்சர் அனந்தி சசிதரனின் தனிப்பட்ட வதிவிட முகவரிக்கு கைத்துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. இதனை விட 2013ம் ஆண்டு மாகாணசபை தேர்தல் காலத்தில் அமைச்சர் அனந்தி சசிதரனின் வீடு எதற்காக தாக்கப்பட்டது? யாழ்ப்பாணத்திலிருந்து வரும் பத்திரிகை ஒன்றை ஒத்ததாக போலி பத்திரிகை ஒன்று ஏன் வெளியானது? இந்த கேள்விகளுக்கெல்லாம் தொடர்புகள் உள்ளன.

மக்களின் அப்பாவிதனத்தை பயன்படுத்தி எங்களுக்குள் முகவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். இவை தொடர்பாக காலம் வரும்போது நான் பதில் சொல்வேன், இவை குறித்து பேசுவேன் என்றார். தொடர்ந்து மாகாணசபை எதிர்கட்சி உறுப்பினர் வி.தவநாதன் உரையாற்றுகையில்,

இந்த விடயம் தொடர்பாக இன்றைக்கே தீர்வு காணப்படவேண்டும். ஆளுங்கட்சிக்குள் இருக்கும் இந்த இரு தரப்பில் யாரோ ஒரு தரப்பு அப்பட்டமான பொய்யை சொல்கிறது. அதனை அடையாளம் காட்டவேண்டும் என்றார்.

இதனையடுத்து குறித்த விடயத்தை முடிவுக்கு கொண்டுவந்த அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தற்பாதுகாப்புக்காக ஆயுதங்களை வைத்திருப்பது பிழையல்ல நானே மாகாணசபை உறுப்பினர் க.விந்தன் துப்பாக்கி ஒன்றை பெறுவதற்கான பரிந்துரையை செய்துள்ளதாகவும், இந்த விடயத்தை பெரிதுபடுத்தவேண்டாம். எனவும் கூறி தொடர்ந்து கொண்டிருந்த கருத்துமோதலை கட்டுக்குள் கொண்டுவந்தார்.

1 Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap