இலங்கை பிரதான செய்திகள்

“மனைவிக்கு முன்னால் கேவலப்பட்டு, என்னால் நிற்க முடியாது” என்கிறார் யாழ்.மாநகர முதல்வர்….

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….

வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொண்ட மாநகர முதல்வருக்கு வாகனத்தை அனுப்பவில்லை என்பதால் மாநகர சபையின் நேற்றைய அமர்வில் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன.

யாழ் மாநகர சபையின் ஆறாவது அமர்வு மாநகர மாநாட்டு மண்டபத்தில் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்ற போது முதல்வரின் வெளிநாட்டு பயணத்தின் போது வாகனம் வழங்கப்படவில்லை என்ற விடயம் சபையில் எடுத்துக் கொள்ளப்படுகையிலையே பெரும் சர்ச்சகைளும் ஏற்பட்டு குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மாநகர முதல்வர் தனிப்பட்ட விஐயமாக அண்மையில் வெளிநாடு சென்றார். அந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு மீளவும் கொழும்பிற்கு வந்த முதல்வரை ஏற்றுவதற்கு மாநகர சபையால் முதல்வரின் வாகனம் அனுப்பப்படவில்லை. இதனால் முதல்வருக்கு ஏன் வாகனம் அனுப்பப்படவில்லை என்று கூட்டமைப்பு மற்றும் ஈபிடிபி உறுப்பினர்கள் சபையில் கேள்வியெழுப்பியிருந்தனர்.

அதற்கு உள்ளுராட்சி அமைச்சின் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் உள்ளுராட்சி ஆணையாளரின் உத்தரவிற்கமைய முதல்வரின் தனிப்பட்ட பயணங்களுக்கு வாகனத்தை அனுப்ப முடியாது என்று அதிகாரிகளினால் விளக்கமளிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொள்ளாத முதல்வர் உள்ளிட்ட கூட்டமைப்பின் உறுப்பினர்களும் ஈபிடிபியின் உறுப்பினர்களும் முதல்வருக்கான மரியாதையை வழங்க வேண்டும் என்றும் முதல்வருக்கு வழங்கும் மரியாதையே இந்தச் சபைக்கு வழங்கும் மரியாதை எனத் தெரிவித்து அதிகாரிகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

மேலும் முதல்வருக்க மரியாதையளித்து அவருக்கான வாகனம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வாகனம் வழங்கப்படாததால் நடுவழியில் முதல்வர் அவஸ்தைப்பட்டுள்ளார். ஆகவே மாநகர சபையின் முதல்வருக்கும் இந்தச் சபைக்கும் அதிகாரங்கள் சலுகைகள் வழங்கப்பட வேண்டும். அதனை யாரும் தனிப்பட்ட காரணங்களுக்காக தடுத்து நிறுத்தக் கூடாதென்றும் ஈபிடிபி மற்றும் கூட்டமைப்ப உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன் போது எழுந்த முன்னணியின் உறுப்பினர் மணிவண்ணண் சட்டத்தின்பிரகாரம் அனைத்தும் நடைபெற வேண்டும். அதனை மீறி இலஞ்சம் ஊழல் இருக்கக் கூடாது. முதல்வரின் தனிப்பட்ட விஐயத்திற்கு வழங்கப்பட முடியாதென்று சுற்று நிரூபத்தில் இருந்தால் வழங்கப்பட கூடாது தான். ஒருவர் பிழை செய்கின்றார் என்பதற்காக மற்றவர்களும் பிழை செய்யக் கூடாது என்றார்.

இதற்குப் பதிலளித்த முதல்வர் ஆர்னோல்ட் என்னால் நடிக்க முடியாது. ஏனெனில் ஒருக்கா மாநகர முதல்வராகவும் இன்னொருக்கா ஆர்னோல்ட்டாகவும் செயற்பட முடியாது.

மனைவிக்கு முன்னால் கேவலப்பட்டு நிற்க கூடாதென்பதற்காகவே வாகனம் கோரினேன் .அது கிடைக்காது என்பதை உணர்ந்து மாற்றுவழியை ஏற்படுத்தினேன். ஆனால் மாநகர முதல்வர் சைக்கிளிலும் வருவார் நடந்தும் வருவார் என்பதையும் தெரிவித்தக் கொள்கிறேன்.

இதன் போது கருத்து வெளியிட்ட சபையின் செயலாளர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் அரச சுற்று நிருபங்களுக்கமைவே தம்மால் செயற்பட முடியுமென்றும் அதனை மீறி தம்மால் செயற்பட முடியாதென்றும் குறிப்பிட்டனர்.

அவ்வாறு சுற்று நிருபத்தை மீறிச் செயற்படுகின்றதற்கு அரச அதிகாரிகள் ஒரு போதும் பொறுப்பெடுக்க முடியாதென்றும் அதற்கான பொறுப்பை சபையே எடுக்க வேண்டுமென்றும் தெரிவித்தனர்.

இவ்வாறு கூட்டமைப்ப மற்றும் ஈபிடிபியினர் முதல்வரின் பயணங்களுக்கு வாகனம் வழங்கப்பட வேண்டுமென்றும் அதிகாரிகள் சுற்று நிருபத்திற்கமையவே செயற்பட முடியுமென்றும் தெரிவிக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சட்டத்திற்கமையவே செயற்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.

இவ்வாறு தான் முதல்வரின் வாகனம் மற்றும் அவரின் பயணங்கள் தொடர்பில் நேற்றைய அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டு பலரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மாநகர சபை தங்கம் என்றால் யாழ் மாநகர சபையும் தங்கமாக தான் இருக்க வேண்டும் – யோகேஸ்வரி பற்குணராசா-

கொழும்பு மாநகர சபை தங்கம் என்றால் யாழ் மாநகர சபையும் தங்கமாக தான் இருக்க வேண்டுமென யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் தற்போதைய உறுப்பினருமான யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.

யாழ் மாநகர சபையின் ஆறாவது அமர்வு மாநாகர மாநாட்டு மண்டபத்தில் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன் போது முதல்வருக்கான அதிகாரங்கள் சலுகைகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலையே யோகேஸ்வரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எமது சபையின் முதல்வர் வெளிநாடு சென்று வரும் போது வாகனமில்லாமல் அவதிப்பட்டுள்ளார். அவருக்கு வாகனம் அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு வாகனம் அனுப்பப்படாது தடுக்கப்பட்டிருக்கின்றது. முதல்வர் முதல்வராக மதிக்கப்பட்டு அவருக்குரிய அதிகாரங்களும் சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்.

இங்கு எல்லாத்திற்கும் சுற்று நிருபம் இருக்கின்றது என்றும் அதனடிப்படையில் தான் செய்ய முடியுமெனக் கூறுவதானால் ஏனைய மாநகரங்களில் அவ்வாறு தான் இருக்கின்றதா என நாங்கள் பார்க்க வேண்டும். ஏனெனில் கொழும்புமாநகர முதல்வருக்கு சகல வசதிகளும் செய்த கொடுக்கப்பட்டு சலுகைகளும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஆகவே கொழும்பு மாநகர சபை தங்கமாக இருந்தால் யாழ்ப்பாண மாநகர சபையும் தங்கமாகவே இருக்க வேண்டும் என்றார். இதன் போது எழுந்த மாநகர சபை ஆணையாளர் யாழ் மாநகர சபையும் தங்கமாகவே தான் இருக்க வேண்டும் தகரமாக இருக்கக் கூடாதென்று குறிப்பிட்டார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.