இலங்கை பிரதான செய்திகள்

சிறுப்பிட்டி இளைஞர்கள் படுகொலை, இராணுவத்தினரைக் காப்பாற்றும் கோரிக்கை நிராகரிப்பு…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….

சிறுப்பிட்டி இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கிலிருந்து இராணுவத்தினரைக் காப்பாற்றுவதற்கு அவர்கள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று வியாழன் நிராகரித்தது.

“கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கை முகத் தோற்றளவில் விசாரணை செய்து சாட்சிகளை ஒழுங்குபடுத்துவதே சுருக்கமுறையற்ற விசாரணையாகும். எனவே சுருக்க முறையற்ற விசாரணையை முன்னெடுத்து வழக்கை மேல் நீதிமன்றுக்கு பாரப்படுத்துவதே நீதிவான் நீதிமன்றின் கடமையாகும்.

இந்த வழக்கில் எதிரிகள் தரப்பால் முன்வைக்கப்பட்ட நிழற்பிரதி வாக்குமூலங்களை வைத்து சுருக்கமுறையற்ற விசாரணையை நடத்த முடியாது என்ற விண்ணப்பத்தை மன்று நிராகரிக்கின்றது.

இந்த வழக்கு மேல் நீதிமன்றுக்கு பாரப்படுத்தப்பட்டப்படும். சட்ட மா அதிபர் திணைக்களத்தால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் போது, எதிரிகள் தரப்பு தமது ஆட்சேபனையை மேல் நீதிமன்றில் முன்வைக்க முடியும்” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் கட்டளை வழங்கினார்.

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டிப் பகுதியில் இளைஞர்கள் இருவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினரின் வழக்கு நேற்று யாழ்ப்பாண நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் சுருக்கமுறையற்ற விசாரணைக்காக வந்தது.

இதன்போது மன்றில் சந்தேகநபர்களான 5 இராணுவத்தினரும் முன்னிலையாகினர். வழக்கின் 3ஆவது சந்தேகநபரான இராணுவச் சிப்பாய் உயிரிழந்துவிட்டார். வழக்குத் தொடுனர் தரப்பில் சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் முன்னிலையானார். இராணுவத்தினர் சார்பில் தென்னிலங்கை சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.

“இராணுவத்தினருக்கு எதிரான சாட்சிகள் காவற்துறை வழங்கிய வாக்குமூலங்களின் உண்மைப் பிரதிகள் இல்லை. அவற்றின் நிழல் பிரதிகளை வைத்து வழக்கை நடத்த முடியாது. அதனால் இந்த வழக்கிலிருந்து இராணுவத்தினர் ஐவரையும் விடுவிக்கவேண்டும்” என்று சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கடந்த தவணையின் போது மன்றில் ஆட்சேபனை வெளியிட்டார்.

“சாட்சி ஒருவர் இல்லாத போதுதான் அவர் வழங்கிய காவற்துறை வாக்குமூலத்தின் உண்மைப் பிரதி இருக்கவேண்டும். ஆனால் இந்த வழக்கில் சாட்சிகள் மன்றில் தோன்றி சாட்சியமளிப்பதால், அவர்களின் காவற்துறை வாக்குமூலத்தின் நிழல் பிரதியை முன்வைத்தால் போதும்” என்று அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் மன்றுரைத்திருந்தார்.

இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான், வழக்கை நிழல் பிரதியுடன் தொடர்வது தொடர்பில் எதிரிகள் தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனை குறித்த மன்றின் கட்டளை வழங்கப்படும் அறிவித்திருந்தார். அதனடிப்படையில் எதிரிகள் தரப்பு விண்ணப்பம் நேற்று நீதிவான் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது. வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைகள் வரும் செப்ரெம்பர். 2ஆம் திகதி இடம்பெறும் என்றும் நீதிமன்று தவணையிட்டது.

பின்னணி

1997ஆம் ஆண்டு ஒக்டோபர் 28ஆம் திகதி இளைஞர்கள் இருவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இதனுடன் தொடர்புபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட 16 இராணுவத்தினரை அச்சுவேலி காவற்துறையினர் கைது செய்தனர்.

எனினும் 1998 ஆம் ஆண்டு நீதிவான் நீதிமன்றம் குறித்த நபர்களுக்கு பிணை வழங்கியது. இதனைத்தொடர்ந்து கிடப்பில் போடப்பட்ட வழக்கு 2016ஆம் சட்டமா அதிபரால் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட 16 இராணுவத்தினரில் இருவர் போரில் உயிரிழந்தனர். இந்த நிலையில் 14 இராணுவத்தினர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

எனினும் அவர்களில் 9 பேரை வழக்கிலிருந்து விடுவிக்க சட்ட மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கினார். ஏனைய 5 சந்தேகநபர்களுக்கும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் பிணை வழங்கியது.

இந்தச் சம்பவம் தொடர்பில் 1997ஆம் ஆண்டே விசாரணைகளை மேற்கொண்டிருந்த இராணுவப் காவற்துறையினர், கொல்லப்பட்ட இளைஞர்களில் ஒருவரின் சங்கிலி மற்றும் கைக்கடிகாரம் என்பவற்றை முகாமுக்குள் இருந்து மீட்டிருந்தனர்.

சிறுப்பிட்டி இளைஞர்கள் படுகொலை – இராணுவத்தை காப்பாற்றும் பிரயத்தனத்தில் சட்டத்தரணிகள்…

சிறுப்பிட்டி இளைஞர்கள் கொலை – இராணுவத்திற்கு எதிராக பெண் சாட்சியம்.

சிறுப்பிட்டி இளைஞர்கள் படுகொலை – இராணுவத்தினருக்கு எதிரான வழக்கு ஏப்பிரலில்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers