Home இலங்கை 2700 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் யாழ் கோட்டைக்குள் கண்டுபிடிப்பு….

2700 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் யாழ் கோட்டைக்குள் கண்டுபிடிப்பு….

by admin

 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….


யாழ்ப்பாணம் கோட்டைக்குள் சிறைச்சாலை இருந்த பகுதிக்கு அண்மையாக நடத்தப்பட்ட அகழ்வு ஆய்வுப் பணிகளில் அங்கு 2 ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முன்னர், ஆதி கால மக்கள் வாழ்ந்ததற்கான நம்பகரமான – உறுதியான சான்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தொல்லியல் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.

கோட்டைப் பகுதியில் வாழ்ந்த மக்கள், தென்கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் ஆபிரிக்கா நாடுகளுடன் வணிக உறவு கொண்டிருந்தமையையும் அதன் முக்கிய நிலையமாக யாழ்ப்பாணம் கோட்டைப் பிரதேசம் அமைந்திருந்தது என்பதையும் உறுதிப்படுத்தும் சான்றுகளும் உள்ளன என்றும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் கடந்த 2 வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு ஆராய்ச்சிப் பணிகள் தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று தொல்பொருள் திணைக்களத்தில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர்,.

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தொல்லியல் ஆய்வுப் பணிகள் யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணக் கோட்டையில் இருந்த ஒல்லாந்தர் காலத் தேவாலயம் அழிவடைந்தது. அந்த ஆலயத்தின் வரலாற்றுத் தொன்மையை ஆராய்வது மற்றும் அதனை மீள் உருவாக்கம் செய்வதே இந்த தொல்லியல் ஆய்வுப் பணியின் நோக்கமாகும். அத்துடன், ஐரோப்பியர் – போர்த்துக்கீசர் வருகைக்கு முன்னர் கோட்டைப் பகுதி எவ்வாறு இருந்தது என்பதை அறிவதும் இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாக இருந்தது.

ஒல்லாந்தர் கால கிருஸ்தவ ஆலயத்தை கண்டறியும் சில அகழ்வு ஆராய்ச்சிப் பணிகள் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்டன. ஆலயத்தின் அத்திவாரம், சுவர் மற்றும் கட்டடப் பகுதிகள் கண்டறியப்பட்டன. அதே காலப் பகுதியில் 2-3 இடங்களில் அகழ்வு செய்யப்பட்டன. அதில் சிறைச்சாலைக்கு அண்மையிலே ஒரு அகழ்வுக் குழி ஒன்று ஏற்படுத்தப்பட்டு, இயற்கை மண்வரை ஆய்வு செய்யப்பட்டது.

9 கலாசார மண் அடுக்குகள் அதில் கண்டறியப்பட்டன. யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதியில் தென்னிந்தியா அல்லது தமிழகம், கந்தரோடை, அநுராதபுரம், பூநகரி மற்றும் சாட்டி போன்ற இடங்களில் இருந்ததை ஒத்த ஆதி கால மக்கள் வாழ்ந்ததற்கான நம்பகரமான – உறுதியான சான்று கிடைத்துள்ளது. 2 ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட கால பகுதியில் இவ்விடங்களில் ஆதி கால மக்கள் வாழ்ந்தார்கள் என்பது உறுதியாகிறது.

இரண்டாவதாக, இங்கு வாழ்ந்த மக்கள் தென் கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா, கிழக்கு ஆசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளுடன் வணிக உறவைக் கொண்டிருந்தமைக்கும் அந்த வணிகத்தில் யாழ்ப்பாணக் கோட்டைப் பிரதேசம் முக்கிய வணிக மையமாக இருந்தமைக்கும் சான்றுகள் கிடைத்தன. இந்த நிலையில் அண்மையில் கோட்டையில் ஹெலிகள் வந்து இறங்கி தங்குகின்ற கட்டடப் பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டன.

இம்முறை அகழ்வு ஆராய்ச்சிப் பணிகளில் நவீன கருவிகள் கொண்டு ஸ்கான் செய்து, நிலத்துக்கு அடியில் என்ன என்ன இருக்கின்றன என்று பார்க்கப்பட்டது. கோட்டைக்கு கீழ் 6-7 அடி ஆழத்தில் பண்டைய கட்டடப் பகுதிகள், கட்டட இடிபாடுகள், கிணறுகள் என்பன கண்டறியப்பட்டன. உலங்கு வானூர்தி வந்து தரையிறங்க 20ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட கட்டடப் பகுதிக்கு அருகாமையில் ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

ஒல்லாந்தார் கால கிருஸ்தவ ஆலயம் அழிவடைந்ததுக்கு அண்மையான பகுதியான அந்த இடத்தில், 16ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்த சில தொல்பொருள் சான்றுகள் கிடைத்தன. அத்துடன், போர்த்துக்கேயர் கால கட்டட அத்திவாரம் கண்டுபிடிக்கப்பட்டது.

போர்த்துக்கேயர் கால கட்டடங்களை இடித்து அந்தக் கற்களைக் கொண்டே கோட்டையை அமைத்ததற்கும் கிருஸ்தவ ஆலயங்கள் அமைக்கபட்டதற்கும் இதன்போது ஆதாரங்கள் கிடைத்தன. அந்த இடத்தில் போர்த்துக்கேயர் கால போர் வீரர்களின் கல்லறைகள் இருந்திருக்கவேண்டும். அந்தக் கல்லறைகளின் கற்பலகைகள் மாற்றப்பட்டு, அவை வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

அதன் விளைவாக மனித எலும்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அது போர்த்துக்கேயர் கால மற்பாண்டங்களுடன் மீட்கப்பட்டன. எனவே அது போர்த்துக்கேயர் காலம் அல்லது அதுக்கு முந்திய காலப்பகுதியை உடையதாக இருக்கலாம். அந்த எலும்பு ஆய்வுக்கு அனுப்பப்படும். எலும்பு மீட்கப்பட்ட இடம் பாதுகாக்கப்பட்டு, அதற்கு அருகிலே ஆய்வுப் பணிகள் இடம்பெறுகின்றன.

இவ்வாறு மீட்கப்பட்ட தொல்பொருள்கள், கோட்டைக்குள் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மக்கள் பார்வையிடவேண்டும் என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More